தமிழ்நாட்டில் முற்போக்கான கருத்துகளை- திட்டங்களை முன்வைத்தவர்கள் தமிழறிஞர்கள் ஆவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்தவர்கள் தமிழ்ச் சான்றோர்கள் ஆவர். பார்ப்பனப் புரோகிதர்களை நீக்கிய தமிழர் திருமணம் செய்து - நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்ற மார்க்க சகாய ஆச்சாரி, வள்ளலார், அயோத்திதாசப்பண்டிதர் என்று தமிழ்ச் சான்றோர்கள் பலர் ஆரியத்திற்கு எதிராக, வர்ண சாதி முறைக்கெதிராக, சமூகச் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தார்கள்.

1916ஆம் ஆண்டு மறைமலை அடிகளார் தொடங்கிய ‘தனித்தமிழ் இயக்கம்’ மொழித் தூய்மை மட்டும் பேசவில்லை; சமற்கிருதம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்களைத் தமிழிலிருந்து நீக்குவது போல், தமிழர் வாழ்வியல், சடங்குகள் ஆகியவற் றிலிருந்து சமற்கிருதத்தையும் ஆரியப் புரோகிதர்களையும் நீக்குவதையும் வலியுறுத்தியது. தமிழில் தமிழர்களைக் கொண்டு குடும்பச் சடங்குகளையும் ஆன்மிக நிகழ்வுகளையும் நடத்திக் கொள்ள வேண் டும் என்று மறைமலை அடிகளார் வலியுறுத்தினார்.

அரசியல் இயக்கங்கள் செயல் படும் காலம் வந்தபின், பெரியார் பார்ப்பனிய எதிர்ப்பைப் பெரும் வீச்சில் கொண்டு சென்றார். பட்டி தொட்டியெங்கும் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு பரவியது. இதற் கெல்லாம் முன்னோடிகளாக, அடித்தளம் அமைத் தோராகத் தமிழறிஞர்கள் இருந்தார்கள் என்பதை இன்றையத் தமிழுணர் வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இக்கடமையை இன்றையத் தமிழறிஞர்கள் தொடர வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே காங்கிரசுக் கட்சி இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி வரவேண்டும் என்று வலியுறுத்தியது. காந்தியும் இந்தியாவின் தொடர்பு மொழியாக இந்தி வரவேண்டும் என்றார். 1937-இல் சென்னை மாகாண முதலமைச்சராக ஆனவுடன் இராசாசி 1938-இல் ஒரு பகுதி பள்ளிக் கூடங்களில் வெள்ளோட்டமாக இந்தியைக் கட்டாயப் பாடமொழியாக்கினார். அந்த இந்தித் திணிப்பைத் தமிழறிஞர்கள் எதிர்த்தனர். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு, முன்னெடுத்தபின் அது பெரும் வீச்சைப் பெற்றது. தமிழகம் தழுவிய எழுச்சி ஏற்பட்டது.

1938-இல் சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. அந்நிகழ்வு பற்றி தி.மு.க.வின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய "தி.மு.க." என்ற தலைப்பில் உள்ள நூலில் கூறுவதைப் பாருங்கள்.

"இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழகம் தனியே பிரிய வேண்டும் என்ற கருத்து இந்தி எதிர்ப்பின் விளைவாக 1938-ல் உருவாகியது. இந்தியாவின் தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், பொது மொழியாகவும் ஆக்கிடும் நோக்கத்தில் தமிழகத்தில் கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நோக்கில், தமிழார்வம் கொண்ட பேரறிஞர்களும், பொதுமக்களும் அந்தக் கட்டாய இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஓங்கிவளரத் தொடங்கியது. 1937-ஆம் ஆண்டில் ஆச்சாரியார் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தோன்றிய இந்தி எதிர்ப்பு இயக்கம் மக்களின் உள்ளத்தில் தமிழார்வத்தையும், தமிழனின் பண்டையப் பெருமைகளையும், அவன் ஆண்டு புகழ் பெற்ற வரலாறுகளையும், தமிழிலக்கியங்களின் சிறப்புகளையும் தூவியது. வடநாட்டு இந்தி ஏகாதிபத்திய ஆதிக்கம், வடநாட்டு அரசியல் ஆதிக்கத்தையும், பொருளாதார ஆதிக்கத்தையும், வாணிக ஆதிக்கத்தையும் நாளடைவில் தமிழ்ப் பேரறிஞர்களுக்கு உணர்த்திற்று. அதன் விளைவாக, 1938-ஆம் ஆண்டு மே திங்களில் சென்னைக் கடற்கரையில் கூட்டப் பெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில், "தமிழ்நாடு தமிழர்க்கே ஆக வேண்டும்" என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் மறைமலையடிகள் ஆவார்கள். அதனை வழி மொழிந்து பேசியவர்கள் பெரியார் ராமசாமி, ச.சோம சுந்தர பாரதியார் ஆகியோர் ஆவார்கள்."

நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் இந்தக் கூற்று நான் கையில் வைத்துள்ள தி.மு.க. என்று பெயர் தாங்கிய நூலில் உள்ளது. இந்நூலை நாவலர் நெடுஞ்செழியன் எழுதியுள்ளார். இந்நூல் 1961-ஆம் ஆண்டு, முதல் பதிப்பாக வந்துள்ளது. நான் படித்த பகுதி இந்நூலின் 10, 11 பக்கங்களில் உள்ளது.

இந்த இடத்தில் இரண்டு கருத்துகளைப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். தனித் தமிழ்நாட்டிற்கான முதற்குரல் கொடுத்தவர்கள் தமிழறிஞர்கள். அக்குரல் அறிஞர்கள் குரலாக மட்டும் சுருங்கி விடாமல் அதனை மக்கள் குரலாகப் பரப்பியவர் பெரியார்.

தமிழறிஞர்களின் தொலை நோக்குப் பார்வையுள்ள கருத்துகள் சமகால அரசியல் இயக்கத்தோடு இணையும் போதுதான் அது பரவலான மக்களைச் சென்றடைய முடியும். அக்கருத்துகள் வளர்ச்சியடைய முடியும்.

இங்கே கூடியுள்ள தமிழறிஞர்களும், இங்கே வரவாய்ப்பில்லாத தமிழறிஞர்களும், தாங்கள்தாம் தமிழ் நாட்டின் இலட்சியங்களுக்கு, அரசியல் கோரிக்கைகளுக்கு முன்னெடுப்பு முழக்கங்கள் வழங்க வேண்டியவர்கள் என உணர வேண்டும். உங்கள் மரபு அப்படி இருக்கிறது.

அதே வேளை நீங்கள் சமகாலத் தமிழக அரசியல் இயக்கத்தோடு -உங்களை அணிசேர்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சமகாலத் தமிழக அரசியல் இயக்கம் என்பது தேர்தல் கட்சிகளைக் குறித்திடுவதாகக் கருதக்கூடாது. சமகாலத் தமிழக அரசியல் முழக்கம் தமிழ்த்தேசியம்; அம்முழக்கத்தை முன்வைத்து நடைபெறும் இலட்சிய இயக்கமே தமிழறிஞர்கள் ஆதரிக்க வேண்டிய சமகால அரசியல் இயக்கமாகும்.

இந்தியம் தமிழர்களுக்கு எதிரானது என்பது நமக்கு எளிதில் புரிந்து விடும். திராவிடம் என்பது, குழப்பமானது. தமிழ்த் தேசியத்திற்கு முரணானது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிகள் தேவைப்படுகின்றன.

தேசியம் என்பது தமிழ் இல்லை என்று கருதக்கூடாது. தேயம் என்பது தமிழ் என்று பாவாணர் கூறுகிறார். இங்கு பேசிய பேராசிரியர் இளமுருகன், தமிழ்த் தேயியம் என்றார். தேசியம் என்பது நல்ல தமிழ் ஆகாது என்பதற்காக அப்படிக் கூறினார் என்று கருதுகிறேன். யகரம் சகரமாக மக்கள் வழக்கில் திரியும். முயல் முசலாகிறது; புயல் புசலாகிறது. அப்படித்தான் தேயம் தேசமாகிறது.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஆங்கிலத்தில் கன்றி (Country), நேஷன் (Nation) என்று இருசொற்கள் இருக்கின்றன. இரண்டிற்கும் வெவ் வேறு பொருள் உண்டு. ஓர் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள எல்லையை Country (நாடு) என்கிறார்கள். ஒரு மொழி, ஒரு பண் பாடுள்ள மக்கள் வாழும் பகுதியை Nation (தேசம்) என்கிறார்கள். தமி ழில் நாடும் தேவை; தேசமும் தேவை. ஒருநாட்டில் பல தேசங்கள் இருக்கலாம். ஒரு தேசம் ஒரு நாடாகவும் இருக்கலாம்.

