மனித மனத்தின் ஆழ் அடுக்குகளில் பதிந்திருக்கும் படிமங்களே கலையாக உருவெடுக்கிறது. இசை, நடனம், சிற்பம், ஓவியம், இலக்கியம் எல்லாம் இப்படித்தான். இலக்கியம் எனும் மகாநதி, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனக் கிளை நதிகளாகப் பிரிந்து பிரிந்து கவின் நடை போடுகிறது. மனித மனம் மொழியை ஊடகமாகக் கொண்டு, தன்னைப் பாதித்தவற்றைத் தனக்குத் தெரிந்த வகையில் வெளியேற்றுகிறது. படைப்பாளியின் மொழி ஆளுமையும் தன் உணர்வுகளை வாசகர்களிடம் கடத்தும் விழைவும் முயற்சியும் படைப்பு வடிவத்தைத் தீர்மானிக்கின்றது. மனப் பதிவின் அடுக்குகளில் அழுத்தம் பெரும் வாழ்வனுபவங்களே இலக்கியமாக வடிவெடுக்கின்றன. படைப்பாளி தன் உள்ளுணர்வால், தன் அனுபவத்தின் சாரத்தை, தன் அனுபவ முழுமையைத் தொகுத்துப் பார்க்கின்றார். இழைகளின் ஊடு பாவுகளிடையே அலசி ஆராய்கின்றார். எழும் கேள்விகளுக்குத் தர்க்கபூர்வமாய் விடை தேடுகின்றார். கிடைக்கும் விடைகளைப் பல்வேறு கோணங்களில் பார்வையிடுகின்றார். கூர்மையாக்குகின்றார்.

நாவலாசிரியர் ஜோ டி குருஸ் இப்படித் தன் பல வகையான அனுபவங்களைத் தொகுக்கையில் அது ‘கொற்கை’ நாவலாக வடிவம் கொள்கிறது.

வாழ்வு பன்முகத்தன்மை கொண்டது. சிக்கலான வலைகள் சூழ்ந்து நிற்பது. நம்ப முடியாத திருப்பங்கள் நிறைந்தது. இப்பேரலைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் மனிதம், வாழ்வைத் தன் கைகளால் அள்ள முயல்கின்றது.

அப்படியானதொரு மனித முயற்சியே ‘கொற்கை’ எனலாம். கொற்கையில் யார் முதன்மைப் பாத்திரம்? நாவலின் முதல் நூறு பக்கங்களுக்குத் தலை காட்டா விட்டாலும் பிறகு இறுதி வரை பயணிக்கும் தண்டல் பிலிப்பா, நாவலின் மையமாக விளங்கும் தோணியா, நாவலின் பரந்து பட்ட எல்லையை நிர்ணயிக்கும் காலமா, அங்கு வாழும் மனிதர்களின் நிலைகளை நிச்சயிப்பதில் முதன்மையாய் நிற்கும் காமமா, மானுட அனுபவத்தின் விரிவு நோக்கிச் செலுத்தும் மரணமா எப்படிக் கூற முடியும். இவை எல்லாமுமானதுதான் ‘கொற்கை’. கொற்கையின் மக்களான பரதவர்களிடையே உள்ள வர்க்கப் பிரிவுகள் அவர்தம் வாழ்வைச் சூறையாடுவதை, கொற்கையில் தோணிகளுக்கு அதிபதிகளாய் வாணிகம் செய்து பணம் கொழிக்கும் மேசைக்காரர், படித்து முன்னேறியும் மேலேயும் ஏற முடியாமல் கீழ் இருப்பவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள எண்ணாமல் நடுவில் நிற்கும் மெனக்கெடன்மார், பெரும்பாலும் தோணியிலே பிழைப்பு நடத்தியும், மூச்சடக்கி சங்கு, முத்துக் குளிக்கும் தொழில் செய்தும் பிழைக்கும் கம்மரர் வாயிலாகப் புனைவுக்குரிய கலை அமைதியுடன் வாழ்வியலாக்குகின்றார்.

