1923இல் இந்து மகாசபையின் தலைவர் வீரசாவர்க்கர் இந்துத்துவா கருத்தியலை ஆரம்பத்தில் வெளியிட்டார். இந்தியா இந்துக்களின் தேசமென்றும், இந்து மதமே இந்தியம் என்றும், இந்தியாவை இந்துமயமாக்கவும் இந்துக்களை இராணுவமயமாக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இந்தியாவின் மொழி சமற்கிருதம் மட்டுமே என்று அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து 1925-இல் ராட்டிரிய சுயம் சேவக் சங் (RSS) என்னும் அமைப்பு உருவாக்கப்படுகிறது. இவ்வமைப்பின் தலைவர் குருகோல்வால்கர் கருத்தியல்படி பாரதம் இந்துக்களின் தேசம் என்றும் இந்தியாவில் வாழ்வோர் அனைவரும் இந்துக்களே என்றும், பிறமதத்தவர்கள் அனைவரும் இந்து மதத்தையும் அதன் தலைவர்களையும் புகழ வேண்டும், வழிபட வேண்டும். இந்தியாவில் வாழ்வோர் இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் எந்தச் சலுகையும் கோரக் கூடாது என்றும் குடியுரிமை கூட கேட்கக் கூடாது என்றும் தன்னுடைய “சிந்தனை கொத்து” நூலில் குறிப்பிடுகிறார். கிட்லரின் செர்மனியில் யூதர்கள் கொல்லபட்டதை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார்.

இவையெல்லாம் வெறும் வெற்றுரைகள் என்று நாம் கருதிவிட முடியாது. கிட்லர் யூதர்களைக் கொன்றொழித்ததை நியாயப்படுத்துவது பாசிசம். இதே பாசிச செயல் திட்டத்தை இந்தியாவிலும் அரங்கேற்ற வேண்டும் என்பதுதான் RSSஇன் அபாயகரமான இலட்சியம், கொள்கை, திட்டம் எல்லாம்.

வகுப்புவாதக் கருத்தியல், ஒரே நாளில் உருவாக்கப்படுவதல்ல. வகுப்புவாதம் என்னும் கருத்தியலை, மன நிலையை, நம்பிக்கையை பல யுக்திகள் மூலம் மக்களிடம் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. கொடிய விசத்தை உண்டால் மனிதர்களுக்கு மரணம் எப்படி ஏற்படுமோ அதைப் போலவே நம் சமூகம் வகுப்புவாத விசத்தால் அழிந்து போக நேரிடும்.

உலகமயமும், வகுப்புவாதமும் பன்முகக் கலாச்சாரத்தை மறுக்கிறது. இதனுடைய விளைவு சமத்துவத்தை மறுப்பது, நீதியை மறுப்பது மற்றும் சனநாயகத்தையும் மறுப்பது. மத அடிப்படைவாதிகள் ஒரே கலாச்சாரம் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறார்கள். இதை ஏற்காத சிறுபான்மையினரை ஒழித்துக் கட்டுவதுதான் வகுப்புவாதிகளின் நோக்கமாக இருக்கிறது.

எனவே, உலக ஏகாதிபத்திய மேலாண்மைக்கும் ஆரியப் பார்ப்பனிய மேலாண்மைக்கும் வேறுபாடு எதுவுமில்லை. எனவே தான், ஆரிய மேலாண்மையின் அரச வடிவமான இந்தியம், உலகமயத்தை எளிதில் ஏற்றுக் கொண்டது. மதவாதமும், உலகமயமாக்கலும் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று உரமிடுகிறது.

இந்தியாவில் இந்துத்துவா சக்திகளால் நடத்தப்பட்ட மதக் கலவரங்களை ஆய்வு செய்தால் ஒரு உண்மை தெளிவாகத் தெரியும். தொழில் போட்டியை மதப்பிரச்சினையாக்கி, ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஒரு யுக்தியாகவே மதக்கலவரங்கள் பயன்பட்டிருக்கின்றன.