எனவேதான் தமிழ்நாட்டைத் தமிழ்த்தேசம் என்கிறோம். தமிழ்த் தேசம் என்னும் போது, தமிழர்கள் தனி இனம் என்பதும் அவர்களின் தாயகம் தமிழ்த் தேசம் என்பதும் எளிதில் விளங்குகிறது.

எனவே, நாம் தமிழ்த்தேசத்தைக் குறிக்கும் கருத்தியலான தமிழ்த் தேசியத்தைத் தடங்கலின்றி ஏற்க வேண்டும். சிலர் "தமிழியம்" என்று கூறுகின்றனர். ‘தமிழியம்’ என்பதில், மொழியும், பண்பும் மட்டுமே இடம்பெறும். தமிழர் தாயகம் இடம்பெறாது. தமிழ் இனம் என்பது தெளிவாக இடம் பெறாது. தமிழ்த் தேசியம் என்றால், நமது தேசிய இனம் தமிழர், நமது தேசிய மொழி தமிழ், நமது தேசம் தமிழ்த்தேசம், அது இறையாண்மையுடன் தனித்து இயங்கும் தகுதியு டையது என்ற பொருள்கள் வரிசையாக அணி வகுக்கும்.

நமது இனத்தை, நமது தாயகத்தை, நமது மொழியை இவற்றின் உரிமையைக் குறிக்க நாம் பயன் படுத்த வேண்டிய சொல் தமிழ்த் தேசியம்.
தமிழ்த்தேசியம், தமிழர் அறம் என்ற உயர்நெறி கொண்ட அடித் தளத்தின் மீது நிற்கிறது. சக மனிதர் களுடன் இன்ப துன்பங்களைச் சமமாகப் பகிர்வது என்பதுதான் தமிழர் அறத்தின் சாரம். மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனை வரும் சமம் என்பது தமிழர் அறம். இதுவே தமிழ்த்தேசியத்தின் சமூக நீதியாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க எந்த இனத்திலும் முற்போக்குக் கருத்துகளும் இருக்கும், பிற்போக்குக் கருத்துகளும் இருக்கும். நாம் முற்போக்குக் கருத்துகளை மேலும் வளர்க்க வேண்டும். பிற்போக்குக் கருத்துகளைக் கைவிட வேண்டும். தமிழர்களிடத்தில் நீண்ட காலமாக இருந்து விட்டது என்பதற்காக பிற்போக்குக் கருத்துகளை ஏற்கக் கூடாது.

சங்க காலத்தில் நம் இனத்தில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கிடையாது. ஆண் பெண் சமத்துவம் இருந்தது. அவன் தலைவன் என்றால், அவள் தலைவி. பிற்காலத் தில் ஆரியத்தின் வர்ணாசிரம தர்மம் நுழைந்ததாலும், இயல்பாக வளர்ந்த வர்க்கப் பிரிவுகளாலும், தமிழர்களி டையே சாதி உயர்வு தாழ்வு ஏற்பட்டது; ஆணாதிக்கம் ஏற்பட்டது. பெண்ணடிமைத்தனம் மேலோங் கியது.

இந்த உயர்வு தாழ்வு அநீதிகள் இன்று நம் தமிழ் இனத்தை நோய்க் கிருமிகளாக இருந்து அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கக் கூடாது.

"சாதி ஒழித்தல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று - இதில்
பாதியை நாடு மறந்தால் - மறு
பாதி துலங்குவதில்லையாம்"

என்று புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் நமக்கு வழிகாட்டினார். ஆண் பெண் சமத்துவத்திற்கும் நாம் முன்னுரிமை தர வேண்டும்.

வெளிநாடுகளில் தோன்றி வளர்ச்சியடைந்த முற்போக்கான தத்துவம் எதையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு வெளிநாட்டிலிருந்து எடுக்கப்படும் எந்தத் தத்துவத்தையும் தமிழ் மண் தனக்குரிய முறையில் உள்வாங்கி தனதாக்கிக் கொண்டுதான் ஏற்குமே தவிர அப்படியே நகலெடுத்து ஒட்டவைத்துக் கொள்ளாது. தமிழர் அறம் என்பது வலுவானது.

