kalaivaanan 680கலைவாணன் (67) இறந்துவிட்டார் என்ற செய்தியை உள்ளம் ஏற்கவே மறுக்கிறது; அவருடன் பழகிய எவரும் அவருடைய நினைவுகளில் இருந்து மீளவே முடியாது. தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் எப்போதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கக்கூடிய உயர்ந்த பண்பாளர்.

அவரது தந்தை முத்துக்கூத்தன் மிகச்சிறந்த திராவிட இயக்கத்தின் கலைப் போராளி; வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் வழியாக பகுத்தறிவு சிந்தனைகளையும் திராவிட இயக்க கொள்கைகளையும் பரப்பியவர். தனது மகனை மிகச்சிறந்த கொள்கை வாரிசாக வளர்த்து எடுத்தார். மகனுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக அவர் சூட்டிய பெயர்தான் கலைவாணன். தந்தையிடமிருந்து பெற்ற உணர்வுகளோடு தனது கலை ஆர்வத்தை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் கலைவாணன்.

தமிழ்நாட்டில் அபூர்வமாக உள்ள பொம்மலாட்டக் கலைஞர்களில் ஒருவர் கலைவாணன்.புராணங்களுக்கும் மடமை பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொம்மலாட்ட கலை வடிவத்தை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்திய பெருமை முத்துக்கூத்தன் அவர்களுக்கும் கலைவாணன் அவர்களுக்கும் உண்டு. பன்முக கலைத்திறன் அவரோடு இணைந்து இருந்தது பொம்மலாட்டம் மட்டுமல்ல; நாடகம், மேடை அலங்காரம், குழந்தைகளுக்கான பயிற்சி அளித்தல், சுற்றுச்சூழல் கருத்துக்களை பரப்புதல், மனித உரிமைகளுக்கான கருத்து பரப்புதல் என்று பன்முக ஆற்றல் கொண்டவர்.

பெரியார் கொள்கை உணர்வுடனே தனது குடும்பத்தையும் வளர்த்தார்; இரண்டு மகன்களுக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். நான் திராவிடர் கழகத்தில் இருந்த போது வீதிநாடகங்கள் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு அவரிடம் கூறியபோது போது அவரே முன்வந்து கழக இளைஞர்களுக்கு நாடகப் பயிற்சிகளை வழங்கினார். அப்போது கவிஞர் காளமேகம் உருவாக்கிய நாடகக் குழுவில் நானும் தோழர்களும் பங்கேற்று நடித்தோம். கலைவாணனும் எங்களோடு இணைந்தார்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டங்களில்; தூக்கு தண்டனை எதிர்ப்பு போராட்டங்களிலும் அவர் பங்கு மிகப்பெரிது! பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய காலத்தில் திண்டுக்கல் அருகே ஒரு மலைப்பகுதியில் தோழர்களுக்கு 10 நாள் நாடகப் பயிற்சி அளித்தார். பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் மேடைகளில் பகுத்தறிவு கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். குழந்தைகளிடம் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சேர்க்கும் நூல்களை குழந்தைகள் விரும்பி படிக்கும் வடிவத்தில் எழுதி உருவாக்கி வெளியிட்டவர். அவரது கற்பனைத் திறனும் அதை வடிவமைக்கும் ஆற்றலும் வியக்கத்தக்கது.

மாணவர் நகலக உரிமையாளர் எங்கள் அன்புத் தோழர் சவுரிராஜன் தமிழர்களின் தாள இசைப் பண்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு பெரும் பொருட்செலவில் நடத்திய "மகுடம்" நிகழ்ச்சியில் கலைவாணனின் பங்களிப்பு அளப்பரியது. சேலத்தில் ஏப்ரல்-2023 ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" பொம்மலாட்ட நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.

பயணமும் சுற்றுலாவும் போகும் போதெல்லாம் கலைவாணன் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தோழர்களால் விரும்பப்பட்டவர். அவரது கலகலப்பு சிரிப்பு, உரையாடல்கள் எப்போதும் கொள்கை சார்ந்தவை. தனது விரல்களாலும் குரல்களாலும் பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்தவர். அவரது இருப்பு இன்னும் நீண்ட காலம் இருந்திருக்க வேண்டும். நட்பு சக்திகளை மகிழ்ச்சியாகவே வைத்திருந்தவர் இப்போது கண்ணீர் கலங்க வைத்து விட்டார்.கலைவாணனுக்கு புகழ் வணக்கம்!

பொம்மலாட்டக் கலைஞர், பெரியார் தொண்டர், திராவிடர் கழகப் பொறுப்பாளர் கலைமாமணி மு. கலைவாணன் அவர்கள் மே-22, 2026 இரவு 11 மணிக்கு முடிவெய்தினார். ‌அவருக்கு கழகத்தின் சார்பில், 23/5/26 மதியம் 4 மணிக்கு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் இயக்க தோழமைகளான தோழர் சைதை மா.அன்பரசன் (திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்), பேராசிரியர் சரஸ்வதி (பியூசிஎல்), அண்ணன் பேரறிவாளன், தோழர் சவுரிராஜன் (மாணவர் நகலகம்), ஊடகவியலாளர் குணசேகரன் (சன் நியூஸ்) ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினர்.

கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ரவிபாரதி, சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தோழர்கள் குகன், கார்த்திஸ்வரன், ஏழுமலை, அசோக், சு. கோபிநாத் (பகுதித் தலைவர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.