சினிமாவைத் தெரிந்துகொள்வோம் -1

சிறுவர் சினிமா

(சிறந்த உலகத் திரைப்படங்கள்)

பக்: 158 | ரூ. 80 | வம்சி புக்ஸ் திருவண்ணாமலை

சிறுவர்களின் வாழ்வியல் சார்ந்த படங்களின் தொகுப்புகளிலிருந்து அரிய பதிவுகளை மட்டும் தொகுத்திருக்கும் விஸ்வாமித்திரனின் எழுத்து, வாசிக்கும் நம்மை அவர்களின் உலகத்திற்குள்ளே இழுத்துச் சென்று, நம்மைப் பார்வையாளனாக்கி, அவலங் களையும், சந்தோஷங் களையும், நிதர்சனங்களையும் சுட்டிக்காட்டி நம்மை உள்ளம் குமுறச் செய்கிறது. கனத்த மௌனங்களுக்கிடையே அகப்பட்டுக் கிடக்கும் சிறுவர்களின் மனவுலகைத் துல்லியமாகத் தனது சொல்லாடல் மூலம் சித்திரித்து நம்மை வசீகரிக்கும் விஸ்வாமித்திரனின் கைகளை இறுகப் பற்றி வலிக்கும் வரை குலுக்கலாம்.

“கிகுஜிரோ” ஜப்பானியத் திரைப்பட இயக்குநர்களில் அகிரா குரோசோவாவிற்கு அடுத்தப்படியாக நம் மனத்திரையில் நிழலாடும் படங்களுக்குச் சொந்தக்காரரான தகேஷி கிடானோவின் மாறுபட்ட படைப்பான ‘கிகுஜிரோ’ குறித்து கட்டுரையாளர் தொகுத்திருக்கும் விஷயங்கள் நுட்பமானவை. தமிழின் சமீபத்திய வரவுகளில் கவனம் ஈர்க்கும் இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவராமல் தேங்கிக் கிடக்கும் ‘நந்தலாலா’ என்கிற படம் ‘கிகுஜிரோ’வை அடியற்றிய படம்தான். (தற்போது நார்வே திரைப்பட விழாவில் ‘மக்கள் விருதை’ அள்ளி வந்திருக்கிறது ‘நந்தலாலா ’ என்பது கவனிக்க வேண்டிய விஷயம்)

உலகின் எல்லாப் பகுதிகளிலும் சிறுவர்களின் மனவுலகம் ஒரே மாதிரிதான் என்பதற்கு ‘கிகுஜிரோ’வை நாம் சான்றாகக் கருதலாம். தன் தாயைத் தேடிக் கண்டடைய விழையும் மகனின் மனவுலகம் சார்ந்த நுட்பங்களைக் கொண்டிருக்கும் படமாகவும், வயதில் வேறுபாடு இருந்தாலும் நாம் எப்போதும் குழந்தையின் மனவுலகில்தான் தொடர்ந்து பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளமாகவும் ‘கிகுஜிரோ’ முன் நிற்கிறது.

சிறுவர்களின் உலகில் நிகழும் கண்மூடித்தனமான போர் நிகழ்வுகளும், தாக்குதல்களும், புறக்கணிப்புகளும் பெரும் துயரம் நிறைந்தவை. வார்த்தைகளின்றி அவர்களுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் சோகத்தின் பெருமூச்சுகளை யாரும் அறியமுடிவதில்லை. பால்யம் பலருக்கும் பெரும் சுமையாகவே நகர்ந்து செல்கிறது. பால்யத்தில் நிகழும் துர் சம்பவங்கள் வாழ்வின் முழுமைக்குமாகத் தொடர்ந்து வந்து மனச்சிதைவுக்கு உள்ளாக்கும் கொடூரத்தை ‘இன்னோசென்ட் வாய்ஸ்’ திரைப்படத்தின் வாயிலாக நாம் காண நேரிடலாம். போர்க்காலங்கள் சிறுவர்களின் வாழ்க்கையைச் சூரையாடும் கணங்களை மிகத் தத்ரூபமாகச் சித்திரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையாசிரியரின் பால்ய வயதும் போர்க்காலச் சூழலில் நிறைந்தது என கட்டுரையாளர் சுட்டிக் காட்டும்போது நம் கண்களில் நீர் கோத்துக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.

நம் பால்ய வயதின் ஞாபகங்களைக் கிளறிவிடும் இப்புத்தகம், பால்யத்தின் வழியே நாம் அடைந்த சந்தோஷத்தை மட்டுமின்றி, நாம் தவறவிட்ட அரிய கணங்களையும் நமக்கு எடுத்துச் சொல்லுகிறது. ‘தி வே ஹோம்’ - படத்தைப் பார்க்கும் யாவரின் மனதும் தனது பால்ய கால சினேகிதியான தத்தமது பாட்டியின் நினைவலைகளிலிருந்து தப்ப முடியாது என்பதே நிதர்சனம். முதுமைக்கும், பால்யத்திற்கும் இடையேயான முரண்பாட்டையும், அவற்றிற்கிடையேயான ஆழமான அன்பின் தரிசனத்தையும் இப்படத்தைக் காணும்போது யாவரும் உணரலாம். இப்படங்கள் குறித்த கட்டுரையாளரின் பார்வை நுட்பமானது. மேற்கண்ட ‘கிகுஜிரோ’ ‘இன்னோசென்ட் வாய்ஸ்’ ‘தி வே ஹோம்’ படங்களை வெவ்வேறு சூழல்களில் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்தபோது நான் காண நேர்ந்தவை. ஆகவே அவை குறித்த மனப்பதிவுகள் மட்டுமே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் “கிகுஜிரோ” திரைப்படம் பலமுறை பார்க்கப்பட்டு விவாதிக்கப்பட்ட ஒன்று. தமிழ்த் திரைப்படச் சூழலில் சிறுவர்களுக்கான படமாக அடையாளம் காணப்பட்டிருக்கும் ‘பசங்க’ படம் கொடுக்கும் பரவசத்தைக் காட்டிலும் பன் மடங்கு பாதிப்பை நம் மனத்திரையில் உருவாக்க வல்லது ‘நந்தலாலா’ (உதாரணம்: அண்மையில் இப்படத்தைக் கண்டு கண்ணீர் விட்ட ‘குமுதம்’ இதழின் உதவி ஆசிரியர் ‘கடற்கரய்’யின் பேஸ்புக் பதிவுகள்) பால்யத்தின் நிறைவேறாத ஆசைகள், கனவுகள், துக்கங்கள் யாவையும் உள்ளடக்கிய 18 படங்களின் உள் கட்டமைப்பை, அழகியலை, கதைக்களனை, பாத்திர வடிவமைப்பை, அதன் அரசியலை மிக நேர்த்தியாக இப்புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் கட்டுரையாளர். மற்ற படங்களைப் பற்றி வாசிக்கும்போது உடனே அந்தப் படங்களைப் பார்க்க வேண்டும் என்று எழும்பும் ஆவலைத் தடுக்க முடியவில்லை.
Pin It