இங்கு பேசிய மலேசியத் தமிழர் திருச்செல்வம் ஒரு கருத்தைச் சொன்னார். மலாய்க்காரர்கள் தங்களின் கடந்த காலப் பெருமைகளை - சிறப்புகளைப் புகழந்து பேசி, நினைவூட்டி, அந்த மக்களிடம் புத்தெழுச்சி ஊட்டுகிறார்கள் என்று சொன்னார். அத்தோடு மலேசிய அரசியல் தலைவர்கள் உருவாக்கியுள்ள ஒரு பொன்மொழியையும் சொன்னார். "கடந்த காலமே நமது எதிர்காலம்" (Fast is our future) என்று மலாய்த் தலைவர்கள் சொல்வதாகச் சொன்னார். நாம் நமது தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களை- சிறப்புகளைச் சொன்னால், இங்கே உள்ள தமிழர்களில் ஒரு சாரார் இது பிற்போக்கு வாதம் என்கின்றனர்.

கடந்த காலச் சாதனைகளைச் சொல்வது எதிர் காலச் சாதனைகள் படைக்கும் ஊக்கத்தை உண்டாக்கு வதற்காகத்தான்!
தமிழர்களின் கடந்தகாலம் உலகில் எந்த இனத்திற்கும் இல்லாத அளவிற்குப் பெருமிதங்க ளின் களஞ்சியம் ஆகும். வேறொன் றும் வேண்டாம், நம்முடைய மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். மூவா யிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மொழிக்கு ஈடாக உலகில் எந்த மொழி இருந்தது? எவ்வளவோ படை யெடுப்புகள், ஆக்கிரமிப்புகள் நம் மீது நடந் துள்ளன. இன்றும் நாம் அடிமையாகத்தான் இருக்கி றோம். இருந்தாலும் நமது தனித் தன்மையை நம் இனத்தை உயிர்ப் போடு வைத்திருப்பது நம் தமிழ் மொழி.

புகழ் பூத்த நமது கடந்த காலமும், தொன்மையும் வலிமையும் கொண்ட நமது மொழியும்தான் நம்மினத் தின் மீது மற்ற இனத்தார் கொண்டுள்ள பகைமைப் போக்கிற் குக் காரணங்கள் ஆகும். நாம் அயல் இனம் எதற்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. ஆனால் அந்த இனங்கள் நம்மை பொறாமையோடு பார்க்கின்றன; நமக்கு எதிராகச் செயல்படுகின்றன. குறைந் தது நம்மைப் புறக்கணிக்க வேண்டும் என்றாவது கருதுகின்றன. காரணம் என்ன? நமது கடந்த காலம் அவர்களை அச்சுறுத்துக்கிறது. நமது கடந்த காலப் பெருமிதங்கள் அவர்களுக்கு இல்லை.

அந்த வெறுமையிலிருந்து புறப்படுகின்ற ஆத்திரம் நமக்கு எதிராகச் செயல்படுகிறது. தமிழர்களைத் தடைகள் போடாமல் விட்டுவிட்டால் அவர்கள் மிக வேகமாக நம்மை முந்திக் கொண்டு முன்னேறி விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். நம்மிலிருந்து பிரிந்து சென்ற தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோர்க்கும் இந்த அச்சம் இருக்கிறது. வடக்கே உள்ள அயல் இனத்தார்க்கும் இந்த அச்சம் இருக்கிறது. இந்தப் பொறாமை இருக்கிறது.

முற்போக்குக் கருத்துகளை முன்வைத்து மனித சமத்துவத் திற்குப் போராடிய அம்பேத்கர், தமிழினத்தைப் பற்றி என்ன சொல் கிறார் என்று பாருங்கள். மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகக் கிளர்ந்தெழுந்த காலத்தில் 1955-இல் அம்பேத்கர் மொழிவழி மாநிலங்கள் அமைப்பதை எதிர்க்கிறார்.

மொழிவழி மாநிலங்கள் அமைத்தால் இந்தியா சிதறுண்டு போகும் என்பது அம்பேத்கர் கருத்து. அவ்வாறு தனியே பிரிந்து போகும் மாநிலத்திற்கு முன்னெடுத்துக் காட்டாகத் தமிழ்நாட்டைக் காட்டுகிறார். இதோ அம்பேத்கர் நூல் தொகுப்பின் முதல் தொகுதி என்கையில் இருக்கிறது. அதில் ஒரு பத்தியைப் படித்துக் காட்டுகிறேன்.

