பாஜக ஆளும் வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை ஒருபக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வந்தாலும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறும் மாநிலங்களில் பழமைவாத சிந்தனைகள், பிற்போக்குத்தனங்கள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் காண முடிகிறது. கல்வியில், பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் முன்னேறாத மாநிலங்களில் பெண்கள் எத்தனை முறை கருவுற்றாலும் குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற சமூக அநீதியை சுமக்க நேரிடுகிறது. அதுதான் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் காரணமாகிறது. ஆனால் கல்வியில் முன்னேறி வரும் மாநிலங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா அல்லது பின்னர் அதுகுறித்து முடிவெடுத்துக்கொள்ளலாமா என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் மருத்துவ ரீதியாக பதிவு செய்யப்படும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் (2021-2025) வழக்கத்தை விட, கருக்கலைப்புகள் 67% உயர்ந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிப்பதே இதை உறுதிப்படுத்துகிறது. ஒப்பீட்டளவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களில்தான் அதிகளவு கருக்கலைப்புகள் பதிவு செய்யப்படுகிறது. தேசிய சுகாதார புள்ளி விவரங்களின் படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 65 ஆயிரம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு (2025) ஜூன் மாதம் வரை 19 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 3 லட்சத்து 28 ஆயிரத்து 970 பேருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ஒப்பிடும் போது கருக்கலைப்பில் முதல் இடத்தில் சென்னையும், இரண்டாம் இடத்தில் சேலமும், 3-ஆம் இடத்தில் ஈரோடு மாவட்டமும் உள்ளது.
இத்தகைய கருக்கலைப்புக்கான காரணங்கள் பற்றி குறிப்பிடும் மருத்துவர்கள், “பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர், குழந்தை பெற்றெடுக்கும் அளவுக்கு பெண்ணுக்கு உடல் தகுதி இல்லாத சூழல், வளரும் கருவில் உள்ள சிசு ஆரோக்கியமின்மை, கர்ப்பமடைந்த பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இதுதவிர்த்து சமூக பொருளாதார காரணங்களால் குழந்தை பிறப்பை சிலர் தள்ளி வைக்கும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறப்பை தள்ளிப்போட விரும்புகின்றனர். இரண்டு குழந்தைகள் வைத்துள்ளவர்கள் குடும்ப சூழல், பொருளாதார காரணங்களாலும் கருக்கலைப்பு செய்கின்றனர்” என்கின்றனர். ஆக, கருத்தரித்துவிட்டாலே குழந்தை பெற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் வேகமாக வெளியேறி வருகிறார்கள். தாய்மை என்ற போர்வையில் பெண்களின் மீது புனிதத்தை திணித்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய அழுத்தங்கள் உடைபடத் தொடங்கியிருக்கின்றன என்பதை இத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன.
மதவெறிக் காடாகிறதா ஒடிசா?
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள பர்ஜாங் கிராமத்தில், ஜனவரி 4-ஆம் தேதி கிறிஸ்தவ பாதிரியார் பிபின் பிஹாரி நாயக்கை தாக்கி, அவர் வாயில் மாட்டுச் சாணத்தை திணித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச்சொல்லி வற்புறுத்தியுள்ளது பஜ்ரங் தள் அமைப்பு. அவரை வலுக்கட்டாயமாக திலகம் அணியச் செய்ததுடன், செருப்பு மாலையிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்துத்துவா கும்பலால் பாதிரியார் கொடூரமாக தாக்கப்பட்டு, பொதுவெளியில் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி ஒடிசாவில் ஆட்சி அமைத்த நாள்முதல் இத்தகைய சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் மாடுகளை ஏற்றிச் சென்றதற்காக ஒரு முஸ்லிம் நபர் பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
மயூர்ஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு முஸ்லிம் இளைஞர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மல்கங்கிரி மாவட்டம் கோட்டமத்தேரு கிராமத்தில் தேவாலயத்திலிருந்து திரும்பிய கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதில் எட்டு பேர் காயமடைந்தனர்.
இம்மாதத் தொடக்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டுள்ளனர். மதமாற்றப் புகாரில் அவரை 18 மணி நேரம் காவலில் வைத்த கொடுமையும் நடந்திருக்கிறது. கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பொருட்களை விற்றதற்கானக அப்பாவி கூலித் தொழிலாளர்களை இந்துத்துவா அமைப்பினர் மிரட்டி, கடைகளை அகற்றினர். கட்டாக்கில் துர்கா பூஜையின்போது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாக சென்று, வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர்.ஒடிசாவிற்கு வளர்ச்சியை தரப்போகிறோம் என்று நீட்டி முழங்கினார்கள் மோடியும் அமித் ஷாவும். ஆனால் வன்முறையும் மதவெறுப்பும்தான் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
- விடுதலை இராசேந்திரன்