நூற்றாண்டுகள் பயணிக்கும் நாவல், நாடு, மனிதர் சார்ந்து கால நிலை மாற்றங்களைப் பதிவு செய்தபடி நிதானமாய் முன்னகர்கிறது. பழமைத் தன்மையிலிருந்து நவீனத்துக்கு மாறும் கொற்கையை சமூகம், சமயம், பொருளாதாரம், அரசியல், கலை, தனிமனித வாழ்வு, குடும்ப அமைப்பு மூலமாக சித்திரப்படுத்துகின்றார். இவற்றினூடாகப் பிலிப்பின் வருகை, ஏற்றம், வளர்ச்சி, தேக்கம், மரணம் எனத் தண்டலின் வாழ்வும் பயணிக்கிறது.

நேர்கோடாய் இன்றி நாவலின் நகர்வு நாலாபுறமும் கிளை பரப்பி வாசக சாத்தியங்களுக்கு வழி வகுக்கிறது. நிலத்துக்கும் கடலுக்குமான உறவு நாவல் முழுவதும் மௌனமாய்ப் பேசப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கடல் இருக்கிறது. அதன் ஓயாத அலைகளை, பிறழ்வு களை, அலைக்கழிப்புகளை வாழ்வின் குரூர யதார்த்தம் கொண்டு நெய்திருக்கிறது இந்நாவல்.

கதைகள் மனித வாழ்வைப் பேசுபவை. விசாரணைக்கு உட்படுத்துபவை. கடல் சார் சமூகமான பரதவர் வாழ்வு பேசும் ‘கொற்கை’ நாவலில் மனித ஆளுமைகள் விரிவும் வீச்சும் பெறும் அதே நேரத்தில் மனித மதிப்பீடுகள் உடைந்து சிதறுவதையும் காண முடிகிறது. அனேகமாக இந்நாவலில் கொற்கை மாநகரின் மனிதர்கள் அத்துணை பேருமே பாத்திரங்களாக்கப்பட்டிருக்கிறார்களோ என ஐயுறும்படிக்கு எண்ணிக்கை கிடக்கிறது. பாத்திரங் களுக்குத் தனிப்பட்ட அழுத்தம் தராவிடினும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய, புதிய கதை மாந்தர் வருகை தந்தாலும் அவர்கள் மறக்க முடியாதபடி கவனம் பெறும் தன்மை இந்நாவலின் வெற்றி. (உ-ம்) கொண்டைய்யா, வெரோணிக்கம், சேசு, சுகந்தி, இலட்சுமணன்.

வெள்ளையர் வருகை, காங்கிரசின் வீழ்ச்சி, கழகங்களின் எழுச்சி, ஈழக் கலவரமென வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டே நகர்த்துதல், நடிகர் சந்திர பாபுவை ஒரு பாத்திரமாகவே வடித்திருத்தல், பரதவச் சொல்லாடல்கள், தெற்கின் மொழியமைவை வலிமையாய்ப் பயன்படுத்தல், ஆசிரியர் குறுக்கீடின்றி, தன் விருப்பம் சார்ந்த பதிவுகளின்றி பாத்திரங்களின் மன ஓட்டங்களூடே கதையைச் செலுத்துதல் இவ்வாறான உத்திகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளதன் வாயிலாக குரூஸ் நாவலை முழு வீச்சுடன் கொண்டு செல்கின்றார். வலைவீசு புராணம், கந்த புராணம், ஒளவையின் பாடல் என இலக்கியப் பாடல்களையும் தாலாட்டுப் பாடல், மீனவர்களின் அம்பாப் பாட்டு, பாண்டிய பதியின் பட்டாபிஷேகப் பாடல்,பொருத்தமான பைபிள் வசனங்களையும் இணைத்திருத்தல் கூடுதல் சுவை சேர்ப்பதுடன் நாவலின் நம்பகத்தன்மைக்கும் துணை நிற்கின்றது. ப. சிங்காரம், நாஞ்சில் நாடன் போன்று தமிழ் இலக்கியங்களை இடையிடையில் பயன்படுத்திச் செய்நேர்த்தியுடன் நாவலுக்கு எழில் கூட்டுகின்றார்.

