நொபொரு கராஷிமா அவர்கள் ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் (02.12.2010) தனது அண்மைக்கால ஆய்வான இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் வரலாற்று ஆய்வின் நிலை குறித்தும் கல்வெட்டுத் துறையின் நிச்சயமற்ற எதிர்காலம் மீதான தனது ஆழ்ந்த கவலை குறித்தும் பேசினார்.

நொபொரு கராஷிமா, தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக உள்ளார். தென்னிந்தியாவின் காவிரி டெல்டா பகுதியிலுள்ள அள்ளூர், ஈசான மங்கலம் கிராமங்களில் நிலக்கட்டுப்பாடு என்ற கட்டுரையைச் சோழர் காலக் கல்வெட்டுக்களை அடிப்படையாகக்கொண்டு எழுதியுள்ளார். இக்கட்டுரை தென்னிந்தியாவின் இடைக்காலப் பொருளாதார வரலாறு குறித்த முதன்மையான ஆய்வாகும். இவ்வாய்வின் மூலம் இவர் கல்வெட்டுப் பயில்விற்கு முறையான வழியை உருவாக்கி அதன் வழி வரலாற்று மூலங்களில் உள்ள செய்திகளைப் புரிந்துகொள்ளும் ஆய்வுத்துறையில் முன்னோடியாகத் திகழ்கிறார். இவர் தென்னிந்திய இடைக்கால வரலாறு குறித்த ஆய்வுகளில் பெரும்புகழ் பெற்றவர். இந்திய ஜப்பானியச் சமூக அறிவியல் ஆய்வுப் பாரம்பரியத்தில் தனது அனுபவவாத ஆய்வுகளின் மூலம் முக்கியப் பங்காற்றியுள்ளார். பெங்களூருவில் பார்வதி மேனனுக்கு அளித்த பேட்டியில் தனது சமீபத்திய ஆய்வான இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் வரலாற்று ஆய்வின் நிலை குறித்தும் கல்வெட்டுத் துறையின் நிச்சயமற்ற எதிர்காலம் மீதான தனது ஆழ்ந்த கவலை குறித்தும் பேசினார்.

தொன்மை, இடைக்காலத் தென்னிந்திய வரலாற்று ஆய்வில் ஒரு புதிய வழியை உருவாக்கியிருக்கியுள்ள நீங்கள், இந்திய அயலக ஆய்வாளர்கள் குழுவில் ஒருவராக இருக்கின்றீர்கள். இந்தக் குழு 1960களின் நடுப்பகுதியில் தமிழியல் ஆய்வு என்றால் என்ன என்பதற்கு ஒரு வடிவம் கொடுத்து அதனைப் பதிப்புகள்/ நூல்கள் மூலமாகவும் குழுச் செயல்பாடுகளின் வழியாகவும் முக்கியமாக அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் என்கிற அமைப்பின் மூலமாகவும் வளர்த்தது. நீங்கள் தற்பொழுது அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளீர்கள். இதற்குத் தமிழ்நாட்டின் அரசியலின் மீதான உங்களின் திருப்தியின்மையை ஒரு காரணமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழியல் ஆய்வின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

நான் முதலிலேயே ஒரு கட்டுரையில் தமிழ் மாநாடு (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு) மற்றும் அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் பற்றிய என்னுடைய கருத்தினையும் நிலைப்பாட்டினையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். அந்தக் கட்டுரை ஜூலை 23, 2010 இந்து நாளிதழில் வெளிவந்துள்ளது. இது குறித்து மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் உள்நாட்டு அரசியலுக்குள் சிக்குண்டுள்ளமையை யாராவது ஒருவர் தெரியப்படுத்தவேண்டும். அதைத்தான் நான் செய்தேன். அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் இந்த அரசியல் சிக்கலிலிருந்து விடுபட்டுப் புத்துயிர்பெறும் என்ற நம்பிக்கை இல்லாமையே அதன் தலைவர் பதவியிலிருந்து நான் வெளியேறியதற்குக் காரணம். மேலும், என்னுடைய முதுமை, உடல்நலம் முதலானவையும் காரணங்களாகும். இந்த அமைப்பு இளைய, சிரத்தையான தமிழ் ஆய்வாளர்களால் மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்புகிறேன்.

தற்போது வெளியாகியுள்ள 'பழங்காலம் முதல் இடைக்காலம் வரை - தென்னிந்தியச் சமூக மாற்றம்' என்ற நூலுக்குப் பிறகு நீங்களும் உங்கள் சக ஆய்வாளர்களும் தென்னிந்தியாவின் இடைக்கால சமய வரலாறு, சமயத்தின் பங்கு குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகின்றீர்கள். இதில் சமயத்தின் இடம் குறித்த உங்களின் முடிவு என்ன? அந்த முடிவு, தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் பொருளாதார மாற்றம் இருந்தது என்ற உங்களுடைய கோட்பாட்டில் பொருந்தி நிற்கின்றதா?

12, 13ஆம் நூற்றாண்டுகளில் உருவான சமூகப் பொருளாதார மாற்றங்களை, நான் அக்கால சமயச் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்தவிரும்புகிறேன். என்னுடைய முந்தைய புத்தகத்தில் இது குறித்துப் பேசவில்லை. இதன்காரணமாகவே என்ற ஆய்வுத் திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளேன். தென்னிந்தியாவில் இடைக்கால சமயச் செயல்பாடுகள் - சமயக் கல்வெட்டுகள் ஆய்வு கல்வெட்டுக்களைச் சமயக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் இந்த ஆய்வில் என்னுடன் சக ஆய்வாளர்களான எ. சுப்பராயலு, ப. சண்முகம் முதலானவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு சமய மரபுகள் தமிழ் நாட்டில் மதச் செயல்பாடுகளின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளன. அவற்றைச் சுருக்கமாக விளக்குகிறேன்.

7 முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான பக்தி இயக்கம் ஒன்று. இவ்வியக்கம் தேவார, திருமுறைஓதல் மரபுடன் 11ஆம் நூற்றாண்டுவரையிலும் அதற்குப் பிறகும் தொடர்புகொண்டிருந்தது. மற்றொன்று சைவத் துறவிகளின் உருவாக்கம் காரணமாக 11, 12ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் உருவான வடஇந்தியப் பிராமணிய மரபு. முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரனால் இந்தப் பிராமணத் துறவிகள் இராஜகுருகளாக நியமிக்கப்பட்டமை இந்த மரபின் அக்கால இருத்தலினைக் காட்டுகின்றது. இந்த இரண்டு மரபுகளும் இணைந்தபோது (12ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில்) சமூகத்தில் பின்தங்கிய உழவர்கள், வணிகர்கள், கைவினைஞர்கள், மலைவாழ் குரவர்கள், வீரர்கள் முதலானவர்கள் தங்கள் நிலையில் மேம்பட்டிருந்தனர். 13ஆம் நூற்றாண்டில் சயேச் செயல்பாடுகளிலும் இவர்கள் பங்கேற்றனர் என்பதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் இந்தச் செயல்பாடுகள் தமிழ்நாடு முழுவதும் பரவின. 13ஆம் நூற்றாண்டில் வெள்ளாளத் துறவியான மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் இந்த இரு மரபின் இணைவினால் உருவான தென்னிந்தியச் சைவசித்தாந்த மரபில் குறிப்பிடத்தக்க நூலாகும்.

எனவே 12, 13ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமூக மாற்றம் ஏற்பட்டது எனக் கூறலாம். இதனைத் தான் என்னுடைய அண்மைக்கால நூலில் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்தச் சமூக மாற்றம் சமயச் செயல்பாடுகளுடனும் தொடர்புடையது.

பழங்கால, இடைக்காலத் தென்னிந்தியாவின் வரலாறு தொடர்பான படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காலனிய ஆதிக்கத்தின்போது சமூகம் மற்றும் பொருளாதார அடிப்படையில் ஒரு கட்டுக்கடங்காத, கொந்தளிப்பு நிலை உணரப்பட்ட, 17ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளின் வரலாற்று ஆய்வு குறித்து எவ்வாறு விளக்குவீர்கள்?

வரலாற்று ஆய்வுகள் இப்பொழுதுவரை மனநிறைவு அளிப்ப தாகவும் போதுமானதாகவும் இல்லை என்றுதான் கூறவேண்டும். தரவுகளுக்குள் செல்வதற்குச் சரியான வேலைகள் போதுமான அளவிற்குச் செய்யப்படவில்லை. எழுதப்பட்டுள்ள வரலாறு களைச் சுற்றிப் பல புதிய எண்ணங்கள்/திட்டங்கள் உள்ளன. ஆனால், வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய மிகப்பெரிய அளவில் தரவுகள் ஆய்வு செய்யப்படவேண்டும்.

17,18ஆம் நூற்றாண்டுகள் குறித்த பழைய ஆய்வுகள் பிரித்தானியக் காலனீய ஆட்சி இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தது என்ற மையத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனால் தற்பொழுது பல ஆய்வாளர்கள் இந்தியப் பொருளாதாரம் 18, 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலும் வளர்ந்துவந்துள்ளது என்று வாதிடத் தொடங்கியுள்ளனர்.