"வடக்குக்கும் தெற்குக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. தெற்கு முற்போக்கு எண்ணம் கொண்டது. வடக்கு மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போயிருப்பது. தெற்கு பகுத்தறிவுப் பாசறையாக இருப்பது. தெற்கு கல்வித்துறையில் முந்தி நிற்பது. வடக்கு இத்துறையில் பிந்தியிருப்பது. தெற்கத்திய கலாச்சாரம் புதுமையானது; வடகத்தியக் கலாச்சாரம் பழைமையானது."

.................. ............... .................
"உலகமே தலைகீழாக மாறிய பிறகும், நாகரீகம் கொடுமுடியை எட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் வடக்கே ‘சதி’ என்ற பெயரால், இன்னமும் பெண்கள் கொலை நடை பெற்றுக் கொண்டுதானிருக்கிறது. நிர்வாணச்சாமியார்கள் கொட்ட மடித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

சமீபத்தில் ஹரித்துவார் விழாவில் இவர் கள் செய்த திருவிளையாடல்களை யார்தான் மறக்க முடியும்? உத்தரப்பிரதேசத்தில் இந்த அக்கிரமத்தை எதிர்த்து எவரேனும் குரல் எழுப்பினார்களா?

"வடக்கின் ஆதிக்கத்தைத் தெற்கு எப்படி பொறுத் துக் கொண்டிருக்க முடியும்? வடக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு, அதன் உறவைத் துண்டித்துக் கொள்வ தற்குத் தெற்கு விரும்புகிறது என்பதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்பட ஆரம்பித்திருக்கின்றன."

- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1, பக்கம் 218, 219 (தமிழ்).

மேற்கண்ட காரணங்களைச் சொல்லும் அம்பேத் கர், மொழிவழி மாநிலம் அமைந்தால் அல்லது தென் னக மாநிலங்களை ஒரு கூட்டரசாக - இராசாசி சொல்வது போல் அமைத்தால் தெற்கு பிரிந்துவிடும் என்கிறார். பிரியவிடக் கூடாது என்பது அம்பேத்கர் நிலைபாடு.

எனவே, நமது பழம்பெருமைகளை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்; செய்ய வேண்டிய சமூக மாற்றங்களை செய்யத் துணிவோம். இவை அனைத்திற்குமான கொள்கலன் தமிழ்த் தேசியம்!

தமிழர்களாகிய நம்மை இந்தியாவில் உள்ள பல இனமக்கள் தங்களின் உடன் பிறப்புகளாகக் கருதுவதில்லை.

2009-இல் நம்மினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட போது, ஒரு சொட்டுக் கண்ணீர் வேண்டாம், ஒரு கண்டன அறிக்கை கூட திராவிட மாநிலங்களில் இருந்தும் வரவில்லை. வடமாநிலங்களிலிருந்தும் வரவில்லை.

கடந்த பிப்ரவரி - மார்ச் இரண்டு மாதங்களும் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கெதிராக அமைக்கப்பட வேண்டிய பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் குறித்து பன்னாட்டு விவாதம் நடந்தது. அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன் வைத்தது. இத்தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் உலகம் முழுக்க விவாதம் நடந்தது. தமிழ்நாட்டிலும் நடந்தது.

இதரத் தென்மாநிலங்களிலோ, வடமாநிலங் களிலோ இந்த விவாதம் நடந்ததா? இல்லை. அருந்த திராய், மேதா பட்கர் போன்ற மனித உரிமை செயல் பாட்டாளர்கள் இத்தீர்மானம் பற்றி ஆழமாக விவாதித்தார்களா? இல்லை. இந்தியாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட இனமாக இருக்கிறோம். நாம் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. நமக்குத் தீங்கு கள் வரும் போது, அதைக் கண்டிக்க, அடுத்த இனத்தி லிருந்து யாருமில்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு சிக்கல்களில் அண்டை மாநிலங்கள் தமிழின உரிமைகளைப் பறிக் கின்றன.

தமிழினத்தை மற்றவர்கள் ஒதுக்கும் புறநிலை உண்மையைத் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர் களும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தமிழர் களாகிய நாம் பிளவு படாமல் தமிழ்த்தேசியம் - என்ற பதாகையின் கீழ் கைகோத்து நிற்க வேண்டும். தற் காத்துக் கொள்ள வேண்டும்.

உலகத் தமிழ்க் கழகம், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் போன்ற பல்வேறு கூட்டுப் போராட்டங்களில் சேர்ந்து செயல்படுகிறது. உலகத் தமிழ்க் கழக மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

Pin It