நூல் அறிமுகம்

தன் பெண்டாட்டியைக் கெடுத்த பண்ணையாரை எதிர்த்ததால் உயிரோடு புதைக்கப்பட்ட ஆதிவாசி / அந்த குழிக்குள்ளே இருந்த ஆதிவாசி மனிதனின் எலும்புகளை, விலங்குகளின் எலும்பு எனப் பொய் சொன்ன டாக்டர் / விறகுக் கரி தயார் செய்யும் வளையில் செய்த வேலையில் தவறு செய்ததால் உயிரோடு எரிக்கப்பட்ட ஆதிவாசி / ஒரு மாங்காயைத் தின்றதற்காக தலைகீழாய் கட்டப்பட்டு முதுகுத்தோல் உரிய சவுக்கால் அடிபட்ட ஆதிவாசி / வீட்டுவேலை செய்ய வரவில்லை என்பதற்காக பிரசவமான மூன்றாம் நாளில் உதைக்கப்பட்ட ஆதிவாசிப் பெண் / அவளுக்கு ஆதரவாய் பேசியதால் மாட்டுக்கு பதிலாக ஏரில் பூட்டப்பட்டு நிலத்தை உழும்படி செய்யப்பட்ட ஆதிவாசிக் கணவன்

மேலே கண்டவை 1945களில் தோழர் கோதாவரியும், அவரது கணவர் தோழர் பருலேகரும் மகாராஷ்டிரத்தில் கண்ட ஆதிவாசி மக்களின் நிலை.

அடிமை இந்தியாவின், அனாதைகளாய் இருந்த அந்தஆதிவாசிகளோடு கோதாவரியும் பருலேகரும் இணைந்தனர். நம்பிக்கையூட்டி நிமிர்ந்து நிற்க வைத்தனர்.

1. ஓசி வேலை செய்யாதே, 2. தினக்கூலியைப் பணமாக வாங்கு,

3. பண்ணையார் அடித்தால் தடுத்து பாதுகாத்துக்கொள்

என ஆதிவாசிகளின் மாநாட்டை கூட்டித் தீர்மானம் செய்தனர். அந்த மாநாடும் அதன் தீர்மானங்களும் அடக்கிவைக்கப்பட்டிருந்த ஆதிவாசிகளின் உணர்ச்சிகளைப் பீறிட்டு வெடிக்கச் செய்தன. மாநாடு நடந்த மூன்று வாரத்திற்குள் கட்டாய உழைப்பை ஆதிவாசிகள் முடிவுக்கு கொண்டுவந்தனர். “அடிமைக்காலம்” எனும் முறையை கைவிடச் செய்தனர். நூறாண்டு காலமாக இருந்த “கடன் அடிமைகளை” விடுவித்தனர். மாநாட்டை ஒட்டிய முதல்கட்ட எழுச்சியாக இது இருந்தது.

ஆதிவாசிகளின் இரண்டாம்கட்ட எழுச்சியில் “226 கிலோ புல்லை வெட்டினால் 2 ரூபாய் 50 பைசா கூலி” எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக காங்கிரஸ் அரசு, வெள்ளையர் ராணுவம், பண்ணையார்கள் ஆகியோர் அடங்கிய கும்பல் அடக்குமுறையை ஏவியது. இது மக்களின் முன்னால் தோற்றது. பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

இரண்டாம் கட்ட எழுச்சியில் கோதாவரியும், பருலேகரும் நேரடியாக ஈடுபடவில்லை. 1946 முதல் 1953 வரையிலான ஏழு வருடங்கள் ஆதிவாசி மக்களுக்கு நேரடியாகத் தலைமை தாங்க முடியாமல் அவர்கள் தடுக்கப்பட்டு இருந்தனர். ஆனால் ஆதிவாசி மக்களிடையே சங்கத்தை வழிநடத்துவதற்கான திறமையும் அதற்கான தலைமையும் உருவாகியிருந்தது.

அன்று முதல் இன்றுவரை நான்கு தலைமுறைகளாய் மகாராஷ்டிர கம்யூனிச இயக்கத்தின் அடித்தளமாக அங்கே ஆதிவாசிகள் உள்ளனர். தோல்வி மனப்பான்மை பழங்குடி மக்களிடையே தலைவிரித்தாடிய ஒரு சமூகச் சூழலில் கோதாவரி மற்றும் பருலேகரின் உணர்வுபூர்வமான தலையீடு என்பது உழைக்கும் மக்களை அணிதிரட்டும் பணியில் உள்ள அமைப்பாளர்களுக்கு உயிர்த்துடிப்புள்ள ஒரு பாடமாகும்.