இவ்விடயம் ஆசியப் பொருளாதாரம் என்ற கோணத்திலிருந்து ஆய்வு செய்யப்படவேண்டும். குறிப்பாக வாணிப வளர்ச்சி மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் மற்றும் உலக வரலாற்றுடன் கொண்டுள்ள தொடர்பும் ஆய்வு செய்யப்படவேண்டும்.

இந்த வரலாற்று மாற்றம் போர்த்துக்கீசிய, டச்சு, பிரித்தானிய வணிகத் தரவுகளைக் கொண்டு மட்டுமன்றி உள்நாட்டு நிலையினைக் காட்டும் தரவுகளைக் கொண்டும் ஆய்வு செய்யப்படவேண்டியது முக்கியமானதொன்றாகும். அதாவது, ஹெச்.கோடனி, வாடன் முறைமை பற்றிய ஆய்வினை மராத்திய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு செய்வது போல, டி.மிஸ§ஷிமா, எஸ்.ஹெச். யனகிசவா ஆகியோர் பிரித்தானியக் குடியேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார மாற்றத்தை ஆய்வு செய்வது போல. இது போன்ற ஆய்வுகளைத் தொடர்வதன் மூலம் 18ஆம் நூற்றாண்டின் பொருளாதார நிலை குறித்த தெளிவான புரிதலினைப் பெற முடியும்.

18ஆம் நூற்றாண்டினைப் புறக்கணிக்கப்பட்ட காலமாக ஏன் கருதுகின்றீர்கள்? தரவுகளைப் படிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவா? அல்லது வரலாற்றின் மீதான ஈடுபாடு குறைந்து வருவதன் காரணமாகவா?

பொதுவாகவே வரலாற்றுப்பயில்வு/ஆய்வின் தகுதி தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களில் குறைந்துவருவதாகவே எண்ணுகிறேன். நான் முதன் முதலில் 1961இல் இங்கு வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல் வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் சேர்ந்தபொழுது கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, என். வெங்கடராமணையா முதலானோர் கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் மிகச் சிறந்த ஆய்வுகளைச் செய்திருந்தனர். தமிழ்நாட்டில் முன்னெடுக்கப் பட்ட திராவிடச் செயல்பாடுகள் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். இவை வரலாற்று நிலையில் மிகவும் முக்கியமானவை. சமூக ரீதியான வளர்ச்சி, குறிப்பாக அவர்களுடைய கண்ணோட்டம் / போக்கு சாதிய முறையில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் (குறித்த முற்போக்குப் பார்வையினைக் கொண்டிருந்தது) - எதிர்பாராதவிதமாக அறிவுசார்ந்த தன்மைக்கு எதிரான போக்கினைக் அவை கொண்டிருந்தன. இந்த நிலை சீனாவில் பண்பாட்டுப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்த இயக்கம் வரலாற்று ரீதியாகச் சில காலம் அவசியமாகிறது. ஆனால், பெரிய அளவிளான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அரசு ஆய்வு நிறுவனங்கள் பற்றி?

அரசு நிறுவனங்கள் மேலும் பாதிக்கப்படும் என்று எண்ணுகிறேன், ஏன் என்று தெரியவில்லை? இந்நிறுவனங்களுக்குத் தேவைக்கேற்ற அளவிற்குக் கவனமளிக்கப்படுவதல்லை. இந்தியத் தொல்லியல் துறையின் பொது இயக்குநர் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகப் பயன்படுத்தப்படுகின்றார். ஆனால் இடைப்பட்ட காலங்களில் தொல்லியல் தொடர்பான எந்தப் பிரக்ஞையும் இல்லாத மாவட்ட கலெக்டர்கள் இயக்குநர்களாக இருந்தனர். இதுபோலவே மாநிலத் தொல்லியல் துறைகளிலும் நடந்தது. கல்வெட்டு குறித்த அறிவு இல்லாத கலெக்டர்களால் கல்வெட்டுத்துறை பாதிப்படைகின்றது. பல காலம் முதல் இன்று வரை புதிய கல்வெட்டாய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. நான் முதன்முறை, 1962இல் ஊட்டி சென்றபோது கல்வெட்டு அலுவலகமும் அந்தச் சூழ்நிலையும் செயல்திறமுடையதாகவும் ஆற்றல்வாய்ந்ததாகவும் இருந்தன. டாக்டர் கே.வி. ரமேஷ், டாக்டர் பி.ஆர். கோபால், டாக்டர் எஸ். ஹெச். ரிதி முதலான இளைய கல்வெட்டு உதவியாளர்கள், பின்தொடரத்தக்க மிக நல்ல வேலைகளைச் செய்தனர். அந்தச் சூழ்நிலையை நாம் இழந்துவிட்டோம். அதுபோலவே நெடுங்காலமாகக் கல்வெட்டாய்வாளர்களுக்கும் எந்த ஊக்கமும் அளிக்கப்படவில்லை. கல்வெட்டறிவு இல்லாமல் எந்தப் பழங்கால, இடைக்கால இந்திய வரலாற்றினையும் ஆய்வு செய்ய முடியாது. இந்நாட்களில் பெரும்பாலான இந்திய, அயலக ஆராய்ச்சியாளர்கள் ஆண்டறிக்கைகளில் உள்ள கல்வெட்டுச் சுருக்கங்களையே சார்ந்துள்ளனர். இதனால் இவர்கள் மூலத்திற்குள் செல்வதில்லை.

