அபாயகரமான தண்ணீர் சிக்கலில் தவிக்க இருக்கிறது தமிழகம். ஆந்திர அரசு கட்டிய அணைகளின் காரணமாக, நீர் வரத்துக் குறைந்து வறண்டு நிற்கும் பாலாறு காரணமாக, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் வேளாண்மை ஒழிந்தது. முல்லைப் பெரியாற்று அணை உரிமை மறுக்கப்பட்டதன் விளைவால் வைகை ஆற்றில் நீர்வரத்துக் குறைந்து, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகள் பாதிக்கப்பட்டன. கன்னட இனவெறியர்களின் கூச்சலின் காரணமாக காவிரி உரிமை மறுக்கப்பட்டு, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை, கடலூர் மாவட்டங்களில் வேளாண்மையும், அதையொற்றியப் பகுதிகளில் குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இப்படி இக்கட்டான நிலையில் உள்ள தமிழக மக்கள், இன்றைக்கு ஏரி – குளங்களில் மழைக் காலத்தில் சேமித்து வைக்கப்பட்ட நீரையும், நிலத்தடி நீரையும் நம்பித்தான் தனது வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இந்நிலையில், பருவமழைப் பொய்த்துப் போனதன் விளைவால் அதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் மாநகராட்சி அளிக்கும் தகவல்களின் படி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த் தேக்கமான பூண்டி நீர்த்தேக்கத்தில், கடந்த ஆண்டு 3087 மெட்ரிக் கன அடியாக இருந்த நீர், தற்போது அதில் பாதி அளவு குறைந்து 1462 மெட்ரிக் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில், 561 மெட்ரிக் கன அடியாக இருந்த நீர், 448 மெட்ரிக் கன அடியாக உள்ளது. செங்குன்றம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மற்ற ஏரிகளையும் கணக்கில் கொண்டால், மொத்தமாக கடந்த ஆண்டு 9221 மெட்ரிக் கன அடியாக சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர், இன்றைக்கு வெறும் 5,136 மெட்ரிக் கன அடியாக உள்ளது.

இந்நிலையில், கடும் வெயில் காலமான ஏப்ரல் – மே மாதங்களில் சென்னை மாநகரம் மிகப்பெரும் குடிநீர் சிக்கலில் தவிக்க உள்ளது. இந்நிலையை சமாளிப்பதற்காக செயல்பாட்டில் உள்ள வீராணம் ஏரியிலிருந்தும், சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளுர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் நிலத்தடி நீரைப் பெருமளவில் உறிஞ்சி சென்னைக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தக் கூடும்.

ஆனால், அங்கும் இதே நிலை நீடிப்பது தான் பெரும் சிக்கலின் முன்னறிவிப்பு நிலையாக உள்ளது. பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நீர் இருப்பு குறைந்து காணப்படுவதாலும், நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் குறைந்துவிட்டதாலும் கடும் வறட்சி நிலவுகின்றது. பல இடங்களில் ஏரி, குளங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகளும், கேளிக்கை மைதானங்களும் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, நீர் தேக்க நிலைகளும் குறைந்துவிட்டன.

கடுமையான நீர்த் தட்டுப்பாடு மற்றும் வறட்சியின் காரணமாக, கால்நடைகளுக்கு தீவணம் கொடுக்க முடியாமல் பஞ்சாலைகளின் கழிவுப் பஞ்சுகளை உழவர்கள் கால்நடைகளுக்குக் கொடுப்பதாக செய்திகள் வந்தன. (காண்க: தினகரன், 24.01.2013). வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், அங்குள்ள விலங்குகள் மனிதர் வாழ்கின்ற பகுதிகளுக்கு நீருக்காக வருவதும், அதன் காரணமாக ஏற்படுகின்ற மோதல்களும் அதிகரிக்கும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கியமாக, பெருமளவிலான நிலத்தடி நீர் பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களாலும், இந்திய அரசுத் துறை நிறுவனங்களாலும் தமிழகமெங்கும் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழிற்சாலைகள் என்ற பெயரில் மிகப்பெருமளவில் தண்ணீரைக் கொள்ளையடிக்கும் கொள்ளை நிறுவனங்கள், அதை மக்களிடம் குடிநீருக்காக விற்று பணம் பறிக்கும் செயலும் அதிகரித்துவிட்டது. இந்த நிறுவனங்கள், கொள்ளையடிப்பதோடு மட்டுமின்றி, அவை நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதன் விளைவாக, பெருமளவிலான நிலத்தடி நீர் மாசுபட்டுக் கொண்டுள்ள உண்மையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய அரசின் அனுமதியுடன் தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிலங்களை அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு வெறும் நிலங்களை மட்டும் கொடுக்கவில்லை. அந்நிலத்தின் அடியில் உள்ள நிலத்தடிநீரையும் உறிஞ்சிக் கொள்ள அனுமதி வழங்குகின்றது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலைகளின் வளாகங்களில் நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, அந்த நீர் பொதுமக்களுக்கு விற்கப்பட்டும் வருகின்றது.

