தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் 18-ஆம் நூற்றாண்டு மிகவும் குழப்பமான சூழல் நிலவிய காலமாகும். தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு, மராத்தியர் ஆட்சியும், ஆற்காட்டுப் பகுதியில் நவாப்பின் ஆட்சியும், சென்னையை இருப்பிடமாகக் கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியும், புதுச்சேரிப் பகுதியில் பிரெஞ்சுக்காரர் ஆட்சியும் ஒரே காலகட்டத்தில் நிலவின. நாகப்பட்டிணம் மற்றும் பரங்கிப்பேட்டையில் டச்சுக்காரர்களும், தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்களும், தொழிற்சாலைகளும், கிட்டங்கிகளும் அமைத்துக் கொண்டு தங்கியிருந்தனர். இவற்றைப் பாதுகாக்க சிறுபடையும் வைத்திருந்தனர். தஞ்சை மராத்தியர், ஆற்காடு நவாப், கிழக்கிந்தியக் கம்பெனியார், பிரெஞ்சுக்காரர் ஆகியோர் தம் ஆட்சிப் பகுதியை விரிவுபடுத்திக் கொள்ள அவ்வப்போது யுத்தங்களை நடத்தி வந்தனர். ஆங்காங்கு ஆட்சி புரிந்து வந்த பாளையக்காரர்கள், நேரத்திற்கு ஏற்றபடி இவர்களில் யாருடனாவது கூட்டுச்சேர்ந்து கொண்டனர். இவை தவிர வாரிசுச் சண்டைகளும் அவ்வப்போது நிகழ்ந்தன.

பொதுவாக ஆசியாவில், அனாதி காலந்தொட்டு, மூன்று அரசாங்கத் துறைகள் இருந்து வந்திருக்கின்றன. 1. நிதித்துறை, அதாவது உள்நாட்டைக் கொள்ளையடிக்கும் துறை, 2. போர்த்துறை. அதாவது, வெளிநாடுகளைக் கொள்ளையடிக்கும் துறை, 3. இறுதியாக, பொது பராமரிப்புத்துறை என்று குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், (1971: 20) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் செயல்பாட்டை 1853-இல் பின்வருமாறு மதிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில், ஆங்கிலேயர்கள் அதன் பூர்வாதிகாரிகளிடமிருந்து நிதித்துறையினையும், போர்த்துறையினையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் நீர்ப்பாசன, நிர்வாகத் துறையினை அறவே புறக்கணித்துவிட்டனர். (மேலது: 21)

இம்மதிப்பீடு முற்றிலும் உண்மையென்றே 18-ஆம் நூற்றாண்டுக் காலத்தைய தமிழக நிலை உணர்த்தி நின்றது. படையெடுப்பு, வரி வாங்குதல் என்ற பெயரில், படைவீரர்களின் கொள்ளைச் செயல்கள் நடந்து வந்தன. அணிகலன்கள், உலோகப் பாத்திரங்கள், மட்டுமின்றி ஆடு, மாடுகளும், தானியங்களும்கூடக் கொள்ளையடிக்கப்பட்டன. மனிதர்கள் அடிமைகளாகச் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். பெண்கள் மீது பாலியல் வல்லுறவு நிகழ்த்தப்பட்டதுடன், படை வீரர்கள் அவர்களைக் கவர்ந்தும் சென்றனர். மத வேறுபாடு இன்றி இந்து (மராட்டிய, மைசூர்ப் படைகள்) இஸ்லாம் (ஆற்காடு நவாப்பின் படை), சீர்திருத்தக் கிறித்தவம் (கிழக்கிந்தியக் கம்பெனியின் படை) கத்தோலிக்கம் (பிரெஞ்சுப் படை) என அனைத்துச் சமயம் சார்ந்த படைவீரர்களும் தங்கு தடையின்றி இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டு வந்தனர். வடக்கே சென்னை தொடங்கி தெற்கே திருச்சி வரையிலான நிலப்பகுதி இவ்வகையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

மற்றொரு பக்கம் நெசவாளர்கள் ஒரே இடத்தில் ஒரு சேரக் குடியமர்த்தப்பட்டு அவர்கள் நெய்த துணிகளைச் சேகரித்து, சாயம் தோய்த்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில் பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் ஈடுபட்டிருந்தனர். இவ்விரு நாட்டவரும் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இக்கால கட்டத்தின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருப்பது 18ஆம் நூற்றாண்டுப் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரெங்கப்பிள்ளை (1709 - 1761), ரெங்கப்பத் திருவேங்கடம்பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம்பிள்ளை (1777 - 1801) ஆகிய நால்வரும் எழுதிய நாட்குறிப்புகளாகும். மேற்கூறிய நால்வர் மட்டுமின்றி 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கப்பிள்ளையின் மாமா நைநியப்பப்பிள்ளையின் மகனான குருவப்பபிள்ளை என்பவரும், ஆனந்தரங்கப்பிள்ளையின் தம்பியான திருவேங்கடம்பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். (ஜெயசீலன் ஸ்டீபன் 1999; 32) ஆனால் இவையிரண்டும் இன்னும் வரலாற்றாய்வாளர்களின் பார்வைக்குக் கிட்டவில்லை.

ஆனந்தரெங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு

மேற்கூறிய நாட்குறிப்புகளில் ஆனந்தரெங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு, பரவலாக அறிமுகமான ஒன்று. இந்நாட்குறிப்புகளை எழுதிய ஆனந்தரங்கப்பிள்ளை சாமானியரல்லர். பிரெஞ்சு ஆட்சியை, தமிழகத்தின் புதுச்சேரிப் பகுதியில் நிறுவுவதில் முக்கியப் பங்கு வகித்த டியூப்ளேவிடம் தலைமை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். இப்பதவி ‘துபாஷ்’ என்று அழைக்கப்பட்டது. அத்துடன் பாக்கு வியாபாரமும் செய்து வந்தார். ‘ஆனந்தப் புரவி’ என்ற பெயரில் சொந்தமாகப் பாய்க்கப்பல் ஒன்று இவருக்கிருந்தது. துணிகள் ஏற்றுமதியிலும் இவருக்குப் பங்கிருந்தது. சாராய உற்பத்தி உரிமையும் பெற்றிருந்தார். அதிகாரமும், பொருள் வளமும் ஒரு சேரப் பெற்றிருந்த ஆனந்தரங்கப்பிள்ளை, அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பாக எழுதி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தாம் கேட்ட செய்திகளை மட்டுமல்லாது அலுவல் நிமித்தமாக அவர் படித்த கடிதங்களையும்கூட தம் நாட்குறிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளார். 

இந்நாட்குறிப்பை ஆனந்தரங்கப்பிள்ளை தாமே 1736 செப்டம்பர் ஆறாம் நாளிலிருந்து எழுதியுள்ளார். வெளியூர் சென்றபோதும், பணிச்சுமை இருந்தபோதும் எழுத்தர்களைக் கொண்டு எழுதியுள்ளார். இடையிடையே சில பகுதிகள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு “அவராலேயே சொந்த கையெழுத்தில் 29 மார்ச் 1760 வரை மட்டுமே எழுதப்பட்டது” என்று நாட்குறிப்பின் மூலநகலைப் பார்வையிட்ட ஜெயசீல ஸ்டீபன் (1999; 37) எழுதியுள்ளார். 1760 ஏப்ரல் தொடங்கி 1760 செப்டம்பர் வரை அவர் நோயுற்றிருந்த நிலையில் வேறொருவரைக் கொண்டு எழுதியுள்ளார் (மேலது). ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் இறுதித் தொகுதி 1761 சனவரி 12 -ஆம் நாளுடன் முடிவடைகிறது. ஆனால் ஜெயசீல ஸ்டீபன் (1999; 45) 1760 செப்டம்பர் 24 உடன் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு முடிவடைந்துவிட்டது என்ற முடிவுக்கு வருகிறார். ஏனெனில் 1760 செப்டம்பர் 24-க்குப் பின்னால் வரும் பகுதியில் “ஸ்ரீராமஜெயம்”, “கிருஷ்ண சகாயம்”, “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

“ஸ்ரீராமஜெயம்”, “கிருஷ்ண சகாயம்”, “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று குறிப்பிட்டே தமது நாட்குறிப்பைத் தொடங்குவதை திருவேங்கடம்பிள்ளை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் ஆனந்தரங்கரிடம் இப்பழக்கம் கிடையாது என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதனடிப்படையிலேயே இம்முடிவுக்கு அவர் வருகிறார்.

