cauvery 331

வருகின்ற மார்ச் ஏழாம் நாள் தேன்கனிக் கோட்டையிலிருந்து கர்நாடகத்தின் மேக்கே தாட்டு நோக்கி நாம் பல்லாயிரக் கணக்கில் பேரணியாகப் புறப்பட வேண்டும்.!

எந்த மண்ணில் நம் காவிரித் தாயை சிறை வைக்க இரு சிறைச்சாலைகள் கட்டப்பட இருக்கின்றனவோ அந்த மண்ணை நோக்கி நாம் புறப்பட வேண்டும். “மேக்கே தாட்டு, இராசி மணல் ஆகிய இடங்களில் சட்ட விரோதமாக அணைகள் கட்டி, தமிழகத்திற் குரிய தண்ணீரைத் தடுத்துச் சிறை வைக்காதே! தமிழகத்திற்குரிய காவிரி நீரைத் திருடாதே” என்று முழங்கி முற்றுகைப் போர் நடத்துவதற்காக நாம் பல்லாயிரக் கணக்கில் பேரணியாகச் செல்ல வேண்டும்.

1991 சூன் மாதம் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டதற்காகக் காவிரிக் கலகம் என்ற பெயரில் கர்நாடகத் தமிழர் களைத் தாக்கிப் படுகொலை செய்த அந்தக் கன்னட மண்ணுக்கு _- பல்லாயிரக் கணக்கான கர்நாடகத் தமிழர்கள் வீடுகள் எரிக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்ட அந்தக் கர்நாடக மண்ணுக்கு _ தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட, இரண்டு இலட்சம் தமிழ் மக்களை ஏதிலிகளாக விரட்டிவிட்ட அந்தக் கன்னட மண்ணுக்கு நாம் பேரணியாகப் போகப் போகிறோம்.

1991 காவிரிக் கலகத்தில் கன்னடர்களால் படுகொலை செய்யப்பட்ட கர்நாடகத் தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டுத் தேன்கனிக்கோட்டை யிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் மேக்கே தாட்டு நோக்கி நடை அணிவகுப்பு நடத்த இருக்கிறோம்.

காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவ தற்குக் கர்நாடக அரசு உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கேட்டு பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரியுள்ளன. அவற்றில் மூன்று நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது கர்நாடக அரசு!

இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் மாநில அரசால் கோர முடியாது. இந்திய அரசின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் அணை கட்டித்தர ஒப்பந்த விண்ணப்பங்கள் போட்டு, ஒப்பந்த உரிமை பெற முடியாது.

இந்திய அரசு நடுநிலையாக இல்லை. காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் பின்னர் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்துவரும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டிற்குப் பாதகமாகவும் செயல்படுகிறது. தீர்ப்பாயத் தீர்ப்பை மட்டுமல்ல உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கிறது கர்நாடகம்!

தமிழ்நாட்டின் சட்ட உரிமைகளை மறுத்து தமிழகத்தில் காவிரிப் படுகையைப் பாலைவனமாக் கிடும் வகையில் அட்டூழியம் புரியும் கர்நாடக அரசு பன்னாட்டு நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி காவிரியில் சட்டவிரோத அணைகள் கட்ட இந்திய அரசு அனுமதிக்கிறது; எல்லா உதவிகளும் செய்கிறது.

ஏ ஏமாளித் தமிழினமே, இப்போதாவது எண்ணிப்பார்! 1976 _ -77இல் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி டெல்டா நவீனப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு உலக வங்கியிடம் கடன் கேட்டபோது, இந்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டது. அப்போது அது சொன்ன காரணம், காவிரித் தண்ணீர்ப் பகிர்வுத் தகராறு கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே இருப்பதால் ஒப்புதல் தர முடியாது என்றது. இப்போது அந்தத் தகராறு தீர்ந்து விட்டதா? இல்லை! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. கர்நாடகம் புதிய அணைகள் கட்டப் பன்னாட்டு நிதி நிறுவனத்திடம் 600 கோடி ரூபாய் கடன் வாங்க இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழ் அளித்தது எப்படி?

தமிழர்களே, இன்னும் புரியவில்லையா? இந்திய அரசு தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே நடுநிலை எடுக்கவில்லை. அது கர்நாடகத்திற்கு ஆதரவாக தமிழகத்திற்குப் பாதகமாகச் செயல்படுகிறது.

