இது மண்மொழியின் 30வது இதழ். அநியாயத்துக்கு தாமதமாகி 3 மாத இடைவெளி விட்டு நான்காவது மாதம் வெளிவருகிறது.

கடந்த 29வது இதழ் “ஆக.,செப்.,-அக்.,” இதழாகக் கொண்டு வந்தபோது “நவம்பர் - திசம்பர்” மாதத்துக்கு 30வது இதழைக் கொண்டு வந்து, கடந்த 2009ஆம் ஆண்டுக்குள்ளேயே முப்பது எண்ணிக்கையை முடித்து விட வேண்டும் என்று கருதியிருந்தது.

ஆனால் நடுவில் ஏற்பட்ட சில உடல், மனச் சோர்வு, இடைப்பட்ட வேறு சில பணிகள் ஆகிய அனைத்தும் சேர்ந்து இந்த நீண்ட தாமதத்தை, இதற்கு முன் ஏற்படாத மிக நீண்ட இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. இது ஒருபுறம் சங்கடத்தைத் தருவதானாலும் மறுபுறம் இந்த இடைவெளி சில அனுபவங்களைப், புரிதல்களை, ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

மண்மொழியைப் பொறுத்த வரைக்கும் ‘என்ன ஆச்சு, மண்மொழி ஏன் தாமதம்’ என்று அதை எதிர்ப்பார்த்துக் கேட்கிற வட்டம் மிகச் சிறியது. மண்மொழி வந்தால் பார்ப்போம், வராவிட்டாலும் பரவாயில்லை என்றும், மண்மொழி வருகிறதா, வரவில்லையா என்றே அறியாமலும் எப்படியானாலும் தங்களுக்கு எந்தப் பொருட்பாடும் இல்லை என்று நினைப்பவரும் அடுத்தடுத்த வட்டங்கள்.

இந்தப் புறநிலையில் மண்மொழியை நடத்தியே தீருங்கள் என்று மக்கள் யாரும் வந்து நம் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கவில்லை. நாம்தான் நம் விருப்பத்துக்கு, நம் நோக்கிற்கு, நம் லட்சியத்திற்கு இதழை நடத்துகிறோம்.

காரணம், சமூக நடப்புகள், நிகழ்வுகள் ஒவ்வொன்று குறித்தும் மக்களுக்குச் சொல்ல நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிச் சொல்ல முடியவில்லையானாலும், வாய்ப்புள்ளவரைக்கும் முடிந்த வரைக்குமாவது சொல்லலாம் என்பதற்காக இதழ் நடத்துகிறோம். இதனால் இதன்வழி எத்துணை இடர்ப்பாடு வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே தவிர, யாரும் இதில் அக்கறைப் பட்டுக் கொள்ளவில்லையே எனக் குறைப்பட்டுக் கொள்ள முடியாது.

இந்நிலையில் மனமுவந்து தானாக முன்வந்து உதவுபவர்கள் சிலபேர் இருக்கிறார்கள். அவர்கள் உதவி தெம்பூட்டும். மற்றதை எப்போதும் போல இழப்புகளை ஈடு செய்து முடிந்தமட்டும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

சிலர் இவ்வளவு சிரமத்தில் இந்த இதழை நடத்தவேண்டுமா, பேசாமல் நிறுத்திவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாமே என்கிறார்கள். நியாயம். சும்மாயிருப்பதே சுகம் என்றால் விட்டு விடலாம். ஆனால் அப்படி சும்மாயிருக்க முடியாது. சுற்றிலும் ஆதிக்கங்களும் அடக்குமுறையும் அநீதிகளும் மலிந்து சனநாயகத்துக்கும். சமத்துவத்திற்கும். சுதந்திரத்துக்குமான உரிமைகள் மறுக்கப்பட அதற்கான குரலும் ஒடுக்கப்படும் சூழலில் எனக்கு எது பற்றியும் கவலையில்லை என்று சொரணையுள்ள ஒரு மனித உயிர் எப்படி சும்மாயிருக்க முடியும்? அதற்காக இந்த இதழை நடத்துகிறோம்.

இந்நிலையில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை வெளிப்படுத்த மண்மொழி ஓர் ஆயுதம். இது நம் அடையாளம். இதை எக்காரணம் கொண்டும் இழந்துவிட முடியாது.

மாதந்தோறும் கொண்டுவர இயலவில்லை என்பதால் இருமாதம் ஒன்றாக வந்து, அதுவும் முடியவில்லை என்றால் மூன்றுமாதம் ஒருமுறை என காலாண்டு இதழாகவேனும் “மண்மொழி” வரும். தேவையைப் பொறுத்து நடுவில் உடனடியாக வேண்டும் என்றாலும் வரும். எனவே மண்மொழியின் இடைவெளியோ, தாமதமோ, அது உயிரிழந்ததாகவோ, உறக்கம் கொள்வதாகவோ ஆகாது. அது எப்போது வேண்டுமானாலும் விழித்தெழும். உயிர்ப்போடு இயங்கும் என்பதை மட்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் நடைமுறை பணிகள் சார்ந்து மண்மொழி ஆசிரியர் குழுவில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மற்றபடி என்ன, கடந்த 29 இதழ் நாலு வார்த்தையில் சொல்லாத புதிய எதையும் சொல்வதற்கில்லை. நினைத்துப் பார்த்தால் “மனச்சாட்சியற்றவர்கள் பாக்கியவான்கள்” என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. மண்மொழி தொடங்கி நான்காண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கியுள்ள இந்த நிலையிலும் “மண்மொழிக்கு” நாம் என்ன செய்தோம், என எண்ணிப் பார்த்தால் இதன் பொருள் புரியும். ஆகவே, சொன்னவரைக்கும் நடைமுறைக்கு வரட்டும். மற்றதை அடுத்து பார்ப்போம்.

கடந்த நான்கு ஆண்டுகளாய் மண்மொழியின் நிலைப்புக்கும் நீடிப்புக்கு உழைத்த கட்டுரையாளர்கள், கவிஞர்கள், ஒளியச்சாளர்கள், அச்சகத்தார், முகவர்கள், வாசகர்கள், நன்கொடையாளர்கள், சந்தாதாரர்கள் ஆகிய அனைவருக்கும் ஆசிரியர் குழுவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

பணி தொடரும், மீண்டும் சந்திப்போம்.

Pin It