மார்வாடிகளின் ஏகபோகத் தொழில் வணிகத்துடன் போட்டியிட முனைந்த இசுலாமியர்களை ஒழித்துக் கட்டவே, மும்பை மாநகரில் விநாயகர் வழிபாடுகளும், ஆரியப் பார்ப்பனிய பயங்கரவாத அமைப்புகளும் மார்வாடிகளால் வளர்த்தெடுக்கப்பட்டன என்பது கவனங் கொள்ளத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரிசாவில் கந்தமாலில் நடைபெற்ற கிறித்தவ மக்களுக்கு எதிரான மதக்கலவரம், அப்பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை தமதாக்கிக் கொள்ளத் துடிக்கும் ஆதிக்க சக்திகள் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடிக் கொள்ளவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான். உலகமயக் கொள்ளைக்கு நேரடியாகத் துணை போவதை, ஆரியப் பார்ப்பனிய மதவெறி அமைப்புகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் இந்தியாவில் ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளால் வளர்த்தெடுக்கப்படும் மதவாதம், பார்ப்பனிய மேலாண்மையை நியாயப்படுத்தி அதன் மூலம் வருணதர்மதை நியாயப்படுத்துகிறது. இந்துத்துவா அரசியலின் இப்பின்னணியை, தலித் அமைப்புகள், இயக்கங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது கவலையளிக்கும் செய்தியே. தலித் கட்சிகளும், அமைப்புகளும் தலித் மக்களிடையே மதவாத எதிர்ப்பை முழுமையாக வளர்த்தெடுக்கவில்லை.

உலகில் எங்கு முற்போக்கு சிந்தனை வெளிப்பட்டாலும் அதை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்த தமிழினம் தான், இந்தியாவிலிலேயே முதன் முறையாக பொதுவுடைமைச் சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட மண்ணாகத் திகழ்ந்தது. அன்று பொதுவுடைமை இயக்கம் கோலோச்சிய தமிழக மண்ணில், இன்று ஆரியப் பார்ப்பனிய அமைப்புகள் ஆட்டம் போடுகின்றன.

மும்பை நகரம், 1950 முதல் 1962 வரை கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக விளங்கியது. ஆனால் இன்றோ ஆரியப் பார்ப்பனிய மத வெறிக் கட்சிகளான சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூடாரமாக மாறிவிட்டது. தோழர்கள் டாங்கே, எஸ்.வி.காட்டே மிராச்கர் ஆகியோர் நடமாடிய மும்பை நகர மண், இன்று பால் தாக்கரே, அவருக்குப் பின் அவரது மகன் உத்தவ் தாக்கரே ஆகியோரின் கூடாரமாக மாறி விட்டதே! ஏன்?

கடந்த காலங்களில் சம்பளம் போனசு இதற்காகவே கம்யூனிஸ்டுகள் கொடி பிடித்தார்கள். கொள்கையை கைவிட்டு விட்டதாலும் தேர்தல் சந்தர்ப்பவாதப் பாதையில் பயணித்ததாலும், தேசிய இனச் சிக்கல், இந்தித் திணிப்பு ஆகியவை பற்றி சரியான கொள்கை இல்லாததாலும் இந்த சோகம் நிகழ்ந்தது என்பதை மறந்துவிட முடியுமா?

“சம்யுக்த மராட்டியம்” வேண்டுமென்று கேட்டார் தோழர் டாங்கே. டாங்கே தேசிய இனங்களின் விடுதலையைப் பற்றி அப்போது பேசினார். பின்னர் அவர் சம்யுக்த மராட்டியம் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டார். இதே போன்று பஞ்சாபில், சீக்கிய இனப் பெருமித உணர்ச்சியை ஆதரித்து தோழர் அர்கின் சிங் சுர்சித் அவர்கள் ஆரம்பத்தில் பேசினார். பின்னர், அவர் அவ்வாறு பேசுதைக் கைவிட்டு விட்டார். தேசிய இன விடுதலை கேட்டு போராடியவர்களை காட்டிக் கொடுத்ததால், இன்று சி.பி.எம் கட்சி பஞ்சாபில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப் போய் விட்டது.

