ஈழத்தமிழர் சிக்கலை வைத்து தில்லியிலும் தமிழகத்திலும் அடுக்கடுக்கான நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. இலங்கை காமன்வெல்த் மாநாட்டை யொட்டி இந்த ஏமாற்று நாடகங்கள் நடக்கின்றன.

போர் நடைபெற்ற கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை விட இப்போது தமிழகத்தில் ஈழச்சிக்கல் குறித்த விழிப்புணர்வும், தமிழ்த் தேசிய அரசியலும், ஆழப்பட்டு விரிவடைந்து வருகின்றன.
 
ஐ.நா. மனித உரிமை மன்ற அமெரிக்கத் தீர்மானத்தை ஒட்டி கடந்த மார்ச், ஏப்ரலில் தமிழ்நாட்டு மாணவர்களிடையே ஏற்பட்ட எழுச்சி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
 
தமிழ்நாட்டு இளையோரிடையே ஏற்பட்டு வரும் இந்த மாற்றம், அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

வரும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய சூழலில் உள்ள காங்கிரசுக் கட்சி அதற்கு ஏற்ப நாடகங்களை நடத்தத் தொடங்கியுள்ளது.

இனக் கொலைக்களமான இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடத்தப்பட கூடாது, வரும் இரண்டாண்டுகளுக்கு இனக்கொலைக் குற்றவாளி இராசபட்சே காமன்வெல்த் கூட்டமைப்பின் அவைத் தலைவராக அலங்கரிக்கப் படக் கூடாது என்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்தது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையும் எழுப்பப் பட்டது.
 
இச்சூழலில் 2013 நவம்பர் 15 தொடங்கி 17 முடிய கொழும்புவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்ளப் போவதில்லை, அவருக்கு பதிலாக வேறொரு பொறுப்பாளர் அனுப்பப்படுவார் என்ற செய்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஊடகங்களில் கசியத் தொடங்கியது.
இந்திய அரசின் இம் முடிவுக்கு ஏற்ற அரசியல் சூழலைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்த தி.மு.க.தலைவர் கருணாநிதி காய் நகர்த்தத் தொடங்கினார். இலங்கை மாநாட்டில் பிரதமர் கலந்துக் கொள்ள கூடாது என்பதை முதன்மைப் படுத்தி ஆரவாரமான அறிக்கைகள் வெளியிட்டார். பல்வேறு தமிழன உணர்வாளர்களும் கூட “பிரதமர் போகக் கூடாது’’ என்பதை முதன்மைப்படுத்திப் போராட்டங்கள், இயக்கங்கள் நடத்தினர்.

இதனையே ஆகப் பெரிய கோரிக்கையாக மாற்றும் வகையில் இந்திய அரசும், காங்கிரசுத் தலைமையில் இறுதி நேரம் வரை மவுனம் காத்தன. இதைச் சுற்றியே ஊடக விவாதங்களும் நடைபெற்றன.

கடைசியில் இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்க மாட்டார். அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் தலைமையிலான இந்தியக்குழு பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற இனக் கொலையோ, மனித உரிமைமீறலோ, பன்னாட்டு சட்டமீறலோ, காமன் வெல்த் கொள்கைப் பட்டய மீறலோ காரணமாகச் சொல்லப் படவில்லை. இலங்கை குடியரசுத் தலைவர் இராசபட்சேக்கு இது குறித்து மன்மோகன்சிங் அனுப்பிய கடிதத்தில் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் சொந்த காரணங்களால் தம்மால் கலந்துக்கொள்ள இயலவில்லை என்பது மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
 
போருக்குபின்னும் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறலைக் காரணமாக வெளிப்படையாகக் கூறித்தான் கனடாநாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இம்மாநாட்டில் கலந்துகொள்ளப் போவ தில்லை என்று தெளிவாக அறிவித்தார். மோரிசியஸ் நாட்டுப் பிரதமர் நவீன் சந்திராராம்கூலம் இம் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என கடைசி நேரத்தில் அறிவித்த போதும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலைத்தான் காரணமாகக் குறிப்பிட்டிருந்தார். மன்மோகன் சிங் அது கூடச்செய்யவில்லை.

மன்மோகன் சிங்கிற்கு ஆகப் பெரிய அழுத்தம் தருவது போல தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைவர்களும் அவர்களது பங்கிற்கு நாடகம் ஆடினர். அமைச்சர் ஜி.கே. வாசன், காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துக்கொள்ளக் கூடாது என பிரதமரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தார். ப.சிதம்பரமும், நாராயணசாமியும் மட்டுமின்றி மூத்த அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என அறிக்கை விட்டனர்.

இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற குறைந்த அளவு கோரிக்கையைக் கூட திசைத் திருப்பும் இந்த நாடகம் காங்கிரசுத் தலைமையின்- சோனியாகாந்தியின் விருப்பத்திற்கு ஏற்பவே நடத்தப்பட்டது.

முதன்மை எதிர்க்கட்சியான பாரதிய சனதா கட்சியும் இதே வகை அருவருப்பான நாடகத்தை அரங்கேற்றியது. தமிழ்நாட்டு பாரதிய சனதா கட்சித் தலைவர்கள் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் போதே அக்கட்சியின் அனைத்திந்தியத் தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு “தேசிய நலன்கள் சர்வதேசிய நிலைமைகள், அண்டை நாடுகளின் உறவுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதே சரியானது’’ என சென்னையிலேயே செய்தியாளர்களைக் கூட்டி அறிக்கை கொடுத்தார்.
 
காங்கிரசின் ஜி.கே. வாசன், ப.சிதம்பரம் வகையறாக்களைப் போலவே பா.ச.க.-வின் பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் குழுவினர் தங்கள் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர்களை ஒரு தூதுக்குழுவாகச் சென்று சந்தித்து தமிழக பா.ச.க. கருத்தை ஏற்க வேண்டுமென மனுக் கொடுத்து மன்றாடுவதாக இன்னொரு நாடகத்தை அரங்கேற்றினர். அதன் பிறகும் அக்கட்சியின் முன்னாள் அனைத்திந்தியத் தலைவர் நிதின் கட்கரி அனைத்திந்தியத் தலைமையின் பழைய கருத்தையே மீண்டும் கூறினார். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு தங்களுக்கும் உரிமை உண்டு எனக் கூறுவது போலவே இவர்களது நாடகம் அமைந்தது.

தமிழீழச் சிக்கலில் நம்மோடு பல போராட்டங்களில் பங்கேற்கும் இந்திய கம்யூனிஸ்ட், கட்சியின் நிலைமையும் கிட்டத்தட்ட இதே போன்றதுதான். இக்கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையும், தமிழ் நாட்டைச்சேர்ந்த இக்கட்சியின் அனைத்திந்திய துணைச் செயலாளர் தோழர். து.இராசாவும் கூறு வதை அக்கட்சியின் பொதுச் செயலாளரோ, பிறதலைவர்களோ பிரதி பலிப்பதில்லை. அக்கட்சியின் அனைத்திந்திய முடிவாக இது வருவதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தஅளவில் அனைத் திந்தியத் தலைமைக்கு சற்றும் குறையாத அளவில் தமிழினப் பகை நஞ்சு கக்குவதில் அக்கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையும் நடந்து கொள்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்திந்தியக் கட்சிகள் அனைத்தின் நிலையும் இதுதான். தங்கள் கட்சியின் தமிழினப் பகைப் போக்கை மறைப்பதற்கு இக் கட்சிகளின் தமிழகத் தலைவர்கள் சில நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள்.
 
இதற்கு சற்றும் குறையாத நாடகங்களை தி.மு.க.வும், அ.தி.மு.க-வும் அவ்வபோது நடத்தி வருகின்றன.

பிரதமர் கலந்துக்கொள்ளக் கூடாது என்று மட்டும் கூறும் கோரிக்கைகளின் பின்னால் உள்ள சூழ்ச்சியைத் தமிழ்நாட்டு இளையோர் புரிந்துகொண்டு போராட்டங்களை தீவிரப்படுத்தினர். பழைய காலத்தைப் போல தமிழர்கள் மந்தையாக இல்லை என்பது இக்கட்சித் தலைவர்களுக்குத் தலைவலியாக அமைந்தது. அதற்கேற்ப நாடக காட்சிகளை மாற்றி அமைத்தனர்.

கருணாநிதி பிரதமர் கலந்துக் கொள்ள கூடாது என கூறிக் கொண்டிருந்த போது, செயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கூட்டி கடந்த 2013 அக்டோபர் 24 அன்று ‘காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையைத் தற்காலிகமாக நீக்கி வைக்கவேண்டும்; இந்தியாவின் சார்பில் இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் யாரும் பங்கேற்கக் கூடாது’’ என தீர்மானம் நிறை வேற்றினார். கருணாநிதியை விட தாம் இச்சிக்கலில் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார்.

