1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் ஏறுவதற்கு பெரியாருக்கு ஏற்பட்ட இடையூறுகளை தவிர்த்து பிரச்சாரத்திற்கான மேடையை காரின் ஒரு பகுதியாக இணைத்து இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. இந்தக் காரை 5 மாதங்கள் மட்டுமே பெரியார் பயன்படுத்தினார். தியாகராய நகரில் பெரியாரின் இறுதி உரையை இந்தக் காரில் இணைக்கப்பட்ட மேடையில் தான் ஆற்றினார்.
பெரியாரின் அந்தக் கார் திருச்சி உறையூரில் உள்ள பெரியார் மாளிகையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து 'இந்து' ஆங்கில நாளேடு (ஏப்ரல்-19) படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகம் திட்டமிட்டு வரும் ‘பெரியார் உலகத்தில்’ இந்த வேன் காட்சிப் பொருளாக இடம் பெறப் போவதாக செய்தி கூறுகிறது.
இந்தக் கார் வழங்கும் விழா, 1973 ஆக-19-ல் தஞ்சையில் எழுச்சியுடன் மாநாடு போல் நடந்தது. அந்த நிகழ்வுகள் குறித்து சில செய்திகளை இளையதலைமுறையின் கவனத்துக் கொண்டு வருகிறோம்.
- தஞ்சை மாவட்டத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் திரண்டனர்.
- தமிழ்நாடு முதல்வர் கலைஞர் பெரியாருக்கு கார் வழங்கினார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ப.உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி (சென்னை பகுத்தறிவாளர் கழக தலைவர்), ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சி.டி நடராசன், விடுதலை ஆசிரியர் கீ.வீரமணி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். தஞ்சை கருஞ்சட்டைக் கடலாக காட்சியளித்தது. குடும்பம் குடும்பமாக பல்லாயிரக்கணக்கான தோழர்கள் திரண்டனர்.
- பெரியாரின் உடல் நலனைக் காத்த பெரியாரின் நம்பிக்கைக்குரிய மருத்துவர்கள் விழாவில் பங்கேற்றனர். வேலூர் சி.எம்.சி மருத்துவமனை டாக்டர் பட், சென்னை பொது மருத்துவமனை தலைமை அதிகாரி டாக்டர் ராமச்சந்திரா, வேலூர் டாக்டர் ஜான்சன் ஆகியோர் விழாவிற்கு வந்திருந்தனர். கலைஞர் மருத்துவர்களுக்கு ஆடை போற்றி கவுரவித்தார்.
- மாலை 6 மணி அளவில் மோரீஸ் கார்னர் பகுதியிலிருந்து கருஞ்சட்டை படை ஊர்வலம் புறப்பட்டது. கழகத் தோழர் சாமிநாதன் யானையின் மீது கம்பீரமாக கழகக்கொடியுடன் அமர்ந்து சென்றார்.
- பாண்டு வாத்தியத்துடன் தாரை தப்பட்டை மேள தாளங்களோடு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகளுடன் ஊர்வலம் நிகழ்ந்தது. பல்லக்கு போல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெரியார் அமர்ந்து வந்தார்.
- ஊர்வலம் மாநாட்டு மேடையை வந்தடைந்த நேரம் இரவு 9 மணி, வழிநெடுக மக்கள் வெள்ளம், கருஞ்சட்டை படை ஆர்பபரித்து அணிவகுத்தது. தமிழக முதல்வர் கலைஞர் பேசுவதற்கு முன்பு தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டாக்டர் சின்னதுரை வழங்கிய காருக்கான தங்கச் சாவியை கலைஞர் பெரியாரிடம் பலத்த கரவொலிகளுக்கிடையே வழங்கினார்.
- கலைஞர் பேச எழுந்தபோது "தமிழ்நாடு தமிழருக்கே!" என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. மாநாட்டு மேடைக்கு முன்பு லட்சத்துக்கும் அதிகமான கருஞ்சட்டை தோழர்கள் திரண்டிருந்தனர்.
- விழாவில் உரையாற்றிய அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியாருக்கு விழாக் குழு சார்பில் ஒரு கடிகாரத்தையும், அமைச்சர் மன்னை நாராயணசாமி ஒரு "டேப் ரெக்கார்டரை"யும் பரிசாக வழங்கினர். விழாக் குழு சார்பில் ரூ.50,000 பணத்தை கலைஞர் பெரியாரிடம் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.
