கீற்றில் தேட...

தேர்தல் முடிந்தவுடன் பாஜக தனது உண்மையான முகத்தை காட்டத் துவங்கி இருக்கிறது.

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழிக் கொள்கையை முதல்வர் ரங்கசாமி அனுமதித்து விட்டார். மூன்றாவது மொழியாக இந்தியும் படிக்கலாம் ; பிரெஞ்சும் படிக்கலாம் என்ற நிலை இருந்தது; இப்போது ஆறாம் வகுப்பில் இருந்து இந்தி கட்டாயம் என்றும், ஒரு வாரத்திற்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு உத்தரவிட்டதோடு பிரெஞ்சு மொழியும் படிக்கலாம் என்ற வாய்ப்பை பறித்து விட்டது.

இந்திய ரயில்வேயில் 29,608 வேலை வாய்ப்புகளை குறைப்பதாக ஒன்றிய ஆட்சி அறிவித்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வேயில் 2,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.

மற்றொரு மாநில உரிமை பறிப்பு அறிவிப்பு வந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பெரும் பகுதியை அந்த மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையை திடீரென்று ஒன்றிய ஆட்சி மாற்றி உள்ளது.

உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தையும் போட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார்கள். இந்தப் போட்டி ஏலமுறையால் பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து தமிழ்நாடு அரசு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. நேற்று வரை மோடிக்கு பல்லக்கு தூக்கிய அன்புமணியே இன்று இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களை மோடி பார்த்துக் கொள்வார் என்று பேசி வந்த சரணாகதி எடப்பாடி இப்போதும் இந்த முக்கிய பிரச்சினைகளில் முதலாளியிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கிறார்.

கடல் தாண்டும் ‘பிராமணர்கள்’ அர்ச்சகர்களாக முடியாது - உயர்நீதிமன்றம்!

ஆகம சாஸ்திர விதிகள், சிருங்கேரி சாரதா பீட வழிகாட்டுதல்கள் மற்றும் கடந்த காலத்தில் மாநில அறநிலையத்துறையால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவற்றை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடக்கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதை உயர்நீதிமன்ற நீதிபதி நிம்மகடா வெங்கடேஸ்வரலு விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில், விதிகளின்படி அர்ச்சகர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அவசர தேவைக்காக சென்றாலும், திரும்பி வந்தவுடன் கருவறையில் பூஜைகள் செய்யும் உரிமையை இழந்துவிடுவார்கள் என்றார். சிருங்கேரி பீடத்தின் விதிமுறையின்படி, மூன்று நாள் சந்தியா வந்தனத்தை கடைபிடிப்பவர்கள், வேதங்களை படிப்பவர்கள், குருவின் மந்திரங்களை உச்சரிப்பவர்கள் மற்றும் கடுமையான உணவு விதிகளை பின்பற்றுபவர்கள் மட்டுமே கருவறையில் பூஜைகள் செய்ய தகுதியுடையவர்கள். பாரம்பரியத்திற்கு மாறாக வெளிநாடு சென்று, சவரம் செய்து, தலைமுடியை வெட்டிக் கொண்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அமர்வு, இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையருக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதன்மூலம், மாநிலத்தில் உள்ள கோயில்களில் வெளிநாடு சென்று வந்த அர்ச்சகர்கள் கோயில் கருவறைக்குள் பூஜைகளை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் கடல்தாண்டக்கூடாது என்பது சனாதனம். இப்போது பார்ப்பனர்கள் கடல்தாண்டி சென்று அங்கே பார்ப்பனியத்தை பரப்புகிறார்கள்.

விடுதலை இராசேந்திரன்