மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடுவண் குழு உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன், “தேசிய இனப் பிரச்சினையும் மாறியுள்ள உலகச் சூழலும்” என்ற தலைப்பில் தீக்கதிர் நாளிதழில் (05.06.2013) ஒரு கட்டுரையும், “சுயநிர்ணய உரிமை - தொடரும் விவாதங்கள்’’ என்ற தலைப்பில் தினமணியில் (11.06.2013) ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். இரு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே கட்டுரைதான். சிற்சில பகுதிகள் மட்டும் ஒன்றில் உள்ளது மற்றொன்றில் இல்லை.

தமிழ் ஈழ விடுதலையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்காததற்கான விளக்கமும் விவாதமாக இக்கட்டுரைகள் உள்ளன.

“இலங்கைப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கொள்கை வழி நின்று ஒரு முடிவை எடுத்துள்ளதால், கட்சி இன்றைக்கல்ல தமிழகத்தில் கடுமையான இனவெறி அடிப்படையிலான முழக்கங்கள் எழுப்பப்பட்ட காலத்திலேயே அவதூறுகளைச் சந்தித்துள்ளது’’

“ஆனால், இத்தகைய அவதூறுகளைப் பின்னுக்குத் தள்ளி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு.......’’

மக்கள் தங்களது பாரம்பரிய வாழ்விடத்தில் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதைத் தொடர்ந்து கூறிவந்துள்ளது’’ (தீக்கதிர்).

தீக்கதிர் கட்டுரையிலோ அல்லது தினமணிக் கட்டுரையிலோ, என்ன கொள்கை வழிநின்று தனி ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கிறது என்று அவர் விளக்கவில்லை. “கொள்கை வழி நின்று’’ என்று கூறிக் கொள்கிறாரே தவிர, அதைச் சுருக்கமாகக் கூட சொல்லவில்லை.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை, ஒரு தேசிய இனத்திற்கு உண்டென்று லெனின் சொன்ன கோட்பாடு மாறியுள்ள இன்றைய உலக நிலையில் பொருந்தாது என்கிறார் ரெங்கராஜன். ஓர் இடத்தில் கூட “மாறியுள்ள இன்றைய உலக நிலை’’ என்னவென்று அவர் விளக்கவில்லை.

ஆனால், 19ஆம் நூற்றாண்டில் ஆபிரகாம்லிங்கன் நாட்டைப் பிரிக்கக் கூடாது என்று சொன்ன மேற்கோளை, மாறியுள்ள இன்றைய உலக நிலையை விளக்கும் முத்தாய்ப்புச் சான்றாகக் கூறியுள் ளார்.

ஆப்பிரகாம்லிங்கன் “எந்த ஒரு நாடும் தானாகவே தன்னைத் துண்டாடிக்கொள்கிற வாய்ப்பை உருவாக்காது’’ எனக் குறிப்பிட்டார். ஆம் அது முதலாளித்துவ அரசோ அல்லது கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான அரசோ எதுவானாலும் தன்னிடம் உள்ள ஒரு பகுதி இன்றைய உலகச் சூழலில் பிரிந்து செல்வதை ஒரு போதும் அனுமதிக்காது. இன்றைய யதார்த்தத்தில் அப்படிப் பிரித்துக் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பதும், பொருத்தமாக இருக்காது’’ என்கிறார் ரெங்கராஜன் (தினமணி).

இருபதாம் நூற்றாண்டில் லெனின் கூறிய, “பிரிந்து போகும் உரிமை’’ இன்றைக்குப் பொருந்தாது என்று கூறும் ரெங்கராஜன், ஆபிரகாம்லிங்கன் (1809 - 1865) பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூறிய பிரிந்து போகக் கூடாது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆபிரகாம்லிங்கன் கருத்துதான் “மாறியுள்ள இன்றைய உலகச் சூழ்நிலை’’க்குப் பொருத்தமான கருத்து போலும். டி.கே.ரெங்கராஜனின் “மார்க்சிய’’ இயங்கியல் ஆய்வு முறை நீடுழி வாழ்க!

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் தோள் மீது நின்று பார்த்து இன்றைய உலகையும் சமூகப் பிரச்சினைகளையும் அணுகுவதாகத் தங்களைப் பற்றிக் கூறிக் கொள்கிறார். மார்க்ஸ், லெனின் ஆகியோரின் தோள்மீது சி.பி.எம். தலைவர்கள் பார்த்தார்களே, முன்பக்கம் பார்த்தார்களா? பின்பக்கம் பார்த்தார்களா?

