தமிழ்! தமிழ்!!

“ஏன் சுவாமி! என்ன அபச்சாரம் செய்து விட்டேன்?’’

“அபச்சாரம் செய்யவில்லையா? உனக்கு விசேஷ ஆணவம் பிடித்து விட்டது. எதற்கும், எப்போதும், தமிழ்! தமிழ்!! என்று கூவுகிறாய். “தமிழில் பேசு; தனித்தமிழைத் தேடு; தமிழிலே எழுது; தமிழில் பாடு’’ என்று கிளர்ச்சிகள் செய்கிறாய். தமிழர் நாகரிகம், தமிழர் நிலை என்று பேசுகிறாய். தமிழ்நாடு என்று கேட்கிறாய். உன் தொல்லை வளர்ந்து விட்டது.’’

“இதுவா அபச்சாரம்? தமிழன் - தமிழை எழுத்தில், எண்ணத்தில், இசையில் காண, கேட்க விரும்பு கிறான். இது எப்படி தவறாகும்?’’

தமிழ் இசை ஏன்?

“தமிழ் இசை ஏன்? இருக்கிற இசை போதாதா? இத்தனைக் காலமாக “சுஜன ஜீவனா’’வும் இனிமை ததும்பும் “சுனோ சுனோ’’வும் இருக்கும் போது, தமிழ்ப்பாடல்கள் என்று வேறு ஏன் வேண்டும்?’’

“தமிழனுக்குத் தமிழ் பாடல் வேண்டாமா?’’

“தமிழா, நீ இங்ஙனம், எதிலும் தமிழ், தமிழ் என்று பேசிக்கொண்டே போகிறாய். அது எங்குக் கொண்டுபோய் விடும் தெரியுமோ? நீ குறுகி, கூனி குவலயம் அறியாத் தவளையாகி விடுவாய்.’’

“இல்லை! தமிழில் எழுதும்போது, இன்பம் காண்கிறேன். தமிழ்க் கவிதை உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. தமிழ் இசை, நெஞ்சை அள்ளுகிறது. தமிழில் இருக்கும் இனிமையை உண்ண நான் அவாவுவது குற்றமாயின், நான் குற்றவாளிதான். ஆனால் உம் நோக்கம் என்ன? நீ தமிழனா? ஆம் எனில், உமக்கு ஏன் இந்தத் தமிழ்ப் பற்று உண்டாகவில்லை? தமிழைக் கண்டதும் ஏன் பதைக்கிறீர்? அது எழுத்தாக வந்தால் எதிர்க்கிறீர். இசையில் வந்தால் சீறுகிறீர். நீர் ஆரியர் ஆதலால் எதிலும் ஆரியம் இருக்கப் பாடுபடுகிறீர். ஆரியத்தை ஒழிக்க, தமிழர் எந்தத் துறையிலே பாடுபட முன் வந்தாலும் எதிர்க்கிறீர். இனி உமது எதிர்ப்பைக் கண்டு, தமிழன் தன் காரியத்தைக் கவனியாது இருக்கப் போவதில்லை. “தமிழா! உன் தோள் வலிமை, தரணியெல்லாம் அறியாதோ! என்றதோர் இசை கேட்டேன். தடுக்க முடியாத பேராவல் கொண்டேன். தமிழே விழைவேன். அதை வளர்க் கவே முயல்வேன்.’’

இது ஊரார் பல்வேறு இடங்களில் உரையாடு வதன் சுருக்கம். தமிழர் என்னும் சொல் கிளப்பி விட்ட எழுச்சி, எங்கெங்கு ஆரியம் தங்கித் தொல்லை தருகின்றதோ, அங்கெல்லாம் அதனை அறுத்தொழிக்கக் கிளம்பிவிட்டது. அது கண்டு ஆரியர், தம் ஆதிக்கம் அழிவுபடுவதைத் தடுக்க, இன்று அண்டமுட்டக் கூக்குரலிட்டுப் பார்க் கின்றனர். நிலவொளியைக் கண்டு குக்கல் குரைக்குமாம்!

தமிழ்நாட்டிலே தமிழ்ப்பாடல் கிடையாது. பாடவேண்டுமானால், தமிழ்ப்பாடகர்கள் கூச்சப்படுகின்றனர். தியாகய்யரின் கீர்த்தனங்கள் என்ன, சாமா சாத்திரியார் சுருதிகள் என்ன, மற்றுள்ள தெலுங்குக் கீர்த்தனங்களைப் பாடினால் சங்கீத விற்பன்னர்கள் என்றே பெயர் கிடைக்கும். தமிழில் என்ன பாடுவது? மளமளவென்று ஆறு தியாகய்யர் கிருதிகள் பாடிவிட்டு “சுரம்’’ இரண்டு கிருதிக ளுக்குப் போட்டுவிட்டு, இராகமாலிகையை இரசமாகப் பாடிவிட்டு சாவளிக்குப் போய், கடைசியில் இரண்டு தமிழ்த் துக்கடாவைக் கிடுகிடு வெனப் பாடிவிட்டு, “நீ நாம ரூபகு’’ என்று மங்களம் பாடிவிடுவதைச் சங்கீத வித்வான்கள் சம்பிரதாயம் ஆக்கிவிட்டனர். பெரிய வித்து வான்கள் என்பதற்கு இலட்சணமே இதுதான் என்று கருதிவிட்டனர். இதனை எதிர்த்து யாராவது தமிழ்ப்பாட்டுப் பாடக் கூடாதா என்றால், நாடக மேடைபோல் ஆகிவிடுமே என்று நையாண்டி செய்வார்கள். இது தமிழ் நாட்டில் பல காலமாக இருந்து வரும் வாடிக்கை.

புரிந்து கொள்ள வேண்டாமா?

இசை, இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப் படுகிறதோ, அதை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடியதான மொழியில் இருக்க வேண்டும். இது அறிவுத்துறையில் அரிச்சுவடி! இதனை “ஆரிய மேதாவிகள்’’ மறுக்கின்றனர்! என்ன அறிவீனம்!

நீக்ரோவின் நடனத்தைக் காண்கிறோம், கண்டு விட்டு நகைக்கிறோம். ஆனால், நீக்கிரோவுக்கு நெஞ்சு இழைகிறது நீக்ரோ நடனத்தைக் கண்டு! ஏன்? அதனைப் புரிந்து கொள்கிறான்.

நேற்று சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை பாடினார். அருமையாகப் புட்ப இராகத்தை சொலிக்கச் செய்து என்று கூறினால், புட்பராகம் என்று ஓர் இராகம் இருப்பதாக எண்ணிக் கொள்ள எத்தனையோ பேர்கள் உண்டு. அது அவர்கள் குற்றமல்ல; வராகம் என்று இன்னொரு இராகம் இருப்பதாக நம்பி னாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. இராக விசயங்கள், மக்களில் நூற்றுக்கு எத்தனை பேருக்குத் தெரிய முடியும்? கருப்பையா என்பதற்குச் சுப்பையா என்று கையொப்பமிடும் பேர்வழிகள் நிரம்பியுள்ள நாட்டிலே நாம் இருக்கிறோம்!

இசைக் கச்சேரிகளுக்குச் சென்று திரும்பியவர்கள், இன்னின்ன பாடல்கள் இன்ன இரசத்துடன் பாடப்பட்டன என்பதைப் பேசுவதை விட மிருதங்கக்காரரின் உச்சிக்குடுமி இத்தனை முறை அவிழ்ந்துவிட்டது; வித்வான் மூன்று முறை பால் குடித்தார்; பிடில் வாசிப்பவரின் முகம் சில சமயங்களிலே மாருதி வேடமாயிருந்தது என்று இவற்றை அதிகமாகப் பேசுவதைக் கேட்கிறோம். காரணம், அவர்கள் கேட்ட பாடல்களில் பல அவர்களுக்குப் புரிவதில்லை.

