குழந்தைகளுக்கு பெயர்களே இல்லை. 847376, 516718 என எண்கள் வைத்து அவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். மணி அடித்தால் அவதி அவதியாக சாப்பிட்டு பின் அடுத்த மணிக்கு மூச்சிறைக்க காத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட சிறைச்சாலை. ஏறக்குறைய கைதிவாழ்க்கை. சிறைக்கைதிகளுக்கு கூட எட்டுமணிநேர ஓய்வு உண்டு. பரிட்சை நேரத்தில் மூன்று நான்கு மணிநேரம் தூங்கினாலே போதும் என்று எ.ஃப்.எம் வானொலியில் புகுந்து ‘வல்லுனர்கள்’ கருத்து கட்டளை இடுகிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் மதிப்பெண்களை துரத்தியபடியே மரணபயத்தோடு வலிவதைகளுக்கு ஆட்படும் அந்த அவலத்திற்கு பரிட்சை என்று பெயர்! இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எதற்கெடுத்தாலும் பரிட்சை. எல்.கே.ஜி. சேர்க்கை முதல் பல்கலைக்கழக பட்டமளிப்பு வரை தேர்வுகளே கல்வியை ஆட்கொள்ளும் இந்த நாட்டில் இந்த பத்து, பன்னிரண்டு வகுப்பு பொதுதேர்வுக்கு மட்டும் இத்தனை விளம்பரமும் முக்கியவத்துவமும் தரப்படுவது ஏன்? ‘வாழ்க்கை பிரச்சனை’,... ‘லைப்ஃபே இதை வைத்துத்தான் உள்ளது’.. ‘ஒரு..ஒரு..மார்க்கும் பல லட்சத்திற்கு சமம்’... என்று குழந்தை வதை நிபுணர்கள் (அவர்களை வேறு எப்படி அழைப்பது?) சொல்லுமளவு இந்த தேர்வுகளில் எந்த உயிருமே இல்லை. குழந்தைகளின் அறிவை பரிசோதிக்க வேறு எத்தனையோ வழிகள் உண்டு.

குறைந்த பட்சம் பரிசோதித்துப் பார்க்கக்கூட யாரும் தயாராக இல்லை. தேர்வை புறக்கணித்து வாழ்வில் வெற்றி பெற்றவர் பலர்... ‘முட்டாள்’ என்று தனது ஆசிரியரால் முத்திரை குத்தப்பட்டு பள்ளியிலிருந்து கைவிடப்பட்டார் ஆர்பர்ட் ஜன்ஸ்டீன், ‘சாப்பாடு’ தெரியவில்லை என்று அடித்து நொருக்கப்பட்டதால் பள்ளிக்கூடத்திலிருந்து எழுவயதிலேயே வெளியேறினார் கணிதமேதை மெஸ்கார்டஸ், வீட்டுப்பாடங்களை வெறுத்து தனிமையில் பள்ளியை புறக்கணித்து ஆப்பிள் மரம் ஒதுங்கியவர் நியூட்டன். பள்ளியில் தூங்கியதால் பரிகசிக்கப்பட்டு வெளியே நிற்க வைக்கப்பட்டதால் வெறுத்து வெளியேறி பிற்காலத்தில் மாமேதையானவர் சார்லிசாப்லின். இப்படி யாரைப்பற்றியெல்லாம் இன்று பள்ளியில்பாடமாக நடத்துகிறார்களோ அவர்களில் தொண்ணூறு சதவிகிதம்பேர் பள்ளியை புறக்கணித்தவர்கள்தான்.

தான் படித்த பள்ளிக்கூடத்திற்கு திரும்பச்சென்று பார்வையிட்ட மகாத்மா காந்தி நேரே கழிவறைக்கு போனாராம். ‘நாட்டை விட்டு வெளியேறிய வெள்ளைக்காரர்கள் - இன்னமும் நமது குழந்தைகளின் வகுப்பறைகளை விட்டு வெளியேறவில்லை’ என்று கருத்து தெரிவித்தார் காந்தி. பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சையை எப்படியெல்லாம் எழுதவேண்டும் என்று எழுதியும் பேசியும் வருபவர்கள் எத்தகைய மன அழுத்தத்தை அந்த பிஞ்சு மனங்களில் ஏற்படுத்துகிறோம் என்பதை உணருவதே இல்லை. பரிட்சைமுடிவுகள் வெளியேவரும் நாளில் நடக்கும் குழந்தை தற்கொலைகளை ‘ஸ்பான்சர்’ செய்பவர்கள் தாங்கள்தான் என்பதை யோசிப்பதில்லை.

குழந்தைகள் புத்தகங்களே வாசிக்காமல் ஓடுவதற்கு பள்ளிக்கூட புத்தகங்களும் பரிட்சையுமே காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. முகாம்களின் மூடு விழா எப்போது?

-புத்தகம் பேசுது ஆசிரியர் குழு

Pin It