எங்களின்
பிறப்புக் காலக் குறிப்புகளின்
கட்டமடிக்கப்பட்ட
சுவடிகளை சுமந்து கிடந்தது
அதுதான்

நடைவண்டி நாட்களில்
நலிவுறும் காலத்தே
ஊற்றப்பட்ட
உரைமருந்து
ஒளித்து வைக்கப்பட்டிருந்தது
அதில்தான்

கட்டாந்தரையில்
காலைக் கடன் கழித்து
ஆகாயத் தாமரைக்
குளத்தில் கழுவி
அர்த்தம் அறியாமலே
“ஆக்கோர்” எனக் கத்தி
“பேந்தா” விளையாண்ட
நாட்களில்
வெயில் காதைத்
திருகிச் செல்லும்
பள்ளிக்குப் போவென!
முடிந்த கால்சட்டையோடு
முதுகில் சுமந்த கல்வியை
அடைகாத்தது
அதுதான்...

தேவரீர்
அண்ணாவுக்கு என
சித்தப்பா எழுதிய
கடிதங்களில் சில உட்பட
அப்பாவின்
ஆவணக் காப்பகம்
அதுதான்!

திருமணத் தாம்பூலம்
திருவிழா பலகாரம் என
எல்லாவற்றையும்
ஏந்தித் திரிந்தது
அதுதான்.

கரித்துணி முதல்
காசுப்பை வரை
யாதுமாகி நின்றதும்
அதுதான்

ஏழரை சனி
அண்ணனுக்கும்
செவ்வாளிணி தோச
அக்காவுக்கும்
பரிகாரப்
பொட்டலங்களை
பகிர்ந்தளித்தது
அதுதான்

தூக்கிச் சுமப்பது
அவமானமென
மழுங்கிய
மூளைகளால்
துரத்தப்பட்டது
துணிப்பை!

புதைத்தால்
உரமாகும்
எரித்தால் எருவாகும்
எதுவாயினும்
ஆகாதெனச் சொல்லி
நிலம்
அழிக்கும்
நெகிழியை நாடும்
அந்நியம் விரும்பும்
அடிமைகள் எண்ணி
அழுகிறது
மஞ்சள் பையோடு
மண்ணின் மொழியும்

Pin It