முடியரசைவிட மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கும் நமது நாட்டின் “குடியரசு” தினமான இன்று, மக்களுக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் “இறந்து பிறந்த குழந்தை” என்பதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். 2011-ம் ஆண்டு யூலை மாதமே பரீட்சார்த்த ஓட்டம் நடத்தி, அக்டோபர் 2, 2012 அன்று எரிபொருளை ஏற்றி, அனைத்து பரிசோதனைகளும் செய்துவிட்டோம் என்று அறிவித்தன இந்திய அரசும் அதன் அணுசக்தி துறையும். இது உலகத்தரம் வாய்ந்த அணு உலை, இங்கே எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லி நற்சான்றிதழ் வழங்கினார்கள் டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் எம். ஆர். ஸ்ரீநிவாசன், டாக்டர் முத்துநாயகம் குழுவினர், மற்றும் டாக்டர் இனியன் குழுவினர்.

கடந்த ஒரு வருட காலமாக இதோ வருகிறது, வந்தே விட்டது, பதினைந்து நாளில் வரும் என்று பிரதமரும், முதல்வரும், அமைச்சர் நாராயணசாமியும் மாற்றி மாற்றிச்‌ சொல்லி வருகிறார்கள். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக கூடங்குளம் அணு உலையில் வால்வுகளில் கசிவு இருக்கிறது, சிறு பழுதுகள் உள்ளன என்று முழுத் தகவல்களை மக்களுக்குச் சொல்லாமல், காலதாமதப் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ரஷிய அணு உலை உபகரணங்கள் வழங்கும் சியோ-போடோல்ஸ்க் எனும் நிறுவனம் தரம் குறைந்த பாகங்களை, உதிரிப் பொருட்களை வழங்கியிருப்பதாகவும், ரோசாட்டம் எனும் ரஷிய நிறுவனம் கடுமையான நஷ்டத்தோடு திவாலாகும் நிலையில் இருப்பதாகவும் அந்த நாட்டிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்திய அணுசக்தித் துறையும் 4,000 கோடி ரூபாய் அதிகமாக செலவாகியிருக்கிறது என்று புதுக் கதை ஒன்றைச் சொல்கிறார்கள்.

இந்திய அனுசக்தித் துறை தலைவர் திரு. ஆர். கே. சின்கா கூடங்குளத்தில் பெரியப் பிரச்சினைகள் ஏதுமில்லை என்று மழுப்புகிறார். அணுமின் ஒழுங்காற்று வாரியத்தின் தலைவர் திரு. பஜாஜ் சில முக்கிய்மான சோதனைகளை மீண்டும் முதலிலிருந்தே செய்யப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார். முழு உண்மையை மக்களுக்குத் தெரிவியுங்கள் என்று மீண்டும், மீண்டும் மன்றாடிக் கொண்டிருக்கிறோம். “இறந்து பிறந்திருக்கும் கூடங்குளம் அணுஉலையைமறந்தும் திறந்திடக்கூடாது” என்று அனுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அணுசக்தி துறையை, தமிழக அரசை, மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மக்களை வெற்றிபெற விடமாட்டோம். என்ன ஆனாலும் தரம் தாழ்ந்த இந்த அணு உலையை ஓட்டி, எங்கள் லாபத்தை உறுதிபடுத்திக்கொள்வதோடு அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளோடு செய்திருக்கும் ஒப்பந்தங்களைக் காப்பாற்றுவோம்; கொஞ்சம் தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை என்ற மனப்போக்கில் செயல்பாட்டால்., அது மிகப் பெரிய ஆபத்துக்களைக் கொண்டு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.

இந்த இந்திய ஆளும் வர்க்கத்தின் பிடிவாதத்தால் கூடங்குளத்தில் விஷப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, தமிழ் மக்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால்,தமிழகத்தை மாற்றி மாற்றி ஆண்டுகொண்டிருக்கும், தற்போது மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி செய்து கொண்டிருக்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களும், தி.மு.க. தலைவர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்களும், இவர்கள் இருவர் வழிநடத்தும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அனுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வலியுறுத்துகிறது.

Pin It