பொதுவாக மரண தண்டனையை அரிதாக்கும் முறையிலும், குறிப்பாக மூன்று தமிழர் கருணை மனு வழக்கில் உதவி செய்யும் வகையிலும் அண்மையில் ஒரு தீர்ப்பு வெளியாகி உள்ளது. சங்கீத் - எதிர் - அரியானா மாநில அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் 2012 நவம்பர் 20ஆம் நாள் வழங்கிய தீர்ப்பே அது.

உண்மையில் இத்தீர்ப்பு 2009 தொடங்கி உச்சநீதிமன்றம் சாவுத்தண்டனை குறித்து பல்வேறு வழக்குகளில் வழங்கிய முக்கியத் தீர்ப்புகளின் தொடர்ச்சியான வளர்ச்சியே ஆகும்.

மரண தண்டனை குறித்து உச்சநீதிமன்றம் மேற்கொண்ட அணுகு முறைகளை “சங்கீத் தீர்ப்பு” வழங்கிய நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் மூன்று கட்டங்களாக பிரித்து விவாதிக்கிறார்கள்.

ஜக்மோகன் – எதிர் - உ.பி. மாநில அரசு தீர்ப்பு வந்த காலத்தில் இருந்த நிலையை முதல் கட்டம் என்றும் பச்சன் சிங் - -எதிர்- - பஞ்சாப் மாநில அரசு தீர்ப்புக்கு பின் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை இருந்த அணுகுமுறையை இரண்டாவது கட்டம் என்றும், 2009 மே 13 அன்று வெளியான சந்தோஷ்குமார் பரியார் - எதிர் - மராட்டிய மாநில அரசு தீர்ப்புக்கு பிந்தைய நிலையை மூன்றாம் கட்டம் என்றும் இத் தீர்ப்புரை வகைப்படுத்தி விவாதிக்கிறது.

இங்கு குறிப்பிடப்படும் ‘ஜக்மோகன் வழக்கு’ மரண தண்டனை வரலாற்றில் முக்கியமான தொரு வழக்காகும். 1973ஆம் ஆண்டில் வெளியான இவ்வழக்கின் தீர்ப்பு, மரணதண்டனை எல்லா கொலை வழக்குகளிலும் வழங்கப்படுவதை திறனாய்வு செய்தாலும் அன்றைக்கு நடப்பிலிருந்த குற்றவியல் நடைமுறை சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது.

சாவுத் தண்டனை பற்றிய பெரும் விவாதப்புயல் இத்தீர்ப்பை தொடர்ந்து எழுந்தது. ஏனெனில், வெள்ளையர் ஆட்சி இயற்றி சுதந்திர இந்தியாவிலும் செயலில் இருந்த குற்றவியல் நடைமுறை சட்டம் 1898, கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனையை ஒரு பொது விதியாகவும், வாழ்நாள் சிறைத் தண்டனையை விதிவிலக்காகவும் கொண்டிருந்தது.

எழுந்த விவாதங்களின் விளைவாக இந்திய அரசின் சட்ட ஆணையம் பரிந்துரைத்தவாறு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இந்திய அரசு சில முக்கியத் திருத்தங்கள் செய்தது. குறிப்பாக சாவுத்தண்டனைக் குறித்து 354 (3) என்ற விதி உருவாக்கப்பட்டது.

இவ்விதியின்படி கொலைக் குற்றத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை என்பது பொதுவிதியாகவும், சாவுத் தண்டனை என்பது விதிவிலக்கானதாகவும் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு விதிவிலக்காக சாவுத் தண்டனையை தீர்ப்புரைக்கும் நீதி மன்றம் அதற்கான சிறப்புக் காரணங்களை (Special reasons) எழுத்து வடிவில் விளக்க வேண்டும் என்றும் இவ்விதி நிபந்தனை விதித்தது.

இவ்விதி கூறும் விதிவிலக்கான தருணங்கள் யாவை, சிறப்புக் காரணங்கள் எவை எவை என்பது குறித்து நீதி மன்றங்கள் பல்வேறு வழக்கு களில் விவாதித்தன. இவ்விவா தம் உயிர் வாழும் உரிமை மட்டுமின்றி தனி நபர் உரிமை குறித்ததாகவும் விரிந்தது.

