மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள சிரியா என்றழைக்கப்படும் சிரிய அரபுக் குடியரசு, அமெரிக்காவின் புதிய போர்க்களமாக்க் காட்சியளிக்கிறது.

மேற்குப் பகுதியில் லெபனானையும், தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ள நாடு சிரியா. பெரும்பான்மையான சன்னி பிரிவு இசுலாமிய மக்கள், சியா - அலாவி பிரிவு இசுலாமியர்கள், மற்றும் கிறித்தவர்கள் சிறுபான்மையாகவும் வசித்து வரும் சிரியா நாடு, எண்ணெய் வளம் மிக்க அரபு இன நாடாகும்.

பழம் பெரும் நாகரிகம் கொண்ட சிரியா, முதல் உலகப் போருக்குப் பின்னர், பிரஞ்சு ஏகாதிபத்தியத்திடம் வீழ்ந்து காலனியானது. 1946 ஏப்ரலில் விடுதலை பெற்றக் குடியரசான சிரியா, சோவியத் யூனியனுடன் தொடர்ந்து நெருக்கம் பேணி வந்த்து. தன்னை மதசார்பற்ற சோசலிசக் குடியரசாகவும் அறிவித்துக் கொண்டது. பல போர்களில் தொடர்ந்து ஈடுபட்டதால், அரசியல் நிலையற்றத் தன்மை சிரியாவில் தொடர்ந்து வந்தது.

1966லில், இராணுவக் கலகம் ஏற்பட்டு, பாத் கட்சியின் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. ஹபேஸ் அல் அசாத் அதிபராகப் பொறுப்பேற்றார். 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக சிரியாவை ஆண்ட அவர், 2000ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அவசர அவசரமாக அரசியல் சாசன சட்டத்தில், அதிபர் பதவிக்கான அகவை குறைக்கப்பட்டு, அவரது மகனான 34 அகவை பஷீர் அல் அசாத் அதிபராக பதவியேற்றப்பட்டார். அந்தளவிற்கு, சிரியாவிற்கு குடும்ப ஆட்சி மேலாங்கியிருந்தது.

குடும்ப ஆட்சி முறையும், அதன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட சொத்தைப் பாதுகாப்பதற்காகவும், சனநாயகத்திற்கு இடமளிக்காமல் பாசிச சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தது பாத் கட்சியின் ஆட்சி. சனநாயக சீர்திருத்தங்கள் கோரிப் போராடியவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். மக்கள் மனதில், அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான மனநிலை கடந்த 2011 மார்ச்சில் ‘அரபு வசந்தம்’ என்றழைக்கப்பட்ட, அரபு மக்களின் சர்வாதிகாரத்திற்கு எதிரான எழுச்சியின் போது மேலெழுந்தது.

மக்களின் ஞாயமான இவ் உணர்வை, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகள் தமது தன்னல நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டமையே தற்போதைய சிரியாவின் உள்நாட்டுக் கலகம் மூர்க்கமடைவதற்கு மறைமுகக் காரணியாக விளங்குகின்றது.

சர்வாதிகாரத்திற்கு எதிரான சிரிய மக்களின் எழுச்சியைக் கண்டு மிரண்ட, அதிபர் ஆசாத், எதிர்க்கட்சிகள் மீதான தடைகளை விலக்கிக் கொள்ளுதல், அவரச நிலைச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், புதிய அரசியல் சாசன சட்டத்தை உருவாக்குதல், அதனைப் பொதுமக்களின் பொது வாக்கெடுப்புக்கு விடுதல், புதிய அதிபர் தேர்தலை 2014இல் நடத்துதல் ஆகியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கினார். அதை செயல்படுத்தவும் முன் வந்தார்.

எனினும், குடும்ப ஆட்சியை நடத்தி வந்த அசாத், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் அல்ல. தமது குடும்ப ஆட்சியால் சேர்க்கப்பட்ட சொத்துகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் ஏகாதிபத்தியங்களின் ‘கருணை’ப் பார்வைக்கு ஏங்கியவராகவே அவர் கடந்த காலத்தில் திகழ்ந்தார்.

அதிபர் ஆசாத்துக்கு எதிராக சிரியாவில் நடைபெற்று வரும் கலகத்தை வழிநடத்துபவர்களாக விளங்கும் மத அடிப்படைவாதிகள், ஏதோ சனநாயக அரசைக் கட்டமைக்க இக்கலகத்தை தூண்டவில்லை. மாறாக, குடும்ப ஆட்சியாக இருந்தாலும், மதச்சார்பற்ற அரசாக சிரியாவை நடத்தி வந்த ஆசாத்தை விலக்கி வைத்துவிட்டு, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிடம் தமது எண்ணெய் வளங்களை கையளித்துவிட்டு, சிரியாவை மத அடிப்படைவாத நாடாகக் கட்டமைக்கத் துடிப்பதே அவர்களது தூண்டுதலுக்குக் காரணம்.