நாவல் முழுதும் தீராப் பெருங்காமம் பசித்து அலைகிறது. மனிதப் பரவசம், தடுமாற்றம், அகங்காரம், அலைக்கழிப்பு, அவலம், ஒருமித்த காதலும் இயைந்த காமமும் என நாவலை முன்னகர்த்தும் கதாபாத்திரமாகக் காமம் முன் செல்கிறது. ரஞ்சிதத்தின் அதீத காமம், அல்வாரிஸ் - கோகிலாவின் ஏமக் காமம், தெரசாளின் காரியக் காமம், மதலேனின் அழிவுக்கு வழி வகுக்கும் பபிலோன் பாதிரியின் பொருந்தாக் காமம், மரிய தாஸ் பாதிரியின் காம தகனம், தண்டல்களின் பொடியன் சோக்கு (கடலில் வேலைக்குச் சேரும் சிறு வயது ஆண் பிள்ளைகளைத் தங்கள் காம இச்சைக்குப் பயன்படுத்துதல்) என நாவல் முழுதும் விரவிக் கிடக்கிறது காமம். இதுவே இந்நாவலின் பலமும் பலவீனமுமாக இருக்கின்றது. வசைச் சொற்களிலும் கூடக் காமம் பரக்கக் கிடந்து சற்றே முகம் சுளிக்கச் செய்கிறது. எந்தச் சமூகமாயினும் இவ்வசவுகள் பெரும்பாலும் பெண் உறுப்புகள், பாலியல் சார்ந்த சொல்லாடல்களாகவே இருப்பது ஆய்வுக்குரியவை.

ஆற்றல் சான்ற பரதவர் குலம் தனக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாவதைப் பதிவு செய்யும் ஆசிரியர், இது மாற்றம் பெற வேண்டும், பழம்பெருமை பேசி அழியாமல் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைக் கொணர்ந்து வளர்ச்சி காண வேண்டும் எனும் எண்ணத்தை, “சங்கு குளி, மீன் புடி, வள்ளத்துக்குப் போ, தோணி வச்சி நட செய்யி, எல்லாஞ்செரி, ஆனா புள்ளயள மட்டும் படிக்க வைச்சிருங்கப்பா” (பக்.66) என்று சிலுவை பர்னாந்து வாயிலாக வெளிப்படுத்துகின்றார்.

நாடார் சமுதாயத்தின் ஒற்றுமை, மகிமை, சங்கம், நாடார்களுக்கான வங்கி திறக்குமளவு முன்னேறுதல் ஆகியவற்றையும் நம் முன் நுட்பமான மௌனத்துடன் பரத்துகின்றார்.

சாமியார் ஆனாலும் நிலம், பெண் மீதான பற்று எத்தனைக் கீழ்நிலைக்குத் தள்ளும் என்பதை பபிலோன், மரியதாஸ், மேற்றிராணியார் போன்றோர் மூலம் உணர முடிகிறது. என்ன செய்தாலும் திருச்சபையைப் பகைத்துக் கொள்ள முடியாது எனும் எண்ணம், மறைவாய்ச் சந்தன மாரியை வணங்குதல் எனக் கிருத்துவத்தை விமர்சிப்பதோடு, பெரியாரின் குருகுல எதிர்ப்புப் போராட்டத்தையும் சிதம்பரனாரின் சிறைவாழ்விலும் சாதீயத்தின் மீதான பற்று ஆகிய நிகழ்வுகளைக் குறிப்பிடுவதன் மூலம் இந்து மதத்தின் பலவீனத்தையும் சார்பின்றிப் பேசுகின்றார்.