டி.கே.ரெங்கராஜன் ஆபிரகாம்லிங்கன் வரையறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பார்த்தால் அவர் மார்க்ஸ், லெனின் தோள் மீது நின்று அவ்வாசான்களின் முதுகுப்புறம் திரும்பிக் கொண்டார்கள் என்று தெரிகிறது.

மாறியுள்ள உலகச் சூழ்நிலையில் முதலாளிய நாடுகளிலிருந்தும் கம்யூனிஸ்ட் நாடுகளிலிருந்தும் புதிய நாடுகள் உருவாகவில்லை என்கிறார் ரெங்கராஜன். இதுவாவது உண்மையா?

இன்றைய உலகில் புரட்சிகளும் போராட்டங்களும் நடப்பது பெரிதும் தேசவிடுதலைக்காகவும் சனநாயகத்திற்காகவும்தான்!

1991இல் கம்யூனிஸ்ட்டு நாடான சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகப் பிரிந்தது. 1992 மார்ச் தொடங்கி அடுத்தடுத்து யூகோஸ்லாவியா 6 நாடுகளாப் பிரிந்தது. 1992 செக்கோஸ்லாவியா இரண்டு நாடுகளானது.

கம்யூனிஸ்ட் அல்லாத முதலாளிய நாடுகளில் உருவான புதிய நாடுகள் பல! 2002 இல் இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத்திமோர் - கருத்து வாக்கெடுப்பு மூலம் பிரிந்தது. 1993இல் எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்தது. 2011 இல் சூடானிலிருந்து தெற்குசூடான் பிரிந்தது.

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டுமென்று போராடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போல் அல்லாமல் பிரித்தானிய முதலாளியப் பேரரசு, ஸ்காட்லாந்தில் 2014ஆம் ஆண்டு கருத்து வாக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது.

ஸ்காட்லாந்து மக்களை பிரிட்டனின் ஆங்கிலேயேர்கள் இனக்கொலை செய்யவில்லை. அவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கவில்லை. ஆனால் தங்கள் இனமரபு, வரலாற்றுப் பெருமிதம், மொழி அடையாளம், தங்கள் இனச்சாதனைகள் ஆகியவற்றை ஆங்கிலேய தேசிய இனமும் ஆங்கில மொழியும் மறைக்கின்றன. எனவே, தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்று கோருகின்றனர் ஸ்காட்லாந்து மக்கள். இப்பொழுது ஸ்காட்லாந்து மாநிலத்தை ஸ்காட்லாந்திய தேசியக்கட்சிதான் ஆள்கிறது.

கனடாவில் கியூபெக் மாநிலத்தில் பிரஞ்சு மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மற்ற பகுதிகளில் ஆங்கிலேயர்கள் வாழ்கிறார்கள். பிரஞ்சு மக்கள் கியூபெக் தனிநாடாக வேண்டுமென்று கோருகின்றனர். கனடா அரசு கியூபெக்கில் 1995இல் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக 49.42 விழுக்காடு மக்கள் வாக்களித் தனர். தனிநாடு வேண்டாம் என 50.58 விழுக்காட்டினர் வாக்களித்தனர். மிகக்குறைவான வாக்கு வேறுபாட்டில் கியூபெக் தனிநாட்டுக் கோரிக்கை தோல்வி அடைந்தது.

ஆயினும் கியூபெக் மக்கள் மீண்டும் கோரிக்கை எழுப்பினால் அவர்களிடையே கியூபெக் தனிநாடு குறித்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தலாம் என கனடா அரசு உறுதி கூறியிருக்கிறது.

பிரிட்டனும், கனடாவும் வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகள். அவை, தனிநாட்டுக் கோரிக்கையை சனநாயக வழியில் அணுகுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சி போல முரட்டுத்தனமாகத் தேசிய இனத் தன்னுரிமையை அவை மறுக்கவில்லை.

நாடு பிரிவதை கம்யூனிஸ்ட் அரசும் ஒத்துக் கொள்ளாது, முதலாளி அரசும் ஒத்துக் கொள்ளாது என்று ரெங்கராஜன் கூறுவதில் உண்மை இருக்கிறதா? அவர் கூற்றில் உண்மையிருந்திருந்தால் அவர் சான்று காட்டியிருப்பாரே!

