இந்திய அரசுக்கான பதினாறாவது மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தமிழக நோக்கிலிருந்து பகுப்பாய்வு செய்வது தேவை. அதற்குமுன் தமிழக அரசியல் பண்பு குறித்து சில சொற்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை முகப்பு வளாகத்தில் 26.05.2014 அன்று திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் இந்தியத் தலைமை அமைச்சராகவும் மற்றவர்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் காங்கிரசுத் தலைவர் திருவாட்டி சோனியாகாந்தி, காங்கிரசுத் துணைத் தலைவர் திரு. இராகுல் காந்தி, முன்னாள் தலைமை அமைச்சர் திரு. மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டதையும் அவர்களை திரு. அத்வானி போன்ற மூத்த பா.ச.க. தலைவர்கள் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்ததையும் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இவ்வாறான அரசியல் பண்பு தமிழ்நாட்டில் இல்லையே என்ற வருத்தமும் சினமும் ஒரு சேர ஏற்பட்டன.

பங்குத் தகராறில் பகைவர்களாகிப் போனவர்களைப் போல் கருணாநிதியும் செயலலிதாவும் பண்பு கெட்டுப் போனார்கள். சட்டப்பேரவையில் முதல்வர் செயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதன்மை எதிர்கட்சித் தலைவர் விசயகாந்த் ஆகிய மூவரும் உட்கார்ந்து விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, மீனவர் சிக்கல் போன்ற தமிழகத்தின் மிக முகாமையான சிக்கல்களில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி விவாதித்துத் தமிழக நலன்களைக் காக்கத் தீர்மானங்கள் போட முடியாத பேரவலம் நிலவுகிறது தமிழ்நாட்டில்!.

தலைவர்களிடம் தோன்றிய பங்குத் தகராறுப் பகை அரசியல், கொடிய தொற்று நோய் போல் தமிழ் மக்களிடமும் பரவிவிட்டது. தமிழ் மக்கள் விழித்துக் கொண்டால்தான் தலைவர்களை நாகரிகப்படுத்த முடியும், சனநாயகப்படுத்த முடியும்!.

நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தல் இந்தியத் தேர்தல் நடைமுறையில் ஒரு குணமாற்றத்தை (Qualitative Change) ஏற்படுத்திய தேர்தலாகும். இந்திய சனநாயகத்தைப் பெருநிறுவன்ங்கள் கடத்திச் சென்றுவிட்டன.

காங்கிரசுக் கட்சிக்கும் பா.ச.க.வுக்கும் ஆன போட்டி, இறுதியில் இரண்டு வெளிநாட்டு விளம்பர நிறுவனங்களுக்கிடையேயான போட்டியாகச் சுருங்கி விட்டது. பா.ச.க.வுக்கு அமெரிக்க விளம்பர நிறுவனமும் காங்கிரசுக்கு சப்பான் நிறுவனமும் தேர்தல் பரப்புரை உத்திகளை வகுத்துக் கொடுத்தன.

மக்களவை உறுப்பினர்கள் பெரும்பான்மை அடிப்படையில் தலைமை அமைச்சரைத் தேர்ந்தெடுப்பது இந்திய அரசுமுறை. அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை. குடியரசுத் தலைவர்க்கு அனைத்து மக்களும் வாக்களித்துப் பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.

இந்தியாவுக்கு நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தல். ஆனால் அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை. குடியரசுத் தலைவர்க்கு அனைத்து மக்களும் வாக்களித்துப் பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.

இந்தியாவுக்கு நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தல். ஆனால் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் போல் 16ஆவது மக்களவைக்கான நாடாளுமன்றத் தேர்தலை பா.ச.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நடத்தின. குடியரசுத் தலைவர் வேட்பாளர் போல் செயற்கையாக, தலைமை அமைச்சர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். பல்லாயிரம் கோடி ரூபாயில் நரேந்தி மோடிக்கான விமானச் செலவுகள், விளம்பரச் செலவுகள், இதரச் செலவுகள் வாரி இறைக்கப்பட்டன. இச் செயல்களை அம்பானிகள், அதானிகள் மட்டுமின்றி, பல்வேறு இந்தியப் பெருமுதலாளி நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் அள்ளிக் கொடுத்தன.

காங்கிரசுக் கட்சி, கடைத் தெருவில் கையேந்தி நன்கொடை வசூலித்துத் தேர்தல் செலவுகள் செய்யவில்லை. கறுப்புப் பணம் வைத்திருப்போர், கள்ள வாணிகம் செய்வோர், பெரும் பெரும் முதலாளிகள் ஆகியோரிடம் பணந்திரட்டும் கலையை இந்திய நாட்டுக்குக் கற்றுக் கொடுத்ததே காங்கிரசுக் கட்சி தான்!.

