அம்மாவின் கைபேசி (சிறுகதைகள்) | தங்கர்பச்சான், அன்னம் வெளியீடு | பக்: 136 | ரூ. 75

சினிமா உலகில் மட்டுமல்ல, எழுத்துலகிலும் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் தங்கர்பச்சான். தென்ஆர்க்காடு மரணபுதைக் குழியின் வழியே பசியோடு ஓடும் ஒரு விவசாய வாழ்வை மையப்படுத்தும் அபூர்வமான எழுத்து அவருடையது. அவரது இந்த புதிய முயற்சியும் அதற்கு விதி விலக்கல்ல.

ஐந்து கதைகள் கொண்ட இந்தத் தொகுதியில் சற்று நீண்ட கதை என்பதால் அம்மாவின்கைபேசி என்பது ‘குறு நாவல்’ அந்தஸ்து பெறுகிறது. இக்கதையில் வரும் ‘ரங்கநாயகி’ வெகுநாட்களுக்கு நம் மனதில் இருந்து போகும் ஒரு பாத்திரம். அதுமட்டுமல்ல ரங்கநாயகியை நினைக்கும்போதெல்லாம் நாம் நமது சொந்த அம்மாவையே நினைப்போம். ‘இசைக்காத இசைத்தட்டு’ மிக அற்புதமான கதை. சினிமாகாரர் என்ற பெரிய அந்தஸ்து வந்த பிறகும் தங்கர்பச்சான் ஒரு கிராமத்து ஆளாக பட்டினத்தில் வளைய வருவதை நாம் இக்கதையில் உணர்ந்து வியக்கிறோம். ‘இன்னும்’ மறையவில்லை அந்த காலச்சுவடு’ ‘உறங்க மறுக்கும்’ மனசாட்சி போன்ற கதைகள் நகரத்திலும் ஒரு கிராமத்தை தேடித்தேடி அலைபவனின் மன உளைச்சல்களை பதிவு செய்கின்றன.

கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன என்ற கதை சினிமா ரீதியால் பரபரப்பான வேகமாய் செல்லும் ஒரு கதை. தங்கர்பச்சானின் முன்னுரையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இத்தனைக் கோடியாக தமிழ் மக்கள் தொகை பெருத்தும் இன்னமும் 1000 பிரதிகளே புத்தகம் போடுகிறோம் என்கிறார். நியாயமான பதிவு.

Pin It