பெரும்பாலும் தியாகராச கீர்த்தனங்களையே பாடுகிறார்கள். அதிலே அடிக்கடி இராமா இராமா என்று வருவதைத் தெரிந்து கொண்டிருப்பார்களே ஒழிய, அதன் கருத்தை அறிந்து கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்க முடியாது. தமிழ்நாட்டிலே தெலுங்குக் கீர்த்தனங்களுக்குப் பொருள் விளங்க முடியுமா? ஆந்திர நாட்டிலே “அரவம்’’ தெரிகிறதா?

இராசா சர் அண்ணாமலை செய்த பேருதவி

எனவே, இராசா சர் அண்ணாமலைச் செட்டி யார் அவர்கள், தமிழோடு இசைபாட மறந்தவர்களுக்குத் தமிழ்ப்பாடல்கள் பாட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உண்டாக்கி வைத்தார். நல்லதோர் தொகையை நன்கொடையாக ஒதுக்கி வைத்து, தமிழ்ப்பாடல்கள் இயற்றவும், பாடவும், ஆர்வம் வர ஒரு வழி கண்டார்; அதற்காகக் கூடிய சிதம்பரம் மாநாட்டிலே இசை வல்லோர் கூடித் தமிழ்ப் பாடல்களே பெரும்பாலும் பாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இசையில் ஆரியம் புகுந்து இழுக்குச் செய்வதைத் தடுக்க, தமிழ்நாடு தமிழ்ப்பாடல் கேட்பதைத் தர, கொடை வள்ளல் இராசா சர் அவர்கள் செய்த இந்தப் பேருதவிக்குப் பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். தமிழரின் எண்ணம் ஈடேறச் செய்வது கண்டு சீறுகின்றனர்; தெலுங்குக் கீர்த்தனங் களுக்கும், இந்துஸ்தானி துக்கடாக்களுக்கும் வக் காலத்து வாங்கிக் கொண்டு வாதாடுகின்றனர். தமிழர் மறுமலர்ச்சி கண்டு ஆத்திரமடைந்து ஆர்ப்பரிக்கின்றனர். “இந்து’’ பத்திரிகை இசையில் தமிழ் புகுவது கண்டு, குட்டித் தலையங்கம் எழுதி, குறும்புத்தனமாகக் கண்டிக்கத் துணிந்து விட்டது.

ஆரியரின் இந்த எதிர்ப்புக் கண்டு தமிழர் அஞ்சத் தேவியில்லை. தமிழ்நாட்டிலே தமிழே இருத்தல் வேண்டும். தமிழருக்குத் தமிழ் இசையே தேவை. அதுவே அவர்களுக்கு இன்பத்தைத் தரும். பார்ப்பனரின் பிழைப்புப் பாதிக்கப்படும் என்று பதைத்துப் பயன் இல்லை.

ஆரியத்தை இலக்கியம், எண்ணம், இசை முதலிய எல்லாத் துறைகளிலுமிருந்தும் விரட்டி ஒழித்தால் தான் தமிழர் தமிழராக வாழ முடியும். ஆகவே, தமிழர்கள் இந்த ஆரிய எதிர்ப்பைக் கண்டு தளராமல் தனித் தமிழ், தமிழ் இசை ஆகியவற்றிற்கு உழைத்துத் தமிழ்நாடு தனிநாடாவதையும் கண்டு களித்து வாழும் வரை உழைக்க முன் வரவேண்டும்.

எங்கே அந்தக் கலை?

சேரனுடைய கொலு மண்டபத்திலே, கொண்டாட்டங்களின் போது இசைவாணர்கள் “வாதாபி காணபதே’’ பாடவில்லை.

சோழன் களிக்க “சுனோ சுனோ’’ பாடவில்லை.

பாண்டியன் பரிபாலனத்தின் போது, “பலுகவே எமீனா’’ என்று பாடவில்லை.

