வடநாட்டுப் பெரு முதலாளிய நிறுவனமாக உருவெடுத்து, இன்று உலகமய முதலாளிய நிறுவனமாக பல நாடுகளில் கிளைப்பரப்பி “வளர்ந்து’’ள்ள இரத்தன் டாடாவின், டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் எனப்படும் டி.சி.எஸ். நிறுவனம், 25,000 தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது, பல விவாதங்களை எழுப்பியுள்ளது.

அண்மையில்தான், தமிழகத்தில் நோக்கியா _ பாக்ஸ்கான் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பல்லாயிரக் கணக் கானத் தொழிலாளர்கள் வீதிக்கு வந்தனர். தற்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் எதிரொலிக்கின்றன.

இதுவரை, பலமுறை பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தமது ஊழியர்களை, கசக்கி எறியப் பட்டக் காகிதங்களாக பணியை விட்டு வெளியேற்றி யுள்ளன. ஆனால், டி.சி.எஸ். நிறுவனத்தின் இந்த புதிய வெளியேற்ற நடவடிக்கை என்பது, பத்தோடு பதினொன்றான நடவடிக்கை அல்ல. காரணம், டி.சி.எஸ். நிறுவனம் சாதாரண நிறுவனமல்ல. வருவாய் அடிப்படையில், இந்தியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், டி.சி.எஸ். தான்.

உலக அளவில் அதிகளவிலான பணியாளர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எம். -_ எச்.பி. நிறுவனங்களுக்கு, அடுத்த இடத்தில் டி.சி.எஸ். நிறுவனம்தான் உள்ளது. கடந்த சூன் 2014 நிலவரப்படி, உலகெங்கும் உள்ள டி.சி.எசின் கிளை அலுவ லகங்களில், 3.10 இலட்சத் திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி யாற்றி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 15 _- 2014 அன்று, டி.சி.எஸ். நிறுவனம், தனது கடைசி காலாண்டில் ரூ. 5,357.6 கோடி அதாவது சற்றொப்ப 48.2 விழுக்காடு இலாபம் ஈட்டியதாகத் தெரிவித்தது. இந்நிறுவனத்தின், கடந்த 2013 _ -14ஆம் நிதியாண்டின் மொத்த ஆண்டு வருவாய் 81,809 கோடி ரூபாய். இது முந்தைய நிதி ஆண்டைவிட 37.69 விழுக் காடு அதிகம். (காண்க: தி இந்து பிசினஸ் லைன், 16. 04. 2014.)

இப்படி இலாபகரமாக செயல் பட்டு வரும் டி.சி.எஸ். நிறுவனம், திடீரென ஒரு அறிவிப்பை வெளி யிட்டது. தங்கள் நிறுவனத்தில் பல்லாண்டுகளாக மேலாண்மைப் பணிகளில் பணிபுரிந்துவரும் 30,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்தது. இன் னொரு புறத்தில், 55,000 புதிய பணியாளர்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என் றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

டி.சி.எஸ். நிறுவனத்தில் திட்ட மேலாக்கப் பணிகளில் உள்ள AST - Assistant System Consultant மற்றும் ASC - Associate System Consultant உள்ளிட்ட தொழில்நுட்ப உதவி ஆலோசகர் நிலைகளில் உள்ளவர் கள் சற்றொப்ப, 45,000 பேர். அதை, 20,000 எனக் குறைப்பதே நோக்க மென டி.சி.எஸ். நிர்வாகம் நட வடிக்கை களில் இறங்கியுள்ளது. இப்பணியாளர்கள், கீழ்மட்டத்தில் மென்பொருள் எழுதும் பணியா ளர்களை மேலாண்மை செய்தல் மற்றும் அவர்களுக்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை அளித் தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடு படுபவர்கள்.

