வைகோ, தமிழ்த்தேசியத்தை எதிர்த்தும், திராவிடத்தை நிலைநாட்டுவோம் என்றும் பேசியுள்ளார். திராவிடத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் தமிழ்த்தேசியம் என்றும் கூறுகிறார். இது பற்றி உங்கள் கருத்தென்ன?

நாம் திராவிடத்தை விமர்சித்து வருகிறோம். அதுபோல் தமிழ்த்தேசியத்தை விமர்சனம் செய்யத் திராவிட இயலார்க்கு உரிமை உண்டு. இந்த விவாதங்களின் வழி சரியான கருத்துகள் தமிழர்க ளுக்குப் போய்ச் சேரட்டும்.

தமிழ்த்தேசியம் பேசும் தோழர்கள் சிலர் பெரியார், வைகோ போன்ற தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் நாம் விமர்சிப்பதை ஏற்கவில்லை.

திராவிடத்தின் பரிணாம வளர்ச்சிதான் தமிழ்த் தேசியம் என்று வைகோ கூறுவது, பேத்திக்குப் பிறந்தவள்  பாட்டி என்று கூறுவது போல் உள்ளது. சங்க இலக்கியத்தில் தமிழும் தமிழரும் குறிக்கப்பட்டுள்ளனர்; அதில் திராவிடம் இல்லை.

வரலாற்றில், திராவிடம் என்ற பெயரில் மொழியும் இருந்ததில்லை; இனமும் இருந்ததில்லை; தாயகமும் இருந்ததில்லை. ‘திராவிடம்’ என்ற சொற்கோவை, கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்களின் கைச்சரக்கு! ஆரிய நூல்களான மனுஸ்மிருதி, குமரிலபட்டர் உபநிஷதம் போன்றவற்றில் இருந்து கால்டுவெல் கடன் வாங்கிய சொல்தான் “த்ராவிட” என்பது.

இப்போதும் கூட கும்பகோணம் பிராமணர் குடும்பத்தைப் பூர்விகமாகக் கொண்ட கர்நாடக மட்டைப் பந்து வீரர் “ராகுல் த்ராவிட்” ஆரியச் சான்றாகத் தம் பெயரில் திராவிடத்தைத் தாங்கி வலம் வருகிறார்.

இயல்பாகத் தமிழ் மண்ணில் வளர்ந்திருக்க வேண்டிய தமிழ்த் தேசியத்தைத் துளிர்விடத் துளிர்விடக் கருக்கியது திராவிடக் கருத்தியல். திராவிடக் கோடரி கொண்டு தமிழ்த் தேசியத்தை வெட்டிய பிதாமகர் பெரியார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஏசியதுடன், வீட்டில் மனைவியிடமும், வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசிப் பழகுங்கள் என்றார், 1938-இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்றவர், 1939-இல் திராவிடநாடு திராவிடர்க்கே என்றார்.

“தமிழர்” என்பது கலப்பட இனம், “திராவிடர்” என்பது அசல் இனம் என்ற பெரியார், காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று பாராட்டினார். அவர் சொல்வதில் எதை ஏற்றுக் கொள்வது?

அண்ணாவும் அண்ணன் வைகோவும் பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தாலும் தமிழினப் பெருமிதங்களைப் போற்றுவோர்; தமிழின உணர்ச்சியை வளர்த்தோர்.

தி.மு.க.விலிருந்து விலகித் தமிழ்த் தேசியக் கட்சி தொடங்கிய ஈ.வெ.கி.சம்பத், “தி.மு.க.வில் திராவிடம் பேசினாலும், தமிழினப் பெருமைகளைத்தான் பேசி, தமிழ் மக்களிடம் உணர்ச்சி ஊட்டினோம்; சேர, சோழ, பாண்டியர் பெருமைகளைத்தான் பேசினோம். கிருஷ்ண தேவராயர் பெருமைகளைப் பேசவில்லை. நாம் சொன்ன திராவிடத்தை, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ யாரும் ஏற்கவில்லை; தமிழர்கள் மட்டும்தான் ஏற்றார்கள்” என்றார்.

