இமயத்தில் ஓர் ஆழிப்பேரலை என அதிர்ந்து போகும் அளவுக்கு உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கையும் அதன் துணை ஆறுகளிலும் பெருவெள்ளப் பெருக்கெடுத்து பேரழிவை ஏற்படுத்தி விட்டன.

கடந்த 2013 சூன் 16, 17 ஆகிய இரு நாட்களில் மட்டும் இடைவிடாது ஏறத்தாழ 40 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் கடும் நிலச்சரிவை எற்படுத்தி அதன் விளைவாக கிராமம் கிராமமாக பேரழிவைச் சந்தித்தன. குறிப்பாக கேதார்நாத், உத்தர்காசி, ருத்தரபிரயாக், சமோலி ஆகிய மாவட்டங்கள் இந்தப் பேரழிவின் மையப் பகுதிகளாயின. கங்கைப் பேராறும் அதன் துணை ஆறுகளான பாகிரதி, அலகண்டா, ஆசி ஆறுகளும் பெருக்கெடுத்து ஓடி தங்கள் வழியில் குறுக்கிட்ட கட்டடங்கள், சாலைகள், நீர்மின் நிலையங்கள், கோயில்கள் ஆகிய அனைத்தையும் அழித்தன. உத்தரகண்ட் மாநிலம் தேவபூமி என வடநாட்டு பக்தர்களால் அழைக்கப்படுகிற மாநிலம் ஆகும். கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, கேம்குண்ட் போன்ற புகழ்பெற்ற கோயில்களும் பல நூற்றுக்கணக்கான சிறு சிறு கோயில்களும் உத்தரகண்டில் உள்ளன. எனவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல இலட்சம் பக்தர்கள் நாள்தோறும் சென்றுவரும் வழிப்பாட்டுத்தல மாநிலமாக உத்தரகண்ட் விளங்குகிறது. எனவே, இந்தப் பேரழிவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிக்கிக் கொண்டனர்.

கண்ணுக்கு முன்னே அடுக்குமாடிக் கட்டடங்கள் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதையும் கிடைத்த உயரமான இடத்தில், கழுத்தளவு தண்ணீரில் குலை நடுக்கத்தோடு நின்றுகொண்டிருந்தபோது தங்களை உரசிக் கொண்டு மனிதப்பிணங்களும், உயிரிழந்த கால்நடைகளும் சென்றதையும் உயிர் தப்பி வந்தவர்கள் விவரிக்கும் போது கேட்பவர்களின் நெஞ்சம் நடுங்கும். கேதார்நாத்திலிருந்தும், உத்தகாசியிலிருந்தும் மண்ணரிப்பில் அடித்துச் சென்றது போக எஞ்சியிருந்த ஒற்றையடிப் பாதையில் ஒருபக்கத்து சக்கரத்தை உருட்டிக் கொண்டு இன்னொரு பக்கத்து சக்கரங்கங்கள் பள்ளத்தாக்கில் தொங்கிக் கொண்டிருக்க ஒவ்வொரு கிலோ மீட்டராக எண்பது கிலோ மீட்டரைக் கடந்து பயணிகளுடன் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர்களின் நெஞ்சுறுதியும் கடமைப் பற்றும் நம்மை நெகிழ வைக்கும்.

வெள்ளத்தில் எல்லா திசைகளும் துண்டாடப்பட்டு நடுக்காட்டில் தத்தளித்தவர்களை சீறிப்பாயும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து திபெத் எல்லைப்பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்டிருக்கின்றனர். இந்த மீட்புப் பணிகளில் உத்தரகண்ட் மாநில கிராமத்து மக்கள் பலன் கருதாது பாடாற்றி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆயினும் இந்தப் பேரழிவையும் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை வாய்ப்பாக பா.ஜ.க வின் நரேந்திரமோடியும், காங்கிரசின் சோனியாகாந்தியும் பயன்படுத்திக் கொண்டது மிகக் கேவலமானது. பதவி அரசியல் எவ்வளவு கீழானது என்பதற்கு இவர்களின் இந்தச்செயல்களே சான்றுகள்.