ஏனெனில், இந்திய அரச மைப்பு சட்ட விதி 21 “உயிர் வாழும் உரிமை மற்றும் ஆளு டைமை உரிமை” (Right To Life And Personal Liberty) ஆகியவற்றை அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறது. இந்த உரிமையை சட்டத்தின் வழி உருவாக் கப்பட்ட நடைமுறைகளின் மூலமின்றி வேறு வகைகளில் பறிக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கிறது.

இங்கு கூறப்படும் “சட்டத்தின் வழி உருவாக்கப்பட்ட நடைமுறை” தான் குற்றவியல் நடைமுறை சட்டவிதி 354 (3) ஆகும்.

உயிர் வாழும் உரிமை மற்றும் ஆளுடைமை உரிமையில் அரசு அல்லது நீதிமன்றம் குறுக்கிடும் சட்ட நடைமுறை எவ்வாறானதாக அமையவேண்டும் என்பதை மேனகா காந்தி- - எதிர் - -இந்திய ஒன்றிய அரசு என்ற புகழ் பெற்ற வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தியது. 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற ஆயம் 1978 ல் வழங்கிய இத்தீர்ப்பு “அரசமைப்புச் சட்ட விதி 21 வழங்கும் உரிமையில் குறுக்கிடும் சட்ட நடைமுறையானது, தன்னிச்சையானதாகவோ, நியாயமற்றதாகவோ, ஒடுக்கும் வகையினதாகவோ,உரிய காரணமற்றதாகவோ இருக்கக் கூடாது” என வரம் பிட்டது.

மேனகா காந்தி வழக்கு தீர்ப்பின் வெளிச்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 354(3)க்கு விளக்கமளித்த தீர்ப்புதான் பச்சன்சிங் - எதிர் -- பஞ்சாப் மாநில அரசு என்ற புகழ் பெற்ற தீர்ப்பாகும் (1980, 2, SCC, 684).

“அரிதிலும் அரிதான வழக்கு களில்தான் சாவுத்தண்டனை வழங்கப்படவேண்டும் ” என்று இத்தீர்ப்பு வரையறுத்தது. சட்ட விதி 354(3)ன் நோக்கம் அது தான் என இத்தீர்ப்பு விளக்கம் அளித்தது. இவ்விதியில் சொல் லப்பட்டுள்ள “சிறப்புக் கார ணங்கள்” (Special reasons) என்பதற்கு ”விதிவிலக்கான காரணங்கள்” (Exceptional reasons) என்றும் பொருளுரைத்தது.

“தண்டனை வழங்கும் போது நடைபெற்ற கொலைக்குற்றம், அது நடந்த முறை ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு முடிவு செய்யக்கூடாது. குற்ற வாளியின் தன்மையையும் கணக்கில் கொள்ளவேண்டும்” என்று கூறியது.

தண்டனையைத் தணிக்கும் காரணிகளாக சிலவற்றை இத் தீர்ப்பு கோடிட்டு காட்டுகிறது.

¨ கொலையாளி தீவிரமான மன உளைச்சலுக்கு ஆட்பட்ட நிலையிலோ உணர்ச்சி வசப்பட்ட நிலையிலோ குற்றம் செய்தி ருந்தால்

¨ குற்றம் சாட்டப்பட்டவர் மிக இளையவராகவோ மிகவும் வயது முதிர்ந்தவராகவோ இருந்தால்

¨ சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் குற்றவாளி தொடர்ந்து ஈடுபட மாட்டார் என்ற வாய்ப்பிருந்தால்

¨ குற்றம் சுமத்தப்பட்டவரை திருத்துவதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் வாய்ப்பிருந்தால்

¨ குற்றம் நடந்த சூழலில் தான் அக்குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு அறம் சார்ந்த காரணம் இருப்பதாக குற்றவாளி கருதியிருந்தால்

¨ வேறொருவரின் அச்சுறுத்தல் அல்லது ஆதிக்கத்தின் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர் அக்குற்றச் செயலில் ஈடுபட்டிருந் தால்

¨ குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து தான் செய்யும் குற்றத்தின் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாத மன நிலையிலிருந்தால்

அக்குற்றவாளிக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ‘பச்சன் சிங் தீர்ப்பு’ கூறியது. அரிதிலும் அரிதான வழக்கு என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கமளித்த இத்தீர்ப்பு இப்பட்டியலில் உள்ளவை மட்டுமே முடிந்த முடிபான வரையறை அல்ல என்றும் தெளிவுபடுத்தியது.