பல்லாண்டுகளாக உழைத்துச் சேகரித்த அறிவின் காரணமாகவே, இவர்கள் அப்பணியில் இருக்கின் றனர். கடுமையான சிக்கல்களுக்கு, மூளையைக் கசக்கிப் பிழிந்து உடனடித் தீர்வுகளை அளிக்க வேண்டிய கட்டாய நிலையிலேயே பணிபுரிபவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி பயிலும் காலத்திலேயே கல்லூரி வளாகத் தேர்வுகளிலிருந்து டி.சி. எஸ். பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட் டவர்கள் என்பதால், தற்போ துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களின் கள நிலவரமோ, பணிக்கு எடுக்கும் முறையோ இவர்களுக்கு பழக்கப்பட்டிருக்காது.

இலட்சங்களில் வருமானம் ஈட்டுபவர்களாக இவர்களில் பலர் இருந்தாலும், இவர்களில் பெரும் பாலானவர்கள், தற்போது திருமண மாகி வீட்டுக் கடன், தம்பி _- தங்கை திருமணக் கடன், வாகனக் கடன் என 30 அகவையைக் கடந்து ‘கடன்’ களோடு வாழ்பவர்கள். இவர்களை திடீரென வேலையிலிருந்து விரட் டும் போது, ஏற்படுகின்ற விரக்தியும் மனஉளைச்சலும், இவர்களைக் கடுமையாக பாதிக்கும்.

திங்கள்தோறும் ணிவிமி எனப் படும் மாதக் கடன் தவணை கட்டும் இவர்களை, திடீரென ஒருநாள் அழைத்து, “உங்கள் செயல்பாடுகள் நிறுவனத்திற்குத் திருப்திகரமாக இல்லை. இந்த விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டு விட்டு, வெளி யேறி விடுங்கள்’’ எனச் சொல்லும் போது, ஒடிந்து போகிறார்கள். புதிதாக எடுக்கப்படவுள்ள இளைஞர்களுக்கும், இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதுதான் கதி!

கடந்த 2008ஆம் ஆண்டுகூட, இதே டி.சி.எஸ். நிறுவனம் 2 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருந்த 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை, ‘செயல்திறன் குறைவு’ எனக் காரணம் கூறி வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியாளர் வெளியேற்ற நடவடிக்கை எப்பொழுதும் ஒரே பெயரில் நடப்பதில்லை. தற்போது, டி.சி.எஸ். அதற்கு வைத்துள்ள பெயர், மறுசீரமைப்பு மற்றும் உழைப்புச் சக்தி மேம்பாடு (Restructuring and Work-force Optimization) என்பதாகும். உண்மையில், இது டி.சி.எஸ். நிறுவனத்தின் பணியாளர் களை சீரமைக்கும் பணியல்ல. அந்நிறுவனத்தின், இலாபத்தை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான பணி!

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத்திற்கு சில கோடிகள் இலாபம் குறைந் திருக்கிறது என்று சொல்லி, பணி நீக்க நடவடிக்கைகள் நடைபெ றவில்லை. நிறுவனம், இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்போதே, இது நடக்கிறது எனில், டி.சி.எஸ். நிறுவனம் மேலும் மேலும் இலாபம் கொழுக்க, தனது ஊழியர்களையே காவு கொடுக்கத் தயாராகிவிட்டது என்று பொருள்! இலாபவெறியைத் தவிர, வேறெதுவும் அறியாத பன் னாட்டு நிறுவனங்களில் டி.சி. எஸ். என்ன விதிவிலக்கா?

உண்மையில் இந்தப் பணிநீக்க நடவடிக்கை டி.சி.எசில் மட்டும் நடப்பது அல்ல. விப்ரோ, ஐ.பி.எம். போன்ற நிறுவனங்கள் இது போன்ற பணி நீக்கங்களை ஏற் கெனவே சத்தமின்றி நடத்தி வரு கின்றன. நாளை, இது மற்ற நிறுவ னங்களிலும் எதிரொலிக்க வாய்ப் புகள் அதிகம்.