அமெரிக்காவின் அரபு பங்காளிகளாக விளங்கும், மன்னராட்சி புகழ் துபாயும், இராணுவ ஆட்சி புகழ் துருக்கியும், சிரியா அரசு எதிர்ப்பாளர்களை தீவிரமாக ஆதரிப்பதே இதை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

பாலத்தீன விடுதலைப் போராளிகளையும், லெபனானின் ஹிஸ்புல்லாப் போராளிகளையும், ஆதரித்து வந்த சிரியாவின் பாத் ஆட்சி, சீனா, இரசியா, ஈரான் நாடுகளோடு நெருங்கியத் தொடர்புகளை பேணி வந்தது. சிரியாவின் கோலான் மலைக் குன்றின் சில பகுதிகளை அடாவடியாக ஆக்கிரமித்துக் கொண்ட இசுரேல் மீதும் சிரியாவுக்கு கோபம் உண்டு. இசுரேலும், அமெரிக்காவும் சிரியாவை தமது பகையாகக் கருத இவை முக்கியக் காரணங்களாக உள்ளன.

இவற்றுக்கெல்லாம் மேலான காரணியாக, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர் வெறி செயல்படுகின்றது. தனது இலாபவெறி நோக்கு உலகமயப் பொருளியல் சரியும் போதெல்லாம், ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துவது வட அமெரிக்காவின் வாடிக்கையான நடவடிக்கை.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில், அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை குறி வைத்து தமது ஆக்கிரமிப்புத் திட்டத்தை ஈராக், ஆப்கானிஸ்தான் என செயல்படுத்தத் தொடங்கியது அமெரிக்கா. அமெரிக்காவின் அன்றைய அறிவிக்கப்பட்ட இலக்குகளில் ஒன்றாக, சிரியாவும் விளங்கியதை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தற்போது, ஈரான் நாட்டின் மீது படையெடுப்புக்குத் தயாராகி வருகின்ற அமெரிக்கா, போர் தொடங்குவதற்கு முன்னரே, ஈரானின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் சிரியாவில், தம் சொல் பேச்சு கேட்கும் பொம்மை ஆட்சியை நிறுவிவிடத் துடிக்கிறது.

உண்மையில், அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை உறிஞ்சத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், அதற்கு ‘சனநாயக மீட்பு’ என பெயர் கொடுக்கின்றது. சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டால், அது தமது தேர்தலுக்கும் உதவும் என்பதால், சிரியாவுக்கு எதிரான ஆயுதக்குழுக்களுக்கு உதவிகளை அதிகரிக்கும் வேலையையும், அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், அதிபர் அசாத்துடன் ஏற்பட்ட பதவிச் சண்டையால் நாட்டை விட்டு வெளியேறியவர்களும், இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களும் இணைந்து “சிரியா தேசிய கவுன்சில்” என்ற பெயரில் ஒரு ஏகாதிபத்திய ஆதரவுக் கூட்டணியையும், “சுதந்திர சிரியப் படை” என்ற இராணுவப் படையையும் அமைத்தனர்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு உருவாக்கப்பட்டு, ஆயுதங்களும் வழங்கப்பட்ட ‘சுதந்திர சிரியாப் படை’யில், அமெரிக்கா முழுமூச்சுடன் எதிர்க்கும் அல்கய்தாவின் துணை அமைப்பினரும், லிபியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட அமெரிக்க ஆதரவு புரட்சிப் படையினரும் இருப்பது அமெரிக்காவின் உள்நோக்கத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்துகின்றது.

இச்சுதந்திர சிரியாப் படையினர், சிரிய அரசின் நிலைகளைத் தாக்குவதை மட்டும் தமது இலக்காகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, சிரியாவின் சிறுபான்மை சியா – அலாவி இசுலாமியர்களையும், கிறித்துவர்களையும் கொல்லும் மத அடிப்படைவாதக் கூலிக் கும்பலாகவும் அவர்கள் சீரழிந்துள்ளனர்.

அரசுப் படைக்கும், சுதந்திர சிரியாப் படையினருக்கும் இடையிலான மோதலில் சற்றொப்ப 22,000 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மக்களின் அதிகமானவர்கள் சிறுபான்மையின மக்களே என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அன்னான் தலைமையிலான 300 பேர் கொண்ட, அமைதிக் குழு சிரியாவில் அமைதி ஏற்படுத்துவதற்குச் சென்ற போது, அதை அமெரிக்க ஆதரவு ஆயுதப் படைகள் சீர்குலைத்தன.

சர்வாதிகாரத்திற்கு எதிரான அரபு மக்களின் எழுச்சியை, தமது ஆக்கிரமிப்புப் போரின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள விழையும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வு எழுச்சியின் மூலம் மக்களே பதிலடி கொடுக்க முடியும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈரோக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தன்னெழுச்சியாக ஆங்காங்கு மக்கள் எதிர்ப்புணர்வைக் காட்டியதைப் போல், சிரிய மக்களும் தமது எதிர்ப்புணர்வைக் காட்ட வேண்டும். இல்லையெனில், சிரியா இன்னொரு லிபியாவாகும்.

Pin It