1965-1985 எனும் இருபது ஆண்டுகள் மலையாள இலக்கியத்தில் கலவரமும் பதட்டமும் நிறைந்த காலகட்டம். அரசியல் ரீதியாக அடைந்த விடுதலை அளித்த நம்பிக்கை மோசடியும் நேருயுகத்தின் தாராளவாதப் பொதுவுடைமைக் கனவின் முடிவையும் பதிவு செய்த ஆண்டுகள் அவை. கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்தியப் புரட்சி இயக்கங்கள் மிகுந்த நெருக்கடிகளினூடாகக் கடந்துசென்ற காலமும் இதுதான். பல்வேறு தளங்களில் நிகழ்ந்துவிட்டிருந்த பிரிவினைச் செயல்பாடுகளால் கம்யூனிச இயக்கத்தின் புரட்சி வீரியம் நெகிழ்ந்து போனதோ என்ற சந்தேகம்; தொண்டர்கள், உடன்பாட்டாளர்களிடம் பரவத் தொடங்கிய காலம்.

விடுதலைக்குப் பிற்பட்ட இந்தியாவில் ஆட்சியமைப்பு அதன் கொடூரமான ஒடுக்குமுறையை எவ்விதத் தயக்கமுமின்றி மக்களை நோக்கி அவிழ்த்துவிட்ட காலமும் இதுதான். பின்னர் அதுவே இயல்பாகிவிட்டதால் மக்கள் கவனத்தி லிருந்து அப்புறப்பட்டு ஆட்சிஅமைப்பால் மக்களாட்சியின் உரிமைப் பறிமுதலாக்கம் 1975 நெருக்கடிக் காலத்தில் அதன் கொடூர வடிவை அடைந்தது. நெருக்கடி காலத்தில் நடந்தது போன்ற வெளிப் படையான, பச்சையான உரிமை அழிப்பு பின்னர் ஏற்படவில்லை எனத் தோன்றலாமெனினும் அமைப்பாக்கம் பெற்ற அதிகாரத்தின், ஊழல்களின் பெரும் சின்னங்களை அக்காலம் சமூகத்தில் மீதம்வைத்துச் சென்றுள்ளது.

இவ்விருபது ஆண்டுகள் இலக்கியத்தின் நவீனத்துவக் கால கட்டம். நவீனத்துவத்துடன் தொடர்புடைய இலக்கியப்போக்குகள் ஐம்பதுகளின் இறுதியிலேயே மலையாளத்தில் வெளிப்பட்டிருந்தது என்றாலும் அதன் அழகியல்ரீதியான எழுச்சியும் பரவலும் பின்னர் அதன் வீழ்ச்சியும் நேர்ந்தது இவ்விருபது ஆண்டுகளில்தான். எழுபது, எண்பதுகளின் அழகியல், சிந்தனைப் பரிணமங்கள் அக்கால அரசியல் சூழலுடன் சிறப்பாகத் தீவிர இடதுசாரி அரசியல் பண்பாட்டுடன் தொடர்புறுவதைக் காண்பதே இங்கு நோக்கம்.இக்கட்டுரை ஆறு பகுதிகளாக அமைகின்றது. முதலிரண்டு பகுதிகளில் கட்டுரைப் பொருண்மையின் வரலாறு,கொள்கைப் பின்னணி பதிவாக்கம் பெறுகிறது. தீவிர இடதுசாரி இலக்கிய அழகியல் தனித்துவம் அடைந்த எழுபதுகளின் அழகியல் பரிணாமங்களைத் தேடுகிறது மூன்றாம் பகுதி. வரலாறு, எதிர்ப்புணர்வு, தன்னுணர்வு எனும் கற்பிதங்கள் எழுபதுகள், அதற்குப் பிற்பட்ட ஆண்டுகளில் எழுத்தாளர்களிடம் எவ்வாறு தொழிற்பட்டது என்ற விசாரணை தொடர்ந்து வரும் பகுதிகளில் இடம்பெறுகின்றது. இவ் விசாரணையின் வழியாக மலையாள இலக்கிய வரலாற்றின் முக்கியக் காலகட்டத்தைக் கொள்கைரீதியாக மறுவாசிப்பு செய்வதும் இங்கு நோக்கமாகும்.

***

இவ்விருபது ஆண்டுகளில் தீவிர இடதுசாரிகள் நக்சலைட்டுகள் என அழைக்கப்பட்டனர். இக் கட்டுரை அவர்களின் இலக்கிய முயற்சிகளை மட்டும் பேசுவதல்ல. நக்சலைட் இயக்கத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தவர்களின் இலக்கிய ஆக்கங்கள் பற்றி இங்குப் பேசப்படுவதுடன் தீவிரவாத அரசியலின் பாதிப்பு இடம்பெறுகின்ற படைப்பாளிகளையும்( உதா: வைலொப்பிள்ளி, அய்யப்ப பணிக்கர் போன்றோர்) உள்ளடக்கிய விரிவான இலக்கியச் சமூகம் இங்கு ஆராயப்படுகின்றது.இலக்கியம், அரசியல் இவற் றிடையேயான உறவு மிகச் சிக்கலானது என்ற புரிதல் காரணமாகவே இக்கட்டுரையில் பேச நினைக்கின்ற பொருள் இவ்வளவுதூரம் நெகிழ்த்துக் கொள்ளப்படுகிறது.

இலக்கியமும் அரசியலும் ஒன்றுக் கொன்று இணக்கமான உரையாடல் வடிவங்களல்ல. இயல்பான அரசியல் நம்பிக்கை கொண்டிருந்த பால்சாக்,டால்ஸ்டாய் படைப்புக்களின் மீது புரட்சிப்பண்பை ஏற்றி மார்க்சீயர்கள் வாழ்த்துப்பாடியதை நாமறிவோம். அரசியல் இலக்கியம் இடையேயான உறவைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட சறுக்கல்களையே முப்பது நாற்பதுகளில் முற்போக்கு இலக்கியத்திற்கு நேர்ந்த வீழ்ச்சியாகப் பின்னர் ஈ.எம்.எஸ். போன்றோர் மதிப்பிடுகின்றனர். ஒரு விமர்சன, எதிர்ப்புச் சக்தியாகத் தன்னை இனங்காண்பதற்கு மாறாக ஒரு படைப்பிலக் கியத்தின் பிரதிநிதியாகத் தன்னை உயர்த்துக் கொண்டதே இங்கு நேர்ந்த தவறு. படைப்பியல்பு என்ற கற்பிதத்துள் ஒளிந்திருக்கின்ற படுகுழிகளைக் காண மறந்ததே அப்பிரச்சினையின் மையம். இதன் காரணமாகப் படைப்பியல்பு குறித்து மரபான இலக்கிய நிறுவனம் வைத்துக் கொண்டிருந்த நம்பிக்கைகளை மறு உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயத்திற்காளானது முற்போக்கு இலக்கியம்.

இலக்கியம், அரசியல் இவற்றிடையேயான உறவு பற்றிய மரபான அழகியல் அணுகுமுறையிலிருந்து வேறுபட்ட அணுகு முறைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் வெளிப்பாடாக எழுபதுகளின் தீவிர இடதுசாரி இலக்கியத்தைக் காணலாம். முப்பது நாற்பதுகளின் முற்போக்கு இலக்கியத்தின் ஒரு தொடர்ச்சியை இதில் காணமுடியும். நாட்டு விடுதலைக்கு முன்னர் கற்பனாவாதத் தில் வேர்பாய்ச்சி நின்ற முற்போக்கு இலக்கியத்தை வன்மையாகக் கண்டிக்கின்ற நவீனத்துவம் எழுபதுகளின் அரசியல்மயப்படுத்தப் பெற்ற இலக்கியத்தின் எதிர்தரப்பாக நிலவியது. இப்போது, முப்பது நாற்பதுகளில் முற்போக்கு இலக்கிய இயக்கமும் இடதுசாரி ஆர்வலர்களும் எதிர்கொண்ட கோட்பாட்டியல் நெருக்கடிகளுக்கு நிகரான நெருக்கடிகளை எழுபதுகளின் தீவிர இடதுசாரிகளும் எதிர்கொண்டனர். எழுபதுகளின் தீவிர இடதுசாரிகள் விரைவு படுத்திய பண்பாட்டுச் சூழல் நக்சலைட்டுகளுடன் அரசியல் உடன்பாடு உடையவர்களால் மட்டும் உருவாக்கப்பட்டதல்ல.

இலக்கியம் ஒரு வகையான கனவை மொழிதல். சமூகரீதியான கனவை மொழிதல். இலட்சிய சமூக அமைப்பு பற்றி, ஒரு கனவுத் தேசம்(உட்டோப்பியா) பற்றியே அது எப்போதும் பேசுகிறது. இலக்கியத்தின் தீவிர இடதுசாரி அனுபவங்களை நக்சலைட் இலக்கியம் என மதிப்பிடுவதிலிருந்து நம்மை விலக்குகின்ற மற்றொரு காரணமிது. அரசியல் நடைமுறையின் யந்திரத்தத் தனமான மொழிபெயர்ப்புத்தானே இலக்கிய அனுபவம். எழுபது எண்பதுகளின் தீவிர இடதுசாரிகளின் அரசியல் பார்வைகளில் பல நடைமுறைப் பொருத்தமற்றவை எனக் கெ.வேணு போன்ற பழைய நக்சல் தலைவர்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். தீவிர இடது சாரிகளின் மேலான பங்களிப்புகள் எவையும் அரசியல் துறையில் நிகழவில்லை. அவை அனைத்தும் பண்பாட்டுத்துறையுள்தான் நிகழ்ந்துள்ளன. தீவிர இடதுசாரி இலக்கியம் அதனுடன் பலதளங் களில் விவாதித்துவந்த நவீனத்துவம் இவற்றின் இணைவு அறுபது களுக்குப் பிந்தைய மலையாள இலக்கியத்தின் மைய நீரோட்டத்தை அல்லது முக்கியமான பல போக்குகளை உருவாக்கியது.