இப்பொழுதும் ஆசிரியர் கி.வீரமணி, அன்புத் தோழர் கொளத்தூர் மணி போன்ற பெரியாரியவாதிகள் தமிழ்த்தேசியத்தை முறியடித்துவிட்டு மறுவேலை பார்ப்போம் என்று கச்சைகட்டிக் களம் இறங்கியுள் ளார்கள்.

இந்த நிலையில், திராவிடத்தின் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சிதான் தமிழ்த்தேசியம் என்று வைகோ அவர்கள் வாதம் செய்வதில் - சத்தில்லை; சாரமில்லை.

நம்மைப் பொறுத்தவரை, தமிழ்த்தேசியமா திராவிடமா என்பதில் தருக்கம் நடக்கட்டும்; தனிநபர் தாக்குதல் இல்லாமல்! தகுதி உடையது தங்கும், வளரும்!

vaiko vaipai 600

“பா.ச.க. மிஸ்டுகால் மெம்பர்” சேர்க்கிறது என்கிறார்கள். அப்படி என்றால் என்ன? அதனால் அக்கட்சிக்கு ஏற்படும் நன்மை என்ன?

கைப்பேசியில் தவறிய அழைப்புக் கொடுத்தால் - அந்த அழைப்பிற்குக் கட்டணம் கிடையாதல்லவா? அப்படித் தவறிய அழைப்புக் கொடுத்தால் பா.ச.க.வினர் உடனே - அவருக்குப் பேசி முகவரி வாங்கி - பா.ச.க.வில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்வார்கள்.

உறுப்பினர் கட்டணம் செலுத்தாமல் உறுப்பினர் விண்ணப்பம் நிரப்பிக் கையப்பமிடாமல் ஒருவர் தவறிய அழைப்புக் கொடுத்தே பா.ச.க.வில் உறுப்பினர் ஆகி விடலாம்.

முதலில் தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க இலக்கு முடிவு செய்தார்கள். இப்போது அறுபது இலட்சம் பேர் சேர்ப்பது என்று அறிவித்து வருகிறார்கள். அறுபது இலட்சம் பேரைச் சேர்த்து விட்டதாக அவர்கள் போலியாகவும் அறிவிக்கலாம். ஏன்னெனில் தவறிய அழைப்புதானே அடிப்படை ஆதாரம்!

இந்தத் தவறிய அழைப்புத் தங்கங்கள் இப்போது கோயில் வாசல்களில் உறுப்பினர் சேர்ப்பு நடத்துவதைப் பார்த்தீர்களா? கோயில் வாசல்களில் காலம் காலமாய்க் கையேந்தும் அந்த ஏழை எளியவர்களுக்கு இடையூறாக இவர்கள் போய் நிற்கிறார்கள்!

தவறிய அழைப்பு, கோயில் வாயில்கள் என்று சேர்க்கப்படும் உறுப்பினர்களுக்குப் பா.ச.க.வில் எந்த இடம் கிடைக்கும்? வர்ணாசிரம தர்மத்தில் அவர்கள் ஒதுக்கியுள்ள நான்காவது, ஐந்தாவது இடம்தான் கிடைக்கும்.

வாஜ்பாயி, மதன் மோகன் மாளவியா ஆகியோர்க்குப் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டுள்ளது பற்றி?

இராசபட்சேக்குப் பாரத ரத்னா தர வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி. அந்த வரிசையில் வாஜ்பாயியைச் சேர்த்திருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஈழத்தமிழினப் படுகொலைக்காக இராசபட்சேவுக்கும் - குசராத் படுகொலைக்காக நரேந்தி மோடிக்கும் பாரத ரத்னா கொடுத்திருந்தால் முரண்பாடில்லாமல் இருந் திருக்கும்.

இந்தியாவிலேயே உட்கட்சித் தேர்தல் நடத்தும் சனநாயகக் கட்சி தி.மு.க. தான் என்று அதன் தலைமை கூறுவது சரிதானே?

அவ்வளவு சிறