திராவிட மயமாதல்

வேற்றுமைப் பண்பாட்டாளர்களும், தமிழுக்கும் தமிழருக்கும் அயன்மையாளர் களுமான “திராவிடர்கள்” என்று அறியப்பட்ட பல்லவர்கள் தமிழகத்தின் வட பகுதியில் ஆட்சி அதிகாரம் செலுத்தத் தொடங்கியதும், தமிழகம் மிகப்பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியது. தமிழ்மக்களின் சமூக, பண்பாட்டு, பொருளியல் வாழ்க்கை மிகுந்த பாதிப்புக்குள்ளானது. தமிழக அரசுமுறை மாற்றங்கண்டது; பொருளியல் தளத்தில் கோயில் நிலவுடைமையும், பெரிய காணியாளர்களும் தோன்றினார்கள்; நில உரிமை இடம் மாறியது. பொருளாதாரத் தளத்தில் மட்டுமின்றி, சமய-பண்பாட்டுத் தளத்திலும் வந்தேறிய திராவிடர்களின் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டது.

‘திராவிட சம்பிரதாயம்’ என்ற ஒன்றைப் புதிதாக உருவாக்கி சமய சடங்குகளைச் செய் விக்கும் முற்றுரிமை பெற்றவர்களாகத் தங்களை முன்னிறுத்திய வந்தேறி பிராமணர்கள், அதை நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் சமற்கிருதத்தை சடங்கு மொழியாகப் புகுத்தினர்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே வைதீகப் பிராமணர்கள் தமிழகத்தில் பெருவாரியாக்க் குடியேற்றப்பட்டனர். பல்லவர்கள் வழங்கிய செப்பேடுகள், பிராமணர்களுக்கு வழங்கிய பிரம்ம தேய நிலக்கொடைகள், அறுகர்களுக்கு வழங்கப் பட்ட பள்ளிச்சந்தங்கள், சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட திருவிடையாட்டங்கள் ஆகியவை பற்றி பேசுகின்றன. பிராமணர்களுக்கான அகரங்களும், பிரம்மதேயங்களும், சதுர்வேதி மங்கலங்களும் தொடக்கத்தில் தொண்டமண்டலத்தில் ஏற்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, காவிரிக் கரையிலுள்ள நல்ல நீர்ப்பாசனம் மிக்க வளமான விளை நிலங்களெல்லாம் வந்தேறி வைதீகர்களுக்கு வழங்கப்பட்டன. பிராமணர்கள் பெரிய காணியளர்களானார்கள். தமிழ்மக்கள் அதுகாறும் பெற்றிருந்த நில உரிமையை இழந்தார்கள்.

அதுவரை சமூகத்தில் நிலவிய அமைதி சீர்குலைக்கப்பட்டது. சமயப் படுகொலைகள் என்னும் புதிய போக்கைத் தமிழகத்தில் பல்லவ திராவிடர்களே தொடங்கி வைத்தனர். சமணர்களும், பௌத்தர்களும் நாடெங்கும் படுகொலை செய்யப்பட்டனர். தொடங்கிவிட்ட புதிய பொருளியல் மற்றும் உற்பத்தி முறைக்கு ஏற்ற ஒரு புதிய சமயம் உருவாக்கம் பெற்றது. அந்த சமயத்திற்கான ஓர்மையை தென்னிந்தியா முழுமையும் திராவிடசம்பிர தாயமும், சடங்கு மொழியான சமற்கிருதமும் வழங்கின.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய போக்கு பல்லவர்கள் ஆண்ட 700 ஆண்டு காலத்தில் வேரூன்றி நிலைத்தது. அதுவே இன்றுவரைத் தொடர்கிறது. எவ்வித எதிர்ப்புமின்றி, அவ்வாறு எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை இல்லா தொழித்து, தங்கள் சமய சடங்கு முறையையும், சமற்கிருத மொழி மேலாண்மையையும் நிறுவிக் கொள்ள மிகச்சார்பாக இருந்த நிலை- வைதீகவந்தேறிகளும், பல்லவ மன்னர்களும் திராவிடர் என்ற தென் ஆரியக் கிளையைச் சேர்ந்தவர்களாக இருந்ததுதான்.

கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் வேதக் கல்வியும், சமஸ்கிருதக் கல்வியும் உயர்நிலையில் இருந்தன. சமற்கிருதம் என்ற செயற்கை மொழி ஆட்சிக்கும், சமய சடங்குகளுக்கும் பயன் படுத்தப்பட்டது. வைதீகமும், சமற்கிருதமும் புகுந்த பிறகு அதுவரை இருந்த சிவனிய, திருமால் வழிபாடு நிறுவனப் படுத்தப்பட்டு சைவ மதமாகவும் வைணவமதமாகவும் மாறியது. வழிபாட்டின் நிகம முறை புகுத்தப் பட்டது. நிகமச் சடங்கு முறையில் தீ முக்கியப்பங்கு வகித்தது. தீ வளர்த்தல், விலங்குகள் பலியிடுவது, மந்திரம் ஓதுவது, எனப் பல புதிய கூறுகளை நிகம்முறை கொண்டிருந்தது. நாட்டின் வளத்தையும், வேந்தனின் வெற்றிகளையும் வேள்விகள் உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏனைய மன்னர்களையும் இம்முறையை ஏற்கச் செய்தது.

இச்சடங்குகளுக்காகவும், அரச ஆணைகளை ஆவணப் படுத்தவும், ஒரு செயற்கை மொழியாக சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் ஐந்து மொழிகள் வேதகாலத்தில் பேசப்பட்டு வந்தன. அவை, பாகதங்கள் (பிராகிருதம்) எனப்படும் சௌசேனி, மாகதி, பைசாசி, மகாராஷ்டிரி மற்றும் தமிழ். இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைந்த ஆரியர்கள் வேத ஆரிய மொழியுடன் இங்கு நிலவிய பிராகிரு தங்களைச் சேர்த்து சடங்கு மொழியாக ஒரு செயற்கை மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதுவே சமஸ்கிருதம்.

சமஸ்கிருத உருவாக்கம் குறித்து, தேவநேயப் பாவாணர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“ஆரியப்பூசாரிகளான பிராமணர் தென்னாடு வந்து தமிழரோடு தொடர்பு கொண்டபின், வேத மொழியுடன் ஏராளமான திராவிடச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் அவற்றின்று திரிக்கபட்ட ஆயிரக்கணக்கான புதுச் சொற்களும், இடுகுறிச் சொற்களும் கலந்து, கலவை மொழியில் இதிகாச புராணங்களும் தரும சாத்திரங்களும் நாடகங்களும் பிறவும் இயற்றப்பட்ட பின்னரே, கி.மு. 6 ஆம் நூற்றாண்டுபோல் சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழி நிறைவாக உருவாயிற்று பிராகிருதம் (பிராக்ருத) என்பது முந்திச் செய்யப்பட்டது என்றும், சமற்கிருதம் (சம்ஸ்க்ருத) என்பது கலந்து செய்யப்பட்டது என்றும் பொருள்படுவன ஆகும்.”

(ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் வரலாறு-2, (1972) தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2000, பக் : 56)

பழைய செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் தொடக்கத்தில் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தியுள்ளவர்கள் ஆந்திரப்பகுதியில் சாதவாகனர்களை அடுத்த ஆட்சி செய்த இக்ஷுவாகு மன்னர்களும் காஞ்சியை ஆண்ட பல்லவர்களும் ஆவர். கி.பி. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையிலும் பல்லவர்கள் தங்கள் செப்பேடுகளை பிராகிருத, சமற்கிருத மொழிகளில்தான் எழுதினர். சமஸ்கிருத பகுதியை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர்.