இதே போன்று தான், தமிழகத்தின் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பொதுவுடைமைக் கட்சிகளின் கோட்டையாக விளங்கியது. ஆனால், இன்றோ, வகுப்புவாதிகளின் கோட்டையாக மாறிவிட்டது! ஏன் என்பதை இவர்கள் சிந்திப்பார்களா?

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் அடிமைப்பட்டு இருப்பதை உணராத காரணத்திலும், தேசிய இன விடுதலையை முன்னிறுத்திப் போராடாத காரணத்தினாலும், தேர்தல் சந்தர்ப்பவாதப் பாதையில் பயணித்த காரணத்தாலும், தமிழ் இனம் விடுதலை பெற வேண்டியதன் அவசியம் பற்றிய கருத்தியலை ஏற்காமல் பன்னாட்டினப் புரட் சியை பற்றி கடந்த 65 ஆண்டு காலமாக போக்கி காலத்தை வீணடித்து விட்டர்கள்.

பன்னாட்டின அரசின் கீழ் நிகரமைப் புரட்சி (சோசலிசப் புரட்சி) ஒருக்காலும் ஏற்படாது. இந்த வரலாற்று உண்மையை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். பாரத மாதா பசனை பாடுவதால் இவர்கள் ஆரிய பார்ப்பனிய மேலாண்மையை எளிதில் ஏற்றுக் கொள்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் சி.பி.எம். கட்சியின் ஆட்சியின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போஸ் என்பவர் தான் முதலில் பார்ப்பனர் என்றும் அதன் பிறகு தான் கம்யூனிஸ்டு என்றும் பேசினார். தமிழகத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முன்னணித் தலைவர்களாக கருத்துக் களத்தில் வாதிடக் கூடியத் தலைவராக விளங்கிய தோழர் சீனிவாசன், ஒரு கட்டத்தில் நேரடியாக பாரதிய சனதாக் கட்சியிலேயே சென்று இணைந்தார்.

கொலைக்கும் பாலியல் குற்றத்திற்கும் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அறிக்கை வெளியிட்ட ஒரே அரசியல் தலைவர் முன்னணி பொதுவடைமைக் கட்சித் தலைவரான சித்தாராம் யெச்சூரி தான். இந்தியாவிலேயே, பொதுவுடைமை இயக்கம் கோலோச்சும் கேரளாவில் மட்டும்தான், சங்கராச்சாரியரின் கைதைக் கண்டித்து முழுஅடைப்பு நடைபெற்றது.

தேர்தல் பாதை பொதுவுடைமைவாதிகள், சீர்திருத்த தேர்தல் பாதைக்கும், இந்தியத் தேசிய வெறி அரசியலுக்கும் பல்லக்குத் தூக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் இவை!

ஆரியப் பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக் கொண்டு, ஆரிய இனச்சார்பு கொள்கையை பின்பற்றுபவர்களாக பொதுவுடைமைக் கட்சிகள் சீரழிந்து விட்டன. அதனால் தான் ஆரியத்தின் தீராப் பகையின் காரணமாக தமிழினம் தாக்கப்படும் போதெல்லாம், இந்தியக் கம்யூனிஸ்டுகளின் அனைத்திந்தியத் தலைமை கண்டு கொள்வதில்லை.

கண் கெட்ட பிறகு சூரிய வழி பாடு செய்வது பயனற்றது. தமிழக கம்யூனிஸ்டுகளாவது காலத்தே இவற்றையெல்லாம் சிந்திப்பார்களா?

Pin It