தர்க்கப் போரில், தரவுகள், சான்றுகள் என்னும் ஆயுதங்கள் எதுவுமில்லாமல் வெறுங்கையோடு வந்து தோளில் முண்டா தட்டுவதற்குத் தனித் துணிச்சல் வேண்டும்! இருபத்து மூன்றாம் புலிகேசிதான் நினைவுக்கு வருகிறார்.

இன்று உலகில் முதன்மை இயங்கு ஆற்றலாகச் செயல்படுவது தேசிய இன அரசியலும், தேசிய இனப் போராட்டங்களும்தான்!

இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவில், சீனாவில், பாகிஸ்தானில், துருக்கியில், ஸ்பெயினில், பிரிட்டனில், கனடாவில் இன்ன பிற நாடுகளில் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தும் ஆற்றல்களாக இருப்பவை தேசிய இனவிடுதலைப் போராட்டங்களே! இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்தும் ஆயுதப் போராட்டம் சாரத்தில் பழங்குடி மக்களின் பாதுகாப்புப் போராட்டமே! அந்த வகையில் அதுவும் இனஅரசியல் போராட்டமே!

தேசிய இனவிடுதலைப் போராட்டமாக இருந்தாலும் இனக்குழு உரிமைப் போராட்டமாக இருந்தாலும் அவை எல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வடிவங்களே! ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற, காலனி நாடுகள் நடத்திய போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தின் ஒரு வடிவம்.

அதே போன்றதுதான் ஒடுக்கும் தேசிய இனத்திடமிருந்தும் ஒடுக்கும் அரசிடமிருந்தும் விடுதலை பெற ஒடுக்கப்பட்ட இனங்கள் நடத்தும் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் வெவ்வேறு வடிவங்களே!

முதலாளி தொழிலாளிக்கிடையே நடக்கும் போராட்டம்தான் வர்க்கப் போராட்டம் என்று கருதிக் கொண்டால், “ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்ட வரலாறே’’ என்ற மார்க்ஸ்–ஏங்கெல்ஸ் வரிக்கு உயிர் இருக்காது.

கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும், முதலாளிய அரசாக இருந்தாலும் தன்நாட்டில் உள்ள ஒரு பகுதியை இன்றைய யதார்த்தத்தில் பிரித்துக் கொடுக்க மாட்டார்கள் என்கிறார் ரெங்கராஜன். அதென்ன பிரித்துக் கொடுப்பது? தந்தை தன் பிள்ளைகளுக்குச் சொத்துப் பிரித்துக் கொடுப்பது போன்றதா, ஒரு தேசிய இனத்தின் தாயக உரிமை?

இன்றைக்கு உலக சமூகத்தின் அடிப்படைத் தனி அலகு (Unit) தேசம் என்பதுதான். தேசம் என்பதன் சரியான பொருள் ஒரு தேசிய இனத்தின் தாயகம் என்பதாகும். “நாடு’’ என்ற சொல் ஆட்சி எல்லையைக் குறிக்கிறது. தேசம் என்ற சொல் தேசிய இனத் தாயகத்தைக் குறிக்கிறது. உலகம் பெரும்பாலும் தேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்த தேச அரசு உருவாக்கம் (Nation sate formation) இன்னும் முழுமையடையவில்லை. அதன் முழுமையை நோக்கிப் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. புதிய புதிய தேசங்கள் உருவாகிக் கொண்டுள்ளன. ஐ.நா. மன்றத்தில் இப்போது 193 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. வருங்காலத்தில் இன்னும் எத்தனையோ புதிய நாடுகள் அம்மன்றத்தில் உறுப்பு நாடுகளாகச் சேரப்போகின்றன. ஐ.நா. கூட்டத்தில் நாற்காலிக்கும் அதனைப்போடும் இடத்திற்கும் நெருக்கடி வராதா என்று சி.பி.எம். கட்சி கவலைப்பட வேண்டியதில்லை. அதையெல்லாம் ஐ.நா. பொதுச் செயலாளர் பார்த்துக் கொள்வார்!

டி.கே.ரெங்கராஜன் தமது கம்யூனிஸ்ட்க் கட்சிக்காக மட்டும் வாதாடவில்லை, முதலாளியக் கட்சிகளுக்காகவும் வாதாடுகிறார். அதற்காகத்தான், கம்யூனிஸ்ட்டு நாடுகளும், முதலாளிய நாடுகளும் தங்களின் ஆட்சியின் கீழ் உள்ள, பிற தேசிய இனத்தின் தாயக மண்ணைப் பிரித்துத் தர மாட்டா என்று கொண்டாட்ட மன உணர்வுடன் பேசுகிறார்.

கம்யூனிசத்திற்கும் முதலாளியத்திற்கும் நடுவில் நின்று பொது மனிதரைப் போல் டி.கே.ரெங்கராஜன் வாதத்தின் மேல் ஓட்டை உடைத்துப் பார்த்தால் உள்ளே இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் காங்கிரசுக்கும் பிறந்த கலப்பினக் குஞ்சு தலை நீட்டும்.

கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்காள தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில், அன்றையப் பிரதமர் இந்திராகாந்தி, இந்திய இராணுவத்தை அனுப்பி போரிடச் செய்து, வங்காள தேச விடுதலையை ஈட்டித் தந்தார். இந்திய அரசின் அச்செயலை முழுக்க முழுக்க ஆதரித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் இந்திய அரசு ஆதரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனி ஈழத்தை ஆதரித்திருக்குமோ? தமிழர்களைப் பொறுத்தவரை இந்திய அரசு இனப்பகைஅரசு. எனவே, அது ஈழவிடுதலையை ஆதரிக்காது. சாரத்தில் இந்திய ஆளும் வர்க்கத்தில் இந்தியத் தேசியம், இந்தியப் பண்பாடு என்ற பெயரில் அது கூறும் ஆரியப் பார்ப்பனியம் ஆகியவற்றில் காங்கிரசுடன் இரண்டறக் கலந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

எனவே, தமிழர்களுக்கு ஒரு நாடு அமைந்துவிடக் கூடாது என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசுக்கட்சித் தலைமையும் ஒரே நிலைபாட்டை எடுத்துள்ளதில் வியப்பொன்றுமில்லை.

முதலாளிய நாடாக இருந்தாலும், கம்யூனிஸ்ட் நாடாக இருந்தாலும் தனது ஆட்சியில் உள்ள பகுதியைப் பிரித்துத் தரமாட்டார்கள் என்ற இந்தக் கோட்பாட்டை பாகிஸ்த்தான் அரசிடம் ஏன் கடைபிடிக்கவில்லை? இராணுவத்தை அனுப்பிப் போர் நடத்தி வலுக்கட்டாயமாக, பாகிஸ்தானின் ஓர் ஆட்சிப் பகுதியைத் தனிநாடாகப் பிரித்தது ஏன்? வங்காளிகள் தமிழர்களைப் போல் அயலாரும் அல்லர், ஆகாதவரும் அல்லர் என்ற காரணத்தாலா? அல்லது இசுலாமியப் பாகிஸ்தானைப் பிரித்து பலவீனப்படுத்துவது இந்துத்துவாவின் செயல்திட்டம் என்பதா?

தமிழ்த் தேசியத்தை முன் வைக்கும் நாம் வங்காள தேச விடுதலையை முழுக்க முழுக்க ஆதரிக்கிறோம் அதே உணர்வுடன் ஈழ விடுதலையையும் முழுக்க முழுக்க ஆதரிக்கிறோம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - வங்காள தேசத்திற்கு ஓர் அளவு கோலும், தமிழ் ஈழத்திற்கு இன்னோர் அளவுகோலும் வைத்துள்ளது.

கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்காள தேசத்திற்குள் இந்திய இராணுவம் புகுந்து போர் புரிந்ததை சி.பி.எம். கட்சி அன்றும் ஆதரித்தது; இன்றும் ஆதரிக்கிறது. ஆனால், 1987இல் தமிழ் ஈழ வான்பகுதியில் பறந்து இந்திய வான்படை உணவுப் பொட்டலம் போட்ட நடவடிக்கையை அன்றும் கண்டித்தது சி.பி.எம்.கட்சி; இன்றும் கண்டிக்கிறது. இதோ அக்கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் இராமகிருட்டிணன் கூறுகிறார்.

“1987-இல் இலங்கை வான் வெளிக்குள் பறந்து உணவுப் பொட்டலம் போட்டது காங்கிரசு தான். அதைத் தவறென்று கண்டித்த ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கட்சி’’ (செம்மலர் மாத இதழ் 2013 மே இராமகிருட்டி ணன் நேர்காணல்).

தனி ஈழத்தை ஏன் ஆதரிக்கவில்லை என்ற வினாவுக்கு இராமகிருட்டிணன் விடையளிக்கிறார்:

“சின்னச்சின்ன இரண்டு நாடுகளாக (ஏற்கெனவே அது சின்னநாடுதான்) இலங்கை பிரிவது என்பது ஏகாதிபத்தியம் நுழைவதற்கான பாதையை அகலத் திறப்பதாகும். அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்துக்கே ஆபத்து’’

உலக நடப்புகளையும் அன்றாடச் செய்திகளையும் புரிந்து கொள்ளும் மக்களின் அறிவாற்றலை மிகவும் குறைத்து மதிப்பிடுவதால்தான் மார்க்சிஸ்ட் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மிகப்பெரிய நாடான இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியம் நுழையாமல் தடுத்து வருகிறதா? வேளாண்மை, சில்லறை வணிகம், உணவுக்கடை, தொழில் துறை, நிதித்துறை என எத்துறையில் அமெரிக்காவின் தலையீடு இல்லை? இந்தியாவின் பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை யாருக்கு வழங்குவது என்பது அமெரிக்காதான் தீர்மானிக்கிறது என்பதை ஏடுகள் எத்தனை தடவை அம்பலப்படுத்தியுள்ளன! சி.பி.எம். கட்சி தனது அரசுக்களிக்கும் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் பரவாயில்லை என்று உறுதியாக நின்று அமெரிக்காவுடன் அணுஆற்றல் ஒப்பந்தம் போட்டதுதானே காங்கிரசின் ஐக்கிய முன்னணி அரசு!

அடுத்து இப்பொழுதுள்ள இலங்கை அரசு ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசா? அமெரிக்க அரசு விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென்று வரையறுத்துத் தடை செய்துள்ளது. ஐரோப்பாவில் தனது குட்டிப் பையனாக விளங்கும் நார்வேயை நடுநிலைப் பேச்சாளராக அனுப்பி ஈழவிடுதலைப் போராட்டத்தை சீரழித்தது அமெரிக்காதான். விடுதலைப்புலிகளை அழிக்க ஆஸ்லோவில் அமெரிக்காவின் தலைமையில்தான் இலங்கை, இந்தியா, சீனா, ரசியா உள்ளிட்ட 20 நாடுகளின் வல்லுனர்கள் கூடி திசை ஒளித் திட்டம் (Beacon Project) வகுத்தார்கள்.

மேற்கு வங்காளத்தில் சி.பி.எம். கட்சி ஆட்சி நடத்திய போது, அமெரிக்கப் பெருநிறுவனங்களை மேற்கு வங்காளத்தில் தொழில் தொடங்க வருந்தி வருந்தி அழைத்தார்கள் அக்கட்சியின் முதல்வர்களான ஜோதிபாசுவும், புத்ததேவ்பட்டாச்சார்யாவும்!

தனிஈழம் அமைந்தால் ஏகாதிபத்தியம் புகுந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார் இராமகிருஷ்ணன்! “அவன் கிடக்கிறான் குடிகாரன். எனக்குப் போடு இரண்டு மொந்தை’’ என்பது போன்ற நடைமுறையைக் கொண்டது தான் சி.பி.எம். கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு!

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரைகளில் திரும்பத் திரும்ப வல்லரசிய எதிர்ப்பை உறுதிப் படுத்தினார். தமிழ் ஈழத்தை இந்தியா ஆதரித்தால், இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்தி யாவின் புவிசார் அரசியலுக்கு எதிராக வல்லரசிய சக்திகள் வாலாட்டாமல் தடுப்போம் என்று அறிவித்தார். ஆனால் இந்தியா, அமெரிக்காவின் துணையோடு விடுதலைப் புலி களையும், தமிழர்களையும் அழிக் கும் போரை இயக்கியது. விடு தலைப்புலிகளை விட ஏகாதி பத்திய எதிர்ப்புக் கொள்கை இந்தியாவுக்கும் கிடையாது. மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடையாது. 

“தன்னுடைய நோக்கத்திற்காக இலங்கை அரசை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொண்டது, பயன்படுத்திக் கொள்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை எல்.டி.டி.இ. இயக்கத்தையும் அமெரிக்கா தன்னுடைய நோக்கத்திற்கு சில சமயங்களில் பயன்படுத்திக் கொண்டது’’ என்கிறார் டி.கே.ரெங்கராஜன். சான்று காட்டாமல் இப்படிச் சரடுவிடுவது அவதூறல்லவா?

