உலகத் தமிழர் பேரமைப்பின் 7ஆம் ஆண்டு நிறைவு விழா ஈழத் தமிழரின் வாழ்வுரிமைக்கான மாநா டாக கடந்த திசம்பர் 26, 27 தேதி களில் - திருவள்ளுவர் ஆண்டு மார்கழி 11, 12 ஆகிய இரு நாள்கள், தஞ்சைத் தரணியில் மிகுந்த எழுச்சியோடும் உணர்வோடும் நடைபெற்றது. இம் மாநாட்டையட்டி ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமைகளை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்டுள்ள மலரே ‘உலகத் தமிழர் மாநாட்டு மலர் 2009’.

உலகத் தமிழர் பேரமைப்பு உருவான வரலாற்றுக் குறிப்புகள், அதன் ஐந்து அம்சத் திட்டங்கள், அதன் இலக்குகள் ஆகியவற்றின் வெளிப்பாட்டுடன் தொடங்கி, சுமார் 500க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் விரியும் மலரில், தமிழீழத்து, தமி ழகத்து அறிஞர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள் பலரது படைப்புகளும், சிந்தனைகளும் ஒருங்கே இடம் பெற்றுள்ளன.

தமிழர்களின் தோற்றமும் ஆரம்ப வரலாறும் குறித்து கலாநிதி முருகன் குணசிங்கம், தமிழகம் - தமிழீழம் தொல்லியல் சான்றுகளின் வரலாறு குறித்து கா. இந்திரபாலா, தமிழரி டையே மொழி, பண்பாடு பற்றிய உணர்வு குறித்து முனைவர் க. கைலாச பதி, இலங்கைத் தமிழரது சமூகக் கட்டமைவின் சில முக்கிய அம்சங்கள் குறித்து முனைவர் கா. சிவத்தம்பி, இலங்கையின் மீது தமிழக மன்னர் களின் படையெடுப்புகளும் ஆட்சியும் குறித்து முனைவர் த. செயராமன் எனத் தொடரும் 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பலதரப்பட்ட சிந்தனை யாளர்கள் இதில் கட்டுரை எழுதி யுள்ளனர்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ., இ.க.க. தோழர் சி. மகேந்திரன், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், முதுமுனைவர் இளங்குமரன், மறவன் புலவு சச்சி தானந்தன், சாலை இளந்திரையன், சூரிய தீபன், தமிழ்க்கனல், பூங்குழலி, தி, அழகிரி உள்ளிட்டு. பல்வேறுபட்ட சிந்தனையாளர்கள், அறிஞர்கள், பேரா சிரியர்களது கருத்துகள், இவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய பதிவுகளாகவோ, அல்லது இம்மல ருக்கு எனத் தனியாக எழுதிய கட்டுரை யாகவோ, மலருக்கு பங்களிப்பு செய்துள்ளன.

தமிழில் பதிவு செய்யப்பட்ட இச்சிந்தனைகளுக்கு அப்பால் ஈழத் தமிழர் போராட்டங்களின் நியாயங் களை வலியுறுத்தியும் பொதுவான இன உரிமை, மனித உரிமை நோக் கிலும் உலகளாவி அறியப்பட்ட சிந்தனையாளர்களது - வி.ஆர். கிருஷ் ணய்யர், ஏ.பி. வெங்கடே சுவரன், முனைவர் கரேன்பார்கர், பத்மநாபன், பிரையன் செனிவிரான், பேராசிரியர் பீட்டர் ஷால்க் முதலானோரது கருத்து களும் ஆங்கிலக் கட்டுரைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழீழத் தமிழரின் வாழ்வுரி மையை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள இம்மலர், அதனோடு தொடர்புடைய சிங்கள இனவெறி ஆதிக்கம், சிங்கள ஆட்சியாளர்களின் குடும்ப ஆதிக்கம், ஈழத் தமிழர் சிக்கல், மலையகத் தமிழர் சிக்கல், இம் மக்களுக்குள்ளேயே நிலவும் மத, சாதியச் சிக்கல், தலித் சிக்கல் ஆகிய அனைத்துச் சிக்கல் குறித்தும் ஆராய் வதாக அமைந்திருக்கின்றன.

தியாக தீபம் திலீபன், மாவீரன் கிட்டு, அணையா விளக்கு அன்னை பூபதி குறித்த பழ. நெடுமாறன் கட் டுரைகளும், கரும்புலிகள் காப்டன் மில்லர், கடற்புலி அங்கயற்கண்ணி ஆகியோரது சமர் குறித்த பதிவுகளும் படிப்பவர் நெஞ்சில் நிச்சயம் தீரத் தையும், தியாக உணர்வையும், அர்ப் பணிப்புச் சிந்தையையும் ஏற்படுத் துவதாக அமையும்.