பச்சன் சிங் தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் தீர்ப்பு என்ற போதிலும் பிறகு வந்த வழக்குகளில் இதைவிட எண்ணிக்கை குறைவான நீதிப திகள் கொண்ட ஆயங்கள் கூட இத்தீர்ப்பை முறையாகப் பின் பற்றவில்லை. ‘அரிதிலும் அரிதான’ என்பதற்கு மனம் போன போக்கில் நீதிபதிகள் விளக்கம் அளித்து மரண தண்டனையை உறுதி செய் தனர். வீரப்பன் கூட்டாளி என்ற பெயரில் சிவப்பிரகாசம் என்பவருக்கு அளிக்கப்பட்ட வாழ்நாள் தண்டனையை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து மரண தண்டனையாக மாற்றிய கொடுமையும் அரிதிலும் அரி தான வழக்கு என்ற பெயரில் நடந்தேறியது.

இதன் உச்சமாக ராவ்ஜி - எதிர் - ராஜஸ்தான் மாநில அரசு என்ற வழக்கில் (1996, 2, SCC 175) தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் குற்றவாளியின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியதில்லை. கொலைக் குற்றம் கொடூரமாக நடந்திருந்தால் அதுவே மரண தண்ட னையை உறுதி செய்ய போதுமானது. அரிதிலும் அரிதானதாக இதனை வரையறுக்கலாம் எனக் கூறி மரண தண்டனை யை உறுதி செய்தது.

ராவ்ஜி தீர்ப்பை பின்பற்றி அடுத்தடுத்து மரண தண்டனைகள் வழங்கப்பட்டன.

சந்தோஷ்குமார் பரியார் - எதிர்- - மகாராஷ்டிர மாநில அரசு (Santoshkumar Bhariyar Vs State Of Maharashtra) என்ற வழக்கின் தீர்ப்பில் (2009, 6, SCC 498) மேற்கண்ட தீர்ப்புகள் அனைத்தும் விரிவாக விவாதிக் கப்பட்டன. உச்சநீதிமன்ற ஆயத்தின் நீதிபதிகள் எஸ்.பி சின்கா மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர் மிகவும் நுணுக்கமாக அறிவார்ந்த முறையில் பச்சன் சிங் தீர்ப்புக்கு பிறகான பல தீர்ப்புகளை ஆய்ந்தனர்.

ராவ்ஜி வழக்கு தீர்ப்பிலும் அதைத் தொடர்ந்த சில தீர்ப்புகளிலும் “அரிதிலும் அரிதான வழக்கு” என்பதற்கு மனம்போன போக்கில் பொருள் கொள் ளப்பட்டு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன எனக் கூறிய இத்தீர்ப்புரை குறிப்பாக 7 வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அவை நீதிபதி களின் சட்ட அறியாமையால் (per incurium) அளிக்கப்பட்ட தவறான சட்ட விரோத தீர்ப் புகள் என வரையறுத்தது.

சட்ட அறியாமையால் வழங்கப்பட்ட இத்தீர்ப்புகளின் அடிப்படையில் ஏற்கெனவே இரண்டு பேர் தூக்கிலிடப் பட்டு கொல்லப்பட்டு விட்டனர். இத்தீர்ப்புகளால் தூக்கு மரநிழலில் நிற்கிற 13 பேரை யாவது பாதுகாக்க வேண்டும் எனக் கோரி 14 முன்னாள் நீதிபதிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு 2012 சூலை 25 அன்று கடிதம் அனுப்பியுள்ளனர். பி.கே சபர்வால், ஏ.பி.ஷா, கே.பி சிவசுப்பிரமணியன், எஸ்.என் பர்கவா, பிரபா சிறீதேவன் ஆகியோர் இவர்களில் சிலர்.