இன்னொருபுறம், நேற்றுவரை மக்களால் பூசிக்கப்படும் சாமியார்களாகத் திரிந்த சிலர் செத்தப் பிணங்களில் இருந்த நகைகளையும் கோயில் உண்டியல்களில் கத்தை கத்தையாக இருந்த ரூபாய்களையும் திருடிச் சென்றனர்.

கேதார்நாத் கோயில் காணிக்கைத் தொகை எட்டுக் கோடி ரூபாயை அந்த ஊர் ஸ்டேட் வங்கியிலிருந்து கொள்ளையடித் துள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களின் கைகளை வெட்டி வளையல்களையும் மோதரங்களையும் திருடியவர்கள் சிலர்.

பல கிலோ மீட்டர் தொலைவு உணவும் தண்ணீரும் இன்றி உயிர் அச்சத்தோடு வந்தவர்களிடம், ஒரு பாட்டில் தண்ணீர் 100 ரூபாய்க்கும், ஒரு புரோட்டா 200 ரூபாய்க்கும் விற்பனை செய்த கயவர்களும் உண்டு.

மக்களிடம் உள்ள பக்தியையும், மத நம்பிக்கையையும், மன உலைச்சலையும் பயன் படுத்திக்கொண்டு கோடி கோடியாய் கொள்ளையடித்த உயர் தொழில் நுட்பச் சாமியார்கள் ரவி சங்கரோ, ஜக்கி வாசுதேவோ, பலகாலமாக மடங்களையும் வழிபாட்டு இடங்களையும் தங்கள் கொலு மண்டபமாக வைத்திருக்கும் பிற பணக்கார சாமியார்களோ, இளைஞர்கள் பலரின் நடமாடும் தெய்வமாக வலம் வந்து கோடி கோடியாய் குவித்த கிரிக்கெட் வீரர்களோ இந்த பெரும் துயரத்தில் சிக்கியுள்ள மக்களின் துயர்துடைக்க முன்வரவில்லை.

இப்பெரும் துயரில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய அரசு உத்தரகண்ட் பெருவெள்ளத்தை “தேசியப் பேரழிவு” என அறிவித்து மீட்புப் பணிகளையும், துயர் துடைப்புப் பணிகளையும் முழுவீச்சில் நடத்தி துயருற்றுள்ள அம்மாநிலமக்களின் வாழ்வாதாரங்களை மீள் உருவாக்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும். உத்தரகண்ட் பேரழிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தில் நாமும் பங்குபெறும் அதே நேரத்தில் இந்தப் பேரழிவு ஏன் நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனெனில் உத்தரகண்ட், அசாம், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற இமயமலை மாநிலங்களில் கனமழை என்பதோ, பெரு வெள்ளம் என்பதோ புதிதல்ல. அப்போதெல்லாம் இவ்வளவு பேரழிவு ஏற்பட்டதில்லை. இப்போது பெய்துள்ள பெருமழை கடந்த ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் இல்லாதது என சொல்லப்பட்டாலும் இவ்வளவு பெரிய பேரழிவு தவிர்த்திருக்க முடியாததா என்ற கேள்வி எழுகிறது இந்திய அரசு கடைபிடித்து வரும் கண்மண் தெரியாத, தலைவிரி கோலமான, வெறிபிடித்த முதலாளிய வளர்ச்சிமுறைதான் இவ்வளவு பெரிய பேரழிவிற்கு முதன்மைக்காரணமாகும்.

தொழில் முதலாளிகளின் இலாபவெறி மட்டுமல்ல, பக்தி வெறியைப் பரப்பி கொள்ளை அடிக்கும் மத முதலாளிகளும்தான் இதற்குக் காரணம்.கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பகுதிகளுக்கு பக்தர்கள் புனிதப்பயணம் செல்வது புதிதல்ல. ஆயினும் அண்மைக் காலமாகவழிப்பாட்டுத் தலங்களை சார்ந்து வழிபாட்டு சுற்றுலாத்தொழில் வளர்ந்து வருகிறது. தொலைக்காட்சி, வார ஏடுகள் போன்றவை பெருமெடுப்பில் இந்தத் தலங்களின் புனிதத் தன்மையைப் பெரிதுபடுத்திக் கூறி, இத்தொழிலை ஊதிப் பெருக்க வைக்கின்றன. உத்தரகண்டில் மட்டுமின்றி வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் இந்தத் தொழில் விரிவடைந்து வருகிறது.

