சென்னை:

சென்னை தாம்பரத்தில் 11.05.2013 காரி(சனி)க்கிழமையன்று மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ‘ஈழம் – தமிழகம் என்ன செய்ய வேண்டும்?’ விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்றார். பல்லாவரம் தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் அகத்தாய்வன் வரவேற்புரையாற்றினார். சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிக்கரணை பாவாணர் தமிழ்வழிப் பள்ளி மாணவியர்கள், தமிழிசைப் பாடல்களுக்கு எழுச்சியுடன் நடனமாடியது, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. மாணவர்களைப் பாராட்டி, பரிசளித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார். சமூக விரோத சக்திகளால் இடித்துத் தள்ளப்பட்ட நிலையிலும் அப்பள்ளியைத் தொடர்ந்து நடத்தி வரும் பாவாணர் பள்ளிக்கு உதவும் வகையில், பள்ளி தலைமையாசிரியர் திருமிகு. தமிழ்க்கண்மணி அவர்களிடம், த.தே.பொ.க. சார்பில் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமி்ழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில்:

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்ற வேளையில், தமிழகமெங்கும் பல்வேறு கட்சிகளின் மாலை நேரக் கூட்டங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. தேர்தலின் போது, ‘அய்யா எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்பதற்காக அவை நடைபெறுகின்றன. இக்கூட்டம், அதைப் போன்றக்கூட்டமல்ல.

ஏனெனில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தேர்தலில் பங்கெடுக்காத புரட்சிகர அமைப்பாகும். புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தை முன்வைத்து மக்களைத் திரட்டி, தமிழ்த் தேசிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமென விரும்பும் புரட்சிகரக் கட்சியாகும். அதனால், நாங்கள் எப்பொழுதும் யாரிடமும் வாக்குக் கேட்கப் போவதுமில்லை. அதனால், இந்த இனத்திற்கு எந்தப் பயனும இல்லை.

இலட்சக்கணக்கானத் தமிழீழ மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, நான்காண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த நேரத்தில், நாம் என்ன செய்ய வேண்டும்? எமது இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என விவாதிக்கின்றக் கூட்டங்களைத்தான் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்ததோடு, உலகமே வியக்கும் வகையில் எந்தவொரு அரசு உதவியுமின்றி படைகட்டி போரிட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையும் சிங்கள இனவெறி அரசு அழித்திருக்கிறது. இது வெறும் இலங்கை அரசால் மட்டும் செய்யப்படவில்லை. செய்யவும் முடியாது. அதற்கு, முழு உதவிகளையும் செய்து, போரைத் தீவிரப்படுத்தி, இலங்கை அரசிற்கு இன்றுவரை உலக அரங்கில் பாதுகாப்பாகவும் நின்று கொண்டிருப்பது இந்தியாதான் என்ற உண்மை, 2009-ஐ விட இன்றைக்குத் தெளிவாக பலருக்கும் புரிந்திருக்கிறது.

அதனால் தான், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது மகன் பாலச்சந்திரன் புகைப்படம் வெளியானவுடன், ‘இனியும் பொறுப்பதற்கில்லை’ என்ற வகையில், தமிழக மாணவர்கள், தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் கட்சிகளையே தன் பின்னால் இழுத்து வரும் வகையில் தமிழகத்தைத் தலைக்கீழாகப் புரட்டியிருக்கிறார்கள்.

இவ்வாறு அறிவித்த போதிலும் கூட, உலக நாடுகளெங்கும் சென்று புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் தடை செய்தது இந்தியா தான். இலங்கைக்கு அந்தளவிற்கு செல்வாக்கு இல்லாத நிலையில், அதற்கு இந்தியா தான் உதவி செய்தது.