இனி, தனி நபராயிருந்தால் பல கோடி ரூபாய் இருந்தால் தேர்தலில் போட்டியடும் நடைமுறைத் தகுதி (de facto. qualification) வரும். கட்சியாய் இருந்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் இருந்தால் தான் ஒரு மாநிலத்தில் போட்டியிடும் நடைமுறைத் தகுதி வரும். இந்தியா முழுக்கப் போட்டியிடுவதென்றால் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் காங்கிரசு தோற்றதற்கு முதல் பெரும் காரணம். தமிழகத் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு தமிழ்நாட்டு தமிழர்களுக்கு எதிராக, ஈழத் தமிழர்களுக்கு எதிராக, காவிரி முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்றவற்றில் தமிழக உரிமைகளுக்கு எதிராக ஆவேசமாகப் பேசிய ஆண்களும் பெண்களும் தாம் ஆவர்! அதேபோல், கூடங்குளம் அணு உலை காவிரிப் படுகை மீத்தேன் திட்டம், தேவாரம் நீயூட்ரினோ போன்ற மனித குலத்திற்கெதிரான திட்டங்களை ஆதரித்து காங்கிரசுப் பேச்சாளர்கள் நடத்திய தொலைக்காட்சி விவாதங்களும் ஆகும்!

இனி, தமிழக பா.ச.க.வின் ஆண், பெண் பிரச்சார பீரங்கிகள், தமிழகத் தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரசுப் பேச்சாளர்கள் நடந்து கொள்வது போல் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பா.ச.க. தனித்து ஆட்சி அமைக்கும் அறுதிப் பெரும்பான்மை (282) பெற்றிருப்பது அக்கட்சிக்குப் பெரிய சாதனைதான்! ஆனால் அவ்வெற்றிப் பள்ளத்தாக்குகள் பெரிதும் இந்தி மண்டலமே! ஆனால் அது அசாமில் பெற்றிருக்கும் வெற்றி மேற்கு வங்கத்தில் கால்பதித்திருப்பது போன்றவை கவனத்திற்குரியவை.

பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்து ஓடிக் களைத்துப்போன காங்கிரசுக் குதிரைகளை அவிழ்த்துவிட்டு , பா.ச.க. குதிரைகளை மாற்றி வண்டியில் பூட்டிவிட இந்தியப் பெருமுதலாளிய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் விரும்பின. அவ்விருப்பம் நிறைவேறியிருக்கிறது.

காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் இடையே பொருளியல் கொள்கையில் வேறுபாடில்லை என்று பலரும் கூறுவர். இனக் கொள்கையிலும் வேறுபாடில்லை. ஆரியச்சார்பு, ஆரிய இன, மொழி வலயத்திற்குள் வராத இனங்களை அயன்மை யோடு நோக்குவது, குறிப்பாகத் தமிழினத்தைப் போட்டி இனமாகக் கருதிப் புறக்கணிப்பது, ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழினத்தைப் பகையினமாகவே கருதுவது போன்றவற்றில் காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் இடையே கருதத்தக்க வேறுபாடு எதுவுமில்லை. இந்துத்துவா கொள்கையைத் தந்திரமாகவும் நிதானமாகவும் கடைப்பிடிக்கும் காங்கிரசு, ஒளிவு மறைவின்றியும் தீவிரமாகவும் இந்துத்துவாவை செயல்படுத்தும் பா.ச.க..

இனப்படுகொலைக் குற்றவாளியாகப் பன்னாட்டரங்கில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள இராசபட்சேவை சிறப்பு விருந்தினராக அழைக்கும் முரட்டுத் தனம் பா.ச.க.வுக்கு உரியது. இனப்படுகொலைக் குற்றத்திற்காக, பன்னாட்டுப் புலன் விசாரணையோ, தண்டனையோ வராமல் இராசபட்சே கும்பலைப் பாதுகாக்கும் அரசியல் தந்திரம் காங்கிரசுக் குரியது!

1947இல் விடுதலை அடைந்த இந்தியா பக்கத்தில் தனி நாடாக இருந்த காசுமீரை விழுங்கியபோது, எதிர்த்துப் போராடிய காசுமீர் மக்களை அமைதிப் படுத்துவதற்காக, வழங்கப்பட்ட சிறு உரிமை தான் அரசமைப்புச் சட்ட விதி 370 அதை காங்கிரசு நடுவண்அரசு அரித்து, அரித்து, மற்ற மாநிலங்களுக்கு இணையாக காசுமீரை அடிமைப் படுத்திவிட்டது.

அரிக்கப்பட்ட அந்த 370ஐயும் நீக்க முயல்கிறது பா.ச.க.. அடுத்து அயோத்தியில் அத்வானி தலைமையில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி மண்ணில் இராமர் கோயில் கட்டும் முயற்சியில் பா.ச.க. அரசு இறங்கும்.