சமகால மலையாள இலக்கியத்தின் முதன்மைப் போக்குகள், அவற்றின் கருத்தியல் மதிப்புகள்,அவை எழுப்பிய அரசியல் சிக்கல்கள், இலக்கியவகைமையின் இயல்பு இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு முன்வைக்கும் ஒரு அறிக்கையல்ல இது. அரசியல் ரீதியாக எதிர்துருவங்களில் நிற்கின்ற மனங்களை, அனுபவங்களை இணைத்துச் செல்ல இயல்வது இலக்கியப்பண் பாட்டின் சிறப்புகளில் ஒன்று. வரலாற்றின் சில கட்டங்களிலேனும் இலக்கியத்தின் இவ்வியல்பு நடைமுறையாவதைக் காணலாம். இவ்வியல்புதான் நாமிங்கு ஆராயவிருக்கின்ற காலகட்டத்தின் நவீனத்துவம் முதலான இலக்கியப் போக்குகளின் கலக இயல்பை யும் யதார்த்துவத் தன்மையையும் தீர்மானித்ததைக் காணலாம். ஒருவேளை, இவ்வறிதலின், உணர்வின் முன்னிலையே தீவிர இடதுசாரிகள் கருத்துச்சூழலில் இருந்து ஆற்றலை உறிஞ்சிக் கொண்டு எழுதியவர்களை இதர நவீனத்துவவாதிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

பண்பாட்டு ரீதியாக மிகுந்த ஒளியும் இயக்கமும் நிறைந்த காலம் பற்றி நாமிங்கு பேசிவருகின்றோம். மலையாளத்தில் இன்று நிலை பெற்றுவிட்ட, அல்லாத புதிய பல குரல்கள் இந்தக் கால இடையில் தான் எழுந்தன. கவிதைத்துறையில் கடமனிட்டா ராமகிருஷ்ணன், ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன், கெ.ஜி. சங்கரப்பிள்ளை, டி.வினயசந்திரன், ஏ. அய்யப்பன், பாலசந்திரன் சுள்ளிக்காடு, பி.உதயபானு, சிவிக் சந்திரன், குஞ்ஞப்பா பட்டானூர், ஜோர்ஜ், ஜோஸ் வென்மேலி, சனல்தாஸ் போன்றோர். கதை இலக்கியத்தில், பட்டத்துவிள கருணாகரன், எம். சுகுமாரன், யு.பி.ஜயராஜ், பி.கெ.நாணு,ஆனந்த், ஸக்கரியா,கெ.ஜெ.பேபி,சி.வி. ஸ்ரீராமன், விபி.சிவகுமார், டி.ஆர், என்.எஸ். மாதவன், சி.ஆர்.பரமேஸ்வரன், என்.பிரபாகரன், பி.வத்சலா, ஸாரா ஜோசப், ஜாண் அப்ரஹாம், சி.அய்யப்பன் முதலானோர்.

நாடகத்துறையில் கெ.ஜெ.பேபி, மதுமாஸ்டர், வி.கெ.பிரபாகரன்,பி.எம்.தாஜ், டி.பி. சுகுமாரன், ராமசந்திரன் மொகேரி, ஜோய் மாத்யு போன்றோர். சினிமாத் துறையில் பி.ஏ.பக்கர், ஜான் ஆப்ரகாம், ரவீந்திரன்,பவித்திரன், டி.வி.சந்திரன் போன்றோரும் தம் செயல்தளம் தயாரித்தது இக்காலத் தில்தான். மலையாள இலக்கியத்தை, உலக இலக்கியத்துடன் சமகாலப்படுத்துவதில் மிகையான பங்காற்றிய பல மொழி பெயர்ப் புக்களும் இக்காலத்தில் வெளிவந்தன. சிறப்பாக, பிரெக்கெட், நெரூதா,மயகோவ்ஸ்கி, மார்க்கோஸ், போர்ஹேஸ் கதைகள், பிரெக்கட், லோர்க்கா முதலியோர் நாடகங்கள், இதர ஆப்பிரிக்க, லத்தீன் -அமெரிக்க படைப்புகள்,கறுப்பிலக்கியம் இவற்றின் மொழி யாக்கங்கள் இக்காலத்தில்தான் வெளியாகின.

இப்படைப்புக்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டு வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வத்துடன் செயல்பட்ட சிற்றிதழ்களின் பெருக்கு இக்காலத்தில் ஏற்பட்டது. இவை பொதுவாக நவீனத்துவச் சார்புடைய, அன்னேஷணம்,கேரள கவிதா,ராஷ்ட்டிர சிற்பி,ஜ்வால, போதி, அட்சரம், பிருத்வி, சம்க்ருமணம், நியோகம்,ரசனா என்பன வும் தீவிர இடதுசாரிக் கருத்தியலுடன் உடன்பட்டிருந்த, பிரஸக்தி, ஸமஸ்ய,பிரேரண, உத்தரம், சாம்ஸ்காரிக மாசிக,யெனான், ஜயகேரளம், பாடபேதம் போன்ற இதழ்களின் பங்களிப்பு முக்கிய மானது. ‘கலாகௌமுதி’ இது போன்ற படைப்புக்களை வரவேற்று வெளியிட்டது. நவீனத்துவக் காலத்திலேயே பரவலான வளர்ச்சி யைப் பெற்றுவிட்ட கவியரங்குகள், வீதி நாடகங்கள், ஃபிலிம் சொசைட்டிகள் இவையனைத்தின் இணைவால் மலையாளியின் பண்பாட்டு வாழ்வில் உருவான ஒரு புதுமையான உணர்வெழுச்சி யைப் பதிவு செய்வன எழுபது- எண்பது எனும் இவ்விருபது ஆண்டுகள்.

*****

நவீனத்துவம், தீவிர இடதுசாரிகளுக்கிடையேயான கருத்தியல் உறவின் அடித்தளங்களை இங்கு விசாரிக்க வேண்டும். இவ்விரு போக்குகளும் நடுத்தர வர்க்கத்திலிருந்து தோன்றியவை. அழி வற்றவை, உலகப்பொதுவானவை எனக் கருதப்பட்ட வாழ்க்கை விழுமியங்கள் சமகாலச் சமூகத்தில் அடைந்த வீழ்ச்சி பற்றிய பதட்டமும் கவலையும் தான் இரண்டிலும் செயல்பட்டுள்ளது. மரபிலக்கியத்தின் வடிவங்கள், அதன் மொழியில் இவ்வீழ்ச்சியின் அடையாளங்களை நவீனத்துவர்கள் கண்டனர். சமகாலச் சமூகத்தில் கம்யூனிசக் கொள்கைகள் அடைந்துவரும் வீழ்ச்சியின் முத்திரை களைக் கண்டனர் தீவிர இடதுசாரிகள்.

நாற்பது ஐம்பதுகளில் முற்போக்கு, வளர்ச்சி எனும் கருத்துக்கள் இலக்கியத்தில் பெற் றிருந்த செல்வாக்கின் பின்னணியில் தீவிர இடதுசாரி மற்றும் நவீனத்துவத்தின் இணைவுக்குச் சில முக்கியத்துவங்களிருப்பதைக் காணலாம்.அறுபதுகளிலும் முற்போக்கு இலக்கியத்தின் செல்வாக்கு நீடித்த ஒரு சூழலே இங்கு இருந்தது என்று கூறவில்லை. இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையிலும் - அரசியல் நம்பிக்கை அடிப்படையிலும் அவ்வியக்கத்தில் செயல்பட்டவர், விலகி நின்று விமர்சித்த வர்களிடையே அடிப்படையான வேறுபாடு ஏதுமில்லை. சுதந் திரத்தை, மனிதநேயத்தை, மனித முன்னேற்றத்தைப் பற்றிய மேலான, புதுமையான கருத்தாக்கம் இருவரிடமுமிருந்தது.

நவீன மாக்கத்தின் விளைவாக கேரளச் சமூகத்தில் பரவிய நவீனத்துவக் கருத்து இது. இந்தக் கருத்தின் வளர்ச்சி சந்துமேனோன், குமாரனாசன் முதல் வள்ளத்தோள், கேசவதேவ், செறுகாடு, தோப்பில்பாஸி, எம்.டி இவர்கள் அனைவரும் இடம்பெறுகின்ற இலக்கிய வட்டத்தின் அழகியல் அடிப்படையாகத் தொழிற்பட்டது. கற்பனா வாத யதார்த்தம் எனப் பாராட்டவியலும் இவ் அழகியல் மலையாள இலக்கிய வரலாற்றில் ஐம்பதுகளின் இறுதியில் எழுந்துவந்த நவீனத்துவத்திடம் தீவிரமான சவால்களை எதிர்கொண்டது.

இலக்கியத்தில் தீவிர இடதுசாரிகளும் நவீனத்துவவாதமும் வெளிப்படையாக இணைந்து நிற்கும் புள்ளி இது. சமூகத்தின் இலக்கணஅமைப்பையே இருவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினர். சமூக விழுமிய அமைப்பின் இலக்கணத்தைத் தீவிர இடது சாரிகள் கேள்விக்குள்ளாக்கினர். நவீனத்துவவாதிகள் அழகியல் இலக்கணங்களின் மீது தாக்குதல் நிகழ்த்தினர்.

நவீனத்துவவாதி களில் பலர் ஓரளவுவரைக் கம்யூனிசப் பாதிப்பின் கடந்தகாலத்தைக் கொண்டிருந்தனர். ஒ.வி.விஜயன், என்.என்.கக்காடு, எம்.கோவிந்தன், அக்கித்தம், எம்.முகுந்தன், காக்கநாடன் என்ற பெயர்கள் சட்டென நினைவுக்கு வருபவை. தீவிர இடதுசாரிகளில் கணிசமாக ஒரு பிரிவினரின் கம்யூனிச பாதிப்பு கற்பனாவாதமாக இருந்திருப்பதை இவ்வேளையில் நினைவுகூற வேண்டும். நடைமுறைஅரசியலில் தீவிர இடதுசாரிகள் நவீனத்துவத்தோடு இணைந்துவிட்டனர் என்று இங்குக் கூறவில்லை.

நவீனவாதிகளின் அரசியல் மறுப்பையும் நபர்வாதத்தையும் மெய்யியலையும் தீவிர இடதுசாரிகள் புரிந்து கொண்டதுடன் அதன்மீது தன்னளவிலான எதிர்ப்பையும் காட்டினர். ஆனால் கருத்தியல் ரீதியாக நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயங்கள், உணர்ச்சிகரமான எதிர்வினையாற்றல் எனும் நிலைகளில் தீவிர இடதுசாரிகள் நவீனத்துவத்தின் நிழலிலேயே நின்றிருந்தனர்.