மூடி வைத்துக் கழுத்தறுக்கும் வேலையைத்தான் நடுவண் அரசு காங்கிரசு ஆண்ட போதும் செய்தது; இப்போது பாசக ஆளும் போதும் செய்கிறது.

மேக்கேதாட்டு, இராசிமணல் அணைகள் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வராது. கபினி அணை நிரம்பி வெளியேற்றப்படும் வெள்ள நீர்தான் பெரும்பாலும் மேட்டூர் அணைக்கு வருகிறது. அடுத்து கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பி வெளியேற்றப்படும் வெள்ள நீர் நேரே மேட்டூர் அணைக்கு வருகிறது. இவ்விரு அணைகளில் வெளியேற்றப்படும் வெள்ள நீர் இணைந்து ஓடி வரும் இடத்தில் புதிய தடுப்பாக இரு பெரும் நீர்த்தேக்கங்களைக் கர்நாடகம் கட்ட முனைகிறது. இவற்றின் கொள்ளளவு 48 ஆ.மி.க. (டி.எம்.சி.)

கடந்த 2013ஆம் ஆண்டு எட்டாண்டுகளுக்குப் பிறகு (2005க்குப் பிறகு) மேட்டூர் அணை நிரம்பியது. மிகை நீர் வெளியேற்றப்பட்டுக் கடலுக்குப் போனது. இதை அறிந்த கர்நாடகக் கட்சிகள் - மேட்டூர் அணை நிரம்பும் அளவிற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டியதாயிற்றே என்று வயிறு எரிந்தன. ஆத்திரப் பட்டன. அதன் விளைவு, புதிய அணைகள் கட்டும் திட்டத்தைப் புயல் வேகத்தில் விரைவுபடுத்தியது கர்நாடக அரசு!

ஏமாளித் தமிழர்களே இப்பொழுதாவது புரிகிறதா கர்நாடகத்தின் பகைப்போக்கு?

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தமிழர் களை ஏமாற்ற நயவஞ்சகமாக உறுதிமொழி ஒன்று கூறுகிறார். கர்நாடகம் இரு புது அணைகள் கட்டினா லும் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ளபடி ஆண்டுதோறும் 192 ஆ.மி.க. (டி.எம்.சி) தண்ணீர் தமிழகத்திற்குத் திறந்து விடுவார்களாம்!

25.6.1991இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கி உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அரசிதழிலும் வெளியிடப் பட்ட இடைக்காலத் தீர்ப்பின்படி தரவேண்டிய 205 ஆ.மி.க. (டி.எம்.சி) தண்ணீரைக் கடைசி வரைத் தமிழகத்திற்குத் திறந்து விடவில்லை. 5.2.2007 இல் தீர்ப்பாயம் வழங்கி உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அரசிதழிலும் வெளியிடப்பட்ட 192 ஆ.மி.க. (டி.எம்.சி) தண்ணீரை இன்றுவரை தமிழகத்திற்குத் திறந்துவிட மறுத்து வருகிறது கர்நாடகம்! புதிதாக இரண்டு அணைகள் கட்டுவதைத் தமிழகம் எதிர்க்கக் கூடாது என்றும் அணை கட்டியபின் ஆண்டுதோறும் 192 ஆ.மி.க திறந்துவிடுவோம் என்றும் கர்நாடகம் கூறுவது எவ்வளவு பெரிய சகுனித்தனம்! எத்தனை பெரிய சதித்திட்டம்!

தமிழகத்திற்கெதிரான கர்நாடகத்தின் சதித்திட்டம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்தே அது உருவாக்கிக் கொண்ட சதித் திட்டம்.

2007ஆம் ஆண்டு முதல் மேக்கேதாட்டுப் பகுதியில் புதிய அணைகள் கட்ட அது திட்டமிட்டது. 2012 இல் இதற்காக இரு இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்) அதிகாரிகளின் கீழ் இருபத்தைந்து நீர்வளத்துறை வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக்குழு அமைத்தது. அது 56 இடங்களில் ஆய்வு செய்து, காவிரிப் பகுதியில் சிறியதும் பெரியதுமான 30 அணைகளைக் கட்டலாம் என்று ஆய்வறிக்கை அளித்தது. இதன் மூலம் புதிதாக 11.5 இலட்சம் ஏக்கர் நிலங்களைப் பாசன வேளாண் மைக்குக் கொண்டு வரலாம் என்றும் ஆய்வறிக்கை கூறியது.

