• 1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் இந்திரா காந்தி. எமர்ஜென்சி காமராசரையும் கலைஞரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் வெவ்வேறு காலங்களில் இந்திரா காந்தியை ஆதரித்ததற்கு இன்று நாடு விலை கொடுக்கிறது என கலைஞரிடம் கூறினார் காமராசர்.
  • எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகின. எமர்ஜென்சிக்கு எதிராக காமராசரின் கருத்துக்களை முரசொலியில் வெளியிட்டார் கலைஞர். காமராசரின் கருத்துக்கள் முரசொலியில் முதல்முதலாக வெளியானது அப்போதுதான்.
  • சென்னை கடற்கரையில் பல லட்சம் மக்களைத் திரட்டி அனைவரையும் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக உறுதி ஏற்க வைத்தார் கலைஞர்.
  •  மத்திய தகவல் தொடர்புத் துறை ’விடுதலை, முரசொலி’ ஏடுகளை தணிக்கை செய்தது. அகில இந்திய வானொலியில் தலைமை செய்தியாளராக இருந்து ஓய்வு பெற்ற சங்கராச்சாரி சீடர் சவுமி நாராயணன் என்ற பார்ப்பனர், ’விடுதலை முரசொலி’ ஏடுகளின் தணிக்கை அதிகாரியாக இருந்தார். “அண்ணாவை பெற்ற தாயை விட நேசிக்கிறேன்” என்று கலைஞர் எழுதிய வாசகத்தை அந்த பார்ப்பனர் முரசொலியில் நீக்கியவுடன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார் கலைஞர். உடனே தொண்டர்களுடன் வீதிக்கு வந்தார்.அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து தணிக்கை அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடக்கும் என்று அறிவித்தார். மூன்று கிலோ மீட்டர் தூரம் அந்த ஊர்வலம் சென்றது. காவல்துறை ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை கைது செய்தது. நான்கு மணி நேரம் நடந்த அந்தப் போராட்டம் தான் இந்தியாவிலேயே அவசர நிலைக்கு எதிராக நடந்த முதல் மக்கள் திரள் போராட்டம்.
  • ‘முரசொலி’ நாளேட்டில் பத்திரிகை தணிக்கைத் துறையை கேலி செய்யும் எட்டு கால தலைப்புச் செய்திகளை இரண்டு நாள் தொடர்ச்சியாக கலைஞர் வெளியிட்டார். ”வெண்டைக்காய் உடலுக்கு நல்லது, விளக்கெண்ணை உடல் சூட்டைத் தணிக்கும்” என்று வெளிவந்த அந்தத் தலைப்புச் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார். ’முரசொலி’ ஏட்டில் கார்ட்டூன் வரைந்து வந்த செல்லப்பா இந்திரா காந்தியை ஹிட்லராக சித்தரித்து கார்ட்டூன் வரைந்ததற்காக அவரது கார்ட்டூன் தடை செய்யப்பட்டது. நியூஸ்வீக்’ ஆங்கில பத்திரிக்கை இந்தக் கார்ட்டூனை மறுவெளியீடு செய்தது. தொடர்ந்து தணிக்கைத் துறை செல்லப்பா கார்ட்டூன் வரைவதற்குத் தடை விதித்தது. பிறகு கலைஞரே கார்ட்டூன்களை வரையத் தொடங்கினார்.
  •  மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக தோழர்களின் பட்டியலை முரசொலியில் வெளியிட தணிக்கைத் துறை அனுமதி மறுத்தது. அப்போது அண்ணா நினைவு நாள் வந்தது, ‘அண்ணா நினைவிடத்திற்கு மலர் வளையம் வைப்பதற்கு வர இயலாத தோழர்கள்’ என்ற தலைப்பிட்டு கலைஞர் கைதானவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.
  • அவசர நிலை பிறப்பித்தப் பிறகு தமிழ்நாட்டில் ஏழு மாதங்கள் திமுக ஆட்சியே நடந்தது. அப்போது பாதுகாப்புக்காக தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் தேடி பல வட மாநிலத் தலைவர்கள் வந்தார்கள். கலைஞர் அவர்களை பாதுகாத்தார், அவர்களில் ஒருவர் சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
  • 1976 ஜனவரி 31 அன்று ஒரு பள்ளி விழாவில் பேசிய முதல்வர் கலைஞர் தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் இதுவே எனது கடைசி பேச்சாக இருக்கலாம் என்றார். விழா முடிந்து திரும்புவதற்கு முன்பு ஆட்சி கலைக்கப்படலாம் என்பதால் அடைக்கலம் தேடி வந்த பெர்னாண்டஸை தமிழ்நாட்டை விட்டு பாதுகாப்பாக வேறு மாநிலத்திற்கு சென்று விட ஆலோசனை கூறினார். கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் பெர்னாண்டஸ் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டார்.
  • ஆட்சிக் கலைப்பு அறிவிப்பு வந்தவுடனே முதலமைச்சர் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.