சங்கீத் தீர்ப்பு மரண தண்டனை குறித்தும், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்குமாறு அளிக்கும் தீர்ப்புகள் குறித்தும் விரிவாக திறனாய்வு செய்கிறது. பரியார் தீர்ப்புக்கு பிறகு மரண தண்டனை குறித்த மூன்றாவது கட்டமாக புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதாக உரைக்கிறது (20 ஆண்டுகளைத் தாண்டிய வாழ் நாள் தண்டனை குறித்து இத்தீர்ப்பு கூறுவதும் தமிழர்கள் கவனிக்க வேண்டிய செய்தி. ஆயினும் அது குறித்து வேறு வாய்ப்பில் பார்க்கலாம்).

சங்கீத் வழக்குத் தீர்ப்பில் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் ஆகியோர் கரு ணை மனுக்களை ஆய்வு செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை விவாதிக்கவில்லை. ஆயினும் குற்றவியல் நடைமுறைச் சட்டவிதி 432படி தண்டனைக் குறைப்பு வழங்குவதை நீதி மன்றங்கள் தடுத்துவிடக்கூ டாது எனத் திறனாய்வு செய்கிறது.

இருந்த போதிலும் இத்திற னாய்வை கருணை மனு வழக்கு களில் குறிப்பாக பேரறிவாளன், முருகன்,சாந்தன் கருணைமனு வழக்கில் உறுதியாக துணைக்கு அழைக்கலாம்.

பச்சன் சிங் தீர்ப்புக்கு உரை எழுதுவது போல் வரையப் பட்டுள்ள பரியார் வழக்குத் தீர்ப்புரை மூன்று தமிழர் கருணை மனு வழக்கில் கட்டாயம் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் .

அரிதிலும் அரிதான வழக்கு என பச்சன் சிங்தீர்ப்பு கூறும் வரையறுப்புக்கு பரியார் தீர்ப்பு அளிக்கும் விளக்கமும், குற்றச் செயலை மட்டுமின்றி குற்றவாளியின் தன்மையையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பச்சன் சிங் தீர்ப்பு கூறுவதன் விளக்க உரையாக பரியார் தீர்ப்பு எடுத்துரைப்பதும் ஊன்றி கவனிக்கத் தக்கவை.

மூன்று தமிழர் கருணை மனு வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் பரியார் தீர்ப்பின் இந்த ஆய்வுரையைக் கவனத்தில் கொண்டே ஆகவேண்டும்.

பச்சன்சிங் தீர்ப்புக்கு விளக்க மளிக்கும் பரியார் வழக்கு தீர்ப்பு மரண தண்டனைக்கு இரண்டு முக்கிய நிபந்தனைகளை வைக்கிறது.

ஒருவர் மீது கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனையை வரையறுத்து தீர்ப்பு வழங்கும் கட்டத்துக்கு வரும்போது நீதிமன்றம் குற்றவாளியின் முன் நடத்தை, கொலைக்குற்றம் நடை பெற்ற சூழல், அக்குற்றம் நடைபெற்ற போது இருந்த கொலையாளியின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். (மரண தண்டனைக்கு பச்சன் சிங் தீர்ப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகளின் பட்டியலை மீண்டும் ஒருமுறை பாருங்கள். அப்போது இதன் இன்றியமையாமை புரியும்.)

மரண தண்டனை வழங்காமல் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கினால் அக்குற்றவாளி திருந்த மாட்டார் அவரால் சமூகத்தில் பதட்டமும் அமைதியற்ற சூழலுமே ஏற்படும் என்பதை அரசுத்தரப்பு வலுவான ஆதாரங்களோடு மெய்ப்பிக்க வேண்டும்.

