தாராளமய சந்தைப் பொருளியலுக்கு இசைவான தாராளமய அரசியல் சந்தை திறந்துவிடப் பட்டுள்ளது.

சந்தையில் கோலோச்சுவதற்காக எந்த நிறுவனமும் எதனுடனும் கூட்டுச் சேரலாம் என்ற தாராளமய சந்தை விதி தேர்தல் அரசியலில் ஓங்கி வளர்ந்துள்ளது.

‘யாரும் யாரோடும்’ கூட்டணி சேருகிற அங்காடி அரசியலானது, கொள்கைகளுக்கு தொடர்பில்லாத சந்தைக் கூச்சலாக தேர்தல் அரசியலை உருவாக்கி இருக்கிறது.

வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், விரிவாக்கிக் கொள்ளவும் இலவச இணைப்புகளையும் தங்கள் தயாரிப்பு குறித்த மாய்மால தோற்றங்களையும் உருவாக்கும் கம்பெனிகளின் நடவடிக்கை கட்சிகளிடமும் உள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தனக்கான உறுதியான வாக்காளர் திரளை இழந்து கொண்டிருப்பதும், தனது வெற்றிக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் வழி முறையை மேலும் மேலும் சார்ந்திருப்பதும் வளர்ந்து வருகிறது.

கட்சிகளும், கம்பெனிகளும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துவிட்ட ஒட்டுண்ணி அரசியல் தேர்தல் சன நாயகத்தை வெளிப்படையான பண நாயகமாக தாழ்த்திவிட்டது.

இந்த சீரழிந்த அரசியலைப் பயன்படுத்திக் கொள்ளும் முதன்மைக் கட்சியாக பாரதிய சனதா விளங்குகிறது. எதைச்செய்தாவது , எந்தக் கட்சியுடன் சேர்ந்தாவது நரேந்திர மோடியை இந்தியப் பிரதமராக்கிவிட வேண்டும் என்ற வெறியில் அக் கட்சி களமிறங்கியுள்ளது.

வல்லரசு இந்தியா, உறுதியான பிரதமர், வளர்ச்சிக்கான தலைவர் என்று மோடியை ஊதிப் பெருக்கிக் காட்ட அக்கட்சி கோடி கோடியாய் வாரி இரைக்கிறது. தேர்தல் கால கூட்டணி, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என இரண்டு வகைகளிலும் இக் கட்சி முயன்றுவருகிறது.

மக்கள் இயக்கங்கள், தொழிலாளர் போராட்டங்கள், தேசிய இனப் போராட்டங்கள், மதச் சிறுபான்மையினர் இயக்கங்கள் போன்ற எதுவும் அற்ற மிகவும் வரம்புக்கு உட்பட்ட சன நாயகத்தையே உலக மய முதலாளிகளும் இந்தியப் பெரு முதலாளிகளும் விரும்புகிறார்கள்.

 நுகர்வுப் பண்பாட்டில் ஊறிப்போன கணிசமான தன்னல நடுத்தர வர்க்கத்தினருக்கு இத்தகைய சுடுகாட்டு அமைதியே விருப்பமாக இருக்கிறது. இவ்வகை நடுத்தர வர்க்கத்தினரின் உயர் நிலையில் உள்ளவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்களாக இருப்பதால் பா.ச.க வின் இந்துத்துவ அரசியல் இத்தோடு இணைவது இயல்பாகிவிட்டது.

பெரு முதலாளிகள் முதன்மை ஊடக உடைமையாளர்களாக இருக்கிறார்கள். உயர்நிலை நடுத்தர வர்க்க பார்ப்பனர்கள் இந்த ஊடகங்களில் கருத்துருவாக்க தளங்களில் உள்ளார்கள். இவ்விரு பிரிவினரும் இணைந்து மோடியை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தி முன் வைத்து பா.ச.க தலைமையில் ஆட்சியைக் கொண்டுவர பெரும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

ஏனெனில், இச் சக்திகளுக்கு மன் மோகன் சிங்கின் காங்கிரசுக் கூட்டணி உடனடி எதிர்காலத்துக்கு பயன்படும் நிலையில் இல்லை. இந்த ஆட்சி வரலாறு காணாத ஊழல்களிலும், திறமையின்மையிலும் பெரிதும் அம்பலப்பட்டு நிற்கிறது. எவ்வளவு தான் முயன்றாலும், இராகுல் காந்தியை மக்கள் ஏற்கும்படி செய்ய காங்கிரசுக் கட்சியால் இயலவில்லை.