மூவரசர்கள் வாழ்ந்த நாள்களிலும், அதற்கு முன்பும் தியாகய்யர், சாத்திரி, தீட்சிதர் கிருதிகள் பாடவில்லை. இசையே இல்லையோ? உண்டு! தமிழ் இசை பாடப்பட்டது. அந்த இசை இன்று எங்கே?

பொன்னும் மணியும் பொலிவுடன் விளங்க, வீரமும் ஈரமும் கொண்டு ஆண்ட தமிழ் மன்னர்கள் மற்றைச் செல்வங்களை வளர்த்தது போல், கலைச் செல்வத்தையும் வளர்த்தே வந்தனர். தமிழகத்துச் சந்தனம் ரோம் சாம்ராச்சியத்தில் வாடை வீசியது போல, தமிழ்க் கலையின் மணம் எங்கும் பரவி இன்பம் ஊட்டிற்று. எங்கே அந்தக் கலை இன்று?

சேர நன்னாட்டின் மங்கையர், வேழத்தை விரட்டிய தம் வீரக் காதலரை வாழ்த்திப் பாடியது தமிழில்தான். வெற்றிக்கொடி பறக்க எதிரியை விரட்டி அடித்துத் திரும்பிய சோழ மன்னர்கள் சிறப்பைத் தமிழில்தான் பாடினார்கள்.

பாண்டியனின் குமரிகளுக்குப் பாங்கிகள் பாடியது தமிழ்ப்பாட்டுகள்தான். எங்கே அந்தத் தமிழ்ப்பாட்டுகள்?

கதிரவன் காய்வதை அடக்கிக் கொண்டு மேனி சிவந்து மறையும் நேரத்தில் கடலோரத்தில் பட்டுக் கூடாரத்தினுள்ளே பக்கத்தில் இருந்த கோவலனின் உள்ளம் குழைய மாதவி பாடியது, “மாரு பல்கா. கொன்னாவே ஏமிரா”வுமில்ல; “சல்சல்ரே நவ்சா” னுமல்ல தமிழ்! இன்று, தமிழ் இசை போதுமான அளவு இலை என்று கூறும் நிலை வந்தது. காரணம் என்ன?

இழந்த இன்பம்

தமிழர், இசையை வளர்த்தது போல், வேறு இனத்தினர் வளர்க்கவுமில்லை. தமிழர் இசையை இழந்ததுபோல் வேறுயாரும் இழக்கவுமில்லை. தமிழனின் இன்றைய நிலை இழந்த இன்பத்தைப் பற்றி எண்ணி ஏங்குவதாகவே இருக்கிறது.

தமிழிலே நல்ல பாடல்கள் இல்லை என்பதைக் கேட்கும் தமிழன், தமிழ் இசை முன்னம் இருந்த தன்மையை அறிந்தால் தலையைக் கவிழ்த்துக் கொள்ளத்தான் வேண்டிவரும். அத்தகைய இசை இருந்தது; இன்று மறைந்தது! மறைந்தது மீண்டும் வெளிப்பட இன்று முயற்சிகள் செய்யப்படுகின்றன; அந்த மொகஞ்சதாரோவைக் கண்டு ஆரியர்கள் மருளுகின்றனர்.

”தமிழர் காட்டுமிராண்டிக் கூட்டம். அவர் களுக்கு நாங்கள் நாகரிக போதனை செய்தோம். தமிழ் மொழி வளமறியாக் கூட்டம். நாங்களே நூற்கள் வகுத்தோம்! தமிழர் வாழும் முறை தெரியாக் கூட்டம். நாங்களே அவர்களுக்குச் சட்ட திட்டம், கட்டு, காவல் கற்றுக் கொடுத்தோம்” என்று ஆரியர் கூறினர், ஆங்கிலேயேரிடம். புத்தகங்களில் எழுதினர்; பொதுக்கூட்டங்களில் பேசினர். “தமிழருக்கு ஆசான் ஆரியரே’’ என்று வெளிநாட் டாரிடம் கூறவே வெளிநாட்டார், தமிழரை, ஓர் “இலம்பாடிக் கூட்டம்’’ என்றே என்ணினர். ஓர் இராகவ அய்யங்கார், தமிழருக்குக் “கற்பு’’ என்பதே தெரியாது என்றும் கூறத் துணிந்தார்!

