மொழியென்பது கூட்டு உழைப்பின் பொழுது மனிதர்கள் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள உருவான ஒரு சாதன மென்பதை நாமறிவோம். ஒவ்வொரு நாட்டிற்கும் இனத் திற்கும் ஏற்ப மொழி வடிவம் பெற்றது. அவை ஒவ்வொன்றிற்கும் சில அடிப்படையான தனித் தன்மைகள் உள்ளது. இங்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வதை என்னுடைய புரிதல் நோக்கில் முன்வைக்க முற்படுகிறேன்.

தமிழில் ஒரு சொல்லை எழுத்தில் வைக்கும் பொழுது அந்த எழுத்துக்களை வரிசையாகக் கூட்டிப் படித்தாலே சொல் நேரடியாகவே முழுமை பெற்று ஒலிக்கிறது. எடுத்துக் காட்டாக கு+ட+ம் = குடம் என்று ஒலிக் கிறது. அதையே ஆங்கிலத்தில் பார்த்தால் P + O + T = பிஓடி என்று தான் வருகிறது. ஆனால் அது ‘பாட்’ என்று உச்சரிக்கப்படுகிறது.

அதே போல ஒரு சொற் றொடரை எடுத்துக் கொள்வோம். ‘‘நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறேன்’’ என்பது தமிழில் நேர் கூடாகச் செல்கிறது. அதையே ஆங்கிலத்தில் சொல்லும் பொழுது ‘‘I am going to School’’ என்று வருகிறது.

அதாவது தமிழில் பள்ளி என்பது முதலில் வருகிறது, அதுவே ஆங்கிலத்தில் கடைசியில் (School) வருகிறது. அதாவது தலைகீழாகத் தொடங்குகிறது.

பெரும்பாலும் தமிழில் ஒவ்வொரு பொருளுக்கும் செயலுக்கும் தனிச் சொற்கள் இருக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு சொல் வாக்கியத்தின் எந்த இடத்தில் வருகிறதோ அந்த இடத்திற்கான பொருளைத் தருகிறது. எடுத்துக்காட்டாக LIGHT - எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம்; Sun Light = சூரிய ஓளி
Switch on the Light - விளக்கைப் போடு
Light THE LAMP = விளக்கைப் பற்றவை
Light Weight = குறைந்த எடை
LIGHT TOUCH = மென்மையான ஸ்பரிசம்

எனவே, ஆங்கிலத்தில், சொல் வாக்கியத்தில் வரும் இடத்திற்கேற்பப் பொருள் கொள்ள வேண்டும்.
எடுத்துக் காட்டாக,
I am going to School - நான் பள்ளிக்குச் செல்கிறேன்

I am Hungry - இதை நேரடியாக அப்படியே மொழி பெயர்த்தால் ‘நான் பசிக்கிறேன்’ என்று வரும், எனவே ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யும் பொழுது அதன் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு தமிழ்ப் படுத்த வேண்டும். எழுதிப் பார்க்க வேண்டும். சொல்லிப் பார்க்க வேண்டும். ஆற்றொழுக்காகத் தடங்கலின்றி, நெருடலின்றி வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’’ என்பது போல பயிற்சியின் மூலமாகவே இது கை வரும். இதற்கு நம்மிடம் சொல்வளம் இருக்க வேண்டும். இதற்கான வாசிப்பு என்பது பரந்து பட்டதாக இருக்க வேண்டும். வரலாறு, இலக்கியம், தத்துவம், அறிவியல் என அனைத்துத் துறை களிலும் கிடைக்கும் நூல்களை வாசிக்க வேண்டும். இது தமிழ், ஆங்கிலம் இரண்டிற்கும் பொருந்தும். அத்துடன் குறைந்த பட்ச அடிப்படை மொழி இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.

 மிக முக்கியமாக நாள் தோறும் ஆங்கில நாளிதழ் அல்லது ஏதாவது புத்தகத்திலிருந்து 10 வரிகளையாவது மொழி பெயர்த்துப் பழக வேண்டும். அப்பொழுது பொருள் தெரியாத சொல்லுக்காக அகராதியைப் புரட்ட நேரிடும், அது பல புதிய சொற்கள் கண்ணில் படும்படி செய்யும். மனதில் அவை பதியும். சொல் வங்கியில் சேமிப்பு ஏற்படும். இந்தத் தேடலின் பொழுது புதிய புதிய ஆங்கிலச் சொற்கள் மட்டு மல்ல புதிய புதிய தமிழ்ச் சொற் களும் வசப்படும். இரண்டு மொழி களுமே நம்முள் செழுமைப்படும், நம் ஆளுகைக்கு உட்படும்.

ஆர்வமும், விடாமுயற்சியும், பயிற்சியுமிருந்தால் மொழி எவருக்கும் சாத்தியமே!

Pin It