தனிமையைப் பருகும் கோப்பைகள்

பொன். இரவீந்திரன்

நிவேதா பதிப்பகம்

சென்னை _ 117

பக்: 96 | ரூ. 45-

ஒவ்வொரு மதுக்கடையிலும் எழுதி வைக்கப்பட வேண்டிய மீசை முறுக்கிய, கடுங்கோபத்தோடு அதிகார வர்க்கத்தின் நெற்றிக்கு நேரே சுட்டு விரல் நீட்டுகிற, நெஞ்சுயர்த்திய கம்பீரத்தோடு கேள்வி கேட்டு நிற்கிற... தன் முதல் கவிதையிலேயே ‘தனிமையைப்பருகும் கோப்பைக்குள், நம்மையும் நிரப்பிக் கொண்டு விடுகிறார் கவிஞர் பொன். இரவீந்திரன்.

நோக்குமிடமெல்லாம் மதுக்கடைகளும், மதுவருந்திகளும் நீக்கமற நிரம்பியிருக்கிற வலிமிகுந்த நம் தமிழ்ச்சூழலில் காலப்பிறழ்வின் கச்சிதமான பதிவாக இந்நூல் மிகச்சரியான தொரு பொழுதில் மது குறித்த, தமிழ்க் கவிதையுலகில் முதல் நூலாக உருவாகி வெளியாகியிருக்கிறது.

எதுவொன்றின் இயல்போடும் எதுவுமே இருக்க முடியாதபடி சிதைக்கப்பட்டுவிட்ட கோரத்திலிருந்து இனியும் விடுபடவே இயலாதா என்கிற கொடுமையான உணர்விலும் இழுக்கு வருமென்கிற இடைவிடாத எச்சரிப்பிலும் ஒழுக்கம் தவறி மதுக்கடைக்குள் புகுந்து கொள்ளவே நேர்கிறது நாமும்.

மிகவும் அழுத்தமான நம்பிக்கைகள் மிக ஏளனமான புறக்கணிப்பின் மூலம் தகர்க்கப்படுகிற போது உள்ளே நொறுங்கிப் போகிற அனைத்து மனிதர்களும் ஒரே மதுக் கடையின் கூரையின் கீழ் ஒன்றுகூடி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதான ஒப்பனை மிகுந்த வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே, நாளைக்குச் சிந்த வேண்டிய கண்ணீரின் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கென இன்றைய இரவிலிருந்தே மதுவூற்றி நிரப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தம்மை.

இவ்வாறான மது மணக்கும் புறப்பிரதேசங் களைக்கடந்து செல்ல முடியாத, காட்சிப்படுத்த இயலாத மனசின் உள்மன இருட்டிலிருந்தும், எறும்புகள் நுழையமுடியாத இண்டு இடுக்குகளுக்குள்ளும் புகுந்து வெளியே வருகிற பொன். இரவீந்திரனின் கவிதைக்கான கருப்பொருள் மிக மிக அப்பட்டமான உண்மையோடு இருக்கிறது.

இதை மட்டுமே எழுத வேண்டும், இப்படி மட்டுமே உரைக்க வேண்டும் என்கிற கட்டுகளை நார் நாராய்க் கிழித்து எறிந்து விட்டு அச்சு அசலாக அப்பட்டமான இரகசியங் களைக் கூச்சமின்றிச் சொல்ல முடிந்திருக்கிற தைரியத்திற்காகவே மீண்டும் மீண்டும்

பொன். இரவீந்திரன் மீது பொறாமை கொள்ளத் தோன்றுகிறது.

எழுத்தாளன் என்பவன் இப்படித்தான் இருக்கவேண்டும். பேனா திறப்பவன், கவிஞன், கட்டுரையாளன், சிந்தனையாளன், தத்துவவாதி, ஆன்மிகவாதி, சொற்பொழிவாளன், புரட்சியாளன், அரசியல்வாதி, நாத்திகன், ஆத்திகன், இருப்பவன், இல்லாதவன், சொல்லித்தருபவன், கற்றுக் கொள்பவன் என எல்லோருமே இப்படியான உள்ளம் உண்மை நிறைந்தவனாகத்தான் இருக்க வேண்டும்.

மேலும், இப்படித்தான் இருக்க வேண்டும் மனிதனும், தன்னைப்பற்றிய வெளிப்பாடு களிலேயே மூட்டை மூட்டையாய்ப் பொய்க ளோடு புறப்படுகிற ஒருவனிடமிருந்து அடுத்த வனுக்குச் சொல்லித் தருவதற்கான உண்மையை எப்படிக் கண்டெடுக்க முடியும்.