செயலலிதா இவ்வாறு கூறியவுடன் கருணாநிதியும் தனது குரலை உயர்த்தினார். ‘பிரதமர் மட்டும் அல்ல, இந்தியாவின் சார்பில் ஒரு துரும்பும் இலங்கைக்குச் செல்லக் கூடாது’’ என்று வசனம் பேசினார்.

இவர்களது பசப்பல்களால் குழம்பாமல் தமிழின உணர்வாளர்கள் ‘இனக்கொலை இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தாதே காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு இனக்கொலையாளி இராசபட்சே மீது பன்னாட்டு விசாரணை நடத்து தமிழீழம் குறித்து ஈழத் தமிழர்களுக்கிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்து வடக்கு மாகாண அவை அல்ல, ஐ.நா மேற்பார்வையில் இடைக்கால நிர்வாகசபை நிறுவி ஈழத் தமிழர்களுக்கான துயர் துடைப்புப் பணிகளை நடத்து சிங்கள மயமாக்கலைநிறுத்து’’ என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்தது. இதற்கான போராட்டங்கள் நாள் தவறாமல் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தீவிரம் பெற்றது.

இந்தச் சூழலில் செயலலிதா அரங்கேற்றிய அடுத்த நாடகம் தான் காமன்வெல்த் சிக்கலை ஒட்டி அவர் 12.11.2013 நடத்திய தமிழக சட்ட மன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஆகும்.

ஏதோ நடக்கப் போகிறது என்பது போல படம் காட்டி அவர் முன்மொழிந்து நிறைவேற்றிய சட்ட மன்றத் தீர்மானம் பழைய கஞ்சியை பாத்திரம் மாற்றிய செயலாகவே அமைந்தது. அக்டோபர் 24ல் நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானத்தையே சில சொற்களை மாற்றி மீண்டும் நவம்பர் 12-ல் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.

புதிதாக ஒன்று மில்லாத இந்த தீர்மானத்தைக்கூட காங்கிரசு கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்து, தங்களின் தமிழினப் பகையை வெட்ட வெளிச்சமாக்கின.

காமன்வெல்த் குறித்த தனது கோரிக்கையில் செயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்கு மானால் அவர் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி இருக்க வேண்டும் சட்ட மன்றத்தை அல்ல. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை, கோரிக்கையை அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு நேரிடையாக பிரதமரிடம் அளித்து வலியுறுத்தி இருக்க வேண்டும். இலங்கை காமன் வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்கவில்லை என்றால், இந்திய ஆட்சியாளர்களைத் தமிழ்நாடு புறக்கணிக்கும், இந்திய அரசோடு தமிழ்நாடு ஒத்துழைக்காது என்று அறிவித்துகளம் இறங்கியிருக்க வேண்டும். குறைந்தது தமிழகம் தழுவிய முழு அடைப்பு உள்ளிட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத் திருக்க வேண்டும்.

இவற்றை விடுத்து மீண்டும் பழைய தீர்மானத்தையே சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நிறை வேற்றியிருப்பது கவைக்கு உதவாத செயல்.

அவரே இத்தீர்மானத்தை முன்மொழிந்து குறிப்பிட்டது போல தமிழ்நாட்டு மக்களிடம் எழுந்துள்ள கொந்தளிப்பை எதிர் கொள்ளும் உத்தியாகவே இத் தீர்மானம் என்ற நாடகத்தை நடத்தி இருக்கிறார்.
 
இசைப்பிரியா சிங்களப் படையினரால் சிதைத்து, கொல்லப்பட்ட காட்சிகளையும் அங்கு நடைபெற்று வரும் அப்பட்டமான இன அழிப்பு நடவடிக்கைகளையும் சேனல் 4 மட்டுமின்றி, பி.பி.சி தொலைக்காட்சியும் வெட்ட வெளிச்சமாக்கிய பின்னும் அனைத்திந்தியக் கட்சிகளின் இனப்பகைப் போக்கு மாறவில்லை.

இதனை மறைத்து, திசை திருப்புவதற்காக நடைபெறும் பதவி அரசியல்வாதிகளின் இழிவான இந்த நாடகங்களை தமிழர்கள் விழிப் புணர்வோடு புறந்தள்ள வேண்டும். தமிழீழச் சிக்கலுக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டு உரிமைப் போராட்டங்களுக்கும் இது தேவையான ஒன்றாகும்.

Pin It