நாட்குறிப்பின் மூலப் பிரதியில் ஆங்காங்கே சில வரிகள் சிதைந்துள்ளமையால் சில செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. சான்றாக 1739 ஜுலை 8 ஆம் நாள் நாட்குறிப்பில்,

சாயங்காலம் நாலு மணிக்கு வெள்ளைக்காரர் ஒருத்தனை கோட்டைக்கு தென்னண்டை இருக்கப்பட்ட வெளியிலே கொண்டுபோய் கண்ணைக்கட்டி முழங்காலிலே நிக்கவச்சு நாலு பேர் துப்பாக்கியிலே இரட்டைக் குண்டு போட்டு சமீபத்திலே நிண்ணு நாலுபேரும் ஒருமிக்க துப்பாக்கியை மாருக்குப் பிடிச்சு சுட்டுப் போட்டார்கள். அவனை அப்படி சுட்டுப் போடத்தக்கதாக என்ன நோக்கமென்றால் . . .

என்று எழுதியுள்ளார். “என்ன நோக்கமென்றால்” என்ற சொல்லை அடுத்து நாட்குறிப்பு கிழிந்துள்ளமையால் சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை நாம் அறிய முடியாமல் போய்விடுகிறது. இடையிடையே தெலுங்கிலும் தமது நாட்குறிப்பை அவர் எழுதியுள்ளார் என்று கண்டோம். அவை தமிழ்ப் பதிப்பில் மொழிபெயர்க்கப்படாமையால் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

நாட்குறிப்பு எழுதக் காரணம்

இப்படி ஒரு நாட்குறிப்பை எழுதும்படி ஆனந்தரங்கரைத் தூண்டியது எது என்பது தெரியவில்லை. நூலாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்திலோ தம் குடும்ப உறுப்பினர்களைத் தவிர பிறருக்குப் பயன்பட வேண்டுமென்ற நோக்கத்திலோ அந்நாட்குறிப்பை அவர் எழுதவில்லையென்று ஆங்கிலப் பதிப்பின் முதல் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் பிரடெரிக் பிரைஸ் (1985: XI) குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை ஒட்டியே ஆனந்தரங்கரின் நாட்குறிப்பைத் தமிழில் வெளியிட்ட ஞானு தியாகு (1948: 14) ‘அவர் தமது தினசரிக் குறிப்புகளைப் பகிரங்கப்படுத்த நினைத்ததேயில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயசீல ஸ்டீபன் (1999: 36) ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள பின்வரும் வரிகளின் அடிப்படையில் இக்கருத்தை மறுத்துள்ளார்.

அ) “யெல்லோரும் யிதையறிந்து கொள்ளவேணும் யெண்ணு யெழுதுனேன்”.

ஆ) “சென்னைப்பட்டணத்திலிருந்து யின்று வந்த காகிதத்தில் யிந்த சேதி வந்தது. 

யிதை அறியவிரும்புவோர் படிச்சு கொள்ள வேண்டியே யிங்கே யெழுதுறேன்”.

இ) “பெற்றோர், பிறந்தார், பிறத்துயர் தீர உற்றார் குலந்தழைக்க உண்மையறிந்தே 

யெழுதினபடி யிதனை யெல்லாரும் காணவெழுதினோம்”.

“இது விசாரத் விஜய ஆனந்தரங்கராயர் அவர்களின் கையினால் எழுதப்பட்ட தினசரி. இதனைப் படிப்பவர்கள் அறிவாளிகளாக ஆவார்கள். எட்டு வகைச் செல்வமும் சந்தானமும் பெறுவார்கள்” என்று ஆனந்தரங்கர் தமது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். (ஆலாலசுந்தரம் , 1999: 1). எனவே தமது நாட்குறிப்பை அவர் வெளிப்படுத்த நினைத்ததில்லை என்று கூறுவது பொருத்தமாக இல்லை. ஆனந்தரங்கப்பிள்ளையின் மாமாவான நைனியப்பபிள்ளை பணம் கையாடல் செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் சிறைக் கொடுமையால் மரணம் அடைந்தார். இது போன்ற பாதிப்பு தனக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தம் நாட்குறிப்பை அவர் எழுதி வந்ததாக “ஆனந்தரங்கன் கோவை” என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் ந. சுப்பிரமணியன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: (சந்திரசேகரன், 1955: XVII). 

இந்த தினசரிக் குறிப்பு எழுதி வைத்ததன் காரணம் யாதென்று அவர் எங்கும் குறிப்படவில்லை. ஆயினும், இது பிற்காலத்தில் பெரும் பயனளிக்கும் என்று கருதி எழுதியதாகவே தோன்றுகிறது. அக்காலத்தில் அரசாட்சி முறை நிலைபேறின்றி அடிக்கடி மாறுதடைந்து வந்தமையாலும், ஒவ்வொரு கவர்னரும் தத்தம் மனப்போக்கின்படி நடந்து வந்தமையாலும், தன் அத்தை கணவனாகிய நயினியப்பிள்ளைக்கு, முடிவு காலத்தில் அரசாங்கத்தாரால் நேர்ந்த துன்பங்களை ஆலோசித்துமே இத்தகைய தினசரியொன்று எழுதி வைத்தார் என்று எண்ண இடமுண்டு. அதை எழுதி வைத்திருந்தால் அவ்வக் காலங்களில் நிகழ்ந்தவையெல்லாம் தனக்குப் பிற்காலத்தில் வேண்டுமாயின் நினைவுக்குக் கொண்டுவரப் போதிய கருவியாக இருக்கும் என்று அவர் கருதியிருக்க வேண்டும்; அன்றியும், தன் மீது ஒரு கால் அரசாங்க விரோதக் குற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை விலக்கிக் கொள்ளுதற்கும் இது ஒரு சாதனமாகும் என்று கருதியும் இவ்வாறு செய்திருக்கலாம். 

இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். இக்கூற்று உண்மையானால் அரசியல் மற்றும் வாணிபச் செய்திகளை மட்டுமே ஆனந்தரங்கம்பிள்ளை எழுதியிருக்க வேண்டும். தமது நாட்குறிப்பின் தலைப்பில் “காதால் கேட்பனவற்றையும் கண்ணால் காண்பனவற்றையும் கப்பல்களின் போக்குவரத்தையும் அவ்வப்பொழுது நடைபெறும் அதிசயங்களையும் குறித்து வைக்க நான் துவங்குகின்றேன்” ஆலாலசுந்தரம் (1999: 1) என்று எழுதியுள்ளார். 

மேலும் அவரது நாட்குறிப்பில் அவரது அரசுப் பணி மற்றும் வாணிபத்துடன் தொடர்பில்லாத பல்வேறு சமூக நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. சான்றாக 1745 நவம்பர் 4-ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் புதுச்சேரியில் பெய்த மழையின் விளைவுகளைக் குறித்து எழுதியுள்ள பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம். 