அதிலும் தோழர் கோதாவரியின் பங்களிப்பு என்பது நெஞ்சை உருக வைப்பதாகும். அவர் காங்கிரசின் மதவாதத் தலைவரான கோகலேயின் தம்பி மகள். வசதி படைத்தவர். மகராஷ்டிர மாநிலத்திலேயே முதலாவதாக சட்டம் பயின்ற பெண்மணி. அத்தகைய நிலையில் இருந்து ஒரு நாடோடி வாழ்க்கைக்கு அவர் மகிழ்ச்சியோடு இறங்கினார்.

முதலாவது மாநில மாநாட்டைக் கூட்டுவதற்காக 700 கிராமங்களை நடந்தே சுற்றினார் என்பது அவரது நடைபயண வாழ்க்கையில் ஆரம்பமாகியது. அதன் பிறகு ஆதிவாசிகளின் மலைப்பிரதேசங்கள் எல்லாம் அவரது காலடி அடையாளத்தைப் பெற்றுவிட்டன. அவரிடம் இருந்து வெளிப்பட்ட இவ்வளவு ஆற்றலுக்கு மக்களின் அன்பே எரிசக்தி ஆனது.

ஒரு இயக்கத்தின் அமைப்பாளர் என்ற முறையில் அன்பு, தியாகம் எனும் கான்கிரீட் கலவையைக் கொண்டு, உயிரைப் பணயம் வைத்து, மக்கள் இயக்கத்தை செங்கல் செங்கல்லாக எடுத்துவைத்து கட்டிய தோழர் கோதாவரின் இந்த செயல்பாட்டுக்கு இணையான சம்பவங்களாக வரலாற்றில் எவற்றை ஒப்பிடலாம்? கீழ் வெண்மணியிலே விவசாயத் தொழிலாளர்களை விடுவித்த அன்புத் தோழர் சீனிவாசராவின் செயல்பாடுகளோடு ஒப்பிடலாம்.

இன்றைய பாகிஸ்தான் பகுதியில் பிறந்து சோவியத் யூனியனில் பயிற்சி பெற்று, வட இந்தியப் பகுதிகளிலும் தென்னிந்தியாவில் நமது சென்னையிலும் உயிரைப் பணயம் வைத்து கம்யூனிச இயக்க விதைகளைத் தூவிய தோழர் அமீர் ஹைதர்கானின் செயல்பாடுகளோடும் ஓரளவு ஒப்பிடலாம்.

ஆனால், பெண் தலைவர் என்ற முறையில் தோழர் கோதாவரியின் அனுபவங்கள் இணையற்றவை. “மானுடம் விழிக்கும் போது” எனும் நூலாக அதை அவர் பதிவு செய்துள்ளார்.

ஆதிவாசி மக்களை அணிதிரட்ட காட்டில் உள்ள கிராமங்களுக்கு நடைபயணமாக செல்லும்போது ஒரு நாள் இரவில் தங்க இடம் கிடைக்காததால் நடுரோட்டில் தன்னந்தனியாய் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை அவர் பதிவு செய்துள்ளார்.

1945ஆம் ஆண்டு காலகட்ட வட இந்திய சமூக சூழ்நிலைகளோடு ஒப்பிடும்போது அவரது அத்தகைய விடாமுயற்சியும், வீரமும் தனித்தன்மையானதாகும். அடிமை இந்தியாவில் ஆங்கிலேய அரசின் வேட்டையாடல், ஆதிவாசி மக்களின் எதிர்ப்பால் சீண்டிவிடப்பட்ட நிலப்பிரபுத்துவ மிருகங்களின் சீற்றம், இந்திய சாதிய சமூகத்தின் பாராமுகம், இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் எதிர்த்த ஒரு சத்தியாக்கிரகமாக “அந்த தனிமைப்படுத்தப்பட்ட இரவு தவத்தை” நாம் பார்க்க வேண்டும்.

வெள்ளையர் எதிர்ப்பைப் பிரதானமாகக் கொண்ட காந்திய சத்தியாக்கிரகத்தை விட இது பல மடங்கு சக்தி படைத்தது.

