karaikudi dvk rally(12.08.2026 அன்று காரைக்குடியில் நடைபெற்ற மாற்றத்திற்கான வாழ்வியல் பரப்புரைப் பயணங்களின் நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்)

எதிர்ப்பைப் பதிவு செய்க

தீர்மானம்-1: ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவர்களும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாக கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்கு எதிராகவும், பிற சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன.

 அ) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, பார்ப்பனரல்லாத மக்களை - குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு தமிழ்நாட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறது

 ஆ) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட்டாலும் காணொலி வழியாக பொது வெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் (Report) பதிவிடுமாறும், அதே வேளையில் காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

குரலற்ற சேவை ஜாதி மக்கள்

தீர்மானம்-2: எண்ணிக்கை பலமும், பொருளாதார பலமும் இல்லாமல், சேவை ஜாதிகளாய் உடை வெளுத்தல், சவரம் செய்தல், கல் உடைத்தல், மண்பாண்டம் செய்தல், கூடை முடைதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு ஒவ்வொரு கிராமத்திலும் 50 பேருக்கு மிகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறனர். எண்ணிக்கை பலமோ, பொருளாதார பலமோ அற்றோராய், ஊராட்சி மன்றத்தில் உறுப்பினராகக் கூட வரமுடியாத நிலையில், தங்கள் கருத்துக்களை கோரிக்கைகளை சமூகத்தின், அரசின் காதுகளுக்கு எட்டச் செய்யும் வலிமையும் அற்றவர்களாக அவர்களின் நிலைநீடிக்கிறது.

இவர்களோடு சீர் மரபினர் (DNC/DNT) என்று பட்டியலிடப்பட்டுள்ள ஜாதிகளாக உள்ளோரில் பெரும்பான்மையினர் - இன்று வரை அரசியல் பணிகளோ, அரசுப் பணிகளே கிட்டாதவர்களாக பதவிகளைப் பெறும் வாய்ப்பே அற்றவர்களாக அமிழ்த்தப்பட்டுக் கிடக்கும் சமூகத்து மக்களின் பாடுகளைப் பொதுச் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அவர்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுப்பது சமூக நீதியின் அவசியத் தேவை என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது. "குரலற்ற மக்களின் குரலாக" ஒலிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அம்மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தி அரசின் கவனத்திற்கும் பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. இம்முன்னெடுப்புகளுக்கு மனிதநேயத்தோடு பொதுச் சமூகத்தின் 'ஆதரவைக் கோரி நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம்.

குரலற்றவர்களான இந்தப் பிரிவினரின் உள்ளக் குமுறலை எடுத்துரைக்க குறைந்த அளவு உள்ளாட்சிகளில் முதற்கட்டமாக மட்டுமாவது ஊராட்சிகளில் 1 இடமும், ஒன்றியங்களில் 2 இடங்களும், மாவட்ட ஊராட்சி மன்றங்களில் 4 இடங்களும் என்ற அளவில் -பல்வேறு சமுதாயங்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் சுழற்சி முறையில், நியமன உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என தமிழ்நாட்டு அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம்

தீர்மானம்-3: ஆணவக் கொலைகள் என்பது வாரந்தோறும் வெளியாகும் செய்தியாக இப்போது மாறிவிட்டது. ஜாதிச் சங்கங்கள் ஜாதிக் கட்சிகளாக இடம் பெற்று விடுகின்றன. பெரும்பாலும் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கல்வித்தந்தைகள் அரசியல் அரங்குக்குள் நுழைந்துள்ளனர்.ஈட்டிய பொருளைப் பாதுகாக்கவும், அரசிடம் தங்கள் பேர ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் ஜாதிச் சங்கங்களை உருவாக்கி காலப்போக்கில் அவற்றை அரசியல் கட்சிகளாக மாற்றி ஒரு தேர்தல் கூட்டணியில் இணைந்து கொள்கின்றனர்.

ஜாதிப் பெருமை வெற்றுக் கூச்சல்

ஆனால், தங்களது மதத்தில் `சூத்திர' நிலையில் அவமானப்படுவதையோ, தாங்கள் எழுப்பிய கோயிலில்கூட வழிபாடு நடத்த உரிமையும் அற்று வெளியில் நிறுத்தப்படுவதையோ, இந்திய அரசுப் பணிகளிலும், அயலகப் பணிகளிலும், அயலக அரசுத் தூதுவர்களாகவோ, ஒன்றிய அலுவலகங்கள், செயலாளர்கள், நீதித்துறை, செய்தி ஊடகம், பெரு வணிக நிறுவனத் தலைமை போன்றவற்றில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லாததையோ இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. தாங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறவும், பேர ஆற்றலை உயர்த்திக் கொள்ளவும் - மன்னர் பரம்பரை போன்ற வெற்றுக் கூச்சல்களால் ஜாதிப் பெருமை பேசி, அப்பாவி பாமர மக்களை நம்ப வைத்து, அவர்களிடம் ஜாதிப் பெருமித உணர்வை வளர்க்கின்றனர். தங்கள் ஜாதிப்பெண் வேறு ஜாதி ஆண்களை மணம் முடிப்பதால் தங்கள் பாரம்பரிய குலப் பெருமை அழிந்துவிடும் என்பதை அழுத்தமாக நம்ப வைத்து, ஜாதி உணர்வைக் கூர்மைப் படுத்தி, வெறியூட்டி விடுகின்றனர். அதன் விளைவே இந்த ஆணவக் கொலைகள் ஆகும்.

