தமிழ்த் தேசியப் பேரியக்கம் பிப்ரவரி 21இல் உலகத் தாய்மொழி நாள் கடைபிடித்ததா?

இல்லை. தமிழர்களுக்கான தாய்மொழி நாள் சனவரி 25, - அதாவது மொழிப்போர் நாள்! அதைக் கடைபிடித்தோம். 1938 மற்றும் 1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து தாய் மொழியான தமிழைக் காத்திட போராட்டம் நடத்தி, முந்நூறு பேர்க்கு மேல் உயிரீகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள் சனவரி 25!

1952-இல் உருது மொழித் திணிப்பை எதிர்த்து அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் (இன்றைய வங்காள தேசம்) மாணவர் போராடினர். நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வங்காள தேசம் விடுதலை அடைந்து ஐ.நா. மன்றத்தில் உறுப்பு வகிப்பதால் அது தன்னுடைய மொழிப்போர் நாளை உலகத் தாய் மொழி நாளாக ஆக்கிட முடிந்துள்ளது.

தாய்மொழிக் காப்புப் போராட்டத்தை - தன் இனதன் தேச விடுதலைப் போராட்டத்துடன் இணைக்கத் தெரிந்த வங்காளிகள், 18 ஆண்டுகளில் தனித் தேசம் கண்டனர்.

தமிழர்களின் மொழிப் போர் திராவிடக் குழப்ப வாதிகளின் தலைமையால் திசை திருப்பப்பட்டு, ஆங்கில ஆதரவுப் போராட்டமாக மாறியது. தமிழ்த் தேச விடுதலையும் திசைமாற்றி - “இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன்” என்று சிதைக்கப் பட்டது.

இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்தும் திராவிடக் கங்காணிகளிடமிருந்தும் தமிழர்கள் விடுதலை அடைய வேண்டுமானால் - தமிழை ஆட்சி மொழியாய், - கல்வி மொழியாய் ஆக்கிட வேண்டுமானால் தமிழ்த் தேசம் அமைய வேண்டும். அதற்கான உறுதி எடுக்கும் நாள் தமிழர்களின் மொழிப்போர் நாளான சனவரி -25! வங்காள தேச மொழிப்போர் நாளை நாம் கடைபிடிக்க வேண்டியதில்லை.

தமிழ்மொழி தாய்மொழி மட்டுமன்று, அது தமிழகத்தின் தேசிய மொழி!

திருவரங்கம் சட்டப் பேரவை இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்தது தானே?

அதிகாரத்திலிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வின் தன்னல அதிகாரத் தலையீடு, தண்ணீரை விடத் தாராளமாக _ --வாக்காளர்களுக்கு வாரி இறைத்தது, குறிப்பிட்ட எண்ணிக்கை வாக்காளர்களை மேய்த்து வாக்குச் சாவடிக்குக் கட்டுக்கோப்பாக ஓட்டிவரக் கங்காணி களை அமர்த்தியது போன்ற உயர் நெறிகளால் அ.இ.அ.தி.மு.க. “ஞாயம்” வெல்லச் செய்தது. மேற்படி நெறிகளின் மூலவரான தி.மு.க., பதவி இழந்து பல்லிளித்து நிற்பதால், அது தனக்கான “ஞாயத்தை” தோற்கடிக்கச் செய்தது.

பா.ச.க. சற்றொப்ப ஐயாயிரம் வாக்குகள் வாங்கியத்தில் ஒரு மன நிறைவு உள்ளது. பத்தாயிரத்துக்கு வாக்கு வாங்கியிருந்தால் வானத் துக்கும் மண்ணுக்குமாக குதிப்பார்கள்.  நம்முடைய இடதுசாரித் தோழர்கள் (சி.பி.எம்.) 1,552 வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். நோட்டாவை விடக்குறைவு! அவர்கள் சமூகவியலையும் சமூக உளவியலையும் கரைத்துக் குடித்ததால் பேதியாகி வயிறு காலியாகிவிட்டது.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்குத் திராவிடக் கட்சிகளே காரணம் என்பதை வெட்கத்துடனும் வேதனையுடனும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

இந்த அளவுக்காவது திரு. வீரமணியார் உண்மையை ஒப்புக் கொண்டது வரவேற்கத்தக்கது.  அரசியல் நாகரிகம் கெட்டுப் போனதற்கு வீரமணியார் குறிப்பிடும் காலம் 1985க்குப் பிறகு - அதாவது கிட்டத்தட்ட செயலலிதா அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு வந்த காலத்தை ஒட்டிச் சொல்கிறார்.

தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க. உருவானதிலிருந்து, தனிநபரை இழிவுபடுத்தும் அரசியல் தொடங்கியது எனலாம். தி.மு.க.வின் பெயரைச் சொல்லவே அருவருத்து தி.மு.க.வினரை இழிவுபடுத்தும் நோக்கில் “கண்ணீர்த் துளிகள்” என்றே அழைத்தார் பெரியார். அண்ணாவின் பிறப்பைப் பற்றிகூடப் பெரியார் விமர்சித்தார் என்ற ஒரு செய்தியும் உண்டு.

அண்ணா அசல் தமிழர் அல்லர் என்பதை மறைமுகமாகத் தமிழ் உணர்வாளர்களுக்கு உணர்த்தத் தான் காமராசரைப் “பச்சைத் தமிழர்” என்று பெரியார் புகழ்ந்தார் என்ற திறனாய்வும் உண்டு.

ஆனால், அண்ணாவும், மற்ற தி.மு.க. உறுப்பினர் களும் பெரியார் தங்கள் தலைவராகத் தொடர்கிறார் என்றும், தி.மு.க.வின் தலைவர் நாற்காலி பெரியாருக் குக்காகவே காலியாக உள்ளது என்றும் கூறி வந்தார்கள்.

1972இல் தி.மு.க.விலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கிய போது, அதனை “ஒட்டுக் காங்கிரசு” என்றே கருணாநிதி பேசி வந்தார்; எழுதி வந்தார். எம்.ஜி.ஆர். நடித்து வெளியான “நேற்று -_ இன்று _- நாளை” திரைப்படம் வெளியாகாமல் தடுக்க எத்தனையோ முயற்சிகளைச் செய்தார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. படம் வெளிவந்தபின், அப்படம் ஓடிய திரையரங்குகளில் மறியல் போராட்டம் நடத்தியது தி.மு.க. எம்.ஜி.ஆர். மலையாளி என்பதால் மலையாளிகளுக்கு எதிரான இயக்கத்தைப் புயல் வேகத்தில் முடுக்கிவிட்டார் முதலமைச்சர் கருணாநிதி.

தி.மு.க.வின் பொருளாளராக இருந்தபோது, திராவிடத் தலைவர் கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். மலையாளி என்பது தெரியாதா? நாவலர் நெடுஞ்செழியன், பேரா. அன்பழகன் போன்றோர் மலையாளிகள் தமிழகத்தில் வாழலாம் - ஆளக் கூடாது என்று முழங்கினர்.

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் செயலலிதாவின் மீது தாக்குதல் தொடுத்தனர் தி.மு.க.வினர். செயலலிதா - தமது சேலையைத் தி.மு.க.வினர் உரித்தனர் என்றார். முதல்வர் கருணாநிதியைக் “கிரிமினல்” என்று திட்டினார் செயலலிதா என்றனர் தி.மு.க.வினர்.

ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் கருணாநிதிக்கு எதிரான தனிநபர் பகை அரசியலை அடிப்படைக் கொள்கையாக்கிக் கொண்டு, மிகவும் அருவருக்கத்தக்க - மிகமிக அநாகரிகமான தனிநபர் பகை அரசியலையும் தனிநபர் துதி அரசியலையும் செயலலிதா வளர்த்துவிட்டார். தமிழ் மக்களின், அரசியல் பண்பாட்டில் பாதியைக் கெடுத்தார் கருணாநிதி; மீதியைக் கெடுத்தார் செயலலிதா! இதுதான் திராவிடம் வளர்த்த அரசியல் நாகரிகம்!

தாய்க் கழகம் - தாய்க் கழகம் என்று தமது திராவிடர் கழகத்தைக் கூறிக் கொள்ளும் வீரமணியார், அவர் கூறும் 30 ஆண்டு காலத்தில் தி.மு.க. _- அ.இ.அ.தி.மு.க. தலைவர்களின் அரசியல் அநாகரிகத்தைத் தடுக்க சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.

ஒன்று, தி.மு.க.வின் வாலாகச் சேர்ந்து கொண்டு, அக்கழகத்தின் அரசியல் அநாகரிகத்தை ஊக்கப்படுத் தினார் அல்லது அ.இ.அ.தி.மு.க.வின் வாலாகச் சேர்ந்து கொண்டு அக்கழகத்தின் அரசியல் அநாகரிகத்தை ஆதரித்தார்.

தமிழ் மக்களின் நலன் _- தமிழர் உரிமை என்ற தளத்தில் நின்று, இரு கழகங்களையும் திறனாய்வு செய்யும் - தட்டிக் கேட்கும் - தாய்க் கழகமாக - தி.க.வை வீரமணியார் நடத்தவில்லையே! இனியாவது அப்படிச் செயல்படுவாரா?