எழுதப் படிக்கத் தெரியாத ஆதிவாசி மக்களின் மனதுக்குள்ளே மார்க்சிய கருத்துக்களைக் கொண்டு செல்ல தோழர் கோதாவரி செய்த முயற்சிகளும் மிகுந்த உணர்ச்சியூட்டுபவை. தாம் வாழும் இடம் சார்ந்த அறிவில் ஆதிவாசிகள் மேதைகள். ஆனால் அவர்களிடம் ஏகாதிபத்தியம் என்ற சொல்லை விளக்க வேண்டும் என்றால் முதலில் இந்த மலைப்பகுதியைத் தாண்டி “உலகம் என்று ஒன்று இருக்கிறது” என்று ஆரம்பிக்க வேண்டியிருந்தது. உலகம் என்றால் என்ன என்று விளக்குவதிலேயே பெரும் சக்தியை செலவழித்து கொஞ்சம் சோர்ந்துபோன தனது தாயை ஆதிவாசிகள் குழந்தை மனதோடு தேற்றிய உணர்வுபூர்வமான சம்பவமும் அதில் உள்ளது. அந்தக் குழந்தை மனதுக்காரர்களைத்தான் தோழர் கோதாவரி கட்சி உறுப்பினர்களாக, வீரத்தளபதிகளாக, கட்சியின் மாவட்டச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக வளர்த்தெடுத்தார்.

ஆயிரம் ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களை கல்வியறிவு இல்லாதவர்களாக ஆக்கி வைத்திருந்த சனாதனக் கோட்டை மகாராஷ்டிர ஆதிவாசிகள் விசயத்தில் தோழர் கோதாவரியால் நொறுக்கப்பட்டது.தனது குஞ்சுகளுக்காக உணவைத் தனது வாயிலேயே பாதுகாத்துக் கொண்டு வந்து ஊட்டும் தாய்ப்பறவையைப் போல, மார்க்சியத்தை உணர்ச்சிபூர்வமான முறையில் உள்வாங்கிச் செரித்து இருந்ததால்தான் அதைத் தனது ஆதிவாசிக் குஞ்சுகளுக்கு அந்த தோழமைத் தாயால் ஊட்ட முடிந்தது.

தோழர் கோதாவரியின் இத்தகைய தத்துவார்த்த கருத்துப் பிரச்சாரப் போராட்டத்தைப் போன்ற ஒரு சம்பவம் தோழர் ஹோசிமின்னின் வாழ்விலும் உண்டு. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஆயுதப் போராட்டத்தில் காடுகளுக்கு உள்ளே இருந்த ஆதிவாசிகளை தமது இயக்கத்துக்காக திரட்டுகிறபோது ஹோசிமின் மொழி தெரியாத ஒரு ஆதிவாசியிடம் சில குச்சிகளை வைத்தும், ஊமைச் சைகைகளை வைத்தும் பேசி அவரைத் தமது இயக்கத்தில் ஈடுபட அழைத்தார் என ஒரு சம்பவம் அவரது வரலாற்றில் பதிந்துள்ளது. அந்த சம்பவத்தோடும் நாம் கோதாவரியின் செயல்பாடுகளை ஒப்பிடலாம்.

ஆதிவாசி மக்களைத் தமது பாசிசவெறுப்பு அரசியலின் விளையாட்டுக்கருவிகளாக இந்துத்துவா பயங்கரவாதிகள் பயன்படுத்துகிறார்கள். அவர்களைப் போலவே நக்சலிச பயங்கரவாதிகளும் தமது விரக்தி அரசியலின் விளையாட்டுக் கருவிகளாக ஆதிவாசிகளைப் பயன்படுத்த முயல்கின்றனர். இந்தப் பின்னணியில் ஆதிவாசிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான உண்மையான அக்கறையோடு அவர்களை அணிதிரட்டிய இணையற்ற தலைவராக கோதாவரி திகழ்கிறார்.

அத்தகைய மாபெரும் தோழர் கோதாவரியின் சுருக்கமான வாழ்க்கை அறிமுக நூல் வெளியாகியுள்ளது. அசோக் தாவ்லே எழுதியுள்ளார். சொ. பிரபாகரன் தமிழாக்கியுள்ளார். சவுத் விஷன் பதிப்பகமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ளன. அடித்தள மக்களை அணிதிரட்டி, அவர்களைத் தலைவர்களாக வளர்த்தெடுப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?

தோழர் கோதாவரியின் வாழ்க்கை வரலாறு உங்களுக்காகவே வெளியாகியுள்ளது.

அதுவே உங்களுக்கான உயிர்த்துடிப்பான பாடம்.

கோதாவரி பாருலேகர்

பழங்குடி மக்களின் தாயர்

அசோக் தாவ்லே

தமிழில்: சொ. பிரபாகரன்

பக்: 48 | ரூ.15

Pin It