1966இல் ஆர். ராமச்சந்திரன் தொகுத்தளித்த ‘பாதமுத்ரகள்’ என்ற கவிதைத் தொகுதி, சச்சிதானந்தன் 1972இல் தயாரித்த கவிதைத் தொகுதியான ‘ஹரிஸ்ரீ’, இவற்றிடையேயான மொழி/உரையாடல் நிலையிலான ஒருபோக்குகள் இந்த இணைவையே முன்னிறுத்து கின்றன. “ நான்,கவிதையில் அழகியலின் பக்கத்திலும் அரசியலில் இடதுசாரியும் ஆக இருக்கிறேன்” எனத் தனது அக்காலக் கருத்து நிலையைப் பின்னர் விளக்குகின்றார் சச்சிதானந்தன்.

இவ்விணைவிற்கான குதி பலகையாக இரண்டு காரணங்களைக் கூறவியலும். கற்பனாவாத யதார்த்த அழகியலுக்கு எதிராக மேலான வாசிப்புப்பண்பாட்டுடன் அறிமுகமுடைய ஒரு ஆற்றல்மிக்க சிறுபான்மை மேற்கொண்ட சற்றும் அனுபவமற்ற அணுகுமுறை இவற்றில் முதலாவது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஐம்பது அறுபதுகளில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் அதனுடன் இணைந்து வளர்ச்சியுற்ற புதிய வாழ்க்கை ஒழுங்கும் கேரளீயரை அதிவிரைவாக ஒரு நடுத்தரவர்க்கமாக மாற்றிவந்தது.

இம்மாற்றம் சமூகத்தின் பல தளங்களில் செய்த எதிர்வினைகளின் பதிவுகளை காரூர், பஷீர், தகழி, எம். டி, ஒ.வி.விஜயன்,அக்காலத்திய இன்னும் சிலரின் படைப்புகளில் வாசிக்கலாம். அரவிந்தனின், ‘செறிய மனுஷ்யரும் வலிய லோகவும்’ என்ற கார்ட்டூன் தொடர் அக்கால மலையாளியின் நடுத்தரமாதலை வெளிப்படையாகப் பிரதிபலிக் கின்ற ஒரு கதையாடல்; நடுத்தரமயமாதல் பண்பாட்டையும் வசிப்பையும்கூட நடுத்தரமாக்கி விடுகின்றது.

இதையும் இதை நிறைவேற்றிய அழகியல்விரிவாக்கமும் சமகால உலக இலக்கியத் துடனான அறிமுகமும் இணைந்தே கற்பனாவாத யதார்த்தத்தின் அழகியலின் ஒளியை அணைத்தது. இச்சூழ்லில்தான் முற்போக்கு இலக்கியம் முதலான நவீனத்துவவாத முன் நிகழ்வுகளை யதார்த்தம் அல்லது பழமை என அறுபதுகளின் இளைஞர்கள் எண்ணத் தொடங்கினர். நவீனத்துவவாதம் எழுபதுகளின் அரசியல் இலக்கியத்தின் எதிர்தரப்பில் நின்றது என முன்னர் ஓரிடத்தில் குறிப்பிட்டதன் காரணமும் இதுதான்.

வாசிப்பின் நடுத்தரமயமாதலுடன் தொடர்புடையது இரண்டா வது காரணம். இருத்தலியல்வாதம்,சூன்யவாதம் போன்ற தத்துவச் சிந்தனைகள் இக்கால நடுத்தரவர்க்க மலையாளியின் பதட்டம் நிறைந்த மனதில் நிலையான ஓரிடம் கிடைத்தது .புதிய சூழல்கள் அளித்த வெறுமைஉணர்வு, நம்பிக்கையிழப்பு, மதிப்பீட்டுச்சரிவு, மரபின் தொடர்ச்சியின்மை என்ற எண்ணங்களில் சிக்குண்ட மலையாளி மனம் இவ்வாறானது. சிந்தனை, மதிப்பீட்டு அமைப்பு, இலக்கியக் கொள்கையின் இலக்கண விதிகளில் ஏதோ தகராறு இருக்கிறது எனச் சமூகத்தின் சில பிரிவினர் இனம்கண்டு கொண்டது இக்காலத்தில்தான்.

இவ்வெண்ணத்தின் முளையை நவீனத்துவத் தின் தோற்றம் எனலாம். நவீனத்துவத்தைப் பரவச் செய்து பின்னர் இலக்கியப் பண்பாட்டில் அங்கீகரிக்கப்பட்டதுமான இலக்கணப் பிழைகளும் இவ்வெண்ணத்தின் பங்களிப்புதான். நவீனத்துவவாதி களுக்கு முன்னரே பஷீரும் நாடகாசிரியர் ‘புளிமான’வும் இலக்கியத் தின் இலக்கணத்தைத் திருத்தி எழுத முயன்றுள்ளதை நினைவுகூர வேண்டும். இருப்பினும் இவர்களின் இலக்கண மாற்றுப் போக் கினை நவீனத்துவவாதிகளின் போக்கிலிருந்து மாறனதாகக் காண்கிறோம்.

பஷீர் கதையாடல் வடிவங்களுக்குத் தமதாகிய இலக்கண விதிகளை வகுத்தபோது நவீனத்துவர்கள் அன்னிய/ மேலை ‘இலக் கணர்’களின் மாதிரிகளைத் தேடியடைந்தனர்.ஆனால் இவ்விடயத்தில் நவீனத்துவர்களை ஓரளவுக்குமேல் விமர்சிப்பதில் பொரு ளில்லை என்பது உண்மை. நவீனத்துவர்களின் மேற்கத்திய உறவை இந்திய காலனியாதிக்க வரலாற்றுச்சூழலில் நிறுத்தி வாசிக்க வேண்டும். நவீனத்துவர்கள், மேலைச் சிந்தனைமரபைச் சார்ந்து கலகம்,மாற்று, காலத்திற்கேற்ற பரிணாமத்தின் குரல் இவற்றை முன்னிறுத்திய காப்கா, காம்யு, சார்த்தர், ‘பாழ்நிலம்’எழுதியகால எலியட்டையும் இவர்கள் மாதிரியாகக் கொண்டனர்.

இருத்தலியல்வாதியான சார்த்தர் புகழ்பெற்ற மார்க்சியச் சிந்தனையாளராகவும் இருந்தது சில இடதுசாரிப் பிரிவினர் நவீனத் துவத்துடன் இணைந்துசெல்ல வசதிவாய்ப்புக்களை அளித்திருக்க வேண்டும். அறுபதுகளில் கல்லூரிக்காலத்தில் மார்க்சிய ஆர்வம் கொண்டிருந்த சச்சிதானந்தன் நவீனத்துவக் கொள்கைகளுடன் இணைத்த காரணங்களில் ஒன்று இது. பின்னர் எழுபதுகளில் தீவிர இடதுசாரி பகுதிக்குக் குடியேறிய பலர் முன் பத்தாண்டுகளில் நவீனத் துவத்தில் இளைப்பாறி வந்தவர்கள்-கடமனிட்ட ராமகிருஷ்ணன், ஆற்றூர் ரவிவர்மா எனப்பலர்.எழுபதுகளின் தீவிர இடதுசாரிப் பகுதிக்கு வலிமையூட்டிய கதாசிரியர் பட்டத்துவிள கருணாகரன் அறுபதுகளில் நவீனத்துவத்தின் வேலிக்குள் இருந்ததையும் அவரே நவீனத்துவ- தீவிர இடதுசாரி அழகியலின் இணைவை அடையாளம் காட்டுபவராகவும் இருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்தும்.

****

அறுபதுகளின் இறுதிவரை நவீனத்துவத்துடன் இணைந்து சென்ற, தீவிர இடதுசாரிகள் எழுபதுகளில் விழிப்படைந்து நவீனத் துவத்தின் பிற்போக்குத்தனத்தையும், திசைமறுக்கும் இயல்பையும் உணர்ந்து தமதாகிய தனித்துவத்தை அறிவித்த வரலாற்றின் அடுத்த கட்டத்தை இனிப் பரிசோதிக்க வேண்டும். திடீரென நேர்ந்துவிட்ட இம்மாற்றத்திற்குப் பல அரசியல் காரணிகளிருந்தன. அறுபதுகளின் இறுதியில் மூன்றாம் உலகநாடுகளின் பல்வேறு பகுதிகளில் விடுதலை இயக்கங்கள் பெற்ற புத்துணர்வு, முதல் உலகநாடுகளில் கூட இவ்வியக்கங்களின் தோழமை இயக்கங்களான புதிய இடதுசாரிப் பிரிவுகளுக்குக் கிடைத்த மரியாதை, சிறுபான்மையரும் பெண்களும் அந்நாடுகளில் இணைந்தியங்கத் தொடங்கியது.

வியட்நாம் போருக்கெதிராக உலகின் பலநாடுகளில் எழுச்சிபெற்ற எதிர்ப்புக்குரல் என்பன அக் காரணிகளில் சில. சார்த்தர்,பூக்கோவின் வாழ்த்துக்களுடன் கோகன் பன் டிட் தலைமையில் பாரிசில் ஆரம்பித்த இடதுசாரி மாணவர் போராட்டங்கள், மாவோ தலைமை யில் சீனாவில் முளைத்த பண்பாட்டுப் புரட்சி,செகுவேரா, ஹோச்சிமின் போராட்டங்கள், ஐரோப்பியப் புதுஇடதுசாரி அறிவுப் பாசறைகள் யாவும் இணைந்துருவாக்கிய புதிய உலகச்சூழல் மாற்றத்தைத் தூண்டியது. உலக கம்யூனிச இயக்கத்தில் அதற்கு முன்னரே தொடங்கிவிட்ட பிரிவினை/உட்குழு மனப்பான்மை வலிமையடைந்ததும், சோவியத் ருஷ்யா-அமெரிக்கப் பனிப் போர்கள் திட்டவட்டமான ஒரு தளத்தை அடைந்ததும் இக்காலத்தில்தான்.