பா.ச.க.வின் ஆரியப் பார்ப்பனியத் தீவிரவாதாம் – தமிழின எதிர்ப்பு போன்றவை எதிர்வினையாகத் தமிழகத்தில் – தமிழர் அறம் சார்ந்த சமூக சமத்துவம், உண்மையான மதச்சார்பின்மை, தமிழின் எழுச்சி ஆகியவற்றை உண்டாக்கும். அதற்குரிய ஈகம் செய்யவும் அணியமாக இருக்க வேண்டும்.

அடுத்து தமிழ்நாட்டில் 16ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சிறிது பார்க்க வேண்டும்.

காங்கிரசும் தி.மு.க.வும் வீழ்த்தப்பட்டது, ஈழச் சிக்கலில் அவற்றின் தமிழினப் பகை மற்றும் தமிழின இரண்டகம் ஆகியவற்றிற்குத் தமிழ் மக்கள் கொடுத்த பதிலடி தான் என்று கருதினால் அது நமது விருப்பத்திற்கேற்ப கொடுத்துக் கொள்ளும் விளக்கமாகவே இருக்கும்.

காங்கிரசு வட மாநிலங்களிலும் இதர தென் மாநிலங்களிலும் கேரளாவைத் தவிர அடியோடு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 44 தொகுதிகளில் மட்டுமே அது வென்றுள்ளது. அங்கு செயல்பட்ட காங்கிரசு வீழ்ச்சிக்கான காரணங்கள் தமிழ்நாட்டில் கூடுதலாகவே வேலை செய்திருக்கும், தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. என்று கூட்டணி சேர்ந்தே கும்மாளம் போட்ட காங்கிரசுப் பிரமுகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உறவறுந்து பல்லாண்டுகள் ஆகி விட்டன.

கெட்டாலும் கிழிந்தாலும் கலைஞரை விட்டால் தமிழினத்திற்கு வேறு யார் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற பழைய மூடநம்பிக்கை ஈழ இன அழிப்புப் போருக்குப் பின் தகர்ந்தது என்பது உண்மை. கணிசமான தமிழின உணர்வாளர் வாக்கு வங்கியை அவர் இழந்து விட்டார் என்பது உண்மைதான். ஆனால் அவரது தோல்விக்கு அது முதன்மைக் காரணமன்று; கூடுதல் காரணம்.

ம.தி.மு.க. தலைவர் வைகோவின் தோல்வி புகட்டும் முதல் பாடம் என்ன? ஈழத்தமிழர் ஆதரவு ஆற்றல்களும் தமிழின உணர்வு ஆற்றல்களும் தமிழ்ச் சமூகத்தின் மேல் தளத்திலிருந்து கீழ்த் தளம் வரை வேர்விட்டுப் பரந்து படர்ந்த வெகுமக்கள் ஆற்றல்களாக வளர்ச்சி பெறவில்லை. இதற்குக் காரணம் ஈழத் தமிழர் துயரங்களை - பெருமிதங்களை தமிழகத் தமிழின கட்சிகளும் அமைப்புகளும் பரந்துபட்டு எடுத்துச் செல்லவில்லை என்பதன்று; தமிழ்நாட்டுச் சிக்கல்களில் ஆழக்காலூன்றி; வெகுமக்கள் திரளும் போராட்டங்கள் நடத்தி அடிப்படையில் தமிழ்நாட்டுக் கட்சிகளாக – அமைப்புகளாக அடித்தளம் பெறாமல், ஈழத் தமிழர் சிக்கல்களை மட்டும் முதன்மைப் படுத்தியது தான்.

வைகோ அவர்கள் பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்தது தமிழின நோக்கில் பெரும்பிழை. ஆனால் அதற்காகவே அவர் தோற்கடிக்கப்பட்டார் என்று கருதினால் அது பெரும் பிழை. பா.ச.க.வைத் தமிழ்நாட்டில் அண்டவிடக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி தமிழ்நாட்டில் பெரிதாக நிலவவில்லை. கன்னியகுமரியில் பா.ச.க.வெற்றி பெற்றுள்ளதும், கோவையில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியுற்றதும் தமிழகத்தில் நிலவும் பா.ச.க.எதிர்ப்புணர்ச்சியைக்காட்டவில்லை. அதன் செல்வாக்கு வளர்ச்சியைக் காட்டுகிறது.