தலைவன் தறுதலையாக இருக்கிற நாடு குட்டிச்சுவராகாமல் வேறென்ன மாற்றம் கண்டுவிடும்? மது விற்றுப் பிழைக்கும் அரசில் குடிகாரர்கள் மட்டுமே தேசபக்தர்கள் என்கிற உண்மையை எடுத்துரைக்காமல் எதை எழுதியென்ன?

நக்கிப் பிழைக்கிறவர்களும், திறந்து காட்டுபவர்களும் பிழைக்கத் தெரிந்தவர்களாகி முன்னேறிக் கொண்டே போகிறார்கள். மிகுந்த மரியாதைக்குரியவர்களாகவும் போற்றப் படுகிறார்கள். நேர்மையோடும் திமிரோடும் உண்மையோடும் சுயமரியாதையோடும் மட்டுமே வாழத் தெரிந்தவர்கள் சகிக்க இயலாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒவ்வாமையில் திக்குத் தெரியாமல் சிக்கித் திணறித் தப்பித்தொதுங்குகிற இடமாகிவிட்டன மதுக்கடைகள்.

மற்றொன்று, மதுக்கடைகளில் விளிம்புநிலை மனிதர்களின் கூட்டம் பெருகப்பெருக அரசின் வளர்ச்சி அபாரமாகி விடுமென்பது, உண்மையாக இருந்தாலும் கூட இதில் அரசியல்வாதிகளின் தனிமனித வளர்ச்சியே பெருகிக் கொண்டிருக்கிறது என்பதே மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

மேலும், அரசே மதுக்கடை நடத்துகிற காரணத்தால் மது விற்பனையை அமோகப்படுத்துகிற நோக்கத்தோடு மது அருந்துவதற்கான மனச்சிதைவை உருவாக்குவதையும் மக்களோடு பலவீனத்தைப் புகுத்துதலை நடைமுறைப் படுத்துவதையும் அதே அரசே நிகழ்த்திக்காட்ட வேண்டிய கட்டாயமும் அவசியமும் இருப்பதால் அதையும் வெற்றிகரமாக்கிவிட்ட ஆள்பவர்களின் நிம்மதிப் பெருமூச்சிலும் இப்போது மதுவாசமே நிறைந்து பரவுகிறது எங்கெங்கும்.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலிருந்து விடுபட முடியாத தவிப்பிலிருந்து, தெறித்து விழுகிற பொன். இரவீந்திரனின் கவிதைகள் மாற்றம் நிகழும் வரை நமக்குத் தேவைப்படுகிற அல்லது நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை என்கிற திமிரோடு நம்மை உசுப்பி விடும் என்பதை உறுதியாக நம்புகிறேன் நான்.

மது அருந்துதல் என்கிற ஒற்றை நிகழ்வின் கோப்பைக்குள்ளிலிருந்து நம் வாழ்வின் தொடர்ச்சியாய் நிகழ்ந்து கொண்டிருக்கிற கசப்பின் அத்துணை வலிகளையும் ஒன்றுவிடாமல் கோவணம் கூட கட்டாமல் நம்மிடம் கவிழ்த்து நிரப்புகிறார்

பொன். இரவீந்திரன். வெற்றியைக் கொண்டாடுதல் மூலம் அனுபவித்த பரம்பரை தற்போது தோல்வியைக் காயத்தைக் குற்றவுணர்ச்சியைத் தீராத வலியைக் கழுவிக் கொள்கிற துக்கத்திற்காக மட்டுமே உண்டாடிக் கொண்டிருக்கிறது.

அடுத்து அடுத்து என நீர்த்துப் போய்க் கொண்டே இருக்கிற சமூகத்தின் சந்ததிகளிடம் பேரதிர்ச்சியூட்டும் படியும், பண்பாட்டுச் சிதைவைப் பகிரங்கப்படுத்தும் அந்தரங்க அபாயத்தோடும் புழக்கத்திலிருக்கிற பாலுணர்வு விகாரங்களின் சித்திரங்களையும் மிகச் சாதாரணமாக முன்னிறுத்திக் கொண்டே சரக்கென நொடிப்பொழுதில் புகுந்து வெறியேறும் கத்தியின் கூர்முனையோடு புகுந்து வெளியேறுகிற பொன். இரவீந்திரன், பார்க்கச் சாதுவாகத்தான் இருக்கிறார் என்றாலும் நிச்சயமாகப் பாய்ந்து வெல்லக்கூடிய புலிதான் நானும் என்பதை இத்தொகுப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார். அதற்காகவே ‘தனிமையைப் பருகும் கோப்பைகள்’ நூலை வரவேற்கலாம்.

-பொன்.இரவீந்திரன்

 

Pin It