ஏற்கெனவே, தகவல் தொழில் நுட்பத் துறையில் புதிதாக பணியா ளர்கள் எடுப்பது குறைந்து கொண்டே வருகின்றது. கடந்த 2012-_ 2013ஆம் ஆண்டில், ஒவ்வொரு 100 கோடி ரூபாய் வருமானத் திற்கும், 26,500 புதிய பணியாளர்கள், இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் சேர்க்கப்பட்டனர். இது, கடந்த 2013 -_ 2014ஆம் ஆண்டில், பாதியாகக் குறைந்து 13,000 ஆக உள்ளது என ஐ. டி. முதலாளிகள் சங்கமான நாஸ்காம் அமைப்புத் தெரிவிக்கிறது. (காண்க : தி எக்னாமிக் டைம்ஸ், 12. 12. 2014)

இலாபம் ஈட்டுவதற்காகவும், பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காகவும் வேலை வாங்குவ தற்காகவும் மட்டும் ‘குழு முயற்சி’ (ஜிமீணீனீ மீயீயீஷீக்ஷீt) என்று பேசி வேலை வாங்கும் நிர்வாகம், பணியாளர் களுக்குப் பணி நீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் போது மட்டும் ஒன்று சேரக் கூடாது எனத் தடுப்பதில் கவனமாய் இருக்கின்றன.

‘கூட்டு உழைப்பு’  என வெளியில் சொல்லிக் கொண் டாலும், உண்மையில் இப்பணியாளர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற் காக, ஒவ்வொருவருக்கும் தனித் தனி தரமதிப்பீடுகள், கமுக்கமான முறையில் அளிக்கப்படும் பதவி உயர்வு - செயல் திறன் மதிப்பீட்டு அறிக்கைகள் என ஒவ்வொரு நிறுவனத்தாலும் கவனமாகக் கையாளப் படுகின்றனர்.

இன்னொரு புறத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையிலுள்ள பணியாளர்களில் பெரும்பாலா னோர், உலகமயப் பொருளியல் வளர்த்தெடுக்கும் நுகர்வியப் பண்பாட்டில் மூழ்கித் திளைப்பவர் களாக வளர்த்தெடுப் பட்டுள்ள னர். உதிரிகளாக சிந்திக்கும் மன நிலையைப் பெற்றவராக உருமாற் றப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு, உதிரிகளாக உள்ள தகவல் தொழில்நுட்பத் தொழிலா ளர்கள் தங்களுக்கென பாதிப்புகள் வரும்போது, சக பணியாளர்க ளுடன் இணைந்து போராடுவதற் கான மனநிலையையும் இழக்கின்ற னர். எனவே, அவர்கள் தங்க ளுடைய உரிமைகளை வென்றெ டுக்க அமைப்பாய்த் திரள்வதில், மனத்தடை இருக்கிறது. அதை, உடைத்தால்தான் அவர்களுக்கு வெளிச்சம் பிறக்கும்.

இத்துறைப் பணியாளர்களைப் பாதுகாக்க, தொழிலாளர் நலச் சட்டங்கள் பல இருந்தும், அது குறித்த போதிய விழிப்புணர்வு இப்பணியாளர்களுக்கு இல்லை. ஓரளவு விவரம் அறிந்தவர்கள், பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக் கின்றனர்.

2013ஆம் ஆண்டு மே மாதம், பெங்களுரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய சீலா என்ற பணியாளர் வேலையை விட்டு நீக்கப்பட்டபோது, நீதிமன் றத்தில் சென்று வாதாடினார். மகளிர் ஆணையத்தில் முறையிட் டார். நீதிமன்றத்தில் அவ்வழக்கு வெற்றி பெற்று, அந்நிறுவனம் அப்பெண் ணுக்கு 10 இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோல், பாதிக்கப் பட்ட அனைவரும் முறையிடலாம். தனித்தனியாக வழக்குத் தொடுப் பதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் அமைப்பாய்த் திரண்டு முறையிடும் போது, அது மற்ற பணியாளர் களுக்கும் பலனைப் பெற்றுத்தரும்.