இந்து மதத்தின் அத்தனை அடுக்குகளின் மீதும் ஏறி அமர்ந்திருந்த பிராமண அகங்காரத்தை, “பீநாறிப் பெயல்வ. அடுத்தவனத் தீட்டு தீட்டுயிங்கியான்வ, மண்டயில உள்ள சரக்க வச்சி நம்மள கால காலமா பயங்காட்டுதாமுல்லா”, “மண்டயில சரக்கிருக்குன்னு நம்மள சொல்ல வச்சிருக்காமுல்லா” (பக்.93) என்று வேல் நாடார் சாதீய அடக்குமுறைகளைக் கேள்வி கேட்கிறார். அவருக்கும் ஒரு கேள்வியாக “ நீரென்ன சக்கிலியன்னா தாவிக் கட்டியா புடிக்கிறியரு. ஊருக்குத் தானவே உபதேசம்” என்று தாவீது வேல் நாடாரைப் பேச, ஒவ்வொருவரும் மற்றவர் மேல் அமர்ந்து மூச்சுத் திணறும், முடை நாறும் சமுதாய ஒழுங்கீனம் நிர்வாணமாய் நிற்கிறது. இப்படிக் கடந்த கால மதிப்பீடுகள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பெரிய அதிர்வை ஏற்படுத்தாமல் தன்னளவிலேயே அது நின்று போவதுடன் நமது மரபு, பெண் மீதும் குடும்ப அமைப்பு மீதுமேற்றியுள்ள கருத்துச் சுமைகளைத் தன் பார்வை மூலம் எதிர் கொள்ள ஆசிரியர் முனையவில்லை.

தோணியிலிருக்கும் போதும் ராச்செபம் செய்தல், குமரி விளக்குத் தெரிகையில் குமரி ஆத்தாளுக்குத் தேங்காய் உடைத்தல், கத்தோலிக்கராயினும் சந்தன மாரியை வணங்குதல், தெய்வானையைப் பரத்தியாக்கி முருகனை மச்சானாகப் பாவித்தல் என நாவலில் பரதவர் தொன்மம் பேசப்படுகிறது. எல்லாவற்றையும் மீறித் தங்களுக்குத் தோன்றாத்துணையாய் இருக்கும் கடல் தாய் பற்றிச் சொல்லும் போது, இருமி இருமி மார்புக்கூட்டைத் தடவும் கிலுக்கு தண்டல் கடலைப்பார்த்துத் துப்பி விட்டுச் சொல்கிறார், “ மன்னிச்சுக்க தாயி”.

கிலுக்கின் இச்செய்கை கடல் மீது பரதவர் கொண்டிருக்கும் அளப்பரிய பக்தியை \ வெளிப்படுத்துகிறது.

கொழும்பு அயல்நாடாகவே பாவிக்கப்படாமல் வருவதும் போவதுமாயிருந்த நிலை மாறி ஈழத்தில் கலவரம் ஏற்படுதல், ‘கள்ளத்தோணி’ என நம் மீனவர்களை இழிவாகப் பேசி அடித்து விரட்டுதல், என்று வரலாற்றை விரித்துக் கலவரம் தொடங்கிய காலம் பற்றி ஆசிரியர் பதிவு செய்கையில் இன்றைய ஈழம் தவிர்க்க இயலாமல் மனத்துள் எழுந்து துக்கிக்கிறது.

வன்மம் காட்டும்பெண் பாத்திரங்களான ரஞ்சிதம், சலேட்டம்மாள், தெரேசா, அருள்மொழி போன்றோர் விவரிக்கப்படும் விதத்தில் கூடுதல் கனம் பெறுகின்றனர் என்றாலும் சலோமி, கமலம், சுகந்தி, மதலேன், பூங்கோதை, பிளாவி, வெரோணிக்கம், லிடியா ஆகிய மென்மையான பாத்திரங்கள் முழுமையின்றி நிற்கின்றனர்.

பண்பாட்டு விழுமியங்கள் பற்றிச் சொல்லும்போது சொந்த அக்காளின் மீது காமம் பாராட்டும் சகோதரனை, அது பற்றிச் சுட்டிக் காட்டாமலே தவறு உணர்த்தும் அக்கா, பபிலோனின் முறைகேடான செய்கையைத் தன் மகனான கிளமென்ட்டிடம் கூற வேண்டாமென்று கூறும் வெரோணிக்கம், “பொண்ணாப் பொறந்தவ எத யார்ட்ட சொல்லுறது, எத மனசுக்குள்ள போட்டு அமுக்குறதுன்னு இருக்கும்மா” (பக். 592) என்று தன் மகள் போல எண்ணி உபதேசிப்பதும் சக்கிலியக் குடியைச் சேர்ந்த ராகம்மா தன் சேரிப் பெண்களின் துயர நிலையைத் தொட்டுக்காட்டிப் பேசுவதும் சுட்டத்தக்கவை.