கல்வெட்டுத்துறையை ஊக்கப்படுத்த என்ன செய்யலாம் என்று எண்ணுகிறீர்கள்?

வெளியிலுள்ள கல்வெட்டாய்வாளர்களுடன் ஒரு ஒப்பந்த முறையினைத் தொடங்க வேண்டும். நல்ல வேளையாகத் தற்பொழுது இது நடந்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் மைசூர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை மின்மயமாக்க முன்வந்துள்ளது. இந்தச் செயலினைச் செய்யக் காரணமான இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினைப் பாராட்டுகிறேன். இரண்டு புதிய கல்வெட்டாய்வாளர்கள் மைசூர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை படிப்படியாக முன்னேற்றமடையும் என்று நம்புகிறேன்.

அவ்வாறு நிகழவில்லை என்றால்?

அவ்வாறு நிகழவில்லை என்றால் தொன்மையான வரலாறு இந்த நாட்டில் அழிந்துபோகும். இதனை நான் மேலோட்டமாகக் குறிப்பிடவில்லை, இப்படி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகக் கூறுகிறேன். நாம் மிகவும் வருந்தத்தக்க/ இக்கட்டான நிலையில் உள்ளோம். இது நடந்தால் வரலாறு, கருத்துகள் மற்றும் கோட்பாடுகளின் மீது மட்டுமே கட்டப்படும். வரலாற்று மூலங்களை அடிப்படையாகக் கொண்ட உறுதியான செய்கைகள் மீது அல்ல.

மொழியாக்கம்: சு.சுஜா

****

தமிழ்க் கல்வெட்டுக்கள்

மு.காமாட்சி

இந்தியாவின் பல பகுதிகளில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்க காலத்தில் இக்கல்வெட்டுகளை ஆங்கிலேய அரசு மட்டுமல்லாது அரசின்கீழ் இயங்கிய நிறுவனங்களும் சிற்றரசுகளும் தொகுக்கும் பணியில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து செந்தமிழ், தமிழ்ப்பொழில் முதலான இதழ்களிலும் கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்பும் நிழற்படமும் வெளிவரலாயின. தற்பொழுது இந்திய-மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, பல்கலைக்கழகங்கள் முதலான அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் புதிய கல்வெட்டுகளை வெளியிட்டு வருகின்றன. தனிப்பட்ட ஆய்வாளர்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- இந்தியாவில் இதுவரை 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை தற்போது ஒரு இலட்சத்தைத் தாண்டும் எனலாம்.

- இவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தென்னிந்தியாவைச் சேர்ந்தது. இதுவரை வெளியிடப்பட்ட கல்வெட்டுகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட எ. சுப்பராயலு தமிழ்க் கல்வெட்டுகளை காலநிரல்படி பகுப்பாய்வு செய்து கீழ்க்கண்ட அட்டவணையினை அளித்துள்ளார்.

-      கி.மு. 300 - கி.பி. 500-க்கு இடைப்பட்டவை    -    400

-      கி.பி. 501 - கி.பி. 850-க்கு இடைப்பட்டவை     -    900

-      கி.பி. 851 - கி.பி. 1300-க்கு இடைப்பட்டவை    -    19,000

-      கி.பி. 1300 - கி.பி. 1600-க்கு இடைப்பட்டவை   -    6,000

-      கி.பி. 1600 - கி.பி. 1900-க்கு இடைப்பட்டவை   -    2,000

-      வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகள்  -    300

இவற்றில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பதிப்பித்து முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

Pin It