நீட் வினாத்தாள் கசிவு இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒருமுறை கசிந்தது. வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்தவர்களே இதற்கு காரணமாக இருந்துள்ளனர். கடந்த மே 3-ம் தேதி 5432 மய்யங்களில் இருந்து தேர்வு எழுதிய 22.79 இலட்சம் மாணவர்கள் மீண்டும் ஜூன்-21ல் தேர்வு எழுத வேண்டும். மிகுந்த மன அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறை "ஆன்லைன்" வழியாக தேர்வு நடத்தப்படும் என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் இருவருமே நீட் தேர்வு கூடாது; பிளஸ்டு (+2) மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். கல்விக் கட்டமைப்பையே சீரழித்து வரும் நீட் வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் ஒருமித்த குரல்!

பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக்கத் துடிக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 3-வது குழந்தை பெற்றால் ரூ.30,000; 4-வது குழந்தை பெற்றால் 40,000 தருவதாக அறிவித்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு. இது முட்டாள்தனமான கண்டிக்கத்தக்க அறிவிப்பு. பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாக இழிவுபடுத்துகிறார். உலகம் முழுவதும் "குழந்தைகள் வேண்டாம்" என்ற இயக்கத்தை நோக்கி பெண்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். திருமணங்களுக்கு மாற்றாக "ஒன்றாக வாழ்தல்" என்ற முறையை தேர்வு செய்கிறார்கள். நீதிமன்றங்களும் இதற்கு சட்ட அங்கீகாரம் தருகின்றன.

ஒன்றிய பாஜக ஆட்சி குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான தொகுதிகளைக் குறைக்கிறது என்றால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர, கூடுதலாக குழந்தை பெற வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது. சந்திரபாபுவின் இந்த அறிவிப்புக்கு எதிராக அம்மாநிலத்தில் எந்த எதிர்ப்புக் குரலும் வரவில்லை என்பது வெட்கக்கேடானது.

விடுதலை இராசேந்திரன்