வட அமெரிக்க வல்லரசின் கையடக்கமான கூட்டாளிதான் இந்தியா என்பதை மோடி அரசு மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது.

இந்தியக் குடியரசு நாளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக சனவரி 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் தில்லிக்கு வந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார்.

குடியரசு நாள் அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெற்றுவந்த அணு ஆயுத ஏவுகணையான அக்னி ஏவுகணை இந்த ஆண்டு அணிவகுப்பில் இடம் பெறவில்லை. ஒபாமாவுக்கு முன்னால் இந்தியாவின் அணுஆயுத வலு பெருமையாக எடுத்துக் காட்டப்பட்டால் அவர் முகம் சுழிக்கக் கூடும் என்பதனாலேயே அக்னி ஏவு கணை அணிவகுப்பில் தவிர்க்கப்பட்டது என அரசு தரப்பு அதிகாரிகள் கிசுகிசுத்தார்கள். அந்த அளவிற்கு ஒபாமாவிடம் அடக்க ஒடுக்கம் காட்டினார் தேசபக்தர் மோடி.

ஆரவாரப்பேச்சில் மோடிக்கு ஜோடி ஒபாமா. மூன்று நாளும் இந்த இருவரும் ஒரு பேச்சுப்போட்டியே நடத்தினர்.

நான் ஒரு சமையல்காரனின் பேரன் மோடியோ முன்னாள் தேநீர்க் கடைக்காரர் என்று ஒபாமா மோடியோடு போட்டியிட்டுக்கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

ஒபாமா வருகையை ஒட்டி செய்யப்பட்ட ஐந்து அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒபாமாவுக்கு மோடி தேநீர் ஆற்றிக்கொடுத்தது, மோடியின் முண்டாசு, அவரது கோட்டில் இருந்த சன்னமான பெயர் பொறிப்பு போன்ற ‘முக்கிய’ செய்திகளில் ஊடகங்கள் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது அமெரிக்க வல்லரசின் ஓடும் பிள்ளையாக இந்தியாவைப் பிணைப்பதில் மோடி மும்முரமாக இருந்தார்.

ஒபாமா வருகையின் போது மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே எட்டப்பட்டுள்ளன. படைத்துறை ஒப்பந்தம், அணுத்துறை ஒப்பந்தம், காப்புரிமை ஒப்பந்தம் ஆகியவையே அவை.

இதற்கு முன்னர் 2005 சூலையில் அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ§க்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட மோசமான படைத்துறை ஒப்பந்தம் இப்போது புதுப்பிக்கப்படுகிறது. அடிப்படையில் பழைய ஒப்பந்தம் தான் இது என்ற போதிலும், கூடுதலாக கடற்படை ஒத்துழைப்பு அழுத்தம் பெற்றுள்ளது.

‘இரு நாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற கூறுகளில் உலகளாவிய படை நடவடிக்கையில் இறங்குவது” என்பது இவ்வொப்பந்தத்தில் கூடுதல் அழுத்தம் பெறுகிறது. பசிபிக் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க முயலும் அமெரிக்காவின் அடியாளாக இந்தியா இதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

படைத்துறை உற்பத்தியில் நூற்றுக்கு நூறு அயல்நாட்டு மூலதனம் அனுமதிக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்னால் சட்டத்திருத்தம் செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த ஒப்பந்தத்தைப் பார்த்தால் இதன் பரிமாணம் புரியும். இந்தியப் படைக்கருவிகள் உற்பத்தியில் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் முதன்மைப் பங்காற்றப் போகின்றன.

உலக வல்லாதிக்கப் போட்டியில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக இந்தியா இணைக்கப்படுவதன் மூலம் இந்தியாவின் இராணுவச்செலவு கூடுதலாகப்போகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கான தொகையும், மக்களுக்காக மானியங்களும் வெட்டப்பட்டு இதற்கான நிதி திரட்டப்படும்.

அணுத்துறை ஒப்பந்தத்தில் இந்தியா அமெரிக்காவிடம் சரணடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த காங்கிரசு ஆட்சியில் கூட்டணிக் கட்சிகள், ஆதரவுக் கட்சிகளின் அழுத்தங்களுக்கும், இழுபறிகளுக்கும் இடையில் அணு உலை விபத்து இழப்பீடு பொறுப்பு சட்டம் 2010 நிறைவேறியது. அணு உலையில் நிகழ்வுகளோ, விபத்துக்களோ, ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு ரூ.1,500 - கோடிக்கு மிகாது என வரம்புகட்டப்பட்டது. இது மக்களிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினாலும், நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

ஆயினும், இந்தத் தொகைக்காவது அணு உலை வழங்கியோர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்ற நிபந்தனை அச்சட்டத்தில் விதி 46ன் படி இருந்தது. ஒபாமா - மோடி ஒப்பந்தம் இந்த நிபந்தயையும் நீக்கிவிட்டது. இந்த இழப்பீடை வழங்கும் பொறுப்பை இந்தியாவே ஏற்றுக்கொண்டுள்ளது. உச்சஅளவு இழப்பீடான ரூ.1,500- கோடியில் பாதித் தொகையை இந்திய அரசின் அணுமின்சாரக் கழகமும், மீதிப்பாதியை அரசு நிறுவனமான பொதுக்காப்பீட்டு நிறுவனமும் ஏற்கும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நிமிடமே அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனமும், ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனமும் வெளிப்படையாகவே குதூகலித்தன. ஏனெனில் உடனடியாக பத்தாயிரம் மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்பதற்கான அணு உலைகளை இந்த நிறுவனங்களே பல லட்சம் கோடி ரூபாய்க்கு விற்க இருக்கின்றன.

தலைமுறை, தலைமுறையாக மக்களை அழித்து அதில் ஏற்படும் பாதிப்புக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்க வேண்டாம் என்று விடுவிக்கப்பட்ட மரண வியாபாரிகளின் குதூகலம் அது.

இந்திய காப்புரிமை சட்டத்தில் எஞ்சி இருந்த சில பாதுகாப்பு விதிகள் இந்தியாவிலும், பிற பின்தங்கிய நாடுகளிலும் உயிர் காக்கும் மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தி வந்தன. ஒபாமா - மோடி ஒப்பந்தத்தில் இது பெருமளவு நீக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுவிட்டால் போதும். அதைவைத்துக்கொண்டு இந்தியாவிலும் தங்கள் மருந்துகளை தாங்கள் விரும்பும் விலைக்கு விற்றுக்கொள்ளலாம் என்பதற்கு அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தன.

பதவியேற்றவுடன் அமெரிக்கா சென்ற மோடி இதில் மருந்து நிறுவனங்களுக்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்துவிட்டு வந்தார்.

ஏனெனில், அமெரிக்க மருந்து நிறுவனமான நோவார்த்தீஸ் தனது தயாரிப்பான கிளிவெக் என்ற இரத்தப்புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை பெறவிரும்பியது. இதற்கு எதிரான பொது நல வழக்கில் 2013-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலோட்டமான மாற்றங்கள் செய்து புதிய கண்டுபிடிப்பு போல அறிவித்து அம்மருந்துக்குக் காப்புரிமை பெறுவதை அனுமதிக்க முடியாது என தெளிவுபட அத்தீர்ப்பு கூறியது.

இதேபோல பாயர் நிறுவனத்தின் நெக்சவார் மருந்துக்கு கட்டாய விற்பனை உரிமம் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ரோச் போன்ற வேறு நிறுவனங்களின் மருந்துகளும் அவர்கள் நினைத்த விலையில் விற்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்துக்கு மோடி அரசு பணிந்தது. இந்தியக் காப்புரிமை சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கான வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஒபாமா வருகைக்கு சில வாரங்களுக்கு முன்னால் 2014 டிசம்பர் 24 அன்று அக்குழு அவசரஅவசரமாக தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் இலாபத்தை உறுதி செய்வதன் மூலமாகத்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிஏற்படுத்த முடியும் என்று அந்த அறிக்கை கூறியது.

இது தெளிவாக அமெரிக்கப் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவான அறிக்கை ஆகும். புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து மக்களைக் காக்கும் மருந்துகள் இனி நூறு மடங்கிற்கு மேல் அதிக விலைக்கு விற்கும்.

இந்தியாவைச் சேர்ந்த சிறிய மருந்து நிறுவனங்கள் சந்தையிலிருந்து தூக்கி வீசப்படும்.

மொத்தத்தில் ஒபாமா வருகையின் போது இந்திய அரசு செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்க வல்லரசின் இளைய பங்காளியாக இணைத்துள்ளது. மக்களுக்கு எதிரான படையெடுப்பில் அமெரிக்க வல்லரசும் இந்திய ஏகாதிபத்தியமும் கைகோத்துள்ளன.

Pin It