இவ்விரண்டு நிபந்தனைகளையும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு பொருத்திப் பார்த்தால் கருணை மனுவை ஆதரவான முறையில் குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும் என ஆணையிடு வதை தவிர உச்சநீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை

.ஏனெனில், இம்மூவரும் ராசீவ் நிகழ்வுக்கு முன்னர் எந்த குற்றவியல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்கள். அரசின் வழக்குரைப்படியே இம் மூவரும் “விடுதலைப்புலித் தலைவர் வே.பிரபாகரன், விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் கட்டளைக்கு கீழ்ப் படிந்து நடந்தவர்கள்”. அதாவது, சொந்த முறையில் இக் குற்றச் செயலில் ஈடுபடும் உள் நோக்கம் இல்லாதவர்கள்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருமே இவர்களது வரையறைப்படியே கூட மனம் திருந்தியவர்கள் தாம். அவர்களது சிறை நடத்தையே உறுதியான சான்று கூறும்.

பரியார் தீர்ப்பு, சங்கீத் தீர்ப்பு ஆகியவற்றின் வெளிச்சத்தில் பார்த்தால் இம் மூன்று தமிழருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனை நீதி தவறிய ஒன்றாகும்.

வேறு 13 பேருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவரைக் கோரி அளித்துள்ள மனுவில் முன்னாள் நீதிபதிகள் முன்வைத்துள்ள “சட்ட அறியாமைத் தீர்ப்பு ” (per incurium) என்ற வாதம் நம் மூவர் வழக்கிற்கும் தெளிவாகப் பொருந்தும்.

உச்ச நீதி மன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு தவறாக அளிக்கப்பட்ட தீர்ப்பை நேர் செய்ய வேண்டிய கடமை குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநர்களுக்கும் மட்டுமே உள்ளது.

மூவர் வழக்கில் குடியரசுத் தலைவரால் கருணைமனு நிராகரிக்கப்பட்டது சரியா தவறா என தீர்ப்பளிக்க வேண்டிய சட்டக்கடமையில் உச்ச நீதிமன்றம் இப்போது உள்ளது.

“கருணை மனுவை ஆய்வு செய்யும் போது குடியரசுத் தலைவரோ அல்லது மாநில ஆளுநரோ உச்ச நீதி மன்றத்தின் மேல் முறையீட்டு மன்றமாக செயல்பட முடியாதுதான் என்றாலும், வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் முழுவதையும் சுதந்திரமாக மறு ஆய்வு செய்து அவர்கள் முற்றிலும் வேறுபட்ட முடிவுக்கு வரலாம். அதனடிப்படையில் கருணை மனு மீதான ஒரு புதிய முடிவை மேற்கொள்ளலாம். அவ்வாறு குடியரசுத் தலைவரோ மாநில ஆளுநரோ சுதந்திரமாக ஆய்வு செய்துதான் முடிவெடுத் தார்களா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத் தலாம்” என்று கேஹர் சிங் வழக்கிலும் (1989, 1, SCC, 204) சுவரன் சிங் வழக்கிலும் (1998, 4, SCC, 75) உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, குடியரசுத் தலைவர் மூன்று தமிழர் கருணை மனுவை நிராகரித்தது சட்டப்படி சரிதானா என்று ஆய்வு செய்ய வேண்டிய பணி இப்போது உச்ச நீதி மன்றத்திடம் உள்ளது.

பச்சன் சிங் தீர்ப்புக்குப் பிறகான காலத்தில்தான், அதை விட குறைவான எண்ணிக்கை கொண்ட (3 பேர்) நீதிபதிகளின் உச்ச நீதிமன்ற ஆயத்தினால் தான் இராசீவ் காந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்படி பச்சன் சிங் தீர்ப் பின் அளவு கோல்கள் இராசீவ் காந்தி வழக்கில் பின்பற்றப் பட்டிருக்க வேண்டும். அவ் வாறு பின்பற்றப்பட்டு தான் மரண தண்டனை விதிக்கப் பட்டதா என்பதை கருணை மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் ஆய்வு செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்தாரா என்பதை திறனாய்வு செய்ய வேண்டிய பொறுப்பில் இப்போது உச்ச நீதிமன்றம் உள்ளது.