2007ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்திற்கு எதிராகக் காவிரியைத் தடுத்திடக் கர்நாடகம் திட்டமிட்டுச் செய்துவந்த இத்தனை வேலைகளையும் 2013 வரைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இக்காலத்தில் தி.மு.க. ஆட்சி செய்தது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி செய்தது. 21.8.2013 அன்று பெங்களூரில் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் செயச்சந்திரா மேக்கேதாட் டுப் பகுதியில் மொத்தம் 50 ஆமிக கொள்ளளவு கொண்ட மூன்று அணைகள் கட்டக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்தார். அதன்பிறகு மேற்படி அணைகள் கட்டத் தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுப் போட்டது.

2012இல் கர்நாடக ஆய்வுக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த போதே தமிழகம் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.கவும் ஒன்றையன்று வீழ்த்தும் பகை அரசியலில் முழுக்கவனம் செலுத்துகின்றனவே தவிர, தமிழக உரிமைகளைக் காப்பதில் உரிய முன்னெச்சரிக்கையுடனும் துடிப்புடனும் செயல்படுவதில்லை.

இத்தனைக் கேடுகள் வந்துற்ற பின்னும் தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடியவில்லை. ஏன், சட்ட மன்றத்தில் முதல் அமைச்சர் செயலலிதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் விசயகாந்த் மூன்று பேரும் என்றைக்காவது ஒரே நேரத்தில் அமர்ந்து காவிரி பற்றியோ, தமிழகத்தின் முக்கிய சிக்கல்கள் குறித்தோ பேசியிருக்கி றார்களா? இல்லை!

கர்நாடகத்தில் காவிரி பற்றி விவாதிக்கும் போது காங்கிரசு -_ பாசக _- மதச்சார்பற்ற சனதாதளம் ஆகிய முக்கியக் கட்சித் தலைவர்கள் - யார் முதல்வராக இருந்தாலும் சட்டமன்றத்தில் ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்கிறார்கள். ஒருமித்து முடிவெடுக்கிறார்கள். அவ்வாறு கர்நாடகத்தில் அக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக உட்கார்நது கர்நாடகச் சிக்கல்களைப் பேவில்லை என்றால், கன்னட மக்கள் அந்தக் கட்சித் தலைவர்களை “இனத் துரோகிகள்” என்று ஏசுவார்கள். அங்கு மக்களைக் கண்டு தலைவர்கள் அஞ்சுகிறார்கள். தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு மக்கள் பயப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆட்டு மந்தை, மாட்டு மந்தை போலத் தங்களுக்கான ஓட்டு மந்தை என்றுதான் அதிமுகவும் திமுகவும் மக்களைக் கருதுகின்றன.

 அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றிப் புதிய அணைகளை அனுமதிக்கக் கூடாது என்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சிக் குழு சந்தித்து வலியுறுத்தினால் அதற்கு ஒரு விளைவு இருக்கும்.

காவிரி உரிமை மீட்புக் குழு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக முதல் அமைச்சருக் குக் கடந்த இரண்டாண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகிறது. மற்ற கட்சித் தலைவர்களும் கோரிக்கை வைத்தார்கள். அப்போது முதல்வராக இருந்த செயலலிதா என்ன பதில் சொன்னார்? காவிரியில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தில் தான் இருக்கின்றன. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை இல்லை என்றார்.

கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் காவிரிச் சிக்கலில் ஆளுக்கொரு கருத்தா வைத்திருக்கின்றன? ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்குத் தரக் கூடாது என்பதில் ஒரே கருத்துடன்தான் இருக் கின்றன. அங்கு மட்டும் அடிக்கடி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்களே அது எப்படி? பதவி அரசியல், பண அரசியல் நடத்தினாலும் கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் மக்களைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே ஒருமித்துச் செயல்படுகின்றன.

அனைத்துக் கட்சிக் கூட்டம் அனைத்துக் கட்சிக் குழுவை முதல்வர் அழைத்துக் கொண்டு போய் தலைமை அமைச்சரைச் சந்தித்து அணைகளைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது கூடுதல் அரசியல் அழுத்தம் தரும். நரேந்திர மோடிக்கு ஒரு நெருக்குதல் ஏற்படும். இதைச் செய்வதற்குக் கூடத் தமிழகத் தலைவர்கள் குறிப்பாக ஆளுங்கட்சித் தலைவர் முன்வரவில்லை என்றால் அவர்கள் எந்த அளவு தமிழக மக்களின் உணர்வுகளைத் துச்சமாகக் கருதுகிறார்கள் என்பது புரிகிறது. !

