சிவகாசி வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள முதலிப்பட்டி கிராமம் தற்போது சோக மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இவ்விபத்தில், 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோரை தீக்காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசுத் தொழிலுக்கு உலக அளவில் புகழ்பெற்ற நகரமான சிவகாசி, வெடிகளுக்கு மட்டுமல்ல வெடி விபத்துகளுக்கும் பெயர் போன நகரமாகும். இங்குள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் தீ மற்றும் வெடி விபத்துக்கள் காரணமாக பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையே.

சிவகாசியைச் சுற்றி வசிக்கும் பல கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், இங்குள்ள தொழிற்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 125லிருந்து அதிகமானால் 200க்குள் என, வாரம் 750ஐம்பதிலிருந்து 1200 வரை ஆக தினமும் இரண்டு, மூன்று மணி நேரம் கூடுதலாக உழைத்தாலும் ஒருமாதம் 4000 முதல் 6000 வரை மட்டுமே ஊதியமாக பெறுகின்றவர்கள் ஆவர்.

ஒவ்வொரு முறையும் விபத்துகள் நடக்கின்றன போதும், அந்த தொழிற்சாலை நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டு உரிமங்கள் சரிபார்க்கப்படும். அதன்பின், தொழிற்சாலை முதலாளி தரும் கையூட்டோடு அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தம் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வார்கள். கடந்த 14 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மட்டும், கிட்டத்தட்ட 300 தொழிலாளர்கள் இதுவரை பலியாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு நடைபெறும் பட்டாசு ஆலை விபத்துகளைக் கணக்கில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்கள் வெறும் பெயரளவிலேயே உள்ளன. இப்போது விபத்து நடைபெற்ற பட்டாசுத் தொழிற்சாலையில் கூட 40 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அத்தொழிற்சாலையின் உரிமம் இரத்து செய்யப்பட்டு அதிகாரிகளால் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்த முதலாளி, உரிமத்துக்கான கால அவகாசத்தை விபத்த நடந்த 05.09.2012 அன்று வரை நீட்டித்துள்ளார். உரிமம் முடியவிருந்த நிலையில் தான், அவசர, அவசரமாக பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று இவ்விபத்து நடந்துள்ளது.

விதிமீறல்களை ஆய்வு நடத்தச் செல்லும் அதிகாரிகள், விதிமீறல்களை கண்டுபிடித்த அக்கணமே அத்தொழிற்சாலையின் உரிமங்களை இரத்து செய்து உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, ஒவ்வொரு விதிமீறல்களையும் கணக்கெடுத்து, அவற்றை தொழிற்சாலை முதலாளியிடம் சுட்டிக்காட்டி, அவருடன் பேச வேண்டிய பேரங்களைப் பேசி விட்டு, கடைசியில் பேரம் படியாத நிலையில் தான் அத்தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என முடிவெடுப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள பல பட்டாசுத் தொழிற்சாலைகளை நடத்துவது, ஓட்டுப் பொறுக்கிக் கட்சி அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளும் தான். தற்போது விபத்து நடந்துள்ள ஓம் சக்தி தொழிற்சாலை கூட விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் முருகேசன் என்பவருக்கு சொந்தமானது தான்.

இவ்வாறு, தீ விபத்துகள் அடிக்கடி நடக்கும், சிவகாசி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் இந்த நிமிடம் வரை முறையான தீக்காய சிகிச்சைப் பிரிவு கொண்ட அரசு மருத்துவமனைகளை இதுவரை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான், 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரைக்கு காயம்பட்டோரை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு, அதனாலும் உயிரிழப்புகள் அதிகரித்தன.

ஆனால், ஒவ்வொரு முறை தொழிலாளர் உயிர்கள் பலியாகும் போது நீலிக்கண்ணீர் வடித்து நட்ட ஈட்டுத் தொகை மட்டும் அளிக்கின்றனர். பல விபத்துகளில் முதலாளிகளின் இலாபவெறிக்காக, தொழிலாளர்கள் முறையின்றி பணியமர்த்தப் படுவதால், தொழிற்சாலை நிர்வாகங்கள் உயிர்பலிகளை மறைக்கவும் செய்கின்றன. அப்போது, விபத்து நடந்தால் அரசு அறிவிக்கும் நட்ட ஈட்டுத் தொகை கூட தொழிலாளர் குடும்பங்களுக்குக் கிடைப்பதில்லை என்பது வேதனையானத் தகவல்.

நகரில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளை சென்றடைய குண்டும் குழியுமான சாலைகள் இருப்பதால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல தாமதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளை அதிகப்படுத்துகின்றது. தற்போது விபத்து நடந்த இடத்திற்கு முக்கால் மணி நேரம் கழித்தே, ஆம்புலன்ஸ் – தீயணைப்பு வாகனங்கள் சென்றன என்பதை இவ்விடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இவையெல்லாம், எளிய பட்டாசுத் தொழிலாளர்கள் மீதான அரசின் அலட்சியப் போக்கையே எடுத்துரைக்கின்றன.

சிவகாசி வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்கவும், தீயை அணைக்கவும் 5 மணி நேரம் கால தாமதமானதாக சொல்கிறார்கள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 3 முறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் தடுக்க துப்பில்லாத இந்த அரசுகள், மனித உயிர்களை நொடிகளில் கொல்லும் வல்லமை படைத்த அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் நம்மை உறுதியாகக் காப்பாற்றுவார்கள் என நாம் நம்பயிருக்க முடியுமா?

விபத்து நடந்த தொழிற்சாலை முதலாளியைக் கைது செய்வதோடு மட்டுமின்றி, சிவகாசியிலுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் சோதனையிட்டு விதிமுறைகள் மீறியுள்ள தொழிற்சாலைகளின் உரிமங்களையும் இரத்து செய்ய வேண்டும். அவர்களிடம் கையூட்டு பெறும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

அதிக அளவிலும், அதிக அழுத்ததிலும் வெடிமருந்துகள் நிரப்பித் தயாரிக்கும் வெடிகளையும் வாணங்களையும் தடைசெய்ய வேண்டும்.

Pin It