உலகில் மொத்தம் 245 நாடுகள் இருக்கின்றன. அவற்றில் பெரும் பாலான நாடுகளின் அங்கீகாரம் பெறாத 9 நாடுகள்; அடுத்த நாட்டை அண்டியுள்ள மனிதக் குடியேற்றமுள்ள 38 நாடுகள்; சர்வதேச உடன்படிக்கைகளால் அங்கீகரிக்கப்பட்ட 5 நாடுகள் ஆகிய மொத்தம் 52 நாடுகளைத் தவிர்த்து எஞ்சியுள்ள ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளைப் பற்றி இந்த நூலில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

நூலாசிரியர் 42 ஆண்டுகள் கல்வித்துறையில் பணியாற்றிய அனுபவமும், அறிவியல் பாடப்புத்தகங்களை எழுதியதும், அவரின் பரந்துபட்ட உலக வரலாற்று அறிவும் இந்த நூல் சிறப்பாக வெளிவருவதற்கு அடித்தளமிட்டிருக்கிறது.

இந்த வகையில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூல் இதுவாகும். மாணவர்களையும் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களையும் மனதில் வைத்து இந்த நூலைப் படைத் திருக்கிறார் நூலாசிரியர்.

இது இரண்டு பாகங்களாக வெளி வந்திருக்கிறது. முதல் பாகம் 416 பக்கங்கள். இரண்டாவது பாகம் 376 பக்கங்கள் கொண்டது.

முதல் பாகத்தில் ஆப்கானிஸ் தான் தொடங்கி லக்ஸம்பர்க் வரையிலும், இரண்டாம் பாகத்தில் மாசிடோனியா தொடங்கி ஜிம்பாப்வே வரையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் விவரிக்கின்ற பொழுது முதலில் அந்த நாட்டின் வரைபடம், தலைநகர், பரப்பளவு, மக்கள் தொகை, மொழி, நாணயம், மதம் எழுத்தறிவு, சராசரி வயது உலக வரிசையில் அந்த நாட்டின் பரப்பு, மக்கள் தொகை, ஐ.நா.வில் அந்த நாடு சேர்ந்த நாள் ஆகிய விவரங்களை ஒரு பக்கத்தில் கொடுத்துவிடும் நூலாசிரியர், அடுத்து மூன்று பக்கங்களில் அந்த நாட்டின் வரலாற்றையும், பொருளாதாரப் பின்புலத்தையும், அந்த நாட்டு மக்கள் பின்பற்றும் மதத்தையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

179வது நாடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ‘துவாறு’ என்ற நாட்டின் பரப்பளவு 26 ச.கீ.மீ. என்பதும், வாழும் மொத்த மக்கள் தொகை 12,373 தான் என்பதும் வியப்புக்குரியது. இந்த வியப்பிலிருந்து நாம் விடுபடுவதற்கு முன்பாக 188 வது நாடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ‘வாட்டிகன் சிட்டி’ மொத்தம் 0.44 ச.கி.மீ என்றும், அங்கே வாழும் மக்கள் தொகை மொத்தம் 826தான் என்றும் அறிந்து வியக்காமலிருக்க முடியவில்லை.

செய்திகள் அனைத்தையும் சேகரித்து, வரிசைப்படுத்தி எளிய தமிழில் ஆசிரியர் தந்திருப்பது அவருடைய உழைப்பை வாசகனுக்கு உணர்த்துவதுடன் நூலைப் படிக்கவும் தூண்டுகிறது.

முதல் பாகத்தில் 102 நாடுகளையும் இரண்டாம் பாகத்தில் 91 நாடுகளையும் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

இந்த நூலை ‘உலக நாடுகள் பற்றிய வரலாற்றுக் களஞ்சியம்’ என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு நாட்டின் வரலாற்றுக் குறிப்புகள் தெளிவாக இடம்பெற்றிருக்கின்றன.

பள்ளி, கல்லூரி, நூலகம், இல்லம் ஆகிய அனைத்திலும் இருக்க வேண்டிய நூல் இது. ஆம்! தயக்கமின்றி அனைவருக்கும் பரிந்துரை செய்யும் மிகச் சிறந்த நூலாக இந்த நூல் வெளிவந்திருப்பது இந்த நூலின் தனித்துவமாகும்.

 

 

Pin It