இந்திய கம்யூனிச இயக்கத்துள் ஒரு தீவிர இடதுசாரிப் பிரிவு உருவானதன் பின்புலமான புறச்சூழல் பற்றி மாறுபட்ட கருத்துக்களுக்கிடமுண்டு. எனினும், நக்சலைட்டுகள் எனப் பின்னர் அடையாளமிடப்பட்ட பிரிவினராகச் சுயமாகவே மறுவரையறை செய்துகொள்ள தீவிர இடதுசாரிகளில் பலருக்கும் தூண்டுதலாக அமைந்தது மேற்குறிப்பிட்ட உலகளாவிய சூழ்நிலைகளே என்பது உறுதி.

நக்சல்பாரியில் நடைபெற்ற வேளாண் புரட்சி இடதுசாரியுள் ஒரு பெரும்பிரிவை- பின்னர் நக்சலைட்டுகளாக மாறியவர்கள் மட்டு மல்ல- ஒரு மாற்றுச் சிந்தனைக்குத் தூண்டியது. அதுவரை நவீனத் துவவாதிகளாக அறியப்பட்டிருந்த பல இலக்கியவாதிகளின் அரசியல் முத்திரைகளை வெளிப்படுத்துவதில் நக்சல்பாரிப் போராட் டங்களும் புதிய சர்வதேச அசைவியக்கங்களும் பெரிதும் பங்காற்றியுள்ளன.

இக்காலத்தில் அழகியல் தளத்தில் நிகழ்ந்த மாற்றங்களைச் சித்திரிக்க சச்சிதானந்தன் கவிதைகளைச் சான்று காட்டலாம். சச்சிதானந்தன் கவிதையில் அழகியல் பக்கத்திலும் அரசியலில் இடதுசாரிப் பக்கத்திலும் நின்றிருந்த வேளையில் எழுதிய கவிதை ‘வியட்நாம்’(1966). நவீனத்துவத்தின் புற அழகில் மயங்குகின்ற ஒரு கற்பனை மனத்தின் முத்திரைகள் அனைத்தும் இக்கவிதையில் பிதுங்கி நிற்கும். ஒரு அரசியல் அனுபவத்தைத் தனது கெட்டகனவாக அனுபவித்துக் கொண்டதே அக்கவிதையின் பலவீனம் எனப் பிற்காலத்தில் சச்சிதானந்தனே ஒப்புக் கொண்டுள்ளார். ‘ஞங்ஙள், தீத்தெய்யம், கியூபாகியூபா’ கவிதைகள் எழுதிய எழுபதுகள் வரை சச்சிதானந்தனின் கவிதைகள் அழகியல் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தன. தனது அரசியல் நம்பிக்கையுடன் கவிதையை எவ்வாறு இணைப்பது என்ற தயக்கம் நிழலாடுவதை ‘எழுத்தச்சன் ‘எழுதும்போள்’, ‘உளி’ போன்ற கவிதைகளில் காணலாம். எழுத்தச்சன் எழுதும்போள்’ கவிதையின் பனுவல் அமைப்பில் காணமுடிகின்ற முரண்கள் இத் தயக்கத்தின் விளைவுதான்.

இத்தயக்கத்தைக் கவிதையின் உடலிலிருந்து விலக்குவதற்கான முதல்முயற்சிகளே ‘ஞங்ஙள்’, ‘தீத்தெய்யம்’, ‘கியூபா கியூபா’ போன்ற கவிதைகள். கவிதையில் அரசியல் ஊடாட்டத்தின் வழியாகவே சச்சிதானந்தன் இந்த வெளியேற்றத்தை நிகழ்த்திக் கொண்டார். தீவிர இடதுசாரிகளுடன் கருத்திணைவுடைய பிற கவிஞர்களிடையேயும் இதே மாற்றங்கள் நடந்தது. கடமனிட்டா, ஆற்றூர், சங்கரப்பிள்ளை கவிதைகளில் பயணிப்பவர்கள் இவ்வடை யாளங்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

‘சாந்தா, கண்ணூர் கோட்ட, ஞான் இந்நுமென் கிராமத்திலாணு’ போன்ற கடமனிட்டா கவிதைகள், ஆற்றூரின், ‘சம்கிரமணம், கான்சர், பிறவி’ போன்ற கவிதைகள், ‘வங்காளம், கஷண்டி’ போன்ற சங்கரப்பிள்ளை கவிதை களும் இக் கற்பனை மாற்றத்தின் சாட்சியங்கள். நவீனத்துவத்தின் அரசியல் விலக்க மயக்கத்தைத் திரும்பிப்பார்க்கும் வலிமையை இவர்களிடமிருந்து தட்டிப்பறிக்குமளவுக்குக் கலவரம் நிறைந்ததாக இருந்தது அன்றையச் சூழல். சமூகத்தைப் பாதித்த கொடிய நோய்மையின் அறிகுறிகளாகவே அவர்கள் இச்சூழலை மதிப்பிட் டனர். கவிதைக்குள் நேரடியாக அரசியல் பேசப் பெரிதும் தயங்கு கின்ற ஆற்றூர் கூட 1974 இல் ஒரு கவிதையில் இதைப் பதிவு செய்தார்.

அழகியல் இலக்கண எல்லைக்குள் நின்றுகொண்டு வரலாற்றுச் சார்பற்ற பார்வையுடன் நிகழ்வுகளை அணுகுகின்ற நவீனத்துவத் தின் சொற்காட்சி போதுமானதல்ல என்ற அறிதலை சச்சிதானந்தன் போன்றோர் இக்காலத்தில் அடைந்தனர். அழகியலில் ஆழ்ந்து வேர்விட்ட தன் முன்கால மொழிநடைக்கு திரும்பிச் செல்ல அவர் விரும்புவதேயில்லை.

நவீனத்துவ நடைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கவிஞரை அன்புடன் வற்புறுத்தும் நண்பருக்கான அறிவுரையாக அமைந்த கவிதை ஒன்று அவ்வாறு திரும்பச் செல்ல லின் இயலாமையை முன்வைக்கின்றது. தனது நவீனத்துவக் காலக் கவிதைகளின் பலவீனமாக அவற்றில் வெளிப்படும் சொற்பொழி வுத்தன்மையைச் சச்சிதானந்தனே பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அக்கவிதைகளின் பலவீனம் அதுமட்டுமல்ல. சொற் பொழிவுத் தன்மையுடன் இணையும் கற்பனைத் தன்மையும் பொதுவாக அக்காலக் கவிதைகளின் குறைபாடாக இருந்தது.

பிற்காலத்தில் முற்றிலும் கற்பனையற்ற ஒரு கவிதைமொழியை வளர்த்துக் கொண்ட கெ.ஜி.சங்கரப்பிள்ளையின் அக்காலக் கவிதை களிலும் சொற்பொழிவுத் தன்மையும் கற்பனைப் பண்பும் இடம் பெறுவதுண்டு. இந்தச் சொற்பொழிவுத் தன்மையும் கற்பனைப் பண்பும் கவிதைகளை அவற்றிற்கே உரிய சூழலில் இருந்து பிளந்தெடுத்து அவற்றிற்கு ஒருவித சர்வதேச இயல்பை அளித்தது.

பெற்ற குழந்தையை நெரித்துக் கொன்று ரத்தம் உலருமுன் விபசாரத்திற்குத் தள்ளப்படும் தாய்கள், முதலாளிக்குத் திராட்சை ரசம் பிழியும் இயந்திரத்தில் சிக்கிய கணவனின் உடையை நெஞ்சோடு அணைத்துப் புலம்பும் மனைவிகள், கிராமத்தைக் காப்பாற்ற இராணுவ வீரர்களிடம் பெண்மக்களை வீசிவிட்டு தற்கொலை புரிகின்ற தந்தையர்; இவர்கள் கேரளத்திலும் இருக்கலாம் என்றாலும் கேரளத்துக்கு அப்பால் உச்சரிக்கப்பட்ட, உச்சரிக்கப்படுகிற கவிதை மொழியில்தான் அவர்கள் வாழ்வு.இன்னொரு விதமாகச் சொன்னால் சர்வ தேசீயமான மானுடவாழ்வின் உருவகமாக்கமே இக் கவிதைகள். இக்குறைபாட்டைப் புரிந்துகொண்டதன் பலனாக ஏற்பட்ட புதியதொரு கேரளியத் தனித்துவ உணர்வு நோக்கி பிற்காலத்தில் சச்சிதானந்தன் வளர்ந்துவந்தார். எனினும் கவிதைச் சொற்பொழிவு என்ற கருத்தை மறுக்கின்ற ஒரு வளர்ச்சியல்ல அது. அரசியல் உணர்வு அழகியல்தன்மை இவற்றிடையே இருந்துவந்த முரண் மற்றொரு நிலையில் நேற்றுவரை தொடர்ந்துள்ளது.

கவிதையில் சச்சிதானந்தன் போல நிகரான பரிணாமத்தைக் கதையில் பதிவு செய்தவர் எம்.சுகுமாரன். ஆரம்பகாலக் கதைகள் கற்பனாவாத யதார்த்துவத்தின் வாடை மிக்கன. அக்கதைகளை எம்.டி.வாசுதேவன் நாயர், டி.பத்மநாபன் கதைகளுடன் இணைத்து வாசித்தால் இதை அறியலாம். எனினும் அக்கதைகளில் வெளிப்படும் பாலியல் சித்திரிப்புகள் அதனை அரசியலற்ற நவீனத்துவத்துடன் இணைக்கின்றது. பின்னர் இவரது கதைகளிலும் தீவிர இடதுசாரி அரசியலாக்கம் நடைபெறுகின்றது.

ஆனால் அதுவும் கற்பனாவாத அரசியலுணர்வுதான். அங்குக் கதாபாத்திரங்கள் கூட மனிதர்களாக அல்ல குறியீடுகளாகவே சித்திரிப்புப் பெறுகின்றனர். உருவகமாக் கத்திற்கு மாறாகத் தொன்மப்படுத்தும் முயற்சிகளைச் சுகுமாரன் கதைகளில் காணவியலும் என்றாலும் அப்பண்பை வளர்த்தெடுத் தவர்கள் எனச் சுகுமாரனின் பாதிப்புடன் எழுதவந்த யு.பி.ஜயராஜ், பி.கெ.நாணு போன்றோரையும் மற்றொரு மரபிலிருந்து வந்த என்.எஸ்.மாதவன்,சி.ஆர். பரமேஸ்வரன் போன்றோரையும் குறிப்பிட வேண்டும்.