அ) இந்த ஆணவக் கொலைகள் பற்றி ஆராய்ந்த தேசிய சட்ட ஆணையம் ஏற்கனவே 2012ஆவது ஆண்டிலேயே தனது 242 வது அறிக்கையில் தனி சட்டத்தின் தேவையைப் பற்றியும், தேசிய மகளிர் ஆணையத்தோடு கலந்து பேசி தயாரித்து, அதற்கான ஒரு சட்ட முன்வரைவை முன் வைத்துள்ள இந்த நிலையில் திருமண சுதந்திரத்தில் தலையிடுவதைக் தடுக்கும் சட்டம் என்ற பெயரால் ராஜஸ்தானிலும், கருநாடகத்திலும் சட்டமன்றங்கள் தீர்மானங்களைக் கடந்த ஆண்டு நிறைவேற்றியும் இருக்கின்றன. அதன் 'தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசும் அவ்வாறான ஒரு தனிசட்ட வரைவை சட்டமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) சட்டங்கள் நிறைவேற்றி விடுவதே குற்றங்களைத் தடுத்து விடாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் இவ்வாறான ஆணவக் கொலைகளை அம்பலப்படுத்தியும், அதைக் கைவிட வேண்டிய தேவைகளை வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தில் ஆணவக் கொலைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் மிகவும் தேவையான ஒன்றாகும். தமிழ்நாடு அரசு தன்னுடைய செய்தி விளம்பரத் துறை வழியாக, வேண்டுகோளாக, வானொலி, தொலைக்காட்சிகள் வழியாக ஏன், குடும்ப நலத் திட்டம் போன்றவற்றுக்கு செய்யப்பட்டதைப் போல கலைக் குழுவினரைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரப்ப வேண்டியதும், அவ்வாறான சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லும் இயக்கங்களுக்குத் துணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதும் அவசியமான ஒன்று என்பதையும் மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

சாமியார்களால் ஏமாறும் மக்கள்

தீர்மானம்-4: அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகளை நம்பி மக்கள் சாமியார்களிடம் போகிறார்கள். அவர்களின் ஆலோசனைகளைப் பெற அவ்வேளைகளில் நகைகளைப் பறிகொடுப்பதும், பாலியல் தொல்லைக்கு உள்ளாவதும், சில நேரங்களில் மரணத்தில் முடிவதும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகளில், செய்திகளில் இந்த குற்றங்கள் தொடர்பான மூடநம்பிக்கைச் செய்திகளே முதலிடம் பெற்று வருகின்றன.

அரசியல் சட்டம் குடிமக்களின் கடமையாக 51A(h) அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் பிரிவுக்கு இவை எதிரானவை. பேய், பில்லி, சூனியம், நரபலி, மந்திரித்தல் போன்ற மூடநம்பிக்கைகளை குற்றமாக்கி ஏற்கனவே மகாராஷ்டிரா, கர்நாடகம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசும் அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து காப்பாற்றுவதற்கு மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.

அமைச்சர்களின் கண்டனத்துக்குரிய மதச்சார்பு

தீர்மானம்-5: வேளாண் துறை அமைச்சர் மாண்புமிகு வினோத் நிதிநிலை அறிக்கையை முன்கூட்டியே திருப்பதி ஏழுமலையானிடம் சமர்ப்பித்துள்ளார். நிதி அமைச்சர் மரிய வில்சன் ஜெபமாலையை வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையைப் படிக்கிறார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பதவி ஏற்கும் போது இஸ்லாமிய குருக்களை வைத்து `துவா’ செய்கிறார். அனைத்து மதத்தினருக்கும் மதநம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சட்டப்படி மதச்சார்பின்மை அடையாளத்தோடு செயல்பட வேண்டிய அமைச்சர்கள் தங்கள் தனிமனித மத அடையாளத்தை ஆட்சிப் புலத்தில் வெளிப்படுத்துவது அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.

பாஜக ஆட்சி செய்யும் வேறு எந்த மாநிலத்திலும் கூட இதற்கு முன்னுதாரணம் இல்லை. தனிப்பட்ட மத நம்பிக்கையை அரசின் அடையாளமாக மாற்றுவதை இம்மாநாடு கண்டிக்கிறது. ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுள்ள பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளுக்கும் இது எதிரானது என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

சுயஜாதி மறுப்பு இயக்கம்

தீர்மானம்-6: `ஜாதிய சமூக உறவுகள்' தான் ஜாதியைக் காப்பாற்றி வருகின்றன. அதுவே ஆணவப் படுகொலைக்குத் தூண்டுதலாக அமைந்து விடுகிறது. தனது குடும்பத்தில் ஜாதி கடந்த திருமணங்களை ஏற்க விரும்பினாலும் ஜாதி சமூகம் அவமதிக்குமே, அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது என்ற மன அழுத்ததுக்கு உள்ளாகி ஆணவப் படுகொலைகளுக்கும் தயாராகி விடுகிறார்கள்.

இந்த நிலையில் சுயஜாதி மறுப்புக்கான இயக்கத்தின் தேவை அவசியமாகிறது. ஜாதி சமூக இறுக்கத்தைத் தகர்க்க இம்மாநாட்டு மேடைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ள கானாடு காத்தான் வை.சு.சண்முகம் சுயஜாதி எதிர்ப்பாளராக ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்தவர் ஆவார். அதன் தொடர்ச்சியாக சுயஜாதி மறுப்பு அமைப்புகளை ஒவ்வொரு ஜாதிப் பிரிவில் அடங்கியுள்ள ஜாதி எதிர்ப்பாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தொடங்க வேண்டும். ஜாதி எதிர்ப்பில் இது முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்று இம்மாநாடு கருதுகிறது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.