இதை கண்காணிக்கவும், கட்டுப்பாடு விதிக்கவும் முறையான அமைப்பு ஏதுமில்லை என்பதே நடைமுறை உண்மை. அவ்வப்போது, நிலத்தடி நீரை உறிஞ்சிச் செல்லும் தண்ணீர் லாரிகளை மக்கள் சிறைபிடிப்பதும், அதை காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிப்பதுமே இன்றைய நிலையாக உள்ளது. தண்ணீரைக் கொள்ளையடிக்கும் நிறுவனங்களிடம் கையூட்டும், சலுகையும் பெறுகின்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்களை ஏமாற்றுகிறோம் என்ற பெயரில், தம் வருங்கால தலைமுறையினரையே ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.

நிலத்தடி நீர் ஆதரங்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு 2003ஆம் ஆண்டு, தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டம் என்ற சட்டத்தை இயற்றியது. ஆனால், அச்சட்டம் இன்றுவரை முறையாக செயல்படுத்தப்படவில்லை. அச்சட்டத்தினை செயல்படுத்த அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்தும்கூட, இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.

தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், நீர் மாசுபாடு ஏற்படுவதாக பல ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. நடுவண் நீர் வளத்துறையின் அங்கமான நடுவண் நிலத்தடி நீர் வாரியம் (Central Groundwater Board) கடந்த ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வில், அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சியதாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவுப் பயன்படுத்தியதாலும் நிலத்தடி நீரில்,  பெருமளவில் குளோரைடு, ஃப்ளோரைடு, நைட்ரைட் உள்ளிட்ட பல வேதியியல் பொருட்கள் கலந்து மாசுபட்டிருப்பதாகவும், அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது எனக் கண்டறிந்தது. (காண்க: டைம்ஸ் ஆப் இந்தியா, 29.08.2012). ‘பசுமைப்புரட்சி’ என்ற பெயரில் இந்திய அரசு செயல்படுத்திய வேளாண் திட்டம், வேளாண்மையையும், மண்ணையும் மட்டுமின்றி நிலத்தடி நீரையும் எந்தளவு பாதித்திருக்கிறது என்பதையே இந்த ஆய்வு முடிவு எடுத்துக்காட்டுகிறது.

இது மட்டுமின்றி, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் போன்ற கடலோர மாவட்டங்களில் கடல் நீர் நிலத்திற்குள் புகுந்துள்ளதால், அப்பகுதிகளின் 8 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த 8 பகுதிகளில் தான், அதிகளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தின் இராசிபுரத்தில், நிலத்தடி நீர் 1500 அடிக்கும் மேலாக கீழிறங்கிவிட்டதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் தகவல் மையம் எடுத்த ஆய்வுகளின்படி, சென்னை, வேலூர், தஞ்சை, திருச்சி, செலம், திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், நிலத்தடி நீர் அபாயகரமான அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (காண்க: டைம்ஸ் ஆப் இந்தியா, 22.04.2012).

மேலும், மாநகராட்சிகளில் பாதாள கழிவு நீர் வெளியேற்றத் திட்டம் முறைப்படி செயல்படுத்தப்படாததன் காரணமாக, பல ஆறுகளில் கழிவு நீர் கலக்கப்படுவது அதிகரித்துள்ளது. மதுரை வைகை ஆறும், சென்னை கூவம் ஆறும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக நம்முன் நிற்கின்றன. மதுரையில், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான கப்பலூர் பகுதியில் நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்பட்டு, மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. குப்பைகளை முறைப்படி வெளியேற்றுகின்ற நடைமுறை இல்லாததின் காரணமாக பல இடங்களில், ஆறுகளில் குப்பைகள் கொட்டப்பட்டுத் தேங்கிக் கிடப்பதும், அதன் காரணமாக ஆற்று நீரில் மின்னனு வேதியியல் பொருட்களும், அமரிங்களும் கலக்க நேரிடுகின்றன. அடர்த்தியான இந்த வேதியியல் பொருட்கள் காரணமாக, நிலத்தடிக்கு நல்ல நீர் சென்றடைவதும் தடுக்கப்படுவதாக, 2007 பிப்ரவரியில் நடுவண் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம்(Central Pollution Control Board) வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டது. (காண்க: தி இந்து, 07.05.2012).

