திருப்பூரில் நண்பர்கள் சிலர் மார்க்சிஸ்ட் கட்சித் தோழரிடம் கூடங்குளம் அணுஉலை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான், “உங்கள் கட்சி அணுஉலைகளை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதை திட்டவட்டமாக கூற முடியுமா?” என்றேன். அதற்கு அவர், “திட்டம் தொடங்கப்படவில்லை என்றால் எதிர்ப்போம். அணுஉலை கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்றால் ஆதரிப்போம்” என்றார். அதற்கு உடன் இருந்த மற்றொரு நண்பர், “ஒரு லட்சம் கோடி மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிக்கும் இந்த தேசத்தில் 13 ஆயிரம் கோடி செலவு செய்து விட்டார்கள் என்பதற்காக மக்கள் உயிருக்கே உலை வைக்கும் அணுஉலையை எதிர்ப்பதுதானே மக்கள் நலன் சார்ந்த அமைப்பின் கடமை?” என்று கேட்டார்.

ஆனால், அந்த மார்க்சிஸ்ட் தோழர் அதற்கு மேல் பேசவில்லை. அணுஉலை அமைப்பதற்காகச் செலவிடப்பட்டுள்ள 13 ஆயிரம் கோடி ரூபாய் என்பது மனித உயிர்களை விட மேலானது அல்ல என்பது, அவருக்கு உறைத்திருக்குமா என்று தெரியவில்லை.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோரக் கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, உயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அழிவு ஏற்படும் என்ற விஞ்ஞானப்பூர்வமான எச்சரிக்கையை மீறி, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத் தின் அனுமதியின் பேரில், கூடங்குளம் முதலாவது அணுஉலை ஜூலை 13ம் தேதி முதல் செயல்படத் தொடங்கி விட்டது.

இடிந்த கரையில் போராட்டக்காரர்கள் 700 நாட்களைத் தாண்டி, அறவழியில் போராட்டிக் கொண்டிருக்கிறார்கள் கடற்கரை மணலில் தங்கள் உடலைப் புதைத்துக் கொண்டு போராடுகிறார்கள். தெருக்களில் சடலமாக படுத்துக் கொண்டு மரணப் போராட்டம் நடத்துகிறார்கள்.

உலகில் வேறொங்கும் இல்லாத அளவுக்கு மெய்சிலிர்க்கும் வகையில், விதவிதமான வடிவங்களில் இந்த அறப்போரை இடிந்தகரை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் விரோத சர்வாதிகார இந்திய அரசு, இதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அறவழி போராட்டம் என்றால் என்ன என்பதை உலகிற்கே உணர்த்திக் கொண்டிருக்கிறது சுப.உதயக்குமார் தலைமையிலான அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

அமெரிக்காவில் 1979 இல் நடந்த மூன்றுகல் தீவு அணுஉலை விபத்து, ரஷ்யாவில் 1986 இல் ஏற்பட்ட செர்னோலில் அணுஉலை விபத்து, அண்மையில் 2011 இல் ஜப்பானில் நடந்த புகுஷிமா அணுஉலை விபத்து, இவைகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கண்டும் காணாமல் இருப்பதுதான் நாட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களின் செயல்கள் போலும்!!

புகுஷிமாவை புனரமைக்க ஜப்பான் அரசு 5 லட்சம் கோடி ரூபாய் தேவை என்று அறிவித்துள்ளது. ஆனால் கூடங்குளம் அணுஉலை விபத்துக்கு இழப்பீடாக ஆயிரத்து 500 கோடி வழங்குவதாக இந்திய அரசு கூறுகிறது. இந்தியாவில் தமிழனின் உயிர் எந்தளவு மட்டமாக மதிக்கப்படுகிறது என்பதற்கு மற்றொரு உதாரணமிது. இந்த இழப்பீட்டையும் மக்கள் வரிப்பணத்தில் வழங்குவதாகக் கூறுவது, கம்பெனிகளுக்கு இந்தியா கங்காணி வேலை பார்ப்பதைத் தான் காட்டுகிறது.

அணுஉலையை எதிர்த்தால் வழக்குப் போடுகிறார்கள். அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது இதுவரையில் 1.65 லட்சம் வழங்குகள் போடப்பட்டுள்ளன. இதில் 15 ஆயிரம் வழக்குகள் தேசத் துரோக வழக்குகள். சுதந்திரப் போராட்டக் காலத்திலும், தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போர் காலத்திலும் கூட இந்தளவுக்கு வழக்குகள் பாயவில்லை.

சொந்த மக்களின் நலனை கடற்கரை மணலில் புதைத்து விட்டு, ரஷ்ய நிறுவனமான லியோ போடோஸ்க்-க்கு கடை விரித்திருக்கிறது இந்தியா. அணுஉலை அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய நிறுவனமான லியோ போடோஸ்க் ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளின் பேரில் அந் நிறுவனத்தின் கொள்முதல் இயக்குநரான செர்ஜி ஷடோவ்வை ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்புச் சேவை (எஃப்.எஸ்.பி) கைது செய்திருக்கிறது.

தரம் குறைந்த மூலப்பொருட்களை மலியான விலைக்கு வாங்கி அவற்றை உயர்தர மூலப்பொருட்களாகக் காட்டி அந்த விலை வித்தியாசத்தை ஷடோவ் சுருட்டி இருக்கிறார். இந்தக் குற்றத்தினால் பாதிக்கப்படும் அணுஉலைகள் எத்தனையோ? வேலை நிறைவடைந்த காலகட்டத்தைப் பார்த்தால் இந்தியாவில் ரஷ்யாவினால் கட்டித் தரப்பட்ட அணுஉலை இத்தகைய தரம் குறைந்த சாதனங்கள் மற்றும் பாகங்களைப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் மொத்தம் உள்ள அணுஉலைகளின் எண்ணிக்கை 21. நாட்டுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் அணுஉலைகள் மூலம் கிடைப்பது எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டரை விழுக்காடு மட்டும்தான்.

இந்த லட்சணத்தில்தான் மின்தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்களிடம் அணுஉலை இயங்கினால் தமிழகம் ஒளிரும் என்கிற பொய்ப் பரப்புரையை செய்து வருகின்றனர் அணுஉலை ஆதரவாளர்கள். இங்கே உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் பிறமாநிலங்களுக்கு வழங்குப்படும். ஆனால் கூடங்குளம் அணுக்கழிவுகளை தங்கள் மாநிலத்தில் கொட்ட அனுமதிக்க முடியாது என கர்நாடக மக்களும் அரசும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தமிழன் உயிரைப் பணயம் வைத்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் என்றால், இந்தியத் தேசியர்களுக்கு சர்க்கரைக் கட்டியாக இனிக்கும் போலும்!

சத்துணவைக் கூட முறையாக வழங்க முடியாமல் 23 பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய இந்த அரசால் பேராபத்தை விளைவிக்கக்கூடிய அணுஉலையை முறையாகப் பராமரிக்க முடியாது என்பதற்கு எத்தனை எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

Pin It