இராகுல் காந்தி ஓய்வெடுக்கப் புறப்பட்டது எதனால்?

தாய்க்கும் மகனுக்குமான தற்காலிகப் பிணக்கு. காங்கிரசுக்குப் புத்துயிர் ஊட்ட, தி.மு.க.வில் ஸ்டாலின் செய்தததைப் போல காங்கிரசுப் புள்ளிகள் பலரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்பது இராகுல் கருத்து. அதுவே, ஆபத்தாகப் போகுமோ என்பது அன்னையின் அச்சம். பிணக்குத் தீர்ந்து திரும்பும்போது, இராகுல் காந்தி காங்கிரசுத் தலைவராக ஆனாலும் வியப்பில்லை.

முதுமை அடைந்த யானை சம தரையில் விழுந்தால் எழுவது கடினம்.  அதுவே பள்ளத்தில் விழுந்தால்! அந்த நிலைதான் காங்கிரசுக்கு!

---கேரளாவில் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் திரு. வி.எஸ். அச்சுதானந்தன் வெளிநடப்பு செய்து புறக்கணித்ததும் - மாநிலக் குழுத் தேர்வில் அவர் பெயர் இல்லாததும் எதைக் குறிக்கிறது?

அடையக்கூடிய ஓர் உயர் இலட்சியம் இல்லாத போது, தேர்தல் வெற்றியை மட்டுமே வைத்து ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையோ அல்லது மற்ற கட்சியையோ நீண்ட காலம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியாது.

கேரளத்தில் மக்கள் தலைவர்களாக விளங்கியவர்கள் ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ். போன்ற தலைவர்கள். இப்போது, அங்கு அவர்கள் தரத்தில் இல்லாவிட்டாலும் ஓரளவு மக்கள் செயல்வாக்குள்ள ஒரே தலைவர் அச்சுதானந்தன் மட்டுமே!

ஆனால், அச்சுதானந்தன் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படுபவராக இல்லை. கேரளக் கட்சித் தலைமையில் உள்ள பினராயி விஜயன், புதிய மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் போன்றோர் புரட்சியாளர்களும் இல்லை. நேர்மையாளர்களும் இல்லை.

தகுதியான இலட்சியமும் இல்லை; தக்க தலைவர்களும் இல்லை. இந்நிலையில், உட்கட்சித் தகராறு விகாரமாக வெடிப்பதில் வியப்பில்லை!

உள்ளூர் மக்கள் பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி, கட்சியின் மக்கள் செல்வாக்கைப் பெருக்கப் போவதாக மாநில மாநாட்டில் முடிவு செய்துள் ளார்கள். இருதய நோக்கு இஞ்சி மரப்பா சாப்பிட்ட கதைதான்!

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையில் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆற்று நீர் இணைப்பு பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. அது நடந்து விட்டால் நமது தண்ணீர்ச் சிக்கல் தீரும் அல்லவா?

இருப்பதைப் பிடிக்க முடியாதவன் பறப்பதைக் காட்டிய கதையாக ஆளுநர் உரையில் தென்னக ஆற்று நீர் இணைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. ஆளுநர் உரை என்பது அமைச்சரவை உரைதான். அமைச்சரவை என்பது முதலமைச்சர் உரைதான்.

‘மக்களின் முதலமைச்சர்’ செயலலிதா உரை என்று கூட ஆளுநர் உரையை எடுத்துக் கொள்ளலாம். காவிரி மேலாண்மை வாரியம் _- காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் - கர்நாடகத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே மேலும் இரு அணைகள் கட்டி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வராமல் தடுக்கப் பார்க்கிறது கர்நாடகம்.

இந்தச் சட்ட விரோத அணைகளுக்கானத் துணிச்சலை மறைமுகமாக இந்திய அரசு கொடுத்திருக்குமோ என்ற ஐயப்பாடு உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுப் பாசன உரிமை கொண்ட காவிரி உரிமையை மீட்க முடியாமல் தவிக்கிறோம். புதிதாக ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கோதாவரி, கிருஷ்ணா நீரைத் தர ஒப்புவார்களா அம்மாநிலத்தவர்?

காவிரியை மற, - கோதாவரியை நினை என்று திசை திருப்பும் வேலையில் அ.இ.அ.தி.மு.க.  ஈடுபட்டுள்ளதா? ஏன் இந்த மாற்றம்? ஐயங்கள் எழுகின்றன!

Pin It