இந்தியாவை நாங்கள் நட்பு சக்தியாகத்தான் பார்க்கிறோம் என மாவீர்ர் நாள் உரைகளில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வெறும் அறிவிப்பு மட்டும் செய்யவில்லை. அவர்களது கடற்புலிகளின் பலத்தினால், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் எதிரி நாடுகளின் படகுகளையோ, படையையோ தமிழீழக் கடற்பரப்பில் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டு அதை செயல்படுத்தியும் காட்டினார். ஆனால், 2009ஆம் ஆண்டு போரின் போது, இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளின் முதுகெலும்பாக இருந்த கடற்புலிகளை, தமது ஆயுதபலத்தால் அழித்தொழித்தத்து. புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்தது.

தம்மை நட்பாகக் கருதியவர்களை ஏன் இந்தியா இவ்வாறு கொலைவெறியுடன் அழிக்க வேண்டும்? அவர்கள், தமிழர்கள் என்பது தான் இதற்கு ஒரே காரணம். இன்று, தமிழர்களின் கடற்பரப்பில் சீனா காலூன்றியிருக்கிறது. கச்சத்தீவு நோக்கு சீனாவின் படைத்தளம் விரிந்து வருகிறது.

ஆனால், இலங்கையில் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற போது இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள், சிங்களப் படையின் குண்டு வீச்சில் நாள்தோறும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் சி.ஐ.டி. நகர் வீட்டு வாசலில் நின்று பேட்டியளித்த, இந்திய அரசின் அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது பேட்டியில், நாங்கள் போர் நிறுத்தம் கோரவில்லை என்றும் இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதையும் நிறுத்தப்போவதில்லை என்றும், தமிழக மீனவர்களை சிங்களப் படையினரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முடியாதென்றும் வெளிப்படையாக ஊடகங்களுக்குச் சொன்னார். இந்தியா இவ்வாறு வெளிப்படையாகத் தான் அறிவித்து, தனது தமிழினப்பகையை அறிவிக்கிறது. ஆனால், இங்குள்ள தமிழகத் தலைவர்கள் தான் அதை மறைக்கப் படாதபாடுபடுகிறார்கள்.

கொடூரமான இனவழிப்புப் போரை இந்தியாவுக்காகத்தான் நாங்கள் நடத்தினோம் என சிங்கள இனவெறியன் இராசபக்சே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனை பக்கத்தில் வைத்துக் கொண்டு மே 19 அன்று அறிவித்தான். அதை உலகமே வேடிக்கைப் பார்த்தது.

இந்தளவிற்கு இந்தியா தமிழர்கள் மீது பகையுடன் செயல்படுவதறுக்கு வெறும் இராசீவ் காந்தி கொலைதான் காரணம் என்பது ஏற்கத்தக்கதல்ல. 1989ஆம் ஆண்டு இராசீவ் காந்தி உயிருடன் இருந்த நிலையில், இராசீவ்-செயவர்த்தனா ஒப்பந்தத்தில் புலிகள் கையெழுத்திடவில்லை என்பதை முன்னிறுத்தி, இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றது இந்தியா தான். பல நூறுத் தமிழ்ப் பெண்கள், இந்தியப் படையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். அப்போது, இராசீவ் காந்தி உயிருடன் இருந்த நிலையில்தான் இது நடந்தது.

எனவே, இராசீவ் காந்தி கொலையால் தான் இந்தியா இவ்வளவு இனப்பகையுடன் நடந்து கொண்டது என்பது முழு உண்மையல்ல. தமிழீழச் சிக்கல் எழுவதற்கு முன்பிருந்தே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது இந்தியா பகையுடன்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பது வரலாறு.

எப்பொழுதும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை என்பது, அந்நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகத்தான் இருக்க முடியும். உள்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது இனப்பகையுடன் நடந்து கொண்டுள்ள ஆரிய இந்தியாதான், தமிழீழத் தமிழர்கள் மீது தனது வெளியுறவுக் கொள்கையின் மூலம் இனவெறிப் பகைமையுடன் நடந்து கொண்டுள்ளது என்பதே உண்மை. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நர்மதைத் தீர்ப்பாயம், கிருஷ்ணா ஆற்றுத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் தீர்ப்புகளை நடுநிலையில் செயல்படுத்தும் இந்திய அரசு காவிரித் தீர்ப்பை மட்டும் செயல்படுத்த வில்லையே ஏன்? தீர்ப்பைச் செயல்படுத்தினால் தமிழர்கள் பயன் அடைவார்கள் என்பதுதான் காரணம்.

காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை, கூடங்குளம் அணுஉலைத் திணிப்பு, மூவர் தூக்கு என தொடர்ந்து வரும் இந்தியாவின் தமிழினப்பகைக்கு எதிராக நாம் ஒன்றுதிரள வேண்டும்”.

இவ்வாறு தோழர் கி.வெ. பேசினார். நிறைவில், தஇ.மு. சென்னை செயலாளர் தோழர் கோபிநாத் நன்றியுரையாற்றினார்.

சிதம்பரம்:

தமிழீழ விடுதலை, தமிழகம் எதிர் கொள்ளும் ஆற்று நீர் உரிமை மறுப்புகள், சாதி ஒழிப்பு, அணுஉலைத் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் தவிக்கும் தமிழினம், இனி என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் வகையில் 'ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்?' என்ற தலைப்பில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மே 2 தொடங்கி மே 17 அன்று வரை, தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக 04.05.2013 காரி (சனி) மாலை சிதம்பரத்தில் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம், மேலவீதி, அண்ணாசிலை அருகில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றக் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார்.

தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் விளக்க உரையாற்றினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஈழம் தமிழகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் இன உணர்வாளர்கள், மாணவர்கள், பெண்கள் திரளாக பங்கேற்றனர். தமிழக மாணவர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா நன்றி கூறினார்.

மதுரை

மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில், 04.05.2013 அன்று, ‘ஈழம் – தமிழகம் என்ன செய்ய வேண்டும்?’ விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமையேற்றார். தோழர் மு.அழகர்சாமி(த.தே.பொ.க.) வரவேற்புரை யாற்றினார். த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் ரெ.இராசு, மகளிர் ஆயம் தோழர் மேரி, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சு.அருணாச்சலம், சித்திரை வீதி தானி ஓட்டுநர் நலச் சங்கத் தலைவர் திரு. பா.இராசேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார். முடிவில், தோழர் ப.தியாகலிங்கம் (த.தே.பொ.க.) நன்றி கூறினார்.

ஒரத்தநாடு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில், 10.05.2013 அன்று மாலை நடைபெற்ற, ‘ஈழம் – தமிழகம் என்ன செய்ய வேண்டும்?’ விளக்கப் பொதுக்கூட்டத் திற்கு, த.தே.பொ.க. ஒன்றிய அமைப்பாளர் தோழர் க.அர்ச்சுனன் தலைமையேற்றார். மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மேரி, பட்டுக்கோட்டை நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் வெ.இராசேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார். தோழர் வீ.கலியபெருமாள் (த.தே.பொ.க.) நன்றி கூறினார்.

பாப்பாநாடு

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு கடை வீதியில், 11.05.2013 அன்று மாலை நடைபெற்ற, ‘ஈழம் – தமிழகம் என்ன செய்ய வேண்டும்?’ விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு, த.தே. பொ.க. அமைப்பாளர் தோழர் வீ.கலியபெருமாள் தலைமையேற்றார். மகளிர் ஆயம் தோழர் மேரி, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந் திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரெ.சிவராசு, பட்டுக்கோட்டை நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் வெ.இராசேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார். தோழர் க.அர்ச்சுனன் (த.தே.பொ.க.) நன்றி கூறினார்.

திருக்காட்டுப்பள்ளி

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில் 11.05.2013 அன்று மாலை, பேருந்து நிலையம் அருகில், திரளானோர் பங்கேற்புடன் நடைபெற்ற த.தே.பொ.க. விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன், த.இ.மு. ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, ஒன்றியச் செயற்குழுத் தோழர் காமராசு, ஒன்றியப் பொருளாளர் தோழர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழுத் தோழர் இரமேசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார்.

Pin It