மூவர் மரண தண்டனை குறித்து அத்தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற மூவர் ஆயத்தின் தலைவராக இருந்த நீதிபதி கே.டி.தாமஸ் பின்னாளில் கூறியதை உச்ச நீதிமன்றம் இப்போது கவனத் தில் கொள்ள வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி கே.டி.தாமஸ் 2011 செப்டம்பர் 2 ஆம் நாள் தி ஏசியன் ஏஜ் (The Asian Age)) இதழாளரிடம் பேசும் போது, தான் அவ்வாறு மரண தண்டனை வழங்கிய ஆயத்திற்கு தலைமை தாங்க நேர்ந்தது கெடுவாய்ப்பானது என நொந்துகொண்டார். மேலும் “கொலையுண்டவர் புகழ் பெற்றவராக இருந்தால் அவ்வழக்கில் மரண தண்டனை வழங்குவது அடிக்கடி நடக்கிறது. அக்கொலையை அரிதிலும் அரிதான ஒன்றாக சித்தரித்து தங்களது முடிவை நியாயப்படுத்துவது நடக்கிறது” என்றார். தனது கூற்றுக்கு இந்திராகாந்தி கொலை வழக்கு, இராசீவ் காந்தி கொலை வழக்கு, தளபதி வைத்தியா கொலைவழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகளை எடுத்துக் காட்டுகளாக கூறினார்.

கே.டி.தாமஸ் மட்டுமல்ல முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனும் தனது தன் வரலாற்று நூலில் தனக்கு நேர்ந்த இது போன்ற ஒரு இக்கட்டை குறிப்பிடுகிறார்.

இந்திராகாந்தி கொலை வழக்கில் கேஹர் சிங் என்ப வருக்கு நியாயமற்ற முறையில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவரது கருணை மனு அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனிடம் சென்றது. அரசமைப்புச் சட்ட விதி 72 படி இப்பிரச்சினையில் குடியரசுத் தலைவர் இறுதிக்கும் இறுதியாக இந்திய அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். கேஹர் சிங் மரண தண்டனையை உறுதி செய்து கருணை மனுவை நிராகரித்து அமைச்சரவை குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை அனுப்பியது. அதனை ஏற்பதைத் தவிர குடியரசுத் தலைவருக்கு வேறு வழியில்லை. கருணை மனு நிராகரிக்கப்பட்டு கேஹர் சிங் தூக்கிலிடப்பட்டார்.

தன் வரலாற்று நூலில் இதைக்குறிப்பிடும் ஆர்.வெங் கட்ராமன் “கேஹர் சிங் கருணை மனு நிராகரிப்பு என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தில் மேற்கொள்ளப் பட்ட முடிவு” எனக் கூறினார்.

வழக்கை ஆய்வு செய்கிற எந்த நடுநிலையாளரும் இராசீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் கருணை மனு நிராகரிப்பும் முழுக்க முழுக்க அரசியல் உள் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை உறுதியாகக் கூறுவார்கள்.

சட்ட அறியாமையால் (per incurium) அளிக்கப்பட்ட தீர்ப்பை அரசியல் உள் நோக்கத்தில் உறுதி செய்தால் அது இன்னும் ஒரு சட்டக் கொலையாகிவிடும்.

எனவே, பரியார், சங்கீத் தீர்ப்புகளை கருத்தில் கொண்டு மூன்று தமிழர் கருனை மனு வை குடியரசுத்தலைவர் ஆதர வான முறையில் மீளாய்வு செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைக்க வேண்டும்.

பரியார், சங்கீத், தீர்ப்புக ளுக்குப் பிறகு எழுந்துள்ள புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டாவது தமிழக அரசு அரசமைப்புச் சட்ட விதி 161 -ன் படி ஆளுநர் மூலமாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் மரண தண்டனையை நீக்க வேண்டும்.

அப்போது தான் தமிழினத்துக்கு மறுக்கப்பட்டுவரும் நியாயங்களில் ஒன்றாவது மீட்கப் பட்டதாக ஆகும்.

Pin It