எழுபதுகளின் அரசியலாக்க இலக்கியத்தின் முன்னணிப் படைப்பாளர்களாகச் சச்சிதானந்தனையும் சுகுமாரனையும் கூறக் காரணம் வளர்ச்சியின் ஒருகட்டத்தில் வரலாறு இவ்விரு எழுத்தாளர் களின் படைப்புச் செயல்பாடுகளுள் நுழைகிறது என்பதால்தான். ஒருவேளை எழுபதுகளில் இலக்கியப்படைப்பில் ஈடுபட்ட அனைத்துப் படைப்பாளிகளின் சிறப்பியல்புகூட இதுவெனக் கூறலாம்.

ஒ.வி.விஜயனின் தர்மபுராணம், அரிம்பாற, பாறைகள், அய்யப்ப பணிக்கரின் ‘கார்ட்டூன் கவிதைகள்,மகாராஜாக் கதைகள்’, ஸக்கரியா, டி.ஆர்.இவர்களின் கதைகள் மாறிவரும் சமூகவரலாற்றுக்கு முன் முகம்திருப்பி நிற்க அழகியலின், நவீனத்துவவாதத்தின் ஆர்வலர்களால் கூட இயலவில்லை என்பதையே இப்படைப்புக்கள் காட்டுகின்றன. இதன் வழியே படைப்பாளிகள் ஒருவிதத்தில் நவீனத்துவத்தின் காலனிய உறவை நீக்கம் செய்தனர். காலனியாட்சி யில் வரலாற்றை இழந்த ஒரு சமூகத்திற்கு வரலாற்றைப் படைத் தளித்தல் என்பதும் எழுத்தாளனின் பணியே என்ற தெளிவற்ற புரிதலேனும் அவர்களைத் தூண்டியிருக்கலாம்.

******

அழகியலின் அரசியலாக்கம் என்பதே இப் பரிணாமத்தின் பொதுப் பண்பாக இருந்தாலும் அரசியலாக்கம் பலநிலைகளில்தான் வடிவரீதியாக நிறைவேற்றப்பட்டது. எம்.சுகுமாரன், யு.பி.ஜயராஜ், சச்சிதானந்தன், கெ.ஜி. சங்கரப்பிள்ளை போன்றோர் வெளிப்படை யான அரசியல் பொருளுடைய சொற்பொழிவு மற்றும் இலக்கியம் என்ற கெட்டபெயரை வாங்குகின்ற படைப்புக்களை எழுதத் துணிந்தபோது இதேகாலத்தில் ஆனந்த், வி.பி.சிவகுமார், கடமனிட்டா, ஆற்றூர் போன்றோர் அரசியல் நிகழ்வுகளையும் உள்ளடக்கிய வெளியீட்டு வடிவங்களைக் கண்டனர். கதையிலும் கவிதையிலும் நவீனத்துவத்தின் சட்டகத்துள் நின்றுகொண்டு படைத்த ஒ.வி.விஜயன், ஸக்கரியா,அய்யப்பப் பணிக்கர், டி.வினயசந்திரன் போன்றோரையும் அரசியல்ரீதியாக வாசிக்கவே அன்றைய வாசகசமூகம் விரும்பியது என்பதிலிருந்து சமகால அரசியல் சூழல் இலக்கியப்பண்பாட்டில் எவ்வளவு ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இலக்கியத்தை அரசியலோடு இணைக்கின்ற அல்லது இலக்கியத் தின் அரசியலை அதனிடத்தில் உறுதிப்படுத்துகின்ற இணைப்புக்கள் தான் வரலாறு, கலகம்/ எதிர்ப்புணர்வு, தன்னுணர்வு எனும் கூறுகள் இக்காலக் கட்டப் படைப்புகளில் எவ்வாறு இடம்பிடித்துள்ளன என்பதை விசாரித்துக் கொண்டே இப்பகுப்பாய்வை முன்நகர்த்த லாம். தீவிர இடதுசாரி அழகியலில் இருந்து ஆரம்பித்து வேறுபட்ட முறைகளில் வளர்ச்சியடைந்த கெ.ஜி.சங்கரப்பிள்ளை, பாலசந்திரன் சுள்ளிக்காடு,ஆனந்த்,சி.ஆர். பரமேஸ்வரன் இவர்களின் சில படைப்புகளை முன்னிறுத்தி முன்னர் குறித்த படைப்பாளிகளோடு ஒப்பிட்டு ஆராயலாம்.

இக்காலக்கவிதை, கதைகளில் வரலாறு விசித்திரமான வழிகளில் ஊடுருவியது. பட்டத்துவிளை,சுகுமாரனின் கதைகளில் கற்பனா வாதப் புரட்சியாகவும் கடமனிட்டா, ஆற்றூர் கவிதைகளில் ஏதோ இருளுலக உணர்வாகவும், சச்சிதானந்தன்,பாலசந்திரன் கவிதை களில் கடுமையான அடக்குமுறையின் துயரமாகவும் சங்கரப்பிள்ளை யின் கவிதைகளில் காலத்தின் தொனி/பூடக முத்திரைகளாக வரலாறு உள்நுழைகின்றது. காலத்தை எழுதுவதுதான் எழுத்து என்றே அக்காலத்தில் சங்கரப்பிள்ளை நம்பிக்கை கொண்டிருந்தார். வரலாறே மனிதமெய்மையையும் கவிதையையும் விடுதலை செய்யும் என்ற கருத்தியலாக அந்நம்பிக்கை வளர்ச்சி பெற்றது. அறுபதுகள் வரையான தனிநபர் கவலைக் கவிதைகளின் ஒடுக்க இயல்பை முன்னிறுத்தும் சங்கரப்பிள்ளை அக்காலக் கவிதைகளை நடுப்பகல் வேளையில் குகைகளில் முடங்கும் வனவிலங்குகள் போல நபருக் குள் ரகசிய இடங்களில் கவிதை ஓய்வெடுத்தது என்கிறார்.

இப் பார்வைதான் கவிதையைத் தனிமனித மனத்தைவிட்டு வரலாற்றின் பரந்தவெளிக்கு இட்டுச்செல்ல அவருக்கு வழிகாட்டியிருக்க வேண்டும். ‘வங்காளம், கஷண்டி, கௌளிவால், வரும்வரும் எந்ந பிரதீக்ஷா’ போன்ற கவிதைகள் அந்நம்பிக்கையின் பதிவுகளே. அரசியலற்ற நவீனத்துவத்தில் வேர்விட்டன சங்கரப்பிள்ளையின் கவிதைகள் என்றாலும் எழுபதுகளின் தொடக்கத்திலேயே தீவிர அரசியலின் அனுபவங்களை உள்ளேற்றிக் கொண்டது. ஆனால் காலம் சங்கரப்பிள்ளையைச் சொற்பொழிவுத்தன்மை/பிரச்சாரத்தன மான கவிதைகளை எழுதிடச் செய்யவில்லை.

பிற்காலக் கவிதை களோடு சேர்த்து வாசிக்கும்போது இக்கவிதைகள் எழுபதுகள் காலக் கவிதைகளில் முழங்கும் குரல் ஒரு பிரச்சாரகனின் குரலாகவே தோன்றும். எனினும் அக்காலப் பிற கவிஞர்களின் கவிதைகளுடன் ஒப்பிடும்போது பிரச்சாரத்தனம் வெகுவாகக் குறைந்தவை சங்கரப் பிள்ளையின் கவிதைகள். பிரச்சாரத்தை விடவும் ஒருவகை எதிர் கவிதைப் பண்பாடே அவர் கவிதைகளில் முன்னின்றது.

சிலகவிதைகளில் காணப்படுகின்ற சொற்பொழிவுமுறை கூட இந்த எதிர் கவிதைப் பண்பாட்டுடன் தொடர்புடையதே. ஜன்மராத்திரி, காக்கை, ஞான் போன்ற ஆரம்பகாலக் கவிதைகளிலேயே எதிர்கவிதைப் பண்பின் பாதிப்பு தென்படுவதுண்டு. இருப்பினும் கவிதையில் இடப்பரப்புகள் வரலாற்றால் அடர்த்தி பெறும்வேளையில்தான் எதிர்க்கவிதையின் வடிவரீதியான எல்லைகளை மீறும் தகுதியை அது அடைகின்றது. இந்தப் பண்பைத்தான் எழுபதுகளின் அரசியல்மய மாக்க சூழல் சங்கரப்பிள்ளைக்கு அளித்தது.

1971இல் எழுதிய ‘காக்கை’ கவிதையிலும் இருபது ஆண்டுகளுக்குப்பின் எழுதிய ‘திரஸ்காரம்’ கவிதையிலும் இடம்பெறும் காக்கைகளின் சித்திரங்கள் நீண்ட, நிகழ்வுகள் செறிந்த ஒரு பயணத்தின் கதையைக் கூறுகின்றன. எழுபத்திஒன்றின் காக்கை வரலாறற்ற ஒரு இடத்திலிருந்து வருகிறது.

ஒருவகையான காட்சிமயக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை அக் கவிதையில். வரலாறுதான் இம் மயக்கத்திலிருந்து சங்கரப்பிள்ளை யின் பிற்காலக் கவிதைக்கு விடுதலை அளிக்கிறது.அந்த விடுதலை ‘வங்காளம்’ என்ற கவிதையிலிருந்து தொடங்குகின்றது. வரலாற்றைக் கவிதையின் பாடுபொருளாக மாற்ற முயலும்போதுதான் ‘வங்காளம்’ எழுபதுகளின் அரசியல்கவிதையின் மேலான முன்மாதிரியாகத் திகழ்கின்றது கலகம்/ எதிர்ப்புணர்வு அக்கால அரசியல் கவிதைகளின் பொதுஇயல்பாக இருந்துள்ளது.சச்சிதானந்தன், சுள்ளிக்காடு கவிதைகளும் யு.பி.ஜயராஜ்,பி.கெ.நாணு கதைகளும் எதிர்ப்பின் சீற்ற முழக்கங்கள்  நிறைந்தவை.

வைலொப்பிள்ளி,அய்யப்பபணிக்கர் போன்ற முதிய கவிஞர்களின் கவிதைகளும் கூட எதிர்ப்புணர்வை வெளிப்படையாக முன்வைப்பதிலிருந்து அவ்வியல்பு அன்றையச் சமூகத்தின் பொது மனநிலையாக அமைந்திருந்தது எனலாம். நெருக்கடிகால மனித உரிமை ஒடுக்கல்களை பரிகாசம் செய்து வைலோப்பிள்ளி எழுதிய ‘குரங்குராமன்’, அய்யப்பப் பணிக்கரின் ‘கார்ட்டூன் கவிதைகள்’ மற்றும் ‘மகாராஜாக் கதைகள்’, ஒ.வி.விஜயனின் ‘தர்மபுராணம்’ நாவல் போன்றவைகளால் இலக் கியத்தில் அரசியல் கலகம் என்ற கருத்தியலுக்குப் புதிய பொருள் கோடல்களைக் கட்டமைத்த காலம் இது. அக்காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளும் கதைகளும் ‘சிந்தா பதிப்பகம்’ ‘அமர்ஷத்தின்றெ கதைகள்’, ‘அமர்ஷத்தின்றெ கவிதைகள்’ என வெவ்வேறு தொகுதி களாக வெளியிட்டனர்.

எம்.சுகுமாரன் முன்னிறுத்திய அரசியலின் அழகியலைப் புதிய தளங்களுக்கு நகர்த்த முயன்ற யு.பி.ஜயராஜ்,பி.கெ.நாணு போன்றோர் இவ்வேளையில் காலகட்டத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ள இயலாமல் கலங்குகின்ற தமது சமூகச் சூழலை குறியீடுகளாக்கிக் கதைகள் எழுதினர், ‘பி.கெ.நாணு’வின் ‘ஸ்திதி விசேசம்’ என்ற கதையில் பூடகமானநிலையில் பேச்சுத்திறனை இழந்துவிட்ட கதாபாத்திரங்களைக் காண்கிறோம். ஒரு சமூகத்தின் பேச்சும்திறன்தான் இங்கு உருவகப்படுகிறது.எதிர்ப்புணர்வை இழந்தவிட்ட சமூகத்தில் இனிப் பேசுவது யார் என்ற விரும்ப வியலாத கேள்வியுடன் கதை முடிகின்றது.சமூகத்தை மூடுபனி போலப் படர்ந்து பொதிந்துவிடுகிற எதிர்ப்புணர்வின்மையைத் தனது, ‘மஞ்ஞு’ என்ற கதையில் காட்டுகிறார் யு.பி.ஜயராஜ்.தன்னைச் சுற்றி அச்சமூட்டும் நிலையில் பரவிக் கொண்டிருக்கின்ற அதிகார, ஒடுக்கலின் பேரச்சத்தைத்தான் ஜயராஜ் மூடுபனியாகக்(மஞ்ஞு) குறியீடாக்குகிறார்.

சமூகத்தில் குவிந்துவருகின்ற, சமூக உயிர்ப்புக்குக் குந்தகம் விளைக்கின்ற இந்த அச்சத்தை எவ்வாறு விளக்குவது என்பது எழுபதுகள் கால எழுத்தாளர்களைப் பெரிதும் அலட்டிய கேள்வியாக இருந்தது. ஆற்றூர்,சச்சிதானந்தன்,சங்கரப்பிள்ளை, பாலசந்திரன், சுகுமாரன், ஜயராஜ் என யாவரும் தம்மிடம் தாமே இக் கேள்வியைக் கேட்டனர். கலகமொழியைப் படைத்தல் என்பதையே அதற்கான விடையாகக் கண்டனர். ஆகவேதான் அக்காலப் படைப்புக்களில் கலக அரசியலின் இடிமுழக்கம் நிறைகின்றது.

கலக அரசியலை எழுதிய கவிஞர்கள் கதாசிரியர்களும் பல்வேறு பார்வைகளும் பாதைகளும் கொண்டிருந்தனர்.எழுபதின் எழுத்தாளர்க்கு மட்டுமே உரிய அரசியல் நன்னம்பிக்கை பலரிடமும் வெவ்வேறு நிலைகளில் வெளிப்படுவது காணலாம். ‘முண்டு’ (வேட்டி.1974) என்றொரு கவிதையில் அடிக்கடி சாயம்கரையும் சிவப்புக்கரை வேட்டி பற்றிக் கெ.ஜி.சங்கரப்பிள்ளை எழுதுகின்றார்.

அடிக்கடி சாயம் கரையும் அந்த வேட்டி துவைப்பவனுக்கு ஒரு தொந்தரவாகி விடுகிறது. ஆகவே அதன் சாயம் கரைதலை அடக்க தீர்மானிக்கிறான். ஆவேசமாகக் கருங்கல்லில் போட்டுப் புரட்டி எடுக்கிறான். வேட்டி தாறுமாறாகக் கிழிந்து போனாலும் சாயம் கரைவது சுத்தமாக நின்றுவிடுகிறது. ஆனால் அதற்குள் அதனுடன் இருந்த அத்தனை வேட்டிகளும் சிவந்து போகின்றன. ஆறு குளங்களும் முழுக்கச் சிவந்து விடுகின்றன என முடியும் கவிதை முன் குறிப்பிட்ட நம்பிக்கையை உறுதி செய்கின்றது.

கலகத்தின் மற்றொரு தனிப்பாதையில் பயணம் செய்தவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு. சங்கரப்பிள்ளையிலிருந்து மாறுபட்டு கலகத்தைக் கொண்டாடும் கவிதையின் பாதை அவருடையது. பாலசந்திரன் கவிதைகளின் படிமச் செழுமையும் உணர்ச்சியின் செறிவும்தான் கவிஞரின் கலகச் செயல்பாட்டுக்கு ஒரு கொண் டாட்டத்தின் இயல்பை அளிக்கின்றது. வரலாற்றையும் கலகத்தை யும் கவிதைப்படிமங்களுடன் இணைப்பதற்கான முயற்சியே இக்கொண்டாட்ட இயல்பு.

“இது என் ரத்தம் இது என் மாமிசம் எடுத்துக்கொள்ளுக” என்ற முன்னுரை வரிகளுடன் வெளியானது பாலசந்திரனின் முதல் கவிதைத் தொகுதியான பதினெட்டு கவிதைகள்(1980). எழுபதுகளின் சமூகச்சூழலைப் பிரதிபலிக்கும் மனுஷ்யன்றெ கைகள், மரணவார்டு, பலி, போஸ்ட் மார்ட்டம், அமாவாசி, பிறக்காத்த மகனு” என்னும் பலகவிதைகள் அவரை எழுபத்தைந்தில் ஆரம்பித்த பத்தாண்டுக்காலத்தின் முதன்மைக் கவிஞராக நிறுத்தியது. காலத்தின் வெறுமையும் அச்சுறுத்தப்படு தலின் நடுக்கத்தையும் பதிவுசெய்யும் செறிவான கவிதைகள் அவருடையவை.

போராட்டம்,எதிர்ப்பு, சமூகப்புரட்சி குறித்த கவிஞரின் கனவை இக்காலக்கவிதைகள் முன்வைக்கின்றன. வரலாறும் கலகமும் கவிதையின் உள்ளடக்கமாக மட்டும் நின்றுவிடுகிற ஆரம்பகால கவிதைகளிலிருந்து ஒரு வளர்ச்சியாக அமைவன. அவற்றைக் கவிதைப் படிமத்துடன் இணைக்கின்ற பாலசந்திரனின் கவிதைகள். இருப்பினும் தீவிரமான சமூக அனுபவங்களை உணர்ச்சிக் கொண்டாட்டமாக மாற்றுகிற இடத்தில் தான் அவரது முயற்சி நழுவிவிடுகிறது. “மிக நல்ல கவிதை தன் மரணம்தான், மரணத்தை விட நல்ல கவிதை இருந்தால் அது வாழ்க்கைதான்”(1981). எழுபதுகள் கால வாழ்வனுபவங்கள் எதிர்ப்புணர்வுமிக்க ஒரு எழுத்தாளனை இப்படிச் சொல்ல வைத்தது. அனுபவங்கள் பாலசந்திரனைக் கடுமையான ஏமாற்றம்,தோல்வி உணர்வில் தள்ளிவிட்டது.

*******

எழுபதுகளின் அழகியலை அதற்குப் பொருத்தமான பாதையில் செலுத்துவதற்கான மேதமையும் ஆற்றலும் இணைந்த மனம் பாலசந்திரனிடம் இருந்தது. வரலாற்றையும் கலகத்தையும் கவிதைப்படிமத்துடன் இணைப்பதில் ஓரளவாவது இவர் அடைந்த வெற்றி இவ்வாய்ப்பைத்தான் திறந்துகாட்டுகிறது. இருப்பினும் இவ்வாய்ப்பை முழுமையாக நிறைவேற்றிக் கொள்வதில் தோல்வியடைந்துள்ளார் என்பதையே அவரது பிற்கால வளர்ச்சி தெளிவுபடுத்துகின்றது. தன்னனுபவங்கள் கவிதையின் மீது ஏற்றிய உணர்ச்சிகரமான பாதிப்புகளும் தோல்வியுணர்வும் அழகியல் ரீதியான அவரது வாழ்வின் இருப்பை மிகக் குலைத்து விட்டது எனக் கருதலாம். இதே போன்ற ஒரு ‘கெடுமுடிவு’க்கு கை நீட்டிய மற்றொரு மேதைப்படைப்பாளியான சி.ஆர். பரமேஸ்வரனுக்கும் எழுபதுகள் பிறப்பளித்துள்ளது.

1986இல் வெளியான அவரது ‘பிரகிருதி நியமம்’என்ற நாவல் எழுபதுகளின் பிற்பாதியில் எழுதப்பட்டு ‘மாத்ருபூமி’ வார இதழ்களில் வெளியானது. நிகழ்காலத்தின் சீரழிவும் ஒளியின்மையும் எழுபதுகளின் அரசியல் பின்னணியில் விவரிக்க முற்படுகிறது நாவல். கம்யூனிசத் தத்துவத்திற்கும் அதன் நடைமுறையாக்கத்திற்கும் நிகழ்காலக் கேரளத்தில் நேர்ந்த வீழ்ச்சியை முன்னிலைப்படுத்தி அனைத்து இருப்பும் இயக்கமும் இறுதியில் சீரழிந்து சிதையும் என்ற இயற்கைவிதியை- அழிவற்ற உண்மையை- நாவல் விளக்குகின்றது.