சட்ட விரோத அணைகள் கட்ட இந்திய அரசு தடைபோடக் கூடாது என்று வலியுறுத்திக் கர்நாடகத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் கர்நாட கத்தைச் சேர்ந்த பாசக நடுவண் அமைச்சர் அனந்த குமார் வீட்டில் சந்தித்து சதிக் கூட்டம் நடத்தினார்கள்.

 தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே நடுவண் அரசில் பலர் அமைச்சர்களாக இருந்தார்கள். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் - கட்சி வேறு பாடில்லாமல் ஒன்றாகச் சென்று தமிழகச் சிக்கல் குறித்து தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசிய துண்டா? இல்லை.

தடிப்பேறிப்போன மனநிலையில் தமிழ்நாட்டுத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திருந்தவும் மாட்டார்கள். அவர்களைத் திருத்தவும் முடியாது. மக்கள் மனத்தில்தான் மாற்றம் வர வேண்டும்.

இதுவரை சொன்ன செய்திகள் சரியானவைதான் என்று புரிந்து ஒருவர் ஏற்றுக் கொண்டால் அவர் மனம் மாற்றத்திற்கு அணியமாக இருக்கிறது என்று பொருள்!

ஒரு மனிதனின் மனத்தில்தான் புரட்சிக்கான சிந்தனை எழுகிறது. அது பரவுகிறது. ஒரு விளக்கு எரிந்தால் அதிலிருந்து ஆயிரம் விளக்குகளை ஏற்றிக் கொள்ளலாம். ஒரு சொம்பு வெந்நீர் கொதித்தால் அது ஒரு குடம் தண்ணீரைச் சூடாக்கி விடும்!

தமிழ் மக்கள் மனத்தில் மாற்றம் வரவேண்டும். தமிழகத்தின் உரிமைகளைத் தமிழகத் தலைவர்களால் மீட்க முடியாது. அதற்கான விருப்பம் அவர்களுக்கு இல்லை. அதற்கான மன ஆற்றல் அவர்களிடம் இல்லை.

 “தலைவர்களின் மந்தைகளாய் இருக்க மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமை மீட்பர்களாய் சிந்திப்போம் ” என்ற முடிவுக்கு மக்கள் வரவேண்டும். நம்மால் முடியும்!

காவிரி, தமிழ்நாட்டின் தேசிய ஆறு. 19 மாவட்டங் களுக்குக் குடிநீர் தருகிறது. 12 மாவட்டங்களுக்குப் பாசனநீர் தருகிறது.

புதிதாக இரண்டு அணைகள் கட்டிவிட்டால் தமிழக மக்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடைக்காது.

தமிழகம் முழுவதுமிருந்து மேக்கேதாட்டு முற்றுகைப் பேரணிக்கு மக்கள் வரவேண்டும்!

இந்திய அரசிடம் நாம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

1.            கர்நாடகம் புதிய அணைகள் கட்டத் தடை போடு!

2.            காவிரி மேலாண்மை வாரியம் _- காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனே அமைத்திடு!

 பன்னிரண்டாம் நூற்றாண்டில் போசள மன்னன் முதலாம் நரசிம்மன் மைசூருக்கு அருகே காவிரியில் அணைகட்டித் தடுத்த போது சோழ மண்டலம் வறண்டது. ஓலை அனுப்பித் தண்ணீர் திறந்துவிடக் கோரியும் அவன் தண்ணீர் திறக்கவில்லை. இரண்டாம் இராசராசன் என்ற சோழ மன்னன் படையெடுத்துப் போய் அந்த அணையை உடைத்துக் காவிரியை மீட்டான் என்று தக்கயாகப் பரணி யில் ஒட்டக் கூத்தர் பாடியுள்ளார்.

நாம் நடத்துவது படைப் பயணம் அன்று. நடைப் பயணம். அறவழியிலான மக்கள் திரள் எழுச்சிப் பயணம். முற்றுகைப் போராட்டம்!

காவிரி தமிழர்களின் குருதியோட்டம்

காவிரி தமிழர் நாகரிகத்தின் தாய்

காவிரி இல்லாமல் வாழ்வில்லை; களம் காணாமல் காவிரி இல்லை!

Pin It