இந்நிலையில் மோடியை முன் நிறுத்துவதையே இந்த ஆதிக்க சக்திகள் வாய்ப்பாகக் கருதுகின்றன.

ஆயினும் தமிழ் நாடு, உத்திர பிரதேசம், பீகார் , மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் பாரதிய சனதாவோ, காங்கிரசோ முதல் நிலைக் கட்சிகளாக இல்லை.

உண்மையான மும்முனைப் போட்டி இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக உருவாகி இருக்கிறது.

தமிழ் நாட்டைப் பொருத்தளவில் ஈழத்தமிழர் சிக்கலிலும், தமிழ் வழிக் கல்விப் போராட்டங்களிலும் , அணு உலை எதிர்ப்பு இயக்கங்களிலும் பங்கேற்கும் கட்சிகள் பலவும் ஆளுக்கொரு கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன.

 எப்படியாவது யாருடன் சேர்ந்தாவது ஒரு சில நாடாளுமன்ற, சட்டமன்ற பதவிகளை பிடிக்காவிட்டால் தங்கள் கட்சி சிதைந்துவிடும் என்ற அவல நிலையில் இக் கட்சித் தலைமைகள் உள்ளன. எனவே, அமைப்பை பாதுகாத்துக் கொள்ள அரசியல் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு அங்காடி அரசியல் பேரத்தில் இறங்கி எந்த கூட்டணியில் இருந்தால் கூடுதல் இடங்கள் கிடைக்கும், அதற்கு ஏற்ற பணமூட்டை கிடைக்கும் என்ற வரவு செலவுக் கணக்கில் இக் கட்சிகள் பலவும் இறங்கிவிட்டன.

தேர்தல் கட்சிகளுக்கு ஆறுமுகங்கள் கூட போதவில்லை. ஒவ்வொரு முகமும் வெவ்வேறு எதிரெதிர் கட்சிகளுடன் ஒரே நேரத்தில் சீட்டு பேரத்தில் இறங்கி “வெற்றிக் கூட்டணி” அமைப்பதொன்றே தமது இலட்சியம் என்று களமிறங்கி விட்டன. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளோடு கமுக்க பேரம் நடத்துகின்றன என்று உளவறிந்து கூறுவதே ஊடகங்களின் முதன்மைப் பணியாகிவிட்டது.

இன்னொரு புறம் ஏற்கெனவே அம்பலப்பட்டுள்ள கட்சிகளை ஏற்காத சிலர் புதிதாக வந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் பக்கம் திரும்புகின்றனர். ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உருவானது என்ற போதிலும் இந்த ஊழலின் ஊற்றுக் கண்ணான உலகமய முதலாளிகளையோ, தாராளமயப் பொருளியலையோ இக் கட்சி எதிர்ப்பதில்லை. தவிரவும் இக் கட்சி தீவிர இந்தி வெறி ,தீவிர இந்தியவெறி அமைப்பு என்பது இன்னொரு ஆபத்தாகும்.

இந்தக் கூட்டணிகள் எதுவும் மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கு பயன்படப்போவதில்லை. உலகமயத்தையும் , இந்திய வல்லாதிக்கத்தையும் உறுதிப்படுத்தவே பயன்படும். இந்திய நாடாளுமன்றம் தேசிய இனங்களையும், சுரண்டப்பட்ட மக்களையும் ஒடுக்கி வைக்கும் முதன்மைக் கருவி ஆகும். சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் இதற்கு வலுவூட்டவே பயன்படும்.

எனவே, தமிழ்நாட்டு மக்கள் ,குறிப்பாக, தமிழ் நாட்டு இளையோர் சீரழிந்த இத் தேர்தல் அரசியலிலிருந்து வெளியே நின்று மாற்று அரசியலுக்கான களம் அமைப்பது தேவையான ஒன்றாகும்.

யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பது இத் திசையில் முதன்மைத் தேவையாகும்.

Pin It