1991 இல் தீவிரப்பட்ட உலகமயமும், பாபர் மசூதி இடிப்பில் மையம் கொண்ட இந்துத்துவா எழுச்சியும் கைகோத்துக் கொண்டு இதனை அமைப்பு வகையில் விரிவுபடுத்துவதை அரசியல் பணியாக மாற்றின. இதன் எதிர்வினையாக தீவிரப்பட்ட இசுலாமிய, கிறித்துவ மதவாதங்களைப் பயன்படுத்தியும் வழிப்பாட்டுச்சுற்றுலாத் தொழில் வேகமாக வளர்ந்தது. இந்தியாவிலேயே புகழ்பெற்ற வழிப்பாட்டுத்தலங்கள் அதிகம் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் இத்தொழிலின் தாக்கம் அதிகம் உள்ளது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டரை கோடி பேர் என்றால் இதன் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் இந்த இரண்டு நாள் மழை,பெருவெள்ளத்தில் கேதர்நாத்தில் மட்டும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கிறார்கள்.

வழிபாட்டு சுற்றுலாப் பயணிகளைத் தங்கவைக்க பாகிரதி, அலகண்டா, ஆசி ஆறுகளின் கரைகளையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா விடுதிகள் கட்டப் பட்டுள்ளன. மலைச்சரிவுகளிலும், ஆற்றோரங்களிலும் மிகை எண்ணிக்கையில் சிமெண்ட் கட்டடங்கள் எழும்புவது அவை அமைந்துள்ள நிலங்களின் நிலைத்தன்மையை குலைத்துவிடுகிறது. இப்போது ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆற்றோர விடுதிகளும், மலைச் சரிவு கட்டடங்களும் பெருமளவு அடித்துச் செல்லப்பட்டதின் பின்னணி இதுதான்.

எந்த வரம்புமின்றி சுற்றுலா வாகனங்கள் பெருக்கெடுத்தன. உத்தரகண்டில் பதிவு பெற்ற டீசல் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு மடங்கு பெருகியுள்ளது என்றும், கங்கை ஆற்றின் பாலத்தை ஒரு நிமிடத்துக்கு 180 பெரிய வாகனங்களோ அல்லது ஏறத்தாழ ஆயிரம் இருசக்கர வாகனங்களோ கடந்து செல்கின்றன என்றும் உத்தரகண்ட் மாநில அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன. இவற்றின் போக்குவரத்துக்கு ஏற்றாற் போல் மலைச் சாலைகள் அகலப்படுத்தப் பட்டன. அதற்காக கணக்கு வழக்கின்றி, எந்த வகை பாறையை எந்த இடத்தில் உடைக்க வேண்டும் என்ற தொழில்நுட்ப அறிவும் பின்பற்றப்படாமல் மலைப்பாறைகள் தகர்க்கப் பட்டன. இதன் காரணமாக மலைப்பாறைகளின் நிலைத் தன்மை பாதிக்கப்பட்டு மண் சரிவுகள் அடிக்கடி நிகழ்ந்தன.

இப்போது வரலாறு காணாத மண் சரிவில் உத்தரகண்ட் மாநிலமே சிக்கித் தவிக்கிறது. கேதார்நாத் கோயிலிலும் அதை சுற்றி உள்ள கோயில்களிலும் மலை போல் குவிந்துள்ள சேற்று மண்ணை அகற்றி கேதார்நாத்தை பழைய நிலைக்கு கொண்டுவர குறைந்தது ஓராண்டாவது ஆகும் என்றும் அதுவரை வெளியிலிருந்து பக்தர்கள் யாரையும் அனுமதிக்கும் வாய்ப்பில்லை என்றும் உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

பல நூறு கட்டடங்கள் மண் சரிவில் சிக்கியுள்ளன. பல்லாயிரம் வாகனங்கள் சேற்றுக்குள் மூழ்கியுள்ளன. ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரகண்டில் இரண்டரை கோடி வெளியார்கள் குவியும் போது அவர்களது மூச்சுக் காற்றில் வெளிவரும் கரியமில வாயுவும், அவர்களது வாகனங்கள் வெளியிடும் கரிப் புகையும் இமயமலைச் சாரலின் வெப்பத்தை கூட்டுகிறது. பனிப்பாறைகள் உருகுவதை அது வேகப்படுத்துகிறது. வெள்ளப்பெருக்கை தீவிரப்படுத்துகிறது.