- வேன் வழங்கும் திட்டத்தை முன்னின்று செயல்படுத்திய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கீ.வீரமணி அவர்களுக்கு கலைஞர் மோதிரம் அணிவித்து பாராட்டினார்.
- கலைஞர் உரை உருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது. "புத்தரால் சாதிக்க முடியாததை தந்தை பெரியார்தான் சாதித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரே ஜீவன் பெரியார் மட்டுமே. அவருக்கு இங்கே பரிசுகளை வழங்கினார்கள். நாம் அவருக்கு தர வேண்டிய உண்மையான பரிசு மாநிலங்களின் உண்மையான சுயாட்சி தான். அந்த சுயாட்சியை பெரியாரிடம் பரிசாக வழங்குவோம். அந்த வெற்றிப் பரிசை ஈட்டும் வரை பெரியார் வாழ வேண்டும்" என்றார் கலைஞர்.
- மேடையில் பெரியார் அமர்வதற்கு அமைக்கப்பட்டிருந்த வெள்ளி சிம்மாசனத்தில் பெரியார் அமர மறுத்து; கலைஞரை கைப்பிடித்து அதில் அமர வைத்தார். கூட்டம் பலத்த கரவொலியால் அதிர்ந்தது.
- தஞ்சை மாவட்டக் கழக சார்பில் கலைஞருக்கு பெரியார் பட்டாடை போர்த்தி கவுரவித்தார். பெரியாருக்கு வழங்கப்பட்ட காருக்கு வாகன வரியிலிருந்து வரிவிலக்கு தந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே காஞ்சி சீனியர் சங்கரச்சாரிகளுக்கு இதேபோல் விலக்கு அளிக்கப்பட்டதை முன் உதாரணமாகக் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்பட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதற்கான முயற்சிகளை எடுத்தார்.
- வேன் வாங்குவதற்காக கழகத் தோழர்கள் மக்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டினார்கள். கரூரில் உள்ள பிரபல பேருந்து தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி பாலகிருஷ்ணன் அண்ட் பிரதர்ஸ் நிறுவனம் மிகவும் கவலை எடுத்து வாகனத்தை தயாரித்தது.
- தஞ்சை கழகத் தலைவர் க.மா.குப்புசாமி, செயலாளர் ராஜகோபால், சா.மி நாகராஜன், க.மா.கோவிந்தராஜன் உள்ளிட்ட தோழர்கள் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கீ.வீரமணி தலைமையில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
—--------------------------------------------------------------------------------------------------
எனக்குப் பிறகு எவன் கேட்பான்?
வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை:
இந்தப் பொருள்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். இந்த புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் நான் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால் இதைப் போன்று விழாக்களை காணும் போது தான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த கார் வாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக கேட்டதற்கு மேல் அதிகமாக கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் 40,000 ரூபாய் அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது; செல்வாக்கு பெருகிவிட்டது.
எனக்கு இன்றைக்கு வயது 94 அடுத்த மாதம் பிறந்தால் 95 வயது. 60 வருடங்களுக்கு முன்பு எமது மக்களின் யோக்கியதை என்ன அதாவது நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கிதை என்ன?
1925-வாக்கிலே நாம் நூற்றுக்கு 5 பேர் தான் படித்திருந்தோம். ஏன் அந்த நிலைமை? பள்ளிக்கூடங்களே இல்லாது போயிற்றே? அந்த நேரத்தில் கூட பார்ப்பான் நூற்றுக்கு நூறு படித்து இருந்தானே! அது மட்டும் எப்படி முடிந்தது? இந்த நாட்டை சேரன் ஆண்டான்; சோழன் ஆண்டான்; என்கிறார்களே ஏன் நாம் மட்டும் படிக்க முடியவில்லை? காரணம் அவர்களெல்லாம் இந்து மதத்தின்படி ஆண்டார்கள் அந்த மதத்திலேயே சூத்திரன் படிக்கக் கூடாது என்று கூறுகிறது.
குளித்த குதிரையும் படித்த சூத்திரனும்!
குளித்த குதிரையும் படித்த குத்திரனும் ஒன்று என்று மனுதர்மத்தில் இருக்கிறது. அதன்படி அவர்கள் ஆண்டதினாலே நாமெல்லாம் படிக்க வாய்ப்பு இல்லாது போயிற்று. நாம் தலையெடுத்து முயற்சி செய்தோம்; நமக்கு கல்வி கிடையாது என்று கூறும் மதத்தை ஒழிப்பது; கடவுளை தீர்த்துக் கட்டுவது? அவற்றிற்கு ஆதரவளிக்கும் காந்தியை ஒழிப்பது; அவற்றையெல்லாம் காப்பாற்றும் பார்ப்பானை தரைமட்டமாக்குவது என்று முயற்சி செய்து பாடுபட்டோம்; அதனால் மாற்றம் பெற்றோம். சும்மா என்னை பாராட்டுகிறார்கள்; உண்மை என்னவென்றால் கடவுளை செருப்பால் அடித்ததனால் முன்னேறினோம்; மதத்தை மீறியதால் தான் பிழைத்தோம்.
நான் என்ன அதிசயம் செய்து விட்டேன்! மலையை புரட்டிப் போட்டேனா? வில்லை வளைத்தேனா? ஆகாயக் கப்பலை கண்டுபிடித்தேனா? இல்லையே! நான் ஏதாவது செய்தேன் என்றால் சாமியை செருப்பால் அடித்தது தான்; சாக்கடையில் போடச் செய்ததுதான்.
தோழர்களே! இந்தியாவில் இந்த காரியத்தை நாம் செய்யவில்லை என்றால் நாம் ‘சூத்திரன்’ தானே மறுக்க முடியுமா? இந்தியாவிலேயே இரண்டு பிரிவு தான் இருக்கிறது. “பிராமணன், சூத்திரன்” என்ற இரண்டு பிரிவு தானே இந்து மதம்; இந்து என்று ஒப்புக் கொண்டால் அது பண்டார சன்னதியாக இருந்தாலும் ’சூத்திரன்’ தானே. ஒவ்வொரு பயலும் நெற்றியிலே சாம்பலை பூசிக் கொள்கிறானே! சிவ!, சிவா என்கிறானே! அவன் யோக்கியதை என்ன? கோயிலுக்குள் எந்த இடம் வரை உள்ளே போகிறான்? கர்ப்பக்கிரகத்துக்குள் போக உனக்கு யோக்கியதை உண்டா? ஏன் உனக்கு அந்த யோக்கியதை இல்லை? இதைப் பற்றி நீ வெட்கப்படுகிறாயா? இந்த இழிவு எப்போது நீங்குவது?
வெட்கப்படுங்கள்
பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்த கலைஞர் இந்த நாட்டின் முதல்வராக முடிகிறது. இந்த சமூகத்திலிருந்து ஒவ்வொருவராக வர முடிகிறது என்றால்; அது என் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. ஆனால் இந்த கோயில் கர்ப்பக் கிரகத்தில் செல்ல முடியவில்லை? நாம் வெட்கப்பட வேண்டாமா?
தோழர்களே! உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் செத்துப் போனாலும் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். என்றைக்கு இந்த கோயிலுக்கும் கடவுளுக்கும் மதத்திற்கும் முழுக்குப் போடுகிறார்களோ; என்றைக்கு அவற்றையெல்லாம் குப்பைத் தொட்டியில் வீசுகிறார்களோ; அன்றைக்குத்தான் நீங்கள் மனிதர் என்று அர்த்தம்! அதுவரை உங்களுக்கு முன்னேற்றம் ஏது?
இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டே இருக்க முடியும்! எனக்குப் பின்னால் எவன் வந்து இவற்றையெல்லாம் செய்யப் போகிறான்? அப்படி எவனாவது சொன்னால் விட்டு வைப்பார்களா என்பதே சந்தேகம்.
நான் உலகைச் சுற்றியவன். அந்த அனுபவத்தை எல்லாம் வைத்துத்தான் கூறுகிறேன். எவனொருவன் நெற்றியில் சாம்பல் பூசி இருந்தாலும் நாமம் போட்டு இருந்தாலும் காரி துப்புங்கள்! அவன் மீது துப்ப வேண்டாம்; வீதியிலே துப்புங்கள். ச்சீ.. நீ ஒரு மனிதனா? இன்னும் பாப்பானின் வைப்பாட்டி மகனாக வாழ ஆசைப்படுகிறாயா? என்று காரித் துப்ப வேண்டும் என்று பெரியார் முழங்கினார். பெரியார் உரையை இறுதிவரை கலைஞர் மேடையிலிருந்து கேட்டார்.
(தொகுப்பு - விடுதலை இராசேந்திரன்)