எழுத்து! எங்கிருந்து எப்படி எனக்குள் வந்தது; இன்றுவரை எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது. நிறைய சிறுவர் மலரும், விகடனும் தவிர வேறு படித்ததில்லை. வாரமலர் பின் அட்டைக் கவிதை தவிர அதற்கென்று துறைகளும் புத்தகங்களும் இருப்பது கூட அறிந்திருக்கவில்லை. பள்ளித் தோழிகளின் சீண்டலிற்குப் பதில் சொல்லும் விதமாகவே எழுதத்து வங்கினேன். அது என்னைப்பற்றிக் கொண்டது. எழுத்து எப்போதும் இடைவெளியின்றிக் கொட்டும் மழையாக, புதிய வார்த்தைகளின் மீதான தாகமும் தேடலும் நாத்தொங்க அலையவிட்ட கோடையாக பள்ளிப்பருவம் என்னைத் தத்தெடுத்துக் கொண்டது.

அர்த்தத்துடன் அரிதாயும், அர்த்தமற்றும், வெறும் சொற் சேர்க்கையாகவும் வெறிபிடித் தாற்போல் எழுதித்திரிந்தேன். உவமைகளற்ற ஒப்பற்ற நறுமணத்தோடு என்சுற்றுப்புறமும் சுவாசமும் கமழத்துவங்கின. குத்துமதிப்பாகக் கேள்விப்பட்ட சந்தமென நான் கருதிக்கொண்டு எழுதியவற்றைக் காட்டி என் தோழிகளின் நடுவே கீரீடங்களைச் சூட்டிக்கொண்டதாய் நினைத்துப் பூரித்தேன்.

96 எனக்கு மேல்நிலைப்பள்ளிப் பருவம். எனக்கு தாவரவியல் ஆசிரியராக இருந்த, கவிஞர் வெண்மணியின் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது. அவரின் கை எழுத்து தனித்துவமான அழகு டையது. எனது பாடநோட்டில் நான் வைத்திருந்த சில கவிதைகள் அவர் கண்ணில் பட அவர் அதனை வத்தலக்குண்டில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் மகாகவி சிற்றிதழில் தந்து பிரசுரிக்கச்செய்தார். திடீரென இரண்டு ராட்சத சிறகுகளும் ஒரு நீள் வெளியும் எனக்குக் கிடைத்தன. அவரே தேனியி லிருந்து வந்த அக்னிக்குஞ்சு இதழையும் தந்து கவிதைகள் அனுப்பச்சொன்னார். வத்தலக் குண்டிற்கு அருகில் கொடை ரோட்டுப் பாதையில் பிரியும் கெ.கல்லுப்பட்டி மேல்நிலைப் பள்ளியின் மீது, அந்த விசுவாசம் சொட்டிக் கிடக்கிறது. எப்பொதும்.

செலவிற்குக் கிடைக்கும் ஒன்றிரண்டு ரூபாய்கள் தபால் அட்டைகள் வாங்க உறைகள் வாங்க உதவின. தொடர்ந்த தபால்களின் பதிவாய் இன்றும் நான் வியப்படையும் பக்குவமும் தெளிவும், வயதுக்கு மீறிய கச்சிதமான எழுத்தும் சொல்லும் உடைய நண்பர், அக்னிக்குஞ்சு இதழின் உதவி ஆசிரியராக இருந்த உமர் பாரூக் கடிதம் எழுதினார். சிறுபிள்ளைத்தனமான என் எழுத்தை அவரின் கடிதங்கள் வளர்த்தெடுத்தன. அவரின் முதல் கடிதமே எனக்கு வந்த என் வாழ்வின் முதல் கடிதம். உண்டு, உறங்க, பள்ளியில் என அந்தக் கடிதத்தை என்னோடே கொண்டு திரிந்தேன். வெகு அரிதாக ஒன்றிரண்டு கவிதைகள் சிற்றிதழ்களில் வெளிவந்தன.

மனதின் தத்தளிக்கும் அன்பும், உயிர்ப் போராட்டமாய் ஒரு பார்வைக்குத் தவிக்கும் வாதனையுமே வாழ்வை அர்த்த முடையதாய், கொண்டாட்ட மானதாய் மாற்றும். உயிர் கொண்டிருத்தலின் சுவையை சுமையை உணர்த்தும் அந்த வலியும் வாதனையுமே எழுத்தைச் சுரப்பிக்கும், கொட்டும் குருதியின் வாசனையுடையதாய் மெய்ப்பிக்கும். எனக்கு நல்ல தோழிகள் கிடைத்தார்கள். அவளை விட்டு கணநேரம் நகர்ந்தால் பிறரிடம் திரும்பினால் கூட ஏங்கி அழுதுவிடும் தோழி நாகலட்சுமியுடன், ஒரு தீப்பெட்டியின் இரட்டைப் புழுவாய் என்னைத் திணித்துக்கொண்டேன். ஒரு தெய்வத்தைக் கொண்டாடுவதும் குழந்தையை அதட்டுவதுமான தருணங்களை அவள் எனக்குத் தந்தாள். என் கவிதைகளைச் செழுமைப்படுத்தியது அவளின் நட்பு.