சாலை அமைக்கவும், விடுதிகள் கட்டவும் காடுகள் அழிக்கப்பட்டதால் மண்ணை பிடித்து வைத்துக் கொள்ளும் மரங்கள் குறைந்து மண் அரிப்பு விரைவு பட்டது. நிலைகுலைந்த பாறைகள் சரிந்து வீழ்வது அடிக்கடி நிகழ்ந்தது.

இனிமேலாவது உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை வரம்புக்கு உட்படுத்த வேண்டும். அமர்நாத் பயணத்துக்கு கடைபிடிக்கப்படுவது போல் ஒழுங்கு விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் சாலை விரிவாக்கம் விடுதிகள் பெருக்கம் ஆகியவற்றை மட்டுப்படுத்தி மேற்சொன்ன அழிவுகளைத் தடுக்கலாம்.

இதைவிட இந்தப் பெரு வெள்ளப் பேரழிவுக்குக் கூடுதல் காரணமாக அமைவது இந்திய அரசு பெருமுதலாளிகளுடன் இணைந்து நிறுவிவரும் அணைகள், மின் திட்டங்கள் ஆகியவையும், சீன அச்சுறுத்தலைக் காரணம் காட்டி விரிவாக்கி வரும் படைத்தளங்களும் ஆகும். உத்தரகண்ட், இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் , அசாம் ஆகிய இமயமலை மாநிலங்களில் மட்டும் இந்திய அரசு நிறுவி வரும் நீர் மின் திட்டங்கள் 292 ஆகும். இவற்றில் ஆற்று நீரோட்டத்தில் டர்பனை சுழற்றி மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறிய மின் நிலையங்களும் உண்டு என்றாலும் பெரும்பாலான நீர் மின்திட்டங்கள் அணைகள் கட்டி மின்சார உற்பத்தி செய்யும் திட்டங்களாகும். மக்களின் எதிர்ப்புகளுக்கிடையே உத்தரகண்டில் கட்டப்பட்டுள்ள தெஹ்ரி அணை உலகின் பெரிய அணைகளில் ஒன்று. 2400 மெகாவாட் மின் உற்பத்திக்காகவும் தொலைதூரத்தில் உள்ள தில்லிப் போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காகவும் இந்த அணை கட்டப்பட்டது. இவ்வாறு பெரிய மற்றும் சிறிய அணைகள் நூற்றுக்கும் மேலாக கட்டப்படுகின்றன. இவற்றின் மூலம் 1 இலட்சத்து ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை 2025 க்குள் உற்பத்தி செய்வது என்பது இந்திய அரசின் திட்டமாகும்.

இந்த அணைக்கட்டும் பணிகளுக்காக ஏறத்தாழ 18 ஆயிரம் சதுரக் கிலோ மீட்டர் பரப்புக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மலைப் பாறைகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி பாகிரதி ஆற்றின் 65 விழுக்காடு தண்ணீரும் அலகந்தா ஆற்றின் 80 விழுக்காடு தண்ணீரும் முடக்கப்படுகின்றன. இவ்வாறு பல அணைகளில் இந்த ஆறுகளின் தண்ணீர் தேக்கிவைக்கப்படுவதால் மழைக்குறைவான காலங்களில் தண்ணீர் திறந்துவிடப்படாமல் அணைகளுக்கு கீழ் புறமுள்ள ஆறுவற்றிப்போய்விடுகிறது. இமயமலை மக்களும் பிற உயிர்களும் சந்தித்திராத புதிய சிக்கல் இது, ஏனெனில் இந்த ஆறுகள் அனைத்தும் எப்போதும் வற்றாத உயிர் ஆறுகள் (ஜீவ நதி) ஆகும்.