பெரும்பாலும் கூட்டணி வலுவில் வெல்வது தான் தி.மு.க.வின் வரலாறு. இந்தத் தடவை அதற்கு வலுவான கூட்டணி இல்லை. குடும்பச் சண்டை; கட்சிக்குள் குழுச் சண்டை; காங்கிரசுக் கூட்டணியில் ஒன்பதாண்டுகளும் அதற்குமுன் பா.ச.க. கூட்டணியில் ஐந்து ஆண்டுகளும் ஆகமொத்தம் 14 ஆண்டுகள் சேர்ந்தாற்போல் நடுவண் அரசியல் ஆட்சியில் இருந்து தன்னல அரசியல் நடத்தியது, இமாலய ஊழல்களில் மாட்டிக் கொண்டது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன தி.மு.க. வீழ்ச்சிக்கு! அ.இ.அ.தி.மு.கவுக்கு அடுத்த நிலையில் 22 விழுக்காடு வாக்குடன் தி.மு.க. தான் உள்ளது. இறுதிக்கும் இறுதியாக தி.மு.க. வீழ்ந்து விட்டது என்று கருதக் கூடாது. மீண்டும் எழ அது எல்லா சாகசங்களையும் சந்தர்ப்ப வாதங்களையும் கையாளும்.

அ.இ.அ.தி.மு.க. நடுவணரசைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது. அந்த எதிர்க்கட்சி அரசியலை செயலலிதா நன்கு பயன்படுத்தினார். அ.இ.அ.தி.மு.க. அமைப்பு தி.மு.க.வைப்போல் கலகலத்துப் போய்விடவில்லை. தலைமையின் அதிகார அதட்டலும் நடவடிக்கையும் – இரண்டாம் நிலைத் தலைவர்களிடம் அச்சமும் ஒரு பக்கம் – இன்னொரு பக்கம் தலைமையிலிருந்து கிளை வரை அ.இ.அ.தி.மு.க.வில் வலுவாக ஆதாயம் அடைகிறார்கள். இந்த நிலைமைதான் அக்கட்சியின் அமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளன.

கருணாநிதியின் தலையிலிருந்து கழன்று விழுந்த “தமிழினக் காவலர் அட்டை கிரீடம்” இப்போது அம்மா தலையில் செருகப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஆட்சி அதிகாரம், ஆயிரங் கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு தேர்தல் தானம், எதிர்முகாம் வலுவின்றி சிதறிக்கிடந்தது என எல்லாம் சேர்ந்து அ.இ.அ.தி.மு.க.வுக்கு அம்மாவே எதிர்பார்க்காத வெற்றியைக் கொடுத்துள்ளது. இது நிரந்தரமல்ல என்று அவருக்கே தெரியும்.

அ.தி.மு.க.வுக்குப் புதிய வரவாக அண்மைக் காலங்களில் மார்வாடி, குசராத்தி, மலையாளி உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் வாக்குவங்கி உருவாகியுள்ளது. வெளி மாநிலத்தவரைப் பொறுத்தவரை அவர்களின் முதல் தேர்வு காங்கிரசு; காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பில்லையெனில் பா.ச.க.; பா.ச.க.வுக்கும் வெற்றி வாய்ப்பில்லை எனில் அ.இ.அ.தி.மு.க..

பா.ச.க.வையும் அ.இ.அ.தி.மு.க.வையும் பங்காளிக் கட்சிகள் போல் பார்க்கும் பார்வை தமிழ்நாட்டிலேயே ஒரு சாரார்க்கு இருக்கிறது வெளி மாநிலத்தவர்க்கும் அதே கருத்து உள்ளது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - தி.மு.க. – காங்கிரசு - பா.ச.க. என்ற வரிசையில் கட்சிகளின் வலு இருக்கிறது. காங்கிரசு இடத்தை பா.ச.க. கைப்பற்றலாம்.

சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த வாய்ப்பு எதுவும் எதிர்காலத்தில் இல்லை. அவை மண்ணுக்கேற்ற - தமிழகத்துக்கேற்ற இடதுசாரிக் கட்சிகளாய் தங்களை மாற்றிக் கொண்டால், வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கும். அதற்கு முதல்தேவை அவை அனைத்திந்திந்தியத் தலைமையிலிருந்து துண்டித்துக் கொண்டு, தமிழகக் கட்சிகளாக மாற வேண்டும். இல்லையேல் அவற்றிற்கு எதிர்காலம் இல்லை.

ஏதாவதொரு பெரிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அது கொடுக்கும் இடங்களில் போட்டியிடுவது என்ற நிலைதான் தொடரும்.

நாட்டின் போக்கை – உற்றுக் கவனித்து, தனது மக்கள் எழுச்சிப் பாதையை ஒழுங்கு செய்து கொள்வதற்காகவே புரட்சிகரத் தமிழ்த் தேசியம் இப்பகுப்பாய்வை செய்கிறது; தேர்தலில் பங்கு கொள்வதற்காக அன்று.

Pin It