என் தோழிகளெல்லாம் மேலே படிக்கச்செல்ல எனக்குத் தனிமையும் சிறுவயதுமுதலே பகையாய் இருந்த என் பெரியப்பா வீட்டுப் பிள்ளைகளுமே உறவும் நட்புமாய் எஞ்சினர். அவர்களில் மூத்த என் அண்ணன் அழகு வேலவன் எனக்கு புத்தங்களை வாங்கி வந்து தந்தார். முதன் முதலாக கவிதைத் தொகுப்புகளைக் கண்டேன். இந்திய கப்பல் படையில் இருக்கும் அவர் வரும் போது காண்பிக்க என்றே நோட்டுகளை இட்டு நிரப்பிக் கொண்டிருந்தேன். ஒருநாள் காலையில் என் வீட்டு முன்பு வந்து “உன் கவிதை தீக்கதிர் வண்ணக்கதிரில் வந்திருக்குமா” என்றார். அந்தக்குரல் இன்னும் ஒலிக்கிறது என்னுள். அவர்தான் அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து தீக்கதிர் வண்ணக்கதிரில் அரைப்பக்கம் உனக்கா எனப் பிறர் கேட்கும்படி 20 கவிதைகள் வரை வெளிவந்தன.

அவரின் தங்கைகள் மூவரும் எனக்கு சகோதரிகளின் அன்பைப் பங்களித்து வருபவர்கள். அவர்களில் என்னொத்த வயதும், என்னொத்த திமிரும் திண்ணக்கமும் நிறைந்த கலைவாணி மட்டுமே அப்போது எனக்கு நட்பென மிஞ்சினாள். அன்பால் எப்போதும் தவிக்கும், பெருகிச் சுழித்தோடும் விழியூற்றும், அருவியாய் அறையும், பிழம்பாய் காந்தும் அன்பு அவளுடையது. என்னைப் பேசத்தெரிந்தவளாக, அன்புகாட்டத்தெரிந்தவளாக மாற்றியது அவள்தான். பிரியத்தின், மிகுதிக்கு ஆளாவதும், எந்த நேரமும் நம் அசைவை சொல்லை சிரிப்பைக் கொண்டாட ஒருவரிருப்பதும், அன்பின் விஸ்வரூபம் கண்டு நாய்போல் சுருண்டு அழும் ஆனந்தத்தையும் நான் உணர்ந்தேன். இரவெல்லாம் கவிதைகள் கொட்டும். கையில் எழுதுகோலும் வெள்ளைத்தாளும் கண்டுவிட்டால் மனசு பிராண்டும். உறங்குகையிலும் பிரிய இயலாமல் நள்ளிரவில் எழுந்து வந்துவிடும் அவளின் அன்பு தாங்கொணாத துன்பமாகவும் வரமாகவும் இருந்தது. தீவிரமாக ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்தும் அன்பைக் கொண்டு ஒருவர் எப்படித்தான் சகஜ வாழ்வைக் கடக்க முடியும். இந்தக் கேள்வியே உயிர் வாழ்வின் அர்த்தமும் பலனும் ஆகிறது. எழுத்திற்கும்...! அச்சமயம் நான் எழுதிய கவிதைகள் கடிதங்கள் ரத்தமும் சதையுமாக என் எழுத்தை ஆளாக்கின. என்னினும் என் கவிதைகள் துடிக்கும் தசைகள் கொண்டு, பெருகும் கண்ணீரின் சுவையோடு இறங்கின.

2002ல் ‘இமைக்குள் நழுவியவள்’ எனும் குறுங்கவிதைகளடங்கிய தொகுதியை நண்பர் மு. முருகேஷ் மூலமாக நானும் கலைவாணியும் கொண்டுவந்தோம். அது புத்தகம் மட்டுமல்ல பூகம்பமாகவும் வெடித்தது. எங்கோ வெளியீட்டு விழாவும் திரைப்பாடலாசிரியர் யுகபாரதியைக் கொண்டு மு.முருகேஷ் நிகழ்த்தியிருந்தார்.

படிப்பு, எழுத்து, நட்பு இதெல்லாம் ஒரு பெண்ணிற்கு இருக்கக்கூடாத ஒழுக்கக் கேடுகள். அவரவர் ஆதிக்கத்திற்கு இணங்கும் வரை அவரவர் தேவைக்குப் பங்கம் வராதவரைதான் ஒரு பெண்ணிற்கு அவை உறவாய் முகம்காட்டும். தேவைக்கு சொல்லிற்கு இணங்காத போதுதான் ஒவ்வொன்றின் உண்மைமுகமும் தெரிய வரும். ஓடிப்போதல், செத்துப்போதல் என்ற முட்டாள்தனங்களிலிருந்து என்னைக்காத்த என் தோழி கலைவாணியின் பெயர் எடுத்து கலை இலக்கியா என புனைப்பெயரில் ஒளிந்து கொண்டிருந்ததும் தொடர்கிறது.

தேனியின் இலக்கிய நண்பர்களும், என் இரண்டு குழந்தைகளும் என்னை எழுதத் தூண்டுகின்றனர். கடித வழி நண்பர்களாயிருந்த உமர் பாரூக், இதயகீதன், தேனி சீருடையான், அல்லி உதயன் முதலிய இலக்கிய முன் தடத்தினரை அருகில் காணும் வாய்ப்புக் கூடி தொடர்ந்து பயணிக்கிறேன்

Pin It