இப்படிப்பட்ட ஈழப் போராட் டத் தியாகிகளுடன், ஈழத்திற்காக தமிழகத்தில் தீக்குளித்து மாண்ட 15 ஈகியர்களையும் அவர்களது சுருக்க வாழக்கைக் குறிப்போடு வெளியிட் டிருப்பதும், சென்னை முத்துக்குமரன், வியன்னா முருகதாஸ் மற்றும் பத்திரி கையாளர் லசந்த விக்கிரம துங்கா ஆகியோரது மரண சாசனங்களை அப்படியே ஆவணப்படுத்தியிருப் பதும் ஒரு நல்ல வீரமிகு வரலாற்றுப் பதிவு

இப்படித் தொல்காலம் முதல் நவீன காலம் வரை தமிழீழத்தில் நடைபெற்ற போராட்டங்களையும் அதன் வரலாற்றையும் பதிவு செய்யும் வகையில் இடம் பெற்றுள்ள இக் கட்டுரைகளுடன் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன், தமிழேந்தி, இன்குலாப், தணிகைச் செல்வன், குயில்தாசன், மு.வ. பரணன், கோ. வேணுகோபால், அறிவரசன் ஆகியோரது கவிதைகளும் விரவியிருப்பது உணர்ச்சியைத் தூண்டு வதாக அமைந்துள்ளன.

இவ்வாறான கட்டுரைகளுக்கும், கவிதைகளுக்கும் இடையே ஈழத் தமிழரின் அவலங்களையும், போராட் டங்களையும் சித்தரிக்கும் வகையில் அழுத்தமான வண்ணங்களில் ஓவி யர்கள் வீர சந்தனம், மாருதி, பரதன், மனோகரன், மணியம் செல்வம், ராமு ஆகியோரது ஓவியங்கள், தமிழரசு வரைந்துள்ள பிரபாகரன் வண்ணப் படம் ஆகியன ஆழ்ந்த தாக்கத்தை ஏற் படுத்துவதாக உள்ளன. மொத்தத்தில் ஈழம் குறித்த, ஈழப் போராட்டத்தின் நியாயம் குறித்த ஈழ மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்த அனைத்து பதிவுகளையும் உள்ளடக்கிய ஒரு வர லாற்றுப் பெட்டகமாக, கருத்துக் கருவூலமாக சிறப்போடு உருவாக்கப்பட்டிருக்கிறது மலர்.

தரமான வெள்ளைத்தாளில், அழகான, நேர்த்தியான அச்சுடனும், ஈர்ப்பு மிக்க வடிவமைப்புடனும் வார்த்தெடுக் கப்பட்டுள்ள இம்மலர், தமிழ் உணர்வாளர்கள், தமிழீழ ஆதரவாளர்கள், மனித உரிமைப் போராளிகள், மாந்த நேயப் பற்றாளர்கள், சனநாயக சமத்துவச் சிந்தனையாளர்கள் அனைவரும் அவசியம் படித்துப் பயன் பெறவேண்டிய ஒன்று என்பதுடன் அவரவரும் கட்டாயம், தங்கள் புத்தக அடுக்கில் வைத்துப் பாதுகாக்கத்தக்க வகையில் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இது அமைந்துள்ளது.

சிறப்பான முறையில் மலரைத் தயாரித்த மலர்க் குழு வினர்க்கும், உடல் நலக் குறைவான நிலையிலும், மாநாட்டுப் பணிகளிலும், மலர்த் தயாரிப்பிலும் அரும்பாடு பட்டு உழைத்த தமிழ் மண் பதிப்பகம் இளவழகனாருக்கும் பாராட் டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் அதேவேளை இரண்டு செய்திகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

1. சென்னையில் 2002 ஜூலையில் முதல் மாநாடு தொடங்கி ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வரும் இம்மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் எங்கு எந்தெந்த நாட்களில் நடைபெற்றது என்பதை ஒரு பெட்டிச் செய்தியாக வேனும் மலரில் எங்காவது தெரிவிக்கலாம். இது நமக்கே ஒரு நல்ல ஆவணமாகவும் பின்னாளில் வருபவர்களுக்கு இதன் வரலாற்றை அறிய வாய்ப்பாகவும் அமையும். கடந்த ஆண்டு மலரில் இது இடம் பெற் றிருந்தது. இந்த மலரில் இது ஏனோ விடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு மலரிலேனும் இது இடம் பெற கேட்டுக் கொள்ளப்ப்படுகிறது

2. அடுத்தது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடவடிக்கைக் குறிப்புகள் பகுதி - பக். 363இல் மார்ச் மாதம் வரை நடைபெற்ற போராட்டங்களை அடுத்து ஜூலையில்தான் பதிவாகியிருக்கிறது. நடுவில் நிலவிய கொந் தளிப்பு மிக்க நாள்களான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற பல போராட்டங்களின் பதிவுகள் - காட்டாக, சைதையில் சோனியாவுக்கு கருப்புக் கொடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் மறியல், கடற்கரை சிங்கார வேலர் மாளிகை அருகிலான ஆர்ப்பாட்டம் ஆகிய பல போராட்டங்கள் அதில் இடம் பெற்றிருக்கவில்லை. இவை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றதா, அல்லது தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அல்லது பிற கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றதா என்பது தெரியவில்லை. எனவே எதுவும் விடுபட்டிருந்தால் அதைக் கவனித்துப் பதிவு செய்வது பயனுள்ளளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பக். 504         விலை ரூ. 200/-

முகவரி : 58, 3வது முதன்மைச் சாலை,

ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை-600 087.

தொலைபேசி : 23775536

- இராசேந்திர சோழன்

Pin It