1989இல் கிளாடியஸ், “இந்தியாவே நேரு குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்த சொத்து. தமிழ்நாடு கழகங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து” (பக். 950) 2010ஆம் ஆண்டிலும் பொருத்தமாகவே இருப்பது முரண்சுவை.

கொற்கையின் ஆண்டாமணியார், ஆழி சூழ் உலகின் காகுச் சாமியாரைச் சற்றே நினைவூட்டுகின்றார். சுகந்தி, பிளாவி, நிக்கோலஸ் ஆகியோரின் நிறைவேறாக்\ காதல்கள் நம் இதயத்தின் நுண்ணூற்றுகளைச் சுரக்கச் செய்கின்றன. வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வந்த பிலிப்பு தன் மகள் பூங்கோதையை விரும்பிய நிக்கோலசுக்குத் திருமணம் செய்விக்காமல் ஒதுக்குவதும் நிலை உயர உயர பிலிப்பிடம் காணப்பெறும் மாற்றங்களும் பணக்கார வாரிசுகளான அவரது குடும்ப வாரிசுகளின் பணம் சார்ந்தே உறவுகளைப் பார்க்கும் பண்பும் அலட்சியப் போக்கும் கதையின் மையம் நோக்கி நம்மை இழுத்துச் செல்கின்றன. சண்முகவேல் நாடாருக்கும் பிலிப்புக்கும் இருக்கும் ஆத்மார்த்தமான நட்பு, நாடார்களின் காலத்துக்கேற்ற மாற்றத்தையும் வளர்ச்சியையும் சண்முக வேலின் குடும்பம், தொழில் கொண்டு உணர்த்துவது நல்ல யுக்தி.

தனிமனிதத் துயரம் விரிவு பெற்று, வாழ்க்கையின் மனித உறவுகள் சார்ந்த அடிப்படைக் கேள்விகளாய் மாறும் தீவிரம், வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஓர் இலக்கிய வடிவமே நாவலாகும். நாவலில் காணக் கிடைக்கும் வாழ்வு குறித்த தரிசனம், வாசகர்களுக்கான மௌன இடைவெளிகள்,அபூர்வமான நுட்பங்கள், வடிவ ஒழுங்கு, மொழித் திறன், நம்பகத் தன்மை எனக் ‘கொற்கை’ நாவலுக்குரிய விவாதத் தன்மையுடனும் உயிர்ப்புடனும் இருப்பதைக் காணலாம். நிலக்காட்சிகளின் அழகியலும் கடல் சார் வருணனைகளுமான நகாசு வேலைகள் எழில் கூட்டுகின்றது.

மிகை யதார்த்தத்தின் அலைவுகள் தென்பட்டாலும் கூட நாவல் யதார்த்தத்தளத்திலேயே இயங்குகிறது.

“மனுசனோட பொறப்பில்ல அண்ணாச்சி, அவனோட படிப்போ, பணமோ கூடயில்ல... அவனோட செயல்பாடு இருக்கு பாத்தியளா அதுதாம் அவம் யாருன்னு சொல்லுமுண்ணேம்”(பக். 212)

“பரந்து விரிஞ்ச கடல்ல பயணம் பண்μம்போது, ஆண்டவா... ஒண்டை கடல் எவ்வளவுபெருசு, நாங்க எவ்வளவு சிறுசுன்னு நெனைக்க வைக்கிது” (பக். 767-768)போன்ற உரையாடல்கள் ஆழி போலப் பரந்து விரிந்த மனித மனத்தின் ஆழத்தையும்அதன் சூட்சுமத்தையும் உணர்த்தி வாழ்வின் பரிமாணங்களை, நெகிழ்வுகளை, விழுமியங்களைக் காட்டி நிற்கின்றன. 

கொற்கை

ஜோ.டி. குரூஸ்

பக்: 1174 | ரூ. 800

காலச்சுவடு பதிப்பகம்

நாகர்கோவில் – 1

Pin It