அஸ்தமித்தவுடனே துவக்கி, பெருங்காற்றடித்தது. அந்தக்காற்று வியாழக்கிழமை நாள் ராத்திரி முப்பது நாழிகையும் அடித்தது. ஆனால், இந்தக் காற்றினுடைய பிரதாபம் இன்னமட்டென்று ஒருவிதமாய்ச் சொல்லக்கூடாது. அதெப்படியென்றால், இந்த முப்பது நாழிகைக்குள்ளே பட்டணத்திலே ஒரு மரமாகிலும் தப்பவிடாமல் ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்து போனதும், சிறிது மரங்களை முறுக்கி முறித்துப் போட்டதும், அதுவுமல்லாமல் பட்டணங்களுக்குள்ளே தோட்டந் துரவுகள், தென்னை மரம், மாமரங்கள் எப்பேர்ப்பட்ட மரமும் ஒன்றாகிலும் தப்பாமல் படுகாடாய் விழுந்து போச்சுது. அதினாலே வெகுபேர் கெட்டுப் போனார்கள். இதல்லாமல் உப்பாற்றிலே அவரவருக்கு மனை விட்டு, அவரவர்கள் கல்வீடும் கூரைவீடுமாய் அவரவர் சக்திக்கான சரமாய்க் கட்டிக்கொண்டு குடியிருந்தார்கள். அப்படியிருக்கச்சே இந்தப் பெருங்காற்றிலே மேல்வெள்ளம் வந்து உப்பாற்றுத் தண்ணீர் வெளியே போகத்தக்கதாய்க் கட்டியிருந்த மதகு மூடியிருக்கச்சே அந்த மதகைப் பிடுங்கிக் கொண்டு அந்த வெள்ளம் ஓடிற்று. அந்த வெள்ளத்திலே உப்பாற்றிலே வந்து விழுந்து உப்பாற்றிலே கட்டியிருந்த வீடுகள் பேரிலே ஒரு முழ வெள்ளம் வந்து அங்கே கட்டியிருந்த மூன்று தெருவும் படுகாடாய் விழுந்துபோய், வீடுகள் வெள்ளத்தில் முழுகிப்போய், அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துக் கொண்டு போனதும், மாடுகள் கன்றுகள் செத்ததும், மனுஷர் செத்ததும் இப்படியாக வெகு சேதப்பட்டு அந்த வெள்ளம் இப்படி பட்டணத்து மேலே திரும்பினபடியினாலே, பள்ளத்துத் தெருக்களிலேயெல்லாம் அரை மட்டும் தண்ணியும் பெருந்துடை மட்டும் தண்ணியும் நின்றபடியினாலே, பள்ளத்தாக்கிலே யிருந்த வீடுகளெல்லாம் அநேகமாய் விழுந்து போச்சுது. இதல்லாமல் இந்தக் காற்றிலே காக்காய், குருவிகள், பின்னையு மிருக்கப்பட்ட பட்சிகள் அநேகமாய் தெருவுக்குத் தெரு செத்து மிதந்தது மட்டுமிதமில்லை. இதல்லாமல் பட்டணத்துக்கு வெளியேயிருக்கப்பட்ட தோட்டந் துரவுகள் சகலமும் அடியோட விழுந்து போய்விட்டது. வீடுவாசல்களும் அநேகஞ் சேதம். இல்லாமல் அவரவரது வெளியிலேயிருக்கப்பட்ட ஆடுமாடுகள் ஒன்றாகிலும் தப்பிப் பிழைக்கிறதற்கிடமில்லாமல் தரந்தரமாய் உளைந்துபோச்சுது. அந்த செத்த ஆடுகளைப் பட்டணத்துக்குள்ளே அவரவர் வாங்கி வந்து வீடுகளிலே காயப்போட்டபடியினாலே அதுகள் காய்கிறதற்கிடமில்லாமல் மழையிலே நனைந்து பட்டணமெல்லாம் தெருவுக்குத் தெரு பிணநாற்றமாய் இரண்டு மூன்று நாள் மட்டுக்கும் வீதியிலே புறப்படக்கூடாமல் இப்படி அவஸ்தைப்பட்டுப் போச்சுது. ஆனால், திருவுள எத்தனத்தினாலே பொழுது விடிந்தவுடனே காற்றும் மழையும் நின்று போனபடியினாலே ஒரு சாமத்துக்குள்ளே எல்லாத் தண்ணீரும் வாங்கிப் போய் அவரவர் வீடு வாசலும் தப்பித்ததில்லாமல் மறுநாளைக்கும் அப்படி காற்று அடித்ததால் பட்டணத்திலே ஒரு வீடாகிலும் தப்ப மாட்டாது” . . . . . 

மக்கள் மத்தியில் உலாவிய வதந்திகளையும் செய்திகளையும்கூட ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார். கடன் தொல்லையால் ரங்கம்மள் என்ற பெண் ஓடிப் போனதை ஆனந்தரங்கர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

இந்நாள் சூரியோதயத்துக்கு இரண்டு நாழிகையின்போது தளவாய் கஸ்தூரி ரங்கய்யன் பெண்சாதி ரங்கம்மாள் என்கிறவள் கடன்காரருக்குப் பயந்து ஓடிப்போனாள். அவளுக்குக் கடன் கொடுத்த கோபாலகிருஷ்ணய்யன் அக்காள் மகன் தியாகய்யன் நூற்றி முப்பதுவராசன் கொடுக்க வேணுமென்று தாபந்தப்பட்டுக் கொண்டிருந்தான். அதிலே சிறிது பேர் இருந்து கொண்டு அவளை மைதுனம் பண்ணி அகமனுபவித்ததற்கும் அதற்கும் சரியென்று சிறிதுபேர் சொன்னார்கள். சிறிது பேர் இதைத் தொட்டுச் சிறிது திரவியம் கிரகிக்கலா மென்றிருந்தவர்களும் முகம் கருத்து வெளியே புறப்பட லச்சைப்பட்டிருந்தார்கள். சிறிது பேருக்கு வெளிவந்து வூரை விட்டுப் போனது சனியன் விட்டுப் போச்சுது என்று ஆனந்தத்தை அடைந்திருந்தார்கள். சிறிது பேர் என்ன பதிலாமை போடுகிறாள் என்று இருந்தவர்கள் திகில் தேர்ந்து உத்சாகத்தை அடைந்திருந்தார்கள். இந்தப்படிக்கு வெகுசனங்களுக்குச் சந்தோஷமும் நாலைந்து பேருக்குத் துக்கமுமாக இருந்தது. இவர்கள் பேர் வயணம்.

துரை கணக்கு ரங்கப்பிள்ளை, அருணாசல செட்டி, விசயராகவாச்சாரியார், ரங்காச்சாரியார், தியாகய்யன், மேலகிரி பண்டிதர் குமாரன் ராமச்சந்திரய்யன் அண்ணன், தம்பிமார்களுள்பட இவர்கள் தவிர மற்றபேருக்கெல்லாம் சந்தோஷம்.

இவ்வாறு, தான் கண்ட மற்றும் கேட்ட செய்திகளையெல்லாம் பதிவு செய்யும் ஆர்வம் காரணமாகவே அவர் நாட்குறிப்பு எழுதி வந்துள்ளார் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை நூலாக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருக்கும் வாய்ப்பு இல்லை. ஆயினும் இதை, தனது பரம்பரையினருக்கு விட்டுச் சென்றதின் அடிப்படையில் தமது நாட்குறிப்பை ரகசியமாகப் பாதுகாக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்று கருத முடியும். 

நாட்குறிப்பின் உள்ளடக்கம்

கி.பி. 1736-இல் தொடங்கி 1761 வரையிலான கால்நூற்றாண்டுக் கால நிகழ்வுகளை ஆனந்தரங்கப்பிள்ளை தமது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். முதன் முதலாக 1948-இல் வெளியான தமிழ்ப் பதிப்பில், ஆனந்தரங்கப்பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்பை எழுதிய ரா. தேசிகன் இந்நாட் குறிப்பின் உள்ளடக்கம் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் (1998: U).

அரசியல் சூழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், கலகங்கள் முற்றுகைகள், கப்பல் போக்குவரவு, வாணிபநிலை, முகல் மன்னர் நடத்தை, நவாபுதர்பார், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரரின் அரசாளும் முயற்சி, அக்கால மக்கள் பட்டபாடு, அன்னியர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆர்க்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஐதராபாத், தில்லி முதலிய இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், துய்ப்ளேக்ஸ், லபூர்தோனே, பராதி, லல்லதொலாந்தால் முதலிய பிரெஞ்சுத் தலைவர்கள் தன்மை வகைகள், அக்காலப் பிரமுகர் வரலாறுகள், நீதியுரைகள், சோதிடக் குறிப்புகள், புலமையளவு முதலிய பலவற்றையும் அந்நாட்குறிப்பு தன் அகத்தே கொண்டிருக்கிறது எல்லோருக்கும் புரியும் வண்ணம், அக்கருத்துக் கொண்டே,அது பச்சைத் தமிழிலே, கொச்சைத் தமிழிலே எழுதப்பட்டிருக்கிறது.