நாவலின் ‘பிரகிருதி நியமம்’என்ற தலைப்பிலேயே அடங்கியுள்ள அனைத்தின் சிதைவு பற்றிய தகவல் நாவலின் உள்ளேயும் பல இடங்களில் வெளிப்படுகின்றது. பௌத்த, கிறித்தவ சமய அடிப்படைகளின் புரட்சித்தத்துவங்களுக்கு நேர்ந்த வீழ்ச்சியையும் நாவல் இவ்வாறு வாசிக்கின்றது.

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் புதுமணத் தம்பதியினரான நாவலின் கதைசொல்லியும் அவர்மனைவியும் புத்த-சமண வரலாறுகள் நிறைந்த புராதன நகரத்தில் நடத்துகின்ற பயணம் நாவலின் ஒரு பகுதியில் விவரிக்கப்படுகிறது. பௌத்த நாகரீகத்தின் சிதிலங் களருகே நிகழ்காலத்தின் பிரதிநிதியான பயணவழிகாட்டி கூறும் பரிகாசம் நிகழ்காலம் குறித்த புதிய விழிப்பை வாசகனுக்கு அளிக்கின்றது.

“அனைத்து மதங்களின் மக்களின் கதை இதுதான்,கொடுமையான ஆவேசமான கொழுந்துவிட்டெரிதலின் பின் மக்கள் இரவுணவு சமைக்க அடுப்புமூட்டுகின்றனர். சொந்தபந்த இழப்பின் கண்ணீர் துடைத்து அவர்கள் புதுவாழ்வு அரும்பச் செய்கின்றனர்,மறவியில் தளிர்விடுகின்றனர். பெரிய பெரிய வரலாற்று நினைவிடங்களுக்கு ஓரமாக அவர்கள் மலங்கழிக்கின்றனர். அனைத்து மதங்களின் கதையும் இதுதான். மக்கள் அவர்களைத் தோற்கடித்துக்கொண்ட அறிவிலிக் கதை”

இக் கதையின் மீள்வரவுதான் கம்யூனிசத்தின் தகர்ச்சியிலும் அது குறியீடாக்குகிற கம்யூனிசத்தின் தோல்வியிலும் நாவலாசிரியர் தரிசிக்கின்றார்.இதுதான் இயற்கைவிதி. இவ்விதி மனித இயக்கத்தை ஆளும் காட்சிகள் நோய்ப்படுக்கையில் ஒருவருக்கொருவர் உதவ இயலாமல் சுயநலத்தின் கரைகளில் தஞ்சமடைகின்ற கதைசொல்லி, மனைவியின் இயலாமையிலிருந்தும் குறிப்பிட்ட உரிமைகளின் கொசுவலைக்குள்ளிருந்து நண்பர்களை வெளியேற்றி விடுகின்ற ‘வொல்கோவ் ஆந்தனோ’வின் பெருகி வரும் நுகர்ச்சி வேட்கை யிலிருந்தும் அரசாங்கத்தின் உதிர்தல் திருவிழாக்களில் கலந்து கொள்ளும் புரட்சியாளர்களின் பேராசைமிக்க சுயநல ஆசைகளிலும் வெளிப்படுகின்றது.

இந்த இயற்கைவிதியைத் தடுக்க கதைசொல்லி நடத்துகிற முயற்சிகளின் விவரணம்தான் பரமேஸ்வரனின் நாவலை இக்காலகட்ட எதிர்ப்புணர்வு நாவல்களின் வரிசையில் முன்னிற்கச் செய்கிறது. இன்னொரு நிலையில் எழுபதுகளின் அழகியல் சென் றடைந்த சடலநிலையையும் இப்படைப்பு முன்னிலைப்படுத்துகிறது. படைப்பியல் பின் அடிப்படையை உலுக்கிப் பறிக்கின்ற மனவிரக்தியும் வாழ்க்கை ஏமாற்றமும் தோல்வி மனப்பான்மையும் இந்நாவலின் முகமுத்திரைகளாக விளங்குகின்றன.

பரமேஸ்வரனின் படைப்புடன் மிக நெருக்கமாக அமைகின்ற மற்றொரு படைப்பு எழுபதுகளின் அரசியல் சூழலின் மற்றொரு அத்தியாயமாக வாசிக்க இயல்கின்ற ஆனந்த் எழுதிய ‘உத்தராயணம்’ (1982) என்ற சிறு நாவல். ‘பிரகிருதி நியமம்’ நாவலுடன் ஒப்பிடும் போது இரு நாவல்களும் எதிர்ப்புணர்வுத் தத்துவத்தை தாம் தேர்வு செய்துகொண்ட இருவித வழிகளில் வெளியிடுவது காணலாம். வாழ்க்கை வெறுமை, தோல்வி குறித்த கவலைகளும் உத்தராயணத்திலும் முதன்மைப் பெறுவதுண்டு. எனினும் ‘பிரகிருதி நியமம்’ போலக் கதைகூறலைச் சுயமாகவே இழந்துவிடுவதற்கேற்ற முக்கியத்துவத்தை நாவலில் அவை அடைவதில்லை என்பதே ஆனந்த் செல்லும் தனிவழியாகத் தெரிகிறது.

எழுபதுகளின் கொடுமையான சமூகச்சூழலும் ஏகாதிபத்தியப் போக்குகளும் குறியீடாக அமைகின்ற படைப்பு உத்தராயணம். கதைசொல்லியின் நோய்நிலையும் அதனுடன் தொடர்புடைய வருத்தங்களும் துன்பங்களும் சமூக நலமின்மையின் சின்னங்களா கின்றன. உடல் உபாதைகள் சீரழிவின் சமூக நலக்குலைவின் குறியீடாக அக்காலப் பிறபடைப்புகளிலும் இடம்பெறுவதுண்டு.

‘பிரகிருதி நியமம்’ நல்ல உதாரணம். மேலும், ஆற்றூரின் ‘கான்சர்’, சச்சிதானந்தனின் ‘பனி’, எம். சுகுமாரனின் ‘வெள்ளெழுத்து’, பி.கெ.நாணுவின் ‘ஸ்திதி விசேசம்’,என்.எஸ். மாதவனின் ‘சூளை மேட்டிலே சவங்ஙள்’ என்பவை பிற உதாரணங்கள். மதிப்பீட்டுச் சரிவு குறித்த கவலையும் சினமும்தான் இக் குறியீடுகளுக்கான நிமித்தம். எனினும் எழுத்தின் தன்னிருப்பை அணைத்து இருள் படுத்துகின்ற கூறுகளாக இவை மாறும்வேளை இலக்கியத்தின் உயிர்மைப்பண்புதான் சோதனைக்குள்ளாகிறது.

இப்படிப் பார்வை யிடும்போது, இடதுசாரிக் கற்பனாவாதத்தை, நம்பிக்கையின் மையை, வறட்டு உணர்ச்சிகளை, தோல்வி மனப்பான்மையை மறக்கத் தயாரான வேளையில் தான் எழுபதுகளின் அரசியல் இலக்கியம் உயிர்ப்புத்தன்மையை அடைந்திருப்பதைக் காணலாம். இவ்உயிர்மைப் பண்பால்தான் எழுத்து வரலாற்று ரீதியான பண்பாட்டு ரீதியான ஒரு தன்னுணர்வை அடைகின்றது. மேலும் பொருத்தமாகச் சொல்வதானால் அப்போதுதான் இலக்கியம் அதன் அரசியல் இலக்கை அடைகின்றது.

ஆனந்த் எழுதிய உத்தராயணத்தின் இறுதியில் வருகிற நம்பிக்கையின் குரல் இலக்கியத்தின் இவ்வுயிர்மைப் பண்பைத்தான் குறிக்கின்றது. சுற்றுச்சூழல், பல்உயிர்ஓம்பும் பண்பாட்டின் அடித்தளம் கொண்ட ஓர் அகவிழிப்பின் நாற்றுகள் அந்நாவலின் இறுதியில் முளைவிடுவதைக் காணலாம்.முதலாளிய உலகின் அதிகார அமைப்பும், தொழில்நுட்ப அறிவியலின் ஏகாதிபத்தியத் தையும் திறனிழக்கச் செய்யும் ஆற்றல்கொண்ட ஒரு புதிய பழைய நறுமணப் பரவல் குறித்த நம்பிக்கையுடன் அந்நாவல் முடிகின்றது.

கதையின் இறுதியில் கதைசொல்லி வீசியெறிவது தனது நோய் நிலையை காட்டும் எக்ஸ்-ரே படங்களையும் மகனுக்கு விளை யாட்டுப் பொருளாகக் கிடைத்த தீ உமிழும் டாங்கர் பொம்மையு மல்ல. முதலாளியத்தின் அதி தொழில்நுட்பத்தின் விளைச்சலான நவீன உலக மனப்பான்மைதான் அப்படி வீசியெறியப்படுகிறது. தன்கையிலிருந்த பழைய பொருட்களின் இடத்தில் செடிகளையும் முளைத்து வளரும் விதைகளும் அடங்கிய பை ஏந்தி நிற்கிற கதைசொல்லி ஒரு புதிய தன்னுணர்வையே குறியீடாக்குகிறான்.

உத்தராயணம் வெளிவருவதற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆற்றூர் ரவிவர்மா ‘முளையிடல்(1976) என்றொரு கவிதை எழுதியுள்ளார். இவ்விரு படைப்புகளையும் இணைத்து வாசிக்கும் போது அரசியல்ரீதியான எதிர்வினையாடல்,போராட்ட உணர்வுக்கு இக்காலகட்டத்தில் ஏற்பட்ட உணர்ச்சிமாற்றங்களை அறியலாம். ஆற்றூர் கவிதையின் உரைநடையாக்கமோ உத்தராயனம் என்று சந்தேகப்படுமளவு ஒற்றுமைகள் நிறையவுள்ளன.