எழுச்சி தோன்றியது

செர்மன் நாட்டு மாக்சு முல்லர், ஆரிய வர்த்தம், ஆரிய மொழி, ஆரிய நாகரிகம், ஆரிய மதம் என்பவற்றையே அய்ரோப்பியருக்கு எடுத்துக் கூறினார். தமிழர் என்ற உணர்ச்சி மங்கிற்று. ஆரியரின் பிரச்சாரம் ஆங்கில நாட்டவரையும் மயக்கிற்று. விபச்சாரியிடம் சிக்கி வீட்டிலுள் ளோரை இழிவுப்படுத்திவிட்டுப் பொருளைப் பாழாகும் காமந்தக்காரனின் கதைபோல், ஆரிய ரிடம் மயங்கிய ஆங்கிலேயர் நாட்டுக்குடையவர் களாகிய நம்மவரைப் புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆட்சி பீடத்திலே ஆரியரை சர்வதிகாரியாக்கினர். தமிழர் தத்தளித்தனர். அந்தத் தத்தளிப்பு தன்னுணர் வுவைத் தந்தது. தன்னைத்தான் அறியத் தொடங்கிய பிறகு, தமிழன் தான் இழந்தவற்றைத் தேடத் தொடங்கினான்; தேடிக் கொண்டும் இருக்கிறான். தமது அழிவுக்குக் காரணம் என்ன? என்று கண்டு பிடித்தான். அதனைக் களைய முற்படுகிறான். தூங்கியவன் விழித்தது போல் இன்று தமிழரிடை ஓர் எழுச்சி உண்டாகி இருக்கிறது. இந்த மறு மலர்ச்சியைப் பல்வேறு துறைகளில் காண்கிறோம். தமிழ்மொழியில் தொடங்கி தமிழ்நாடு என்ற எண்ணம் வரை இந்த மறுமலர்ச்சி இருக்கிறது.

வழி தவறி அலைந்தவன், நேர் வழி தெரிந்து நடக்க ஆரம்பிக்கும் போது செந்நாய் சீறினாலும், சிறுத்தை உறுமினாலும், சிந்தை கலங்கத் தேவை யில்லை. நமது பாதையை நாம் விட்டு அகலோம் என்றே உறுதிகொள்ள வேண்டும். மனம் இருக்க மார்க்கம் இல்லாது போகுமா?

மறுமலர்ச்சி!

இத்தகைய மறுமலர்ச்சி, இனஎழுச்சி இயல்பு, இதுபோல் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. ஆனால், இங்கு இருப்பது போன்ற எதிர்ப்பு அங்கு இருந்ததில்லை.

15, 16ஆம் நூற்றாண்டுகளில், அய்யோரப்பாவிலே, பல்வேறு நாடுகளிலே, இத்தகைய மறுமலர்ச்சி ஏற்பட்டது, அந்தக் காலத்திலே விளைந்த பலன்களே அந்நாடுகளை மேன்மைப்படுத்தின.