இவ்வாறு செயற்கையான வறட்சி உருவாவதால் அங்கு நிலவிய உயிர் சமநிலையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமும் மீட்க முடியாத அளவுக்கு தொலைந்து போயின. மறுபுறம் கனமழைக் காலத்தில் பெரு வெள்ளத்தில் அணைகள் திறந்து விடப்படுவதால் அளவு கடந்த வெள்ள நீரால் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அழிவுகள் உண்டாகின்றன.

இமயமலை என்பது இந்த புவிப்பந்தில் முளைத்த இளையமலை ஆகும். பழைய மலைகளை ஒப்பிட இதன் பாறைகள் உறுதி குறைந்தவை. இவை ஒன்றுடன் ஒன்று படிந்து பிணைந்திருப்பது தனித்தன்மையானது. அணைகள் கட்டவும், சாலைகள் போடவும், கட்டடங்கள் கட்டவும், வெளியிலிருந்து வரவழைக்கப்படும் பொறியியல் நிறுவனங்கள் இதன் தனித் தன்மையை புரிந்து கொள்ள முயல்வதே இல்லை.

இந்தக் காடுகளை பற்றியும் பாறைகளைப் பற்றியும் ஆழமாக தெரிந்து வைத்துள்ள மண்ணின் மக்களின் அறிவியல் அறிவை சட்டை செய்வதில்லை.

விரைந்து முடித்து லாபம் பார்க்க வேண்டும் என்கிற வெறியில் இதில் மலிந்துள்ள ஊழலும் சேர்ந்து இதன் கேடுகளை அதிகப்படுத்துகின்றன. எங்கேயோ நிறுவப்படும் இந்திய மற்றும் வெளிநாட்டு பெரு முதலாளிய நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக இந்த மண்ணின் வளமும், மரபும், மக்களின் வாழ்வும், உயிர்ப் பண்மையும் அழிக்கப்படுகின்றன.

எல்லைப்புற மாநிலமாக உத்தரகண்ட் அமைந்துள்ளதால் பாதுகாப்புக் காரணங்கள் கூறி படைத்தளங்கள், இராணுவ ஹெலிகாப்டர் தளங்கள் படைப் பயிற்சி முகாம்கள் அமைப்பதற்கும் உத்தரகண்ட் காடுகள் அழிக்கப்படுகின்றன. அம்மாநிலத்தின் சிறீநகர் என்றப் பகுதியில் அமைந்துள்ள சகஸ்திர சீமாபால் என்ற எல்லைப் புற ஆயுதப் படை பயிற்சி கல்லூரி அமைப்பதற்கு 25 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது இதற்கொரு சான்று.

மின்னுற்பத்தி, பாதுகாப்பு, சுற்றுலாத் தொழில் வளர்ச்சி என்றப் பெயரால் இயற்கையை அழித்ததால் இப்போது இயற்கை திருப்பித்தாக்கியிருக்கிறது. பல மின்சார நிலையங்களில் பத்தடி உயரத்திற்கும் மேலாக பல்லாயிரம் சதுர அடிப்பரப்புக்கு சேறு நிரம்பியிருக்கிறது. இப்போது ஏற்பட்டது போல பெருவெள்ள காலத்தில் மட்டுமின்றி அங்கு இயல்பாக ஓடிவரும் ஆற்றுப் பெருக்கில் கட்டியுள்ள அணைகளில் சேறுபடிவது சமவெளிப் பகுதி அணைகளைவிட அதிக அளவில் இருக்கிறது. அதிக அளவு காடுகள் அழிக்கப்பட்டு மண் அரிப்பு தீவிரப்பட்டுள்ளதால் அணைகளில் தேங்கும் சேற்றின் அளவு அதன் பொறியாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிகை அளவிலும், மிகை வேகத்திலும் இருக்கிறது. படிந்து வரும் சேற்றை அப்புறப்படுத்துவதற்கு முழுமையான வாய்ப்பில்லை. அப்படியானால், இந்த அணைகளின் பயன்பாட்டு வாழ்நாள் குறைவானது என்று பொருள்.

அதாவது இவர்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான காலத்துக்குத்தான் மின்சார உற்பத்தி அங்கே நடக்கும். அதன் பிறகு அந்த அணைகளை அப்படியே விட்டு விட்டு போய்விடுவார்கள். அதனால் ஏற்படும் அழிவு மட்டும் மக்களுக்கு.

இந்த முதலாளிய வளர்ச்சிப்பாதை உத்தரகண்ட் மக்களின் வேளாண்மையையும்,காடு சார்ந்த சிறு தொழில்களையும், வாழ்க்கை முறையையும் அழித்தது. இதிலிருந்து தப்பிப்பதற்கு வேறு வழியற்று திகைத்து நின்ற மக்களின் ஒரு பகுதியினரை இந்த வழிபாட்டு சுற்றுலாத் தொழில் உள்ளிழுத்துக் கொண்டது. சுற்றுலாப் பயணிகளிடத்தில் குளிர் உடை விற்பவர்களாக, உணவுக்கடை நடத்துபவர்களாக, கோவேறுக் கழுதைகளில் முதியவர்களை ஏற்றிச் செல்பவர்களாக, சுற்றுலா வழிகாட்டிகளாக, ஓட்டுநர்களாக, விடுதிப் பணியாளர்களாக நகரங்களை நோக்கி கிராமப்புற ஆண்கள் இடம் பெயர்ந்தனர். ஆண்டில் நான்கு மாதங்களில் கிடைக்கும் சுற்றுலாப் பணி வருமானத்தை வைத்துக்கொண்டு கிராமங்களுக்குத் திரும்பி எஞ்சிய மாதங்களை இவர்கள் ஓட்டி வந்தார்கள்.

இப்போது குறைந்தது ஓராண்டுக்கு சுற்றுலாத்தொழில் இல்லை என்றாகிவிட்டது. இவர்களுக்கு என்று இருந்த துண்டு நிலங்களும் மண்சரிவு சேற்றில் புதைந்துவிட்டன. எந்த மாற்று வருமான வழியுமின்றி இம்மக்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பேரழிவைப் பார்த்தாவது இந்த முதலாளிய வளர்ச்சிப் பாதை கூடாது என்ற முடிவுக்கு மக்கள் வரவேண்டும். ஆட்சியாளர்கள் தாமாக அந்த முடிவுக்கு வரமாட்டார்கள். ஏனெனில், இவ்வளர்ச்சிப் பாதையில் கொள்ளை லாபம் பார்க்கும் முதலாளிகளும் அரசியல் புள்ளிகளும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து விட்டவர்கள். தேர்தல் கட்சிகளிடையே இது குறித்த அடிப்படை கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. இந்த மாற்றுப்பாதை மக்களிடமிருந்துதான் வரவேண்டும். உத்தரகண்ட் மாநில மக்கள் வாழ வேண்டுமென்றால் இந்த “வளர்ச்சிக்கு”செலவிடப்படும் மூலதனம் நிறுத்தப்பட வேண்டும்.

பனிப் பொழிவும் கனமழையும் வெள்ளப்பெருக்கும் அந்த மக்களின் வாழ்க்கையோடு இணைந்தவை. இந்த இயற்கைச் சூழலோடு இயைந்தும் போராடியும் அமைதியாக வாழ்ந்தவர்கள் அம்மக்கள்.