இத்தனை செய்திகளையும் உள்ளடக்கிய ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பை, “சித்திரகுப்தனைப் போல ஒன்று விட்டிடாமல் குறித்து வைத்த புஸ்தகமே இப்பிரதாப தினசரியாகும்” என்று குறிப்பிடும் வ.வே.சு. ஐயர், தமது ‘பால பாரதி’ இதழில்,

அவர் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைப் படிக்கும்போது, அக்காலத்து தமிழ்நாட்டை நாம் சலனப்படக் காட்சியில் (சினிமாவில்) பார்ப்பது போன்ற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது. அத்தினசரியாகிய புகைப்படச்சுருள் அவிழ அவிழ எத்தனை விதமான உருவங்கள் தோன்றி மறைகின்றன. ஒவ்வொரு உருவமும் உயிரோடிருப்பது போலத் தோன்றுகிறது. ஊசியால் குத்தினால் அவ்வுருவங்களினின்று ரத்தம் வருமென்று நமக்குத் தோன்றும். “கிசு கிசு” மூட்டினால், சிரித்துவிடுவார்கள் என்று நினைப்போம். அவ்வளவுக்கு அவை உயிருள்ள மனிதன் என்கிற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது. 

என்று பாராட்டியுள்ளார் (மேலது: 15). ஆனந்தரங்கபிள்ளையின் நாட்குறிப்பைப் பொறுமையாகப் படித்து முடிப்பவர்கள் இப்பாராட்டுரை மிகையானதல்ல என்பதை உணர்வார்கள். அரசியல் செய்திகள் மட்டுமின்றி அவர் பதிவு செய்துள்ள பல சமூக நிகழ்வுகளும் சுவையானவை. 

நாட்குறிப்பின் பதிப்புகள்

புதுச்சேரியில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிப் அர்மோன்கலுவா மொபார் என்ற பிரெஞ்சுக்காரரால், 1846-இல் ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்புகள் ஆனந்தரங்கபிள்ளையின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. 1836-இல் நாட்குறிப்பின் அசல் பிரதியிலிருந்து நகலெடுக்கும் பணியை அவர் செய்து முடித்தார். எதுவார் ஆரியேல் என்ற பிரெஞ்சுக்காரரும் 1849 - 50 களில் ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் மூலத்திலிருந்து படியெடுக்கும் பணியைச் செய்து முடித்தார். இந்நகல்கள் இரண்டும் பாரிஸ் நகரிலுள்ள தேசிய நூலகத்தில் உள்ளன. அர்மோன்கலுவா மொபார் முதன் முறையாக எடுத்த நகலிலிருந்து மற்றொரு நகலை தயாரிக்கும் பணியை சென்னை ஆவணக் காப்பகம் மேற்கொண்டது. 1892-இல் தொடங்கிய இப்பணி 1896-ல் முடிந்தது. இந்நகல் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக உள்ளது. நாட்குறிப்பின் அசல் பகுதி காணாமல் போய்விட்ட நிலையில் இம்மூன்று நகல்களும் இழப்பை ஈடுசெய்துள்ளன. பெரிய கணக்குப் பதிவேடுகளைப் போன்று பைண்டு செய்யப்பட்ட பதிமூன்று பதிவேடுகளாக அசல் பிரதி இருந்துள்ளதாகத் தெரிய வருகிறது. 

மூலநகலிலிருந்து எடுத்த மூன்றாவது நகலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பனிரெண்டு தொகுதிகளாக சென்னை அரசாங்கம் வெளியிட்டது. 1894-இல் தொடங்கி 1928 வரையிலான கால கட்டத்தில் இத்தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. பின்னர் பிரெஞ்சு மொழியிலும் வெளியானது. இவற்றிற்கெல்லாம் பின்னரே 1736 செப்டம்பர் 6 தொடங்கி 1753 செப்டம்பர் எட்டு வரையிலான காலத்திய நாட்குறிப்புகள் எட்டுத் தொகுதிகளாக (ஒன்பது நூல்கள்) பின்வரும் காலகட்டங்களில் தமிழில் வெளியாகின. முதல்தொகுதி (1948), இரண்டாம் தொகுதி (1949), மூன்றாம் தொகுதி (1950), நான்காம் தொகுதி (1951), ஐந்தாம் தொகுதி (1954), ஆறாம் தொகுதி (1956), ஏழு, எட்டாம் தொகுதிகள் (1963). 1755 செப்டம்பர் எட்டாம் நாளுக்குப் பின் தொடங்கி 1764 சனவரி 12-ஆம் நாள் வரை அவர் எழுதிய நாட்குறிப்புகளில் எஞ்சிய பகுதிகள் இன்னும் தமிழில் வெளிவரவில்லை. தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்பு ஒன்றின் முழுவடிவம் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கிடைக்க, தமிழில் எட்டுத் தொகுதிகள் மட்டுமே இன்று வரை கிடைப்பது வேடிக்கையான ஒன்றுதான். வரலாற்று ஆவணங்களை முறையாகப் பதிப்பித்து வெளியிடுவதில் நமக்கு ஆர்வம் இல்லாததையே இது காட்டுகிறது. புதுவை அரசின் கலைப்பண்பாட்டுத் துறை, மேற்கூறிய எட்டு தொகுதிகளையும் எவ்வித மாற்றமுமின்றி நகல் பதிப்பாக மலிவு விலையில் 1998-இல் வெளியிட்டது. இதுவரை அச்சில் வராத எஞ்சிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஆய்வுப் பதிப்பை வெளியிடுவதாக இப்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் இன்று வரை அவை வெளியாகவில்லை.

இந்தியவியல் அறிஞரான ழுவான் துப்ரேல் என்ற பிரெஞ்சுக்காரரும், நீலகண்ட சாஸ்திரியாரும் இணைந்து, ரங்கப்பப்பிள்ளை நாட்குறிப்பின் மூலப்பிரதியிலிருந்து படியெடுக்கப்பட்ட இரு நகல்களை 1939-ஆம் ஆண்டில் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதன் விளைவாக, 

ஆனந்தரங்கப்பிள்ளையின் பல தேதியிட்ட குறிப்புகளில் சிறப்பாக 1, அக்டோபர் 1749 முதல், 7 அக்டோபர் 1760 ஆம் ஆண்டு முடிய உள்ள இடைப்பட்ட காலங்களுக்கான முப்பத்தைந்து தினசரிக் குறிப்புகள், பிரசுரிக்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பில் இடம்பெறாமல் உள்ளது என்ற உண்மை புலனானது. எனவே ரங்கப்பிள்ளையின் தமிழ் நாட்குறிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பு முழுமையானது இல்லை என்று தெரிய வந்தது 

என்று ஜெயசீல ஸ்டீபன் (1999: 29-30) குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு விடுபட்ட பகுதிகள் முழுநாட்குறிப்பில் முப்பது விழுக்காடு இருக்கும் என்று ஓர்சே. மா. கோபாலகிருஷ்ணன் கணித்துள்ளார். (தனக்கு முன்னர் ழுவான் துப்ரேலும், நீலகண்டசாஸ்திரியாரும் இவ்வுண்மையைக் கண்டறிந்ததை என்ன காரணத்தாலோ கூறாமல் விட்டுவிட்டார்.) 1751 ஏப்ரல் 16 முதல் 1752 மார்ச் 4 வரையிலான நாட்குறிப்பில் விடுபட்டப் பகுதிகளையே “ஆனந்தரங்கர் விரிவடைந்த நாட்குறிப்பு” என்ற தலைப்பில் 2004-இல் வெளியிட்டுள்ளார்.