பிரிட்டனிலே டியூடோர் (TUDOR) மன்னர் காலத்திலே மறுமலர்ச்சி ஏற்பட்டது. மதத்துறையிலே சீர்திருத்தம், மக்கள் மன்றத்துறையிலே மாறுதல்கள், கலையிலே ஒரு புதுமை தோன்றிற்று. சிறந்த இலக்கியங்கள் வெளிவந்தன. தன்னாட்டுணர்ச்சி, தன் மொழிப்பற்று, தன்மானம் ஆகியவை தாண்டவம் ஆடின. பின்னரே பிரிட்டன் பலமுள்ளது ஆயிற்று. பிரிட்டனிலோ, கவிகள் எழுத்தோவியங்களை ஏற்படுத்திக் கொண்ட நேரத்திலே தான், பிரிட்டிஷ் (ஆங்கிலேயே) கப்பல்கள், திரை கடல்களைக் கடந்து சென்றன. மக்கள் தீரச் செயல்களைப் புரிந்தனர். பழங்காலம் என்பது எல்லாத் துறைகளிலும் மடிந்தது; எழுதுவது புதுமுறையில்; பேசுவது புதுவிதமான; இலக்கியம் புதுவிதமானது என்ற நிலைமை ஏற்பட்டது.

எதிர்ப்பு மடியும்

அய்ரோப்பாக் கண்டத்திலே, அறிவுலகமும் வீரர் உலகமும் அமளியில் ஈடுபடும் விதமான், புரட்சிக் குக் காரணமாக இருந்த வால்டேர், உரூசோ, மார்ட்டின் லூதர் போன்றவர்கள் இத்தகைய மறுமலர்ச்சித் தோட்டத்தின் உழவர்கள்! அவர் களுக்கும் அவர்கள் புகுத்திய எண்ணங்களுக்கும் எதிர்ப்பு இருந்தது! இறந்தது! இங்கும் இன்று மறுமலர்ச்சி காண்கிறோம். இதற்கு எதிர்ப்புக் காண்கிறோம். அந்த எதிர்ப்பு இறுதியில் மடியத்தன் போகிறது. கடல் அலையை கைத்தடி கொண்டு அடிக்க முயலுவோனின் கை சலிக்குமேயொழிய, அலை சலிக்காது.

ஆனால் மற்றைய நாடுகளிலே நடந்ததற்கும், இங்கு நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அங்கெல்லாம் மறுமலர்ச்சியை எதிர்த்தவர்கள், வெறும் பழைமை விரும்பிகள் மட்டுமல்லர்; இன்று இருக்கும் முறையினால், ஆதிக்கம் செலுத்தி வாழும் கூட்டத்தினர். மறுமலர்ச்சி, பழைமையைப் பாழாக் குமோ என்பது அல்ல அவர்களின் பயம். நமது ஆதிக்கம் போய்விடுமோ என்பதே அவர்களின் திகில். எனவேதான் இங்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது, இந்தக் கடுமையை பொருட்படுத்தாமல், புதிய எழுச்சிக்காகப் போரிடும் முன்னணிப் படையினர், தேசத்துரோகி, வகுப்புவாதி என்று ஏசப் பட்டுத் தூற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், அந்த முன்னணிப்படை போட்டு வைக்கப் போகும் பாதையிலே பட்டாளங்கள் பலப்பல பிறகு நடக்கும். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தப் பாதையிலே நடந்து, புதூர் சென்று வாழ்வார் என்பது திண்ணம்.

தமிழரின் மறுமலர்ச்சியே; “தமிழில் ஏன் பிறமொழி கலக்க வேண்டும்?’’ என்று கேட்கச் சொல்கிறது.

தமிழரின் மறுமலர்ச்சியே, தமிழகத்திலே “இந்தி கட்டாயப் பாடமா?’’ என்று கிளர்ச்சி நடத்தச் சொல்லிற்று.

தமிழரின் மறுமலர்ச்சியே, மார்க்கத் துறையிலே, “ஆரிய ஆபாசங்கள் கூடாது’’ என்று தைரியமாக எடுத்துக்கூறச் சொல்லியிற்று; “சமுதாயத் துறை யிலே, நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன்’’ என்ற பேதம் கூடாது என்று கூறச் சொல்லிற்று.

நூல்: தமிழரின் மறுமலர்ச்சி - அறிஞர் அண்ணா

திராவிடர் கழக வெளியீடு

பெரியார் திடல், 50 ஈ.வெ. கி. சம்பத் சாலை, சென்னை- 600 007

Pin It