காடுகளை அவர்களது பொது சமூக உரிமையாக பாதுகாத்து அதைக் கொண்டு காடு சார்ந்த சிறு தொழில்களை வளர்த்துக் கொடுத்தாலே போதும். உத்தரகண்ட் மாநிலம் வளமாக வாழும்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பும் மண்ணின் மக்கள் வாழ்க்கையும் இரண்டறக் கலந்தது என்பதை உணர்ந்து உலகத்துக்கு எடுத்துக்காட்டியவர்கள் உத்தரகண்ட் மக்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சி என்பது ஆய்வரங்கங்களில் மட்டுமே விவாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தக் காலத்தில் அதை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தவர்கள் உத்தரகண்ட் மக்கள். 1970களில் அம் மாநிலத்தில் உருவான சிப்கோ இயக்கம் (Chipko Movement) சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக இந்தியாவில் தோன்றிய முதல் மக்கள் இயக்கம் எனலாம். “சிப்கோ” என்ற இந்தி சொல்லுக்கு ‘ஒட்டிக்கொள்’என்று பொருள். மரத்தை சுற்றி மக்கள் கைகோத்துக் கொண்டு மரத்தோடு மரமாக ஒட்டி நின்று மரத்தை வெட்ட வரும் நிறுவன ஆட்களிடமிருந்து மரத்தை பாதுகாப்பார்கள். மரமும் தங்கள் வாழ்வும் ஒட்டி இருக்கிறது என்பதை இப்போராட்டத்தின் மூலமாக எடுத்துக் காட்டினார்கள். சிறு சிறு முயற்சிகளாக தொடங்கிய இந்தப் போராட்டம் சமோலி மாவட்டத்தில் ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்தது. சமோலி மாவட்டம் ரேணி கிராமத்தில் டென்னிஸ் மட்டை உற்பத்தி நிறுவனம் ஒன்று மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல அரசின் வனத்துறையிடம் அனுமதி பெற்றது. அவ்வாறு மரம் வெட்ட வருபவர்களை எதிர்த்து 1974 மார்ச் 24 அன்று கவுரவ தேவி என்ற பெண்மணி தலைமையில் கூடிய 27 பெண்கள் மூவர் நால்வராக கைக்கோத்து மரங்களோடு ஒட்டி நின்று தொடங்கி வைத்த சிப்கோ போராட்டம் வரலாற்று நிகழ்வாக மாறியது.

“எங்கள் வாழ்வும் இந்த மரங்களும், காடும் ஒட்டி பிறந்தவை. எங்களை வெட்டிவிட்டு மரங்களை வெட்டு” என்று முழங்கியவாறு இரவுப் பகலாக இரண்டு நாட்கள் அந்த பெண்கள் நடத்திய சிப்கோ போராட்டம் வெட்ட வந்தவர்களை வெளியேற்றியது. அடுத்தடுத்த கிராமங்களில் இப் போராட்டங்கள் வெடித்தன. சந்திபிரசாத் பட் என்ற சூழலியல் செயல்பாட்டாளர் இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய சிப்கோ இயக்கத்தை உருவாக்கினார். சிப்கோ இயக்கத்தில் செயலாற்றிய காந்தியவாதி சுந்தர்லால்பகு குணா தெஹ்ரி அணைக்கு எதிராக ஆண்டுக் கணக்காக நடத்திய அறப்போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த்து.

உத்தர பிரதேசத்திலிருந்து பிரித்து உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சியில் சிப்கோ இயக்கமும் இணைந்து அதனை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியது. உத்தரகண்ட் மாநிலம் உருவானால் அதன் பொருளியல் பாதை சிப்கோ இயக்கம் காட்டிய பசுமை வளர்ச்சிப் பாதைதான் என்று உத்தரகாண்ட் இயக்கத்திற்கு தலைமைதாங்கிய பா.ச.க. மற்றும் காங்கிரசு தலைவர்கள் உறுதியளித்தனர். ஆனால் உத்தரகண்ட் மாநிலம் உருவானதற்குப் பிறகு இதற்கு நேர் எதிரான மையப்படுத்தப்பட்ட முதலாளிய வளர்ச்சிப் பாதையில் ஆட்சி நடத்தினார்கள்.