தமிழகத்தில் மட்டுமின்றி, தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி ஐதராபாத், டெல்லி, மும்பை ஆகிய பெரு நகரங்களிலும், சென்னையிலும் உள்ள நிலத்தடி நீர் மட்டும் மிக வேகமாகக் குறைந்து காணப்படுவதையும், அவை பெருமளவில் மாசுபட்டிருப்பதையும் உறுதி செய்தது. சென்னையின் நிலத்தடி நீரைப் பருகினால், நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அவ்வறிக்கை எச்சரித்தது. அந்தளவிற்கு நிலத்தடி நீர் இங்கு மாசுபட்டுள்ளது (காண்க; தினகரன், 20.12.2012).

இன்னுமொரு முக்கியமான செய்தி நம்மை அதிர வைப்பதாக உள்ளது. நிலநடுக்க அபாயமுள்ள பகுதிகளில், அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால் அங்கு நிலநடுக்க அபாயம் அதிகரிக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கும் செய்தி அது. கடந்த, 2011ஆம் ஆண்டு மே 12 அன்று, ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் லார்கா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இது தெரியவந்த்து (காண்க: பி.பி.சி. செய்தி இணையம், http://www.bbc.co.uk/news/science-environment-20025807).

இந்தியாவில், நிலநடுக்க ஆபாயப் பகுதிகளை 4 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு வரை, நிலநடுக்கம் அபாயம் குறைந்த மண்டலம் 2இல் இடம் பெற்றிருந்த சென்னை மாநகரம், மண்டலம் 3-க்கு மாற்றப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.9 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பான பகுதியே மண்டலம் – 3 ஆகும். சென்னை மாநகருக்கு நிலநடுக்க அபாயம் அதிகரித்துள்ளது என்பதே, இவ்வறிப்பின் பொருள்.

அதன் பின்னர், பல ஆய்வுகள் நடத்தப்பட்டு, 2011 ஏப்ரல் மாதத்தில், நாட்டின் முக்கிய நகரங்களான தில்லி, புனே, மும்மை, கொச்சின், கொல்கத்தா திருவனந்தபுரம், பாட்னா, அகமதாபாத், டேராடூன் உள்ளிட்ட 38 நகரங்கள், நிலநடுக்க அபாயம் அதிகரித்த மண்டலங்களுள் இணைக்கப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவித்தது. (காண்க; தி இந்து, 10.04.2011). இந்த பகுதிகள் அனைத்தும், அதிகளவில் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் சூழப்பட்டு நிற்கும் பகுதிகளாகவும் அதிகளவில் மக்கள் தொகை கொண்டதாகவும் இருப்பது இத்துடன் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு, வறட்சியாலும் தவிக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற, அண்டை மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள நீர் முற்றுகையை உடைத்து, அதைத் தீர்த்து வைக்க வேண்டிய இந்திய அரசு, தேசிய நீர்க்கொள்கை என்ற பெயரில் தமிழகத்திலுள்ள எஞ்சிய நீர் ஆதாரங்களையும் ஒழித்துக் கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே தனியார்மயமாகியுள்ள தண்ணீரை, விலைபொருளாக அறிவித்து, அதை தனியார் முதலாளிகளிடம் முற்றிலும் தாரைவார்த்து, மக்களை தாகத்தில் தவிக்க வைக்கத் திட்டமிட்டுக் கொண்டுள்ளது இந்திய அரசு.

உயிர் வாழ இன்றியமைத் தேவையாய் உள்ள நீரைக் கூட, விலை பேசி விற்க முற்படும் ஆளும் வர்க்கத்தை, உழைக்கும் மக்கள் தட்டிக் கேட்பதும், வெட்டி எரிவதையும் தவிர, நாம் உயிர் வாழ வேறு வழியில்லை என்பதே நடைமுறை உண்மை. நாம் என்ன செய்யப் போகிறோம்?

Pin It