''தமிழர் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு'' என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரையில் 11.12.2011 ஞாயிறு மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய சிறப்பு மாநாடு அனைவரும் பாராட்டும் எழுச்சி மிகு நிகழ்ச்சியாக அமைந்தது.

தஞ்சை காவிரித் தப் பாட்டக் குழுவின் கலை நயமிக்க தப்பாட்டத்தோடு மதுரை கே.கே நகர் சோகோ அறக் கட்டளையின் நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் மண்ட பத்தில் மாநாடு தொடங் கியது. தொடக்கம் முதலே அரங்கம் நிறைந்து வெளியிலும் திரளா னோர் அமர்ந்து கேட்ட நிகழ் வாக சிறப்புற்றது. இதற்கு வசதியாக வெளியில் தொலைக் காட்சியின் வழியாக அரங்க நிகழ்வுகள் காட்டப் பட்டன.

மாநாட்டிற்கு த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப் பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார். கட்சியின் மதுரைச் செயலாளர் தோழர் ரெ.இராசு வரவேற்புரை ஆற்றினார்.

மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப.உதயகுமார் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் கடந்த 25 ஆண்டு காலமாக எவ்வாறு வளர்ந்தது என்பதை நிரல்பட விளக்கினார். பன்னாட்டு முத லாளிகளுக்கும் வல்லரசுகளின் நலன்களுக்கும் மட்டுமே இந்திய அரசு சேவை செய்கிறது எனக் குற்றம் சாட்டினார்.

தாமிரபரணி மக்கள் பண் பாட்டு இயக்கம் சார்பில் வழக்குரைஞர் மா.பிரிட்டோ அடுத்து உரையாற்றினார் “வால் ஸ்டிரீட் போராட்டத்திற்கு நிகரான போராட்டமாக இடிந்தகரை மக்கள் போராட்டம் விளங்குகிறது.” என மதிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு மருத்துவர் இரா. இரமேஷ் அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை முன்வைத்து கூடங்குளம் நில அமைப்பு அணு உலைக்கு ஏற்றதல்ல; விபத்துகள் நேர வாய்ப்புகள் அதிகம் என விளக்கினார். உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றும் அறிவியலாளர்கலை ’’பரத்தை விஞ்ஞானிகள்’’ எனச் சாடினார்.

அவருக்கே உரிய நகைச் சுவை நடையில் தர்க்கங்களை அடுக்கி உரை யாற்றிய முனைவர். த.செயராமன் கூடங் குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியே என நிறுவினார்.

மகளிர் ஆய ஒருங்கி ணைப்பாளர் தோழர் அருணா இடிந்தகரை போராட்டத்தில் உழைக்கும் பெண்கள் வகிக்கும் முன்னணிப் பாத்திரத்தை எடுத்து ரைத்தார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் முல் லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டம், மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கம், மீனவர் பாதுகாப்பு போராட் டம் ஆகிய அனைத்தும் தமிழ்த் தேசியம் என்ற மைய கருத்தியல் தளத்தில் ஒருங்கிணைக்கப் பட்டால் தான் உறுதியான வெற்றி கிடைக்கும் என விளக்க வுரை ஆற்றினார் த.தே.போ.க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்.

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்ற தீர்மானத்தை தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்துவும், நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை த.இ.மு பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறையும், முல்லைப் பெரியாறு அணை உரிமை மறுக்கும் மலையாளிகளை தமிழகத்தில் இருந்து வெளியேற் றுவோம் என்ற தீர்மானத்தை கட்சியின் த.செ.கு.உறுப்பினர் பா.தமிழரசனும், முல்லைப் பெரியாறு உரிமைக்குப் போராடிய தமிழின உணர் வாளர்கள் மீது போடப் பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை மகளிர் ஆய மையக் குழு உறுப்பின தோழர் இளமதியும், தேவாரத்தில் நியூட்ரினோ நிறுவனத்தை இந்திய அரசு தொடங்கக்கூடாது எனக் கோரும் தீர்மானத்தை பொதுக் குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணியும் முன்மொழிய வலுத்த கையொலியோடு தீர்மானங்களை மாநாடு நிறை வேற்றியது.

மாநாட்டு நிறைவுரை யாற்றிய த.தே.பொ.க தலைவர் தோழர் பெ.மணியரசன் “கூடங்குளம் அணு உலையை வலுக் கட்டாயமாக இந்திய அரசு திறக்க முனைந்தால் இரத்தக் களரி ஏற்படும். அணு உலையை திறக்க நினைத்தால் தமிழகத்தின் அனைத்து நகரங்களும் போராட்ட களங்களாக மாற் றப் பட வேண்டும். அங்கங்கு இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் முடக்கப்பட வேண்டும்.” என போர் முழக்கம் செய்தார்.

நிறைவில் சித்திரை தானி ஓட்டுநர் சங்க செயலாளர் தோழர்.பா.இராசேந்திரன் நன்றி நவின்றார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான ஆவேச முழக்கங் களோடு இரவு 11 மணி அளவில் மாநாடு நிறைவடைந்தது.

Pin It