தேவநேயப் பாவணரின் கூற்றைக் கவனத்தில் கொண்டால் சமஸ்கிருதம் தென்னிந்தியப் பகுதியிலேயே உருவாக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம். அது சரியானதெனில், சமஸ்கிருதத்தை உருவாக்கியவர்கள் ஆரியத்தின் தென்கிளையினராகிய திராவிடரே ஆவர்.

பல்லவர்களின் ஆட்சிக் காலம் 700 ஆண்டுகள் நீடித்தது. கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை, தமிழகத்தில் தமிழும் அதற்கு வடக்கே பாகதமும் பயன்பாட்டில் இருந்தன. சாத வாகனர்களின் ஆட்சிமொழி பாகதமே ஆகும் பயன்படுத்தப் பட்ட எழுத்து முறைகள் தமிழியும், வடக்கே பிராமியும் ஆகும். சாதவாகனர்களின் காலத்திற்குப்பிறகு, கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பாகதத்திலிருந்து சமஸ்கிரு தத்திற்கு செப்பேட்டு வரைவுகள் மாறத் தொடங்கின. இதை ஓம கோடு செப்பேட்டு சாசனத்தில் காணலாம். இச்செப்பேடு தூய் மையற்ற சமஸ்கிருதத்தில், கலப்பு நடையில் வரையப் பட்டுள்ளது. ஆகவே, சமஸ்கிருதம் என்ற மொழி நிர்வாக மொழியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட காலம் பல்லவர்கள் காலம் ஆகும்.

பல்லவர்கள் காலத்தில் சமஸ்கிருதமும் அரசு மொழியாகவும் சமய, வழிபாட்டு மொழியாகவும் ஆக்கப்பட்டதால், சமஸ்கிருதம் மேற்குடியினரின் மொழியாக மாறத் தொடங்கியது. அது ‘தேவ பாஷை’ என்று அறியப்பட்டது. தமிழ்மொழியின் வீழ்ச்சி பல்லவர் காலத்தில் தொடங்கியது.

தமிழில் இருந்த, தமிழர்களின் மரபுவழி அறிவுச் செல்வங்கள் இக்கால கட்டத்தில் சமஸ்கிருதத்திற்கு மாற்றப் பட்டன. தமிழ்நூல்கள் சம்ஸ் கிருதத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. சான்றாக, குணாட்டியர் எழுதிய பெருங்கதை, சமஸ்கிருதத்திற்கு ‘ பிரகத்கதா’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது. பாகதமொழியில் சிம்மசூரி எழுதிய ‘ உலோக வியாபகம்’ என்ற நூல் , சர்வ சந்தியால் சமஸ்கிருதத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தின் ஊர்ப்பெயர்களும், ஆள் பெயர்களும் மொழி மாற்றம் செய்யபட்டன.

(வே.தி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும்’)

கோயில், அதன் கூறுகள் கடவுளர்கள், பெண் தெய்வங்கள், கோயில் பரிவாரங்கள் - அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டன.

வைதீகச் சமயத்தைச் சேர்ந்த வர்களாக இருந்த பல்லவர்கள் தமிழர்களை கோயில்களிலிருந்து அப்புறப்படுத்தினர். கோயில்களில் தமிழ் அப்புறப் படுத்தப்பட்டு சமஸ்கிருதம் புகுந்தது. சமயத்தளத்தில் ஏற்பட மாற்றம் குறித்து ந.சி. கந்தையா பிள்ளை இவ்விதம் குறிக்கிறார்:

“ வடநாட்டினின்றும் வந்த பல்லவர், ஹோய்சாளர், கங்கர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர் முதலிய அரசர் வைதீக சமயத் தவர்களாக விருந்தார்கள்; சிவன், திருமால் முதலிய கடவுளரையும் வழிபட்டார்கள் கோயில்களில் வேளாண் மரபைச் சார்ந்த தேசிகர் போன்றவர்கள் அர்ச்சகராக இருந்தவந்தார்கள். அவர்கள் தமிழில் துதிபாடிக் கடவுளைப் பூசித்தார்கள். கோயில் வழிபாடுகளைக் கூறும் ஆகமங்கள் தமிழிலேயே இருந்தன.. திரு மந்திரச் செய்யுட்கள் சைவசித் தாந்த ஞானமும் ஆகமங்களும் தமிழிலிருந்தனவென்பதைத் தெரிவிக்கின்றன. வைதீக சமயத்தை மேலாகக் கொண்ட அரசர் பார்ப்பாரை விலக்கிப் பிராமனரை அர்ச்சகராக அமர்த்தினார். அவர்கள் தமிழறியா தவரும் கோயிற்கிரியைகளை அறியாதவருமாக விருந்தார்கள். ஆகவே கோயில் வழி பாட்டுக்கு விளக்கம் கூறும் ஆகமங்கள் வட மொழிப்படுத் தப்பட்டன. இப்பொழுது வட மொழியிற் காணப்படும் ஆக மங்கள் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருத நடை கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததென ஆராய்ச்சி அறிஞர் கூறுகின்றனர். வடமொழிப் படுத்தப் பட்ட ஆகமங்களினிடையிடையே வைதீகக் கருத்துக்களும் புகுத்தப்பட்டன. வட மொழிப்படுத்தப்பட்டபின் தமிழ் நூல்கள் அழிக்கப் பட்டன.”

(ந.சி. கந்தையா பிள்ளை, இந்து சமய வரலாறு (1960), விழுதுகள் பதிப்பகம், சென்னை, 2003, பக்: 38-39)

“பல்லவரும் அவருக்குப்பின் வந்த வட நாட்டு அரச பரம்பரையினரும் சமஸ் கிருதத் துக்குப் பேராதரவு அளித்தார்கள் பிராமணர் வாழும் இடங்கள் தோறும் கடிகைகள் அல்லது பிரமபுரிகள் என்னும் சமஸ்கிருத கலாசாலைகள் நிறுவினார்கள். அவைகளில் கல்விபயிலும் மாணவருக்கும் கல்விபயிற்றும் ஆசிரியருக்கும் உணவு உடை முதலியவை வழங்கினர். கலாசாலைகளில் வேதங்கள், வேதாங்கங்கள், தரும சாத்திரங்கள், அர்த்த சாத்திரம் முதலிய கல்விகள் கற்பிக்கப் பட்டன. சமஸ்கிருதக் கல்வி பிராமணரின் ஏகபோக உரிமையாக விருந்தது. கடிகைகளின் கற்றுத் தேறிய பிராமணர் இராசகுருக்கள் என்னும் பெயருடன் நாடு முழுமையிலும் சென்று வைதீக மதத்தை மக்களுக்குப் போதித்தார்கள். இராசகுருக்களே அரச குடும்பத்தினருக்குக் கல்வி கற்பித்தார்கள்.

பிராமணரின் சேவை வேண்டப்பட்ட இடங்களில் அவர்கள் சென்று வாழ்வதற்குத் தூண்டுதலாக நிலமும் வீடும் மானியமாக வழங்கப்பட்டன. இவ்வாறு வைதீகத்துக்கும் சமஸ்கி ருதத்துக்கும் செல்வாக்கு வளர்ந்து கொண்டு சென்றது.”

(மேலது, பக்.48)

வைதீக வந்தேறிகளின் கையில் அரசதிகாரமும், சமய மேலாண்மையும் அகப்பட்டுக் கொண்ட நிலையில் , தமிழ்ச் சமூகம் கேடான மாற்றங்களுக்கு விரைவாக ஆட்பட்டது.

ஆட்சிமொழியாகவும் சமய மொழியாகவும் திராவிட தேசத்தில் கைக்கொள்ளப்பட்ட சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக, தமிழ் எழுத்திலேயே சில மாறுதல்களைச் செய்து, கிரந்த எழுத்துக்கள் உருவாக்கப் பட்டன. சமஸ்கிருதம் சமைக்கப் பட்ட பிறகே கிரந்தம் உருவாக்கப் பட்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டுவரை இவ்வெழுத்து முறை பயன்படுத்தப்பட்டது. வைதீகத் திராவிடர்கள் பெருமளவில் கேரளப்பகுதிக்கு வந்தேறிய பிறகு தமிழ் சிதைந்து மலையாளமாக அப்பகுதியில் மாறியது. மலையாள மொழியை எழுத கிரந்த எழுத்துமுறையே முழுவதுமாகப் பயன்படுத்தப் பட்டது.

தென்னிந்தியாவிற்கு வந்தேறிய இந்த வைதீகக்கூட்டத்தார் தங்களுடைய தனி அடையாளத்தைக் காக்கும் பொருட்டு வருண முறையைத் தீவரமாகக் கடைபிடித்தனர். பல்லவர்கள் காலத்தில் நிகழ்ந்த உழவின் விரிவாக்கம், பெருநில உடைமையின் தோற்றம் மற்றும் உற்பத்தி முறை மாற்றம் ஆகிய வற்றால் ஏற்பட்ட மேற்குடியின் தேவைகளைக்கருத்தில் கொண்டு, அதுகாறும் இருந்த பல்வேறு தொழிற்பிரிவினரையும் சாதிகளாக மாற்றி, பிறப்பின் அடிப்படையில் அத்தொழில்களை செய்யுமாறு வரையறை செய்து, ஏற்றத்தாழ்வுள்ள பல படிநிலைகளைக் கொண்ட ஒரு செங்குத்தான சமூகத்தை தமிழகத்தே நிலை நிறுத்தினர். ஏற்றதாழ்வுள்ள இச்செங்குத்து சமூக அமைப்பை கட்டிக் காவந்து செய்யும் பொறுப்பை அரசதிகாரம் ஏற்றது. தமிழகம் மட்டுமின்றி ஏனைய தென்னிந்தியப் பகுதி களும் இந்நிகழ்வுப் போக்குக்கு உள்ளாயின. வருண- சாதிப் பிரிவுகளை அறியாத்திருந்த தமிழ்ச் சமூகத்தை சாதியச் சமூகமாக மாற்றிய வேலையை ஆரியத்தின் தென் கிளையாகிய திராவிடர் என்ற கூட்டத்தார் செய்து முடித்தனர்.

வரலாற்றறிஞர்கள் ‘ஆரிய மயமாக்கல்’ (Aryanisation) என்ற நிகழ்வுப் போக்கை பற்றிப் பேசுவார்கள். ஆரிய சமஸ் கிரு தப்பண்பாட்டின் மேலாண்மை பிற சமூகங்களின் ஒவ்வொரு தளங்களிலும் நிறுவப்பட்ட மையையே இது குறிக்கும். தென்னிந்தியாவுக்குள் நுழைந்த இக்கூட்டத்தாரை தமிழ் இலக் கியங்கள் ‘ஆரியர்’ என்றே குறிப் பிடுகின்றன. ஆனால், வட இந்திய ஆரியர்களிடமிருந்து, வந்தேறிய ஆரியர்கள் பலவகை களில் மாறுபட்டனர். அவர் களுடைய சடங்களும், ஆசாரங் களும், பேச்சு மொழியும் வட இந்திய ஆரியர்களிடமிருந்து மாறுபட்டன.

திராவிடர் என்னும் இக் கூட்டத்தார் ஆட்சி அதிகாரம், சமூகமேன்மை, நிலவுடைமை, கோயில் நிர்வாகம், சமய மேலாண்மை அனைத்தையும் வசப்படுத்தினர். தமிழ்ச் சமூகம் பெருத்த மாற்றத்திற்கு உள் ளானது. திராவிடர் எனப்பட்ட இக் கூட்டத்தாரின் ஆதிக்க நிறுவுதலை ‘திராவிட மய மாக்கல்’ (Dravidaisation) என்ற சொல்லால் குறிப்பது பொருத்த முடையதாக இருக்கும்.

(வரும்)

Pin It