இதன் விளைவாகவே இன்று உத்தரகண்ட் இந்த பேரழிவை சந்தித்திருக்கிறது. உத்தரகண்ட் பேரழிவு தமிழ்நாட்டு மக்களுக்கும் படிப்பினையாக அமைய வேண்டும். குறிப்பாக படித்த இளைஞர்கள் விழிப்புணர்வுப் பெற வேண்டும். முக்கியமாக வளர்ச்சி என்ற பெயரால் முதலாளிய நிறுவனங்களும் அவற்றின் சார்பான கல்வி முறையும் எழுப்பிவரும் கூச்சல்களிலிருந்து விலகி நின்று பார்க்க அறிவை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவகையில் இங்குள்ள வளர்ச்சிப் பாதை அறிவு நுழைய முடியாத பாதை (Knowledge Proof Path) ஆகும். காட்டு மரங்களைப் பற்றி அவற்றில் வாழும் விலங்குகள், பூச்சியினங்கள் பற்றி, அங்கு நிலவும் பருவகால சூழ்நிலைகள் பற்றி, இயற்கை இடர்பாடுகள் பற்றி, மண் பாறைகள் ஆகியவை குறித்து அறிந்து வைத்துள்ள வளமான மக்கள் அறிவை ஏற்காமல் புறந்தள்ளும் பாதை இது.

அம் மக்கள் காலம் காலமாக சேமித்துள்ள பல்துறை அறிவையும் அந்த அறிவு சேமிக்கப்பட்டுள்ள மண்ணின் மொழியையும், அந்த அறிவார்ந்த மக்களையும் அடியோடு “அறிவு” (Knowledge) என்ற வளையத்திலிருந்து வெளியே விரட்டிவிட்டு கம்பெனிகளின் இலாபத்துக்கு இசைவானதை மட்டுமே அறிவு என ஏற்க வைக்கும் வல்லடிப் பாதையாகும் அது. அதனால் தான் இதனை அறிவு நுழையாப் பாதை என்கிறோம்.

இந்த வல்லாதிக்கப் பாதைக்கு ஏற்ற கருத்து குருடர்களாக படித்த இளைஞர்களில் பெரும்பாலோர் மாற்றப்பட்டுள்ளனர்.நமக்கு எதுவும் தெரியாது. நமது முன்னோர்கள் அறிவற்றவர்கள், நமது மொழியில் எதுவுமில்லை. நம்மால் சொந்தமாக முன்னேறவே முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் படித்த இளைஞர்களும், அவர்களைப் பின் பற்றி படிக்காத பிறரும் சிக்கவைக்கப்பட்டுள்னர்.

முதலாளிய நிறுவனங்களின் இலாபத்துக் கேற்ற அறிவுப்பாதையும் அதிகாரம் மையப்படுவதும் ஒன்றிணைந்தது. இந்த ஒன்றிணைவு பெருந் தொழிற்சாலை, பெரிய அணை பெருவிகித உற்பத்தி என்பதற்கு இசைவானது. பெரு முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு ஏற்றது. இவற்றிலிருந்து விடுபட்டு மாற்று வளர்ச்சிப் பாதைக்கு இளைஞர்கள் திரும்ப வேண்டும். வளங்குன்றா வளர்ச்சிப் பாதை (Sustainable Development) என்பதே அது. பெருந்தொழிற்சாலை, பெரிய அணை, பெருவிகித உற்பத்தி என்பவை அரிதான நிகழ்வாக இருக்க வேண்டும். சிறிய தொழில்கள், சிறிய அணைகள், சிறுவிகித உற்பத்தி, இயற்கையை மீட்க முடியாத பெருந் திட்டங்கள் இல்லாமை, குறைவான இடப்பெயர்வு, கிராமங்களின் உபரி வளர்ச்சியில் இயல்பாக உருவாகும் நகரங்கள் என்ற மாற்றுப் பொருளியலே வளங் குன்றாத மாற்றுப் பொருளியல் ஆகும்.

இந்த வளர்ச்சிப் பாதை மக்களது அறிவை அங்கீகரித்து உலக அறிவோடு ஒருங்கிணைக்கும். அந்த அறிவு மரபை தாங்கி நிற்கும் மொழியை, அதிகாரத்தில் வைக்கும். மையப்பட்ட அதிகாரத்தை உடைத்து மக்களிடத்தில் அதிகாரத்தை பரவலாக்கும். இந்த வளர்ச்சிப் பாதையே மண்ணையும், மக்களையும் காக்கும். உள்ளூர் அறிவை அங்கீகரிக்கும் தேசியப் பொருளியல் பாதை இது. உத்தரகண்ட் தரும் படிப்பினை இதுதான்.

Pin It