இன்னொரு கவலைக்குரிய செய்தி, பல தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய அரசு விலக்கு அறிவித்திருக்கிறது. இன்னும் பல சட்டங்களிலிருந்து அந்நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க, காங்கிரசு - பா.ச.க. அரசுகள் தயக்கம் காட்டுவதில்லை.

தொழிற்சாலை வேலை வாய்ப்பு நிலை ஆணைகள் சட்டம் -_ 1946 என்றொரு சட்டம் உள்ளது. ஒரு தொழிற் சாலை அல்லது நிறுவனம், தனது பணி யாளர்களை எப்பொழுது வேலையைவிட்டு நீக்கலாம், என்ன காரணத்திற்காக நீக்கலாம் என்ப வற்றை அந்நிறுவனம் வரையறுத்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது இச்சட்டம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோ லோச்சும் இந்தியாவில், இச்சட்டம் அந்நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தாது என அறிவிக்கப் பட்டுள்ளது பலரும் அறியாத செய்தி. அதற்கான சிறப்புரிமையை, இந்திய அரசு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அளித் துள்ளது.

இதன் காரணமாகவே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங் கள் பணியாளர்களை தன் விருப்பம் போல் பணியை விட்டுத் துரத்த முடிகின்றது. இச்சட்டத்தின் வரை யரைக்குள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களையும் இணைக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 19(1)(c)-பிரிவின்படி, குடிமக்கள் ஒவ்வொருவரும் சங்கங்களில் அமைப்பாவதை அடிப்படை உரிமையாக அறிவிக்கிறது. ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்கள், பணியாளர்களை வே லைக்குச் சேர்க்கும்போது பெறப் படும் நிபந்தனைகளில் ஒன்றாக, சங்கம் வைக்கமாட்டோம் என் பதையும் சேர்த்துக் கொண்டு, கையெழுத்து வாங்குகின்றன. இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரா னது. நீதிமன்றத்தில் இவ் ஒப்பந்தம் செல்லக் கூடியதும் அல்ல.

எனவே, தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் தங்களை அமைப்பாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

டி.சி.எஸ். நிறுவனம் அமைத் திட, மக்கள் வரிப்பணத்தில் இலவ சமாக நிலம் _- நிலத்தடி நீர் _- மின் சாரம் _ வரிச்சலுகை எனப் பலவற் றையும் அளிக்கும் அரசு, தொகை தொகையாகத் தொழிலாளர்கள் வேலையை விட்டுத் துரத்தப்படும் அநீதி கண் முன்னேயே நிகழ்ந்து கொண்டி ருக்கும்போது, அமைதி யாக வேடிக்கைப் பார்ப்பது சரி யல்ல.

“இந்தியாவில் தயாரிப்போம்” என்ற பெயரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, நாட்டை ஏலம் விட்டுக் கொண்டி ருக்கும் நரேந்திர மோடி அரசு, இதே நிறுவனங்களால் வீதிக்கு விரட்டப்படும் மக்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது?

சாலைப் போக்குவரத்து விதி மீறல்களையெல்லாம் தானே சுயமாக வழக்குப் பதிந்து விசாரிக்கும் நீதிமன்றங்கள், கண் முன்னேயே சாலையில் வீசப் படும் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்களின் பணிப் பாது காப்பை உறுதிசெய்ய, ஏன் வழி காட்டும் நெறிமுறைகளை உரு வாக்கக் கூடாது?

தெரிந்தோ - தெரியாமலோ அரசும் நீதிமன்றங்களும் செய்ய மறுக் கும் இவற்றை, நாம் செய்தாக வேண் டும்.

அமைப்பாய்த் திரண்டு, தம் உரிமைகளைக் கேட்க தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் முன்வர வேண்டும்.

Pin It