தஞ்சாவூர் பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டங்களை முன்வைத்து தமிழுக்கு சில நல்ல ஆய்வுரைகள் கிடைத்துள்ளன. அனேகமாக தமிழின் எல்லா பத்திரிகைகளுமே அட்டையில் பெரிய கோவில் படம் போட்டு ராஜ ராஜன் காலத்தை பொற்காலம் என்று போற்றிப்பாடி ஓய்ந்தன. மாறாக சிறுபத்திரிகைகள் ராஜராஜன் காலத்தின் மகாத்மியங்களை பேசுவதற்கு பதிலாக எவ்வாறெல்லாம் அக்காலத்தில் பெண்கள் துயரப்பட்டனர். விவசாயிகள், குறுநில உடைமை யாளர்கள் சுரண்டப்பட்டனர்; குடவோலை ஜனநாயகம் எத்தனை அபத்தமானது; வரிவசூல் கொடுமைகள் ராஜராஜன் காலத்தில் எப்படியெல்லாம் பொதுமக்களை உழைக்கும் வர்க்கத்தினரை பாதித்தது என்று சான்றாதாரங்களை முன்வைத்து கட்டுரைகள் வெளியிட்டன.

ஜெயமோகன் தனது இணையதளத்தில் சோழர் காலம் குறித்த கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். கீற்று உள்ளிட்ட இணையதளங்கள் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தஞ்சாவூரில் முழுநாள் கருத்தரங்கம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தியது. அம்மேடையிலிருந்தும் சில நல்ல கட்டுரைகள் கிடைத்துள்ளன. அவை ஒரு தொகுப்பாக வெளிவர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. பொதுவாக இந்த ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம் மூலமாக பெரிய கோவிலின் அழகையும் உன்னதங்களையும் மட்டுமே வியந்தோதிக் கொண்டிராமல் சோழர் கால ஆட்சி முறைகள் குறித்த விரிவான ஆய்வுகளுக்கு அது தடம் போட்டுள்ளதையும் நினைத்து நாம் மகிழ்ச்சி கொள்ளலாம்.

நண்பர் ஜீவக்குமாரின் இராஜராஜம் என்னும் இந்த நூலும் பெரிய கோவிலை ஒரு கலைச்சின்னம் என பெருமிதத்துடன் ஒப்புக்கொள்ளும் நேரத்தில் ராஜராஜன் காலத்து வரலாற்றுச் சோகங்களையும் ஒளிவு மறைவின்றிப் பேசுகின்ற தன்மைகளைக் கொண்டிருப்பது முக்கியமானது. இந்நூலுக்கான தனது அணிந்துரையில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் இவ்வாறு குறிப்பிடுகிறார். “வரலாறு எப்பொதுமே சார்புடையதுதான். அது எழுதப்படுபவரின் சார்பைக் கொண்டுதான் நிற்கும். ஆகவே எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாவற்றின் மீதும் உழைக்கும் வர்க்கம் விமர்சனப்பார்வையை பதிக்க வேண்டும். தனக்கான வரலாற்றை அது எழுதிச்செல்ல வேண்டும்.” ஜீவக்குமார் ஒரு தஞ்சாவூர்வாசி, முற்போக்கு இயக்கவாதி என்பதாலும் அவரால் பல அரிய தகவல்களைத் திரட்டி, சமநிலை நின்று பேச முடிந்திருக்கிறது.

பிற்காலச் சோழர்களின் போர்க் களங்கள், மன்னர் காலத்தைய தஞ்சாவூர் நீர் நிலைகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருப்பதும், பொருத்தமான இடத்தில் கவிஞர் இன்குலாப்பின் முக்கியமான கவிதையை மேற்கொள் காட்டியிருப்பதும் இயல்பான மொழி நடையில் தகவல்களை அடுக்கிச் செல்வதும் இந்நூலுக்கான சிறப்பம்சங்கள் எனக் கண்டால் பெரிய எழுத்துருவில் கண்ணை உறுத்தும் பிழைகளுடன் அச்சாகி இருப்பது குறை எனக் கொள்ளலாம். (பக்:59ல் ‘உயிர் எடுத்து அக்டோம்பர்’ போன்று பல இடங்கள்)

Pin It