மலையாளத்தில் அரசியலாக்கம் பெற்ற அழகியலுக்கு எழுபதுகளில் நேர்ந்த பரிணாமத்தின் குறியீட்டு நிலையிலான முன்னிறுத்தலே ‘முளை யிடல்’ கவிதையிலிருந்து ‘உத்தராயணம்’ கதைக்கான பயணமாக பதிவு பெறுகின்றது. மனிதனின் அடிப்படை உரிமைகள் மட்டுமல்ல இயற்கை அளிக்கும் நிழலைக் கூடக் கவர்ந்து போகிற அதிகாரச் செருக்குக்கு எதிராக தனியாளாக மனிதன் நடத்துகிற போரட்டம் பற்றிய கனவியக்கமே முளையிடல் எனும் கவிதை.

இருப்பினும் எந்தவொரு நம்பிக்கையின் விளிம்பையும் அளிக்காமல் நின்று விடுகிறது கவிதை.கவிதைசொல்லியின் கையிலிருக்கின்ற விதைகள் கெட்டுப்போனவை என்ற அறிதலே இந்த எதிர்க்கவிதை யின் முனையடித்து விடுகின்றது. எழுபதுகளின் பத்தாண்டுகள் தகர்த்துவிட்ட கனவின்,நம்பிக்கையின் மீட்சிதான் உத்தராயணத்தில் தென்படுகிறது. சமூகத்தில் சீரழிந்துபோன, சிதைந்துவிட்ட அனைத்தையும் கடந்து உயிர்ப்புக் கொள்வதற்கான ஒரு பிரக்ஞை படைப்புத்தளத்தில் உருவாகி வருவதன் அடையாளம்தான் உத்தராயணம் நாவலில் மின்னி மறைகிறது.

*****

எழுபதுகளின் அழகியலில் ஏற்பட்ட தன்னுணர்வு குறித்த புதிய பார்வைகளை ஆனந்திடம் மட்டுமல்ல, ஆற்றூர், சச்சிதானந்தன் , கடமனிட்டா, சங்கரப்பிள்ளை எனப் பலரிடமும் காணவியலும். தன்னுணர்வு உருவாக்கத்தின் வழியே அரசியல் எதிர்ப்பு பொருளு டையதாகிறது என்ற அறிதலே இப்பார்வையின் ஊற்று.

வரலாற்று மயமாக்கத்தின்,எதிர்வினையாடலின் தொடர்ச்சியே தன்னுணர்வு உருவாக்கம். இச்சூழலில்தான் எழுபதுகளுக்குப் பிற்பட்ட இரு பத்தாண்டுகள் மலையாள இலக்கியத்தில் வலிமை அடைந்த தேசம்,மொழி,பால்,சமூகம் பற்றிய தன்னுணர்வு தீவிர இடதுசாரி இலக்கிய அழகியலின் தொடர்ச்சியாக அமைகின்றது.

எழுபதுகளின் இலக்கியத்துக்குத் தூண்டுதலாக அமைந்த தேசீயம் அல்லது உலகளாவிய நிலையிலான சமூக உணர்வின் இடத்தை முழுமையாக கேரளீயமான கிளைத் தேசீய உணர்வு கைப்பற்றிக் கொண்டதே இப்பரிமாணத்தின் மிக முக்கியமான பக்கம். வெளிப்படையான அரசியல் நம்பிக்கையில் ஏற்பட்ட அடிப்படை யான மாற்றத்தின் விளைவல்ல இப்பரிமாணம்.

வெளிப்படையாக இவர்கள் மார்க்சீய அரசியல் நம்பிக்கையாளர்களகவே இருந்து வந்ததை அவர்களின் நம்பிக்கைகள் காட்டுகின்றன. இருப்பினும் நுட்பமான தளத்தில் தமது அரசியல் அணுகுமுறைகளைச் சீர்திருத்தி நவீனப்படுத்த இவர்களில் பலரும் முயன்றுள்ளனர்.

எதிர்வினையாடலின் புதிய பொருள்கோடல் இந்தக் கேரளீயக் கருத்தாடலில் அமைந்துள்ளது. இந்தியா ஒரு பெருந்தேசீய நாடு, இந்நாட்டின் பல விதமான பண்பாட்டுத் தேசீயத் தனித்துவமும் சிறப்புக்களும் ஊக்குவிக்கப்படுவது ஒருவிதமான பண்பாட்டு எதிர்வினையே என்ற புரிதல் கேரளீயம் என்ற கருத்தாடலின் பின் நிற்கிறது. இந்தியாவின், ‘பல்வேறு மொழிகளின் பண்பாடுகளின் சிறப்பான தனித்துவ ஆளுமையை நிலைபெறச் செய்து வளர்ப்பது மக்கட்பண்புசார் பண்பாட்டு எதிர்வினையாடலின் பகுதியாகும்’ எனச் சச்சிதானந்தனும், ‘எதிர்வினையாடலே எண்பதுகளின் பண்பாட்டு நெறி’எனச் சங்கரப்பிள்ளையும் கூறுகின்றனர்.

மலையாளி கடந்துவந்த வரலாற்றுக் கட்டத்தை இழப்பின் ஏக்கம், மகத்துவப்படுத்தல் ஆர்வத்தின் பாதிப்புகளின்றி மீட்டெடுத்தல் என்பதே இந்தப் பண்பாட்டு எதிர்வினையாற்றல் நெறி. சாதி அமைப்பு, காலனிய ஒடுக்கல்களுக்கும் எதிரான எதிர்வினையாற்றல் களும் கலகங்களும் இடம்பெறும் கேரளத்துவம் இக்காலத்திய பல படைப்புக்களில் பதிவாகியுள்ளது.

சச்சிதானந்தனின் ‘அடிவாரம், தெருவோரத்தே தத்துவ சிந்துகள், வீணபுவு, காயிக்கரயிலெ மண்ணு’, ஆற்றூரின், ‘வெள்ளம், எலத்தாளம், மோக்ஷம்’ சங்கரப்பிள்ளையின், ‘அக்னிசமனம், கிணர், கடம்பநாட்டு கடம்பில்ல, கொச்சியிலே விருட்சங்கள்’ போன்ற கவிதைகள் கேரளத்துவத்தைப் பதிவு செய்வன. தீவிர இடதுசாரிகளுடன் வெளிப்படையான உறவற்ற அய்யப்பப் பணிக்கரின், ‘நாடெவிடெ மக்களே’, டி.வினயசந்திரனின், ’காடு,காயிக்கரயிலே கடல்’,ஏ. அய்யப்பனின் ‘ப்ரவாசியுடெ கீதம்’ போன்றன கேரளத்துவத்தை முன்னிறுத்தும் இக்காலக் கவிதைகள்.காலத்தை எழுதுவதே கவிதை என்ற ஆரம்பகால சிந்தனையிலிருந்து தேசத்தை எழுதுவதே கவிதை என்ற புதிய சிந்தனைக்கான அடிவைப்பை எண்பதுகளில் வளர்ச்சி பெற்ற கேரளத்துவக் கருத்துருவாக்கம் தொடங்கி வைக்கின்றது.

தீவிர இடதுசாரிகளிடமிருந்து எழுந்து வந்த அழகியல் எண்பதுகளில் கைக்கொண்ட பல வடிவங்களில் ஒன்றுமட்டுமே கேரளத்துவத்தைக் கொண்டாடும் இந்நெறி. மலையாள இலக்கிய மரபில் காலூன்றி நிற்கும் இந்நெறி ஒருவகையில் குமாரனாசானிடம் ஆரம்பமாகின்ற நவீன மலையாள கவிதையின் பண்புகளுள் ஒன்றுதான். இந்துலேகா, ‘மார்த்தாண்டவர்மாவில் ஆரம்பிக்கின்ற மலையாள நாவல்களின் வழியும் அதுதான். வள்ளத்தோள், உள்ளூர், பி.குஞ்ஞிராமன் நாயர், இடசேரி, வைலொப்பிள்ளி, தகழி, உறூப், பஷீர், எம்.டி.எம்.கோவிந்தன், எஸ்.கெ. பொற்றேகாடு போன்றோ ரால் வளம்படுத்தப்பட்ட இம்மரபு எண்பதுகளில் விரஇடதுசாரி அரசியலின் மூலமாகத் தனித்துவமடைந்தது.

இந்தியப் பண்பாடு என்பது பல உருவமும் பலகிளையும் பலகுரலும் கொண்டது என்ற மெய்மையை அறிவிப்பதே இவ்வரசியலின் செய்தி. இலக்கியத்தையும் பண்பாட்டையும் சிலையெடுக்கப்பட்ட ஒரு சில ஆளுமைகள், படைப்புக்களின் மீதாக மட்டும் சுருங்கக் காணவியலாது என்ற செய்தியையும் இவ்வரசியல் அளிக்கின்றது. இலக்கியத்தின் இலக்கியத்தன்மையைச் சந்தேகிக்கின்ற கேள்விக்குள்ளாக்குகிற அணுகுமுறையும் இதையட்டி வளர்ந்துள்ளது. எண்பதுகளில் எழுச்சிபெற்ற பெண்ணியம், தலித்தியம்,சூழலியல் சிந்தனைகள் யாவும் இந்தப் பண்பாட்டுச் சூழலின் உற்பத்திகளே.

நவீனத்துவ வாதத்தில் மறைந்திருக்கின்ற இலக்கியத்தன்மை,காலனியக் கற்பனாவாதம் இவற்றின் கொள்கைப் பாதிப்புக்களைத் தகர்த்தெறிய இலக்கிய அழகியல் தன்னைத் தயாரித்துக்கொள்ளலின் சாட்சியமும் இதுதான். இந்தப் பொருளில்தான் பண்பாட்டுப்பன்மையில் அழுத்தம் கொள்கின்ற சமகால அழகியல் ஆயிரத்துத் தொள்ளா யிரத்து அறுபத்து ஐந்திற்குப் பிறகு முறையாக வளர்ச்சிபெற்று வந்த நவீனத்துவ-தீவிர இடதுசாரி அழகியலின் தொடர்ச்சியாக அமைகின்றது.

பிற்காலப் படைப்புகளில் கேரளத்துவம் குறித்த பிரக்ஞையில் வந்தடைந்த மாற்றங்கள் நாம் ஆராய எடுத்துக்கொண்ட காலஎல்லைக்கு வெளியே அமைவதால் அதுபற்றிய கருத்தாடல்கள் இங்குக் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

Pin It