சி.பி.எம். கட்சி, தமிழினத்திற்குத் துரோகம் செய்கிறதோ என்ற ஐயம் அக்கட்சியில் உள்ள பலர்க்கு வலுவாக ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாயடைக்க எப்போதும் போல் இப்போதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல்படி செயல்பட்ட அமைப்பு விடுதலைப்புலிகள் என்று பொய்யுரைக்கிறது அக்கட்சித் தலைமை.

இதேபோல், அசாமில் வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை சி.ஐ.ஏ. தூண்டுதல் என்று கொச்சைப்படுத்தி, அம்மாநிலத்தில் துரோகிப்பட்டத்தை சுமந்து சிறுத்துக்கிடக்கிறது சி.பி.எம். கட்சி. பஞ்சாபியரின் தேசிய எழுச்சியாகக் கிளர்ந்த காலிஸ்தான் போராட்டத்தின் போது பஞ்சாபி இனஉணர்வாளர்களையும், போராளிகளையும் இராணுவத்திற்கும், காவல் துறைக்கும் காட்டிக் கொடுத்தனர் சி.பி.எம். கட்சியினர். காலிஸ்தான் போராட்டமும் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் என்றுதான் அவதூறு பொழிந்தது அக்கட்சி அப்போது. இன்று பஞ்சாபிலே பூதக் கண்ணாடி போட்டுத் தேடும் அளவிற்கு சிறுத்தப் போனது மட்டுமல்ல, பலபிரிவுகளாக உடைந்தும் போனது.

நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தபின் 1970களில் அசாமிலும், பஞ்சாபிலும் சி.பி.எம். கட்சி நல்ல வளர்ச்சி கண்டது. தனித்துப் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெறும் அளவிற்கு வளர்ந்து வந்தது. ஆனால் அம்மாநிலங்களில் மண்ணின் மக்கள் தாயகக் காப்புப் போராட்டங்களை நடத்திய போது, இந்திய அரசின் கையாளாக மாறி, காட்டிக் கொடுத்து தனிமைப்பட்டு சிறுத்துப் போய்விட்டது. அக்காலத்தில் பஞ்சாபைச் சேர்ந்த சுர்ஜித் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவரைப் பஞ்சாபின் வரதராஜப்பெருமாள் என்று வர்ணித்தார் சிம்ரஜ்சித்சிங்மான்.

இன்றைக்குக் காங்கிரசை விடக்கனமாக தமிழினத் துரோகப் பட்டத்தை சுமந்து கொண்டுள்ளது சி.பி.எம். கட்சி.

தமிழகக் காங்கிரசின் செல்வாக்குள்ள தலைவராக விளங்கும் ஜி.கே.வாசன், சிங்கள அரசுக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார். அவர் நடுவண் அரசில் அமைச்சராகவும் உள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்தக் கூடாது, சிங்கள இராணுவத்தினருக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது, சிங்கள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை நடுவண் அமைச்சர் வாசன் பேசுகிறார். நடுவண் அரசிடமும் இவைபற்றிப் பேசுகிறார். அவ்வாறு சி.பி.எம். கட்சியில் பேச சனநாயகம் உண்டா? அல்லது அவ்வாறு பேசும் உணர்வுள்ள ஒரு தலைவர் தமிழக சி.பி.எம். கட்சியில் உண்டா? இல்லை.

ஒவ்வொரு கருத்துக்கும் னால் ஒரு வர்க்கநலன் ஒளிந்திருக்கிறது என்றார் லெனின். ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை இருக்கிறது என்றார் மாவோ. இந்தியாவைப் பொறுத்தவரை, வர்க்கம் மட்டுமல்ல வர்ண சாதியும், ஒவ்வொரு கருத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.

தமிழ்ஈழ விடுதலைக்கெதிராகவும் விடுதலைப்புலிகளுக்கெதிராகவும் அவதூறுகள் பொழியும் மார்க்சிஸ்ட் தலைவர்களின் கருத்துக்குப் பின்னால் பார்ப்பனியமும் இந்தியத் தேசிய வெறியும் ஒளிந்திருக்கின்றன.

சி.பி.எம். கட்சித் தலைவர்களின் தமிழின எதிர்ப்பு அரசியல் ஈழத்தோடு மட்டும் நிற்காது. தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்குப் போராடினால், தமிழகத் தமிழர்களுக்கு எதிராகவும் நஞ்சு கக்குவார்கள். பஞ்சாபிலும், அசாமிலும் மண்ணின் மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் துரோகத்திற்குக் கற்பித்த பாடத்தைத் தமிழ்நாட்டிலும் கற்பிக்க வேண்டும்.

Pin It