இந்நாட்குறிப்பின் சிறப்பு

ஆங்கிலத்தில் பன்னிரெண்டு தொகுதிகளாக வெளிவந்த ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் முதல் மூன்று தொகுதிகளைப் பதிப்பித்த பிரெடரிக் பிரைஸ் என்ற ஆங்கிலேயர் தமது பதிப்புரையில்,

தனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் எண்ணங்களையும் கருத்துக்களையும், தனது எசமானர்களையும் சகாக்களையும் பற்றிய விமரிசனங்களையும் தெளிவாக வெளிப்படுத்தும் பிள்ளையினுடைய இந்நாட்குறிப்பு நிகரில்லாத ஒரு நூல். மனந்திறந்து ஒளிவு மறைவின்றி தனது விமரிசனங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்துகின்ற, மிகுந்த ஆற்றலும் நிதானமும் சீரான புத்தியும் உடைய அற்புதமானதொரு கீழை நாட்டு மனிதராக அவை பிள்ளையை நமக்குக் காட்டுகின்றன. இந்நாட்குறிப்பு பெருத்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளும் சாதாரண அன்றாட நிகழ்ச்சிகளும் சேர்ந்துள்ள ஒரு கலவை. குடும்பச் செய்திகள், அரசுகளின் செயல்பாடுகள், வர்த்தக நடவடிக்கைகள், அக்காலத்தில் சமுதாய வாழ்வு ஆகியவற்றைப் பற்றி வரைவதோடு, மக்கள் மத்தியில் உலா வந்த சுவையான வதந்திகள் போன்றவற்றையும் கூட்டிச் சேர்த்து, பிள்ளையின் மனத்தில் அவை எப்படிப்பட்டனவோ அப்படியே வெளிப்படுத்தும் ஒரு நூல். எளிய நடையில் எளிய சொற்களைக் கொண்டதாயினும், மனிதர்களையும் நிகழ்வுகளையும் உயிரோட்டத்தோடு வருணிக்கும் பல பகுதிகள் இதில் நிறைந்துள்ளன. ஆசிரியரது பல விவரணைகள் வியப்பூட்டுவன. அவரது கூர்த்த அறிவினை வெளிப்படுத்துவன. நெஞ்சை நெகிழச் செய்வன. சில பகுதிகள் ஓரளவு சலிப்பூட்டுவன என்றாலும், ஒரு ஆவணம் என்ற வகையில் மிகவும் சுவாரசியமான நாட்குறிப்பாக அது உள்ளது. இந்தியாவில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, உச்சகட்டம், வீழ்ச்சியின் துவக்கம் ஆகியவை உள்ளிட்ட ஒரு காலத்தின் வரலாறு, அரசியல், சமுதாயம் பற்றிய போற்றற்குரிய ஒரு பதிவேடாக அது உள்ளது”. (ஆலாலசுந்தரம், 1999, பக். 6, 7)

என்று மதிப்பிட்டுள்ளார். எஞ்சிய ஒன்பது தொகுதிகளைப் பதிப்பித்த டாட்வெல், இந்நாட்குறிப்பைப் பின்வருமாறு பாராட்டியுள்ளார்.

“தான் அறிந்தவற்றைத் துல்லியமாகவும் உள்ளதை உள்ளவாறே உரைப்பவராகவும் இருக்கிறார் ரங்கப்பிள்ளை. அவர் எடுத்துரைக்கும் கடைத்தெருப் பேச்சுகள்கூட, இந்தியரின் பார்வைக்கு, அக்காலத்திய முக்கிய நிகழ்வுகள் எவ்வாறு தோன்றின என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன. அவரது நாட்குறிப்பு கடந்த காலத்தை நாம் ரசிக்கக் கூடியதாகப் பல சிறு சிறு வேடிக்கைச் சம்பவங்களையும் வருணனைகளையும் இங்குமங்கும் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக இதைத் தந்திருந்தால் மேலும் சுவையாக இருக்கும். “இறுதியாகக் கூறுமிடத்து, புதுச்சேரியில் நடந்தவற்றையும், வெளியிலிருந்து அப்வூரை எட்டிய செய்திகளையும் வதந்திகளையும் கிட்டத்தட்ட முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் வாசகர்களுக்கு எடுத்துக்கூறும் ஒரு நூலாக இந்நாட்குறிப்பு விளங்குகிறது” (ஆலாலசுந்தரம், 1999, ப. 7)

ரெங்கப்பப்பிள்ளையின் நாட்குறிப்பானது அரசியல் ஆவணமாக மட்டுமின்றி, ஓர் அற்புதமான சமுதாய ஆவணமாகவும் விளங்குவதை இவ்விரு ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களின் கூற்றுகள் உணர்த்துகின்றன. சான்றாக, நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள சில செய்திகளைக் காண்போம். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின்போது கத்தோலிக்கம் வெகு விரைவாகப் பரவியது. ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்த ஆதிதிராவிடர்கள் குறிப்பிடத்தக்க அளவில் கத்தோலிக்கத்தைத் தழுவினர். ஆனால் தேவாலயத்தில் அவர்களுக்குச் சமத்துவம் கிட்டவில்லை. ஆதிதிராவிடர்களையும் பிற சாதியினரையும் பிரிக்கும் வகையில் புதுச்சேரி சம்பாக் கோவிலின் உட்பகுதியில் குறுக்காகச் சுவர் கட்டப்பட்டிருந்தது. இது குறித்து அவர்கள் முறையிட்டதன் அடிப்படையில் 1745 அக்டோபர் 16 அன்று குறுக்குச் சுவரை பாதிரியார் ஒருவர் இடித்துப் போட்டார். இந்நிகழ்ச்சியைத் தமது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ள ஆனந்தரங்கர் மறுநாள் (1745, அக்டோபர் 17) நிகழ்ந்த செயலைப் பின்வருமாறு எழுதியுள்ளார்.

சிறிது பேர் கோவிலுக்குப் போனார்கள். பறையர் வந்திருக்கிறதற்குக் குறுக்கே நாற்காலியை மறைத்து வைத்துப் பிரித்து அடைத்து வைத்தார்கள். பின் என்னமாய் நடக்குமோ தெரியாது.

புதிதாகக் கத்தோலிக்க சமயத்தைத் தழுவிக் கொண்டவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. தேவாலயத்திற்குக் கண்ணியமான முறையில் ஆடை அணிந்து வராத செல்வக்குடிப் பெண்ணொருத்தியுடன் பாதிரியார் ஒருவருக்கு ஏற்பட்ட பிணக்கை நாட்குறிப்பு குறிப்பிடுவது வருமாறு:

கனகராய முதலியார் உடன்பிறந்தான் குமாரன் ஆசாரப்பமுதலியார் பெண்சாதி செல்வத்துடனே இருககிறபடியினாலே அந்தப் பெண் அவர்கள் சாதியிலே இடவேண்டிய உடமையெல்லாம் தரித்துக் கொண்டு பரிமள கெந்த சுகந்தத்துடனே துலாம்பரமாயிருக்கப்பட்ட சல்லாப் புடவையைக் கட்டிக்கொண்டு, சுவாமிக்கு அடுத்தாற்போல யிருக்கப்பட்ட சிரேஷ்டராயிருக்கிற பாதிரியாரண்டையிலே போய் முட்டிக்காலின் பேரிலேயிருந்து கொண்டு, தேகத்தியானமாய் பூசை கேட்கிறவிடத்திலே அந்த சுகந்த பரிமள சுகந்தத்தினுடைய வாசனை பாதிரியார் மேலே பட்டவுடனே அவர் பூசை சொல்லுகிறதை விட்டு விட்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு கையிலேயிருக்கிற பிரம்பினாலே கொண்டையிலே குத்தி, நீ கலியாணக்காரி அல்லவா, நீ தேவடியாளா, உன்னுடைய புருஷனுக்கு வெட்கமில்லையா. சரீரம், மார்பு, ரோமத்துவாரமெல்லாம் தெரியத்தக்கதாகச் சல்லாப்புடவையைக் கட்டிக்கொண்டு கோவிலுக்கு வருவார்களா புண்ணியவதீ. நீ பூசை செய்தது போதும். எழுந்திருந்து வீட்டுக்குப் போ . . . . என்கிறதாகக் கோபித்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார். அதின் பேரிலே கிறிஸ்துவர் எல்லாரையும் அழைத்து இனிமேல் பெண்டுகள் ஒருத்தரும் மெல்லீசுப் புடவை கட்டத் தேவையில்லை என்றும், உடமைகள் தமிழரைப் போலே இடப்போகாதென்றும், எப்போதும் போலே கொண்டை முடிக்கப் போகாதென்றும், சட்டைக்காரிச்சிகள் போலே கொண்டை முடிக்கச் சொல்லியும், வாசனைபரிமளத் திரவியம் பூசப்போகாதென்றும் இந்தப்படிக்குத் திட்டப்படுத்தி நடந்துகொள்ளச் சொல்லி, பாதிரியார் சொன்னார். அதின் பேரிலே கிறிஸ்துவர் எல்லாரும் கும்பல் கூடிக்கொண்டு கோவிலுக்குப் போய் பாதிரியாருடனே தற்கித்துப் பேசுகிறவிடத்திலே கெவுனி வாசல் முதலிலிருந்து கொண்டு எப்போதும் நடந்தபடி நடக்கிறதே அல்லாமல் நூதனமாய் நீங்கள் இப்படிச் சொன்னால் அது எங்களவருக் கொருத்தருக்கும் சம்மதிப்படவில்லை என்று எதிர்த்துச் சொன்னார். நீங்கள் எங்களுடனே எதிர்த்துப் பேசலாமா என்று பிடித்துத் தள்ளவும் அவர் போய் பாதிரியார் சட்டையைப் பிடித்திழுத்துவிஷயங்கள் ஏறக்குறையப் பேசி, இனிமேல் நாங்கள் உங்களுடைய கோவிலுக்கு வருகிறதில்லை என்று சொல்லிவிட்டார்கள். (ஆனந்தரங்கப்பிள்ளை தொகுதி -1: 214 - 215)

புதுச்சேரிவாசியான பாரதிதாசன் “ஏசுநாதர் ஏன் வரவில்லை?” என்ற தலைப்பில், 

தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல், தாள் 

என்ற எட்டுறுப்பும்

தங்கநகை, வெள்ளிநகை, ரத்தினமி ழைத்தநகை,

தையலர்கள் அணியாமலும்,

விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர

வேண்டுமென் றேபாதிரி

விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை

வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்!

நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி

நீள்இமைகள், உதடு, நாக்கு

நிறையநகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க

நிலைக்கண்ணா டியும்உண்டென

இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள்

எல்லாரும் வந்துசேர்ந்தார்:

ஏசுநாதா தர்மட்டும் அங்குவர வில்லையே,

இனியபா ரததேசமே!

என்று எழுதிய கவிதைக்கு மூலமாக, இந்நாட்குறிப்புச் செய்தி இருந்திருக்குமோ என்று கருதத் தோன்றுகிறது. 1747 ஏப்ரலில் சென்னைப் பட்டணத்தை பிரெஞ்சுத் துருப்புக்கள் கைப்பற்றின. இது குறித்து 1747 ஏப்ரல் 23-ஆவது நாள் எழுதிய நாட்குறிப்பு, “இன்றையதினம் இதுவரைக்கும் சென்னைப்பட்டணத்திலே நடக்கிற அநியாயத்தைக் காகிதம் முனையிலே எழுதி முடியாது” என்று தொடங்கி, பிரெஞ்சுப் படை வீரர்களும், அதிகாரிகளும் நடத்திய கொள்ளைச் செயலைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளது.

வீட்டுத் தட்டுமுட்டுகள், தானியம் தவசம் கூடவைத்துப் போட்டுப் போனதெல்லாம் கொள்ளையிலே மாயே சிப்பாய்கள் சொல் தாதுகள் முதலாய் கடைசி கூலிவேலை செய்கிறவன் உள்பட அவனவனுக்குப் பத்துப்பணம் விசேஷித்து அகப்பட்டதேயல்லாமல் கூலிக்காரன்கூட நூறு வராகனுக்குக் குறைய அகப்பட்டு வந்தவனில்லை; கூலிக்காரனிப்படியானால் ழசியே லபூர்தொனே முதலான சர்தார்கள், கோன்சேர்காரர், கணக்கர் மற்றுமுள்ள உத்தியோகஸ்தருக்கு என்ன அகப்படவேணுமோ இதன் பேரிலே யோசனை பண்ணிக் கொள்ளுங்கோள். மாயே சமேதாருக்கு மாத்திரம் இரண்டு லஷம் வராகனுக்கு உண்டு. 

1748 செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. பீரங்கிக் குண்டுகள் புதுச்சேரியில் மக்கள் வாழும் பகுதியில் விழுந்ததை 1748 செப்டம்பர் 9ம் நாள் எழுதிய நாட்குறிப்பில் பின்வருமாறு ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.

மற்றபடி அவன் (இங்கிலீஷ்காரன்) போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கும் உண்டு. அது இப்படி சகல ஜனங்களும் அவஸ்தைப்பட்டார்கள். இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிது நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்து, பதினைந்து மட்டுக்குமிருக்கிறது. இது வரும்போது ஒரு சோதி போல புறப்படுகிற வேடிக்கையும், அப்பாலே மெள்ள அசைந்து அசைந்து கொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும், பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத் தானே இருந்தது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்குச் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம் பட்டதுமில்லை. இன்றையத் தினம் இராத்திரி இப்படி நடந்தேறி போனது தீக்குடுக்கையினுடைய மகத்துவம். அதனுடைய சப்தமானதும் இந்த மட்டுக்கும் அது ஒருத்தருக்கும் தெரியாது. இன்றைய தினம் சிறு பெண்கள் பிள்ளைகள் சமஸ்தான பேருக்கும் தெரிய வந்தது. தீக்குடுக்கை பயம், சிறிது பேருக்கு பயம் அரைவாசி தீர்ந்தது. சுட்டதும் ஒரு சப்தம், புறப்படும்போது ஒரு சூரியன் தோன்றுகிறதென்றுவருகிறாப் போலே வருகிறது. வருகிறது வெகு சப்தத்துடனே வருகிறதுமல்லாமல் வெகு தொந்தியுள்ளவன் நடக்க மாட்டாமல் மெள்ள வருவானே அப்படி வருகிறபடியினாலே சமீபத்திலே வரும்போது மனுஷர் தப்பித்துக்கொள்ள விலகிப் போகலாமென்று வெகு பேருக்கெல்லாம் தைரியமுண்டாகி தீக்குடுக்கையென்றால் அதை சட்டை பண்ணி அது வருகிறதோ போகிறதா என்கிறதுகூட கேழ்க்கிறதுகூட விட்டுவிட்டார்கள். இப்படி நடந்ததைப் பார்த்து கேள்விப்பட்டதையும் சுருக்கமாயெழுதினேன்.

ஆனாலின்றையதினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்கார்ச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்.

இவ்வாறு சுவையான சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. 

ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளையின் தம்பி திருவேங்கடம்பிள்ளை என்பாரின் மகனான ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளை என்பவரும் நாட்குறிப்பு எழுதி வந்துள்ளார். 1761 முதல் 1764 வரையிலான காலத்திய செய்திகளை இவர் நாட்குறிப்பின் வாயிலாக அறிய முடியும். இக்குறிப்பில் அவரது குடும்பச் செய்திகளும் அரசியல் செய்திகளும் மட்டுமின்றி புதுச்சேரியின் அருகிலுள்ள நவாப் ஆட்சிப்பகுதியில் நிலவிய வரிக்கொடுமைகள் குறித்தும் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.

நவாபு மம்முதலிகான் ஆட்சிப் பகுதியில் நிலவரி வசூலிக்கும் உரிமையை குத்தகைக்கு எடுத்தவர்கள், நிலஉரிமையாளர்களை எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தி வரி வாங்கினார்கள் என்பதையும், பெண்கள் எவ்வாறு மானபங்கப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் இந்நாட்குறிப்பின் வாயிலாக அறிகிறோம்.

சாமறாயன், வெங்கட்டய்யன், அய்யணசாஸ்திரி, றாமலிங்கய்யன், முத்து வெங்கிடறாம ரெட்டி, முத்து மல்லா ரெட்டி இவர்கள் முதலாகிய பின்னையும் சிறுது பேர், குத்தகை வாங்கியிருக்கிற பேர்கள் நடப்பிக்கிற அன்னிதங்களும், சிறுது இடங்களிலே நடத்துகிற அன்னிதியும், குடிகள் கெட்டலைஞ்சு நொந்து போனதும், யெழுத வேணுமானால் பார்த்த கதை, வியாசற் சொல்ல யெழுதப்பட்ட விக்கினேசுவருககுள்ளேயும் அடங்காது. சொல்ல வேணுமென்னால் நூறு வருஷம் சொன்னாலும் முடியாது.

என்ற முன்னுரையுடன் தொடங்கி அவர்கள் செய்த கொடுமைகளைப் பின்வருமாறு எழுதியுள்ளார். 

ஆகிலும் குடியானவன் இடையர்கூட வாரம் வித்து குடுத்தும், மாடு கண்ணுகள் வித்துக்கொடுத்தும், நெறுவகிக்கயில்லாமல் அடியும், திட்டியும் பொறுக்க மாட்டாமல் ஓடிப்போனால், பெண்டுகளைப் பிடித்து வந்து, மூலையிலே கட்டிப்போட்டு, மரத்திலே தூக்கியடிச்சும், யதிலே புடவையை யவிழ்த்தும் இதிலே சிறுது பேர் செத்தும், செஞ்சி அண்டையிலே பனைமலைக்கிட்ட ஒரு கிறாமத்திலே துலுக்கன் ஒருவன் அமுல் பண்ணிக் கொண்டிருந்ததாகவும், அதிலேயொரு பார்ப்பனன் சறுவ சோமானியமும் வித்துக்கொடுத்தும், பின்னையும் நூத்தி யென்பது வராகனை கொடுக்கச் சொல்லி யடிச்சதாகவும், யெனக்கானால் யொரு காசுயில்லை. யெங்கேயிருந்து குடுப்பேனென்று சொன்னதாகவும், உன் பெண்டாட்டியை வித்து கொடுயென்றும், சொன்னதாகவும், சாப்பாட்டுக்கு வந்தவிடத்திலே பெண்சாதியுடனே சொன்னதாகவும், நல்லது; இந்த நூத்தென்பது வராகனை உன் கையிலே வித்துப் போடுகிறேனேன்னு சொன்னதாகவும், அந்த துலுக்கன் நூத்து அம்பது வராகனுங் கொடுத்து, திவாணத்துக்கு வைச்சுக் கொண்டு, அந்த பார்ப்பனன் தன் வீட்டே போய்விட்டதாகவும், றாத்திரிக்கு அந்த பார்ப்பனத்தி நாக்கை பிடுங்கி கொண்டு செத்ததாகவும், அந்த பார்ப்பனன் செத்துப் போய்விட்டதாகவும் சொன்னார்கள். இப்படி அநேகம் அன்னிதங்கள் நடந்து கொண்டிருக்குது. (முதல் தொகுதி: ப. 9).

நபாபு மம்முதலிகான் சீர்மைகளிலே அனேகம் அன்னீதம் பண்ணி, குடிகளை கெடுத்து போடுகுறதாகவும், விழுப்புறம் சீமை, அமுல் வெங்கிடய்யன், ஆரோ ரெண்டு பேர் பார்ப்பன இஸ்த்தீரிகளை, மூலையிலே கட்டி போட்டு அடிச்சதாகவும், அதிலே அவர்கள் சீவனை விட்டதாகவும், திருவதிச்சீமையிலே, வழுதிலம்பட்டுலே, ஒரு செட்டிச்சியை கட்டி தூக்கினதாகவும், பிடவை அவிழ்ந்து கீழே விழுந்ததாகவும், சீக்கிறமாயி அவிழ்த்து விட்டு விட்டதாகவும், அவள் பிடவையை கட்டிக்கொண்டு அப்பிறத்திலே கிணறு இருந்ததாகவும், அதிலே விழுந்து செத்து போனதாகவும், செட்டிச்சிக்கள் யிரண்டு பேரை மூலையிலே கட்டி போட்டதாகவும், இதுக்கு சென்னப்பட்டணத்திலே கேவுனர் பிக்கட்டவர்களுடனே சொல்லிக் கொண்டதாகவும், அவர் நம்முட வேலையில்லை. நபாபு, மம்முதல்லிகான் அண்டையிலே போங்களேன்னு சொன்னதாகவும், அங்கே போய் பிறாது பண்ணி கொண்டதாகவும், அவர் அடிச்சி துரத்திவிட்டதாகவும், இப்படி கேள்வியாய் போச்சுதெண்ணும் . . .” (முதல் தொகுதி, ப. 79).

இதன் கையெழுத்துப் படியைப் பதிப்பித்து 2000-ம் ஆண்டில் ஜெயசீல ஸ்டீபன் வெளியிட்டுள்ளார். பழைய நாட்குறிப்பை எவ்வாறு பதிப்பிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நூலின் பதிப்பு முறை அமைந்துள்ளது. இதை நல்ல முறையில் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளமை பாராட்டுதலுக்குரியது. 

இரண்டாம் வீரா நாயக்கர் நாட்குறிப்பு

பிரெஞ்சுக்காரர் ஆட்சியின்போது ‘இரண்டாம் நயினார்’ என்ற பதவி காவல் துறையில் இருந்தது. இப்பதவியை வகித்து வந்த வீராநாயக்கர் என்பவர் 1779 மே 10-ஆம் நாள் தொடங்கி 1792-ஜுலை 17-ஆம் நாள் முடிய நாட்குறிப்பு எழுதி வந்துள்ளார். அத்துடன் 1778-இல் சென்னையிலிருந்த ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகையிட்டுக் கைப்பற்றியதைக் குறிக்கும், பிரெஞ்ச் கட்டுரையொன்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புதுச்சேரி கோட்டை குறித்த வருணனை, கடல், வாணிபம், இராணுவத்திலிருந்து ஓடிப்போன சிப்பாய்களைத் தூக்கிலிடல், கொலைக் குற்றத்திற்குத் தூக்கிலிடல், இடங்கை வலங்கை பிரிவினரிடையே நிகழ்ந்த மோதல்கள் போன்ற செய்திகள் இந்நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. 

பாரிசிலுள்ள தேசிய நூலகத்தில் கையெழுத்துப் படியாயிருந்த இந்நாட்குறிப்பை ‘இரண்டாம் வீரா நாயக்கர் நாட்குறிப்பு’ (1778-92) என்ற தலைப்பில் ஓர்சே. மா. கோபாலகிருஷ்ணன் பதிப்பித்து 1992-இல் வெளியிட்டுள்ளார். 

முத்து விஜய திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்பு

ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளையின் மகனான முத்துவிஜய திருவேங்கடம்பிள்ளையும் நாட்குறிப்பு எழுதி வந்துள்ளார். இந்நாட்குறிப்பு 1794 முதல் 1796 வரை எழுதப்பட்டுள்ளது. இந்நாட்குறிப்பிலும் அரசியல் செய்திகள் மட்டுமின்றி சமூக பண்பாட்டுச் செய்திகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. பிண ஊர்வலம் செல்லும் வழி தொடர்பாக சாதிகளுக்கிடையே இருந்த பிணக்கை இந்நாட்குறிப்பு பின்வருமாறு பதிவு செய்துள்ளது.

“இதெல்லாமல் யிந்த பட்டணம் தோன்றிய னாள் முதல், னாளது வரைக்கும் யில்லாத வழக்கமாய், யின்று மத்தியானம் பெப்பையன் வீட்டுக்கு யெதிரிலே குடியிருக்கிற ஒரு கிறிஸ்துவன் வீட்டில் செத்தவொரு பிணத்தை, பார்ப்பனன் வீதியில் யெடுத்துக் கொண்டு வந்ததாயும், அந்நேரம் ஒரு காரியமாய், யாரும் யிந்த வீதியில் வராமையினாலே, பிணம் கொண்டு போய் விட்டதாய் யிருக்குது சேதி.” (1999: 54)

வடகலை, தென்கலை வைணவர்களுக்கிடையே நிகழ்ந்த பூசலும், (1999: 310) பின் இவ்விரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் நகலும் (பக். 313 - 317) இந்நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன. தம்மிடம் பணி புரிந்த தமிழர்களை ஐரோப்பிய அதிகாரிகள் எவ்வளவு கொடூரமாக நடத்தினர் என்பதையும் இந்நாட்குறிப்பின் வாயிலாக அறியமுடிகிறது. இராணுவத்தில் கர்னல் பதவி வகித்து வந்த வெள்ளையன் ஒருவன் தன்னிடம் பணிபுரிந்த பட்லரின் கழுத்தை அறுத்த கொடுமையை 1794 டிசம்பர் 23-ம் நாளிட்ட நாட்குறிப்பு இவ்வாறு குறிப்பிடுகிறது.

கேழ்விப்பட்ட சேதி யென்னவென்றால், வேலூரில் வொரு கற்னாலானவர் தம்முடைய பூட்டுலறை* அழைப்பித்து னாளைய தினம் யிருபது பேருக்கு தீனிபோடவேணும். ஆக கண்ணுக்குட்டி தலையும் வாங்கிவாவென்னு சொன்னதாயும், அவன் கண்ணுக்குட்டி தலை மாத்திரம் அகப்படாதென்னு சொல்லி, கண்ணுக்குட்டி வாங்கவேணுமென்னு வுத்தரவு குடுத்தால் செய்குறேணென்னு சொன்னதாயும், பிறகு மறுனாள் யாவரும் தீனி திண்ணுகுறபோது, கண்ணுக்குட்டி தலைக்கு பதிலா ஆட்டுத்தலைக்கறி சமைத்து வைத்திருந்ததாயும், மேசை மேலே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் கண்ணுக்குட்டி தலைக்கறியில்லையா? யென்னு கேழ்க்க, யிதோ கொண்டுவருகுறேணென்னு மேற்படி கற்னால் யெழுந்திருந்து தன் போட்டுலோரை* சாம்புருக்குள்ளே** யிட்டுக்கொண்டுபோய், அவன் கழுத்தை அறுத்து, மேசைமேலே கொண்டுபோய் வைத்ததாயும், வுடனே கூட சாப்பிட்டுக் கொண்டிருந்த துரைமார்கள் கலைஞ்சு, அப்பிறம்போய், குமுசேல்கூடி, கழுத்தருத்த கற்னாலை காவல் பண்ணி, ஆஸ்தி பாஸ்திகளையெல்லாம் முத்திரிச்சதாயும், பிறகு யிது சேதி கமிட்டிக்கு யெழுதினதாயும் சொல்லுகுறார்கள். ஆனால் யிது நடந்தது நிசமாய்தான் காணப்படுகுறது. (ப. 161)

1795-இல் சனவரி 4-ம் நாள் தமுக்கடித்து புதுச்சேரிவாசிகளுக்கு காவல்துறை அறிவித்த அறிவிப்புகள் அன்றையத்தினமே நாட்குறிப்பில் பதிவாகியுள்ளன. அவற்றுள் ஒன்று வருமாறு:

தமிழ் தெருக்களிலும், வெள்ளக்காற தெருக்களிலும் வாசம் பண்ணப்பட்ட குடிகள் யாவருக்கும் விசேஷ விதமாய் கட்டளையிடுகுறது யென்னவென்றால், அவரவர் தினம் தினம், தங்கள் வீட்டுக்கெதிரே கூட்டி விளக்கி சாலை வண்டிகள் லேசாய் வாரிக்கொண்டு போகும்படியாய் குப்பைகளை சேர்த்து குவித்து வைக்க வேணும். இதல்லாமல் யிது காரியம் சரீர ஆரோக்கியத்துக்கும், சுத்தமாய் யிருக்குறதுக்கும் விசேஷம் அவசரமாய் யிருக்குறபடியினாலே அதுகாரியத்தில் கண்ணுண்டாய் விசாரிக்கும்படியாய் சாலை சேவுகருக்க தாட்சண்யம் யில்லாத கட்டளை யிட்டிருக்கிறதென்னும், யிந்த கட்டளைக்கு மீறி நடக்குறவர்களுக்க அதுக்குத்தக்க தெண்டனை கிடைக்குமென்னும் அறிய வேண்டியது. (ப. 173)

காலையில் பழையது சாப்பிடும் பழக்கம் செல்வந்தர்களிடமும் இருந்துள்ளது. “இந்தனாள் காலமே பழையது சாப்பிட்டு போட்டு” என்று பெரும்பாலும் நாட்குறிப்பு தொடங்குகிறது. அமாவாசையன்றும் சில சிறப்பான நாட்களிலும் பழையதும், இறைச்சியும் உண்ணுவதில்லை என்ற செய்தியை “இந்தநாள் காலமே அமாவாசை ய னாழிகை பரிய்ந்தம் யிருக்குறபடியால், பழையது சாப்பிடாமல் கவிச்சி தீட்டில்லாமல் புதியதை சாப்பிடும்படிக்கு திட்டப்படுத்தினோம்”, “இந்நாள் புரட்டாசி சனிக்கிழமையினானபடியினாலே வொருபொழுது யிருக்குறபடியால் பழையது சாப்பட யில்லை.” என்ற தொடர்களால் அறிகிறோம்.

இந்நாட்குறிப்பையும் ஜெயசீல ஸ்டீபன் 1999-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளார். மொத்தத்தில் புதுச்சேரியானது, நாட்குறிப்புகள் பலவற்றின் இருப்பிடமாக அமைந்து தமிழ்நாட்டின் அரசியல் சமூகப் பண்பாட்டு வரலாற்றிற்குத் துணைபுரிந்துள்ளது. “ஐரோப்பியர்கள் மட்டுமே தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றினர் என இதுவரை கொண்டிருந்த கருத்து மாற்றப்பட வேண்டும்” என்ற ஜெயசீல ஸ்டீபனின் கூற்று ‘உண்மை’ என்பதை மேற்கூறிய நாட்குறிப்புகளைப் படிப்போர் உணர்வர்.

துணைநூல்கள்

ஆலாலசுந்தரம், 1999, ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம் 1736 - 61. புதுச்சேரி.

ஆனந்தரங்கப்பிள்ளை, 1998, பிரத்தியேகமான ஆனந்தரங்கப்பிள்ளை தினநாட்குறிப்பு (எட்டுத் தொகுதிகள்), புதுச்சேரி.

கார்ல் மார்க்ஸ், 1971, இந்தியாவைப் பற்றி, சென்னை.

கோபாலகிருஷ்ணன், ஓர்சே.மா., 1992. இரண்டாம் வீரநாயக்கர் நாட்குறிப்பு, 1778-1792, சென்னை.

கோபாலகிருஷ்ணன், ஓர்சே.மா., 2004. ஆனந்தரெங்கப்பிள்ளை வி. நாட்குறிப்பு, 1778-1792, சென்னை.

சந்திரசேகரன், (பொதுப் பதிப்பாசிரியர்), 1955, ஆனந்தரங்கன் கோவை, சென்னை.

ஜெயசீல ஸ்டீபன், எஸ்., 1999, தமிழில் நாட்குறிப்புகள் (பதினெட்டாம் நூற்றாண்டு) செய்தி இதழ்களின் முன்னோடிகள், புதுச்சேரி.

ஜெயசீல ஸ்டீபன், எஸ்., (பதிப்பாசிரியர்) 1999ய, முத்து விஜய திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்பு (1794 - 1796), புதுச்சேரி.

ஜெயசீல ஸ்டீபன், எஸ்., 2000, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு (இரண்டு தொகுதிகள்), புதுச்சேரி.

Price, Frederick & H. Dodwell, 1985, The Private Diary of Ananda Ranga Pillai 12 vols, New Delhi.

வாசகர் கருத்துக்கள்
nagasundaram.r
2008-10-08 03:46:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

nalla pala thavalgal niraindha aayvukkatturai. ananda rangar mattumandri vaeru natkurippugal kuritthum kurippittulleergal. frenchukkaarargal tamizhrgalkku edhiraay nadndhu konda seithigalaiyum aanandarangar padhivu seidhu ullam,aiyai ariya mudindhddhu nandri

thinapularidoss
2009-02-19 01:58:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

it was very usefull to know about the present and past of puthucherry . i am belongiing to karaikal and i was reporter of Dinapular for karaikal District. really the keetru easy and flexibility to read out any thing published by the subscriber...


dinapularidoss.

V.SOUMYA NARAYANAN
2009-05-17 11:21:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I WANT TO SEND ARTICLES OF HISTORICAL IMPORTANCE. I SWEAR THAT THOSE ARTICLES SEND BY ME WERE NEITHER SENT TO ANY WEBSITE NOR TO ANY BLOGSPOT. PLEASE LET ME KNOW WHAT SHOULD BE THE PARAMETERS VIZ. THE LENGTH OF TEXT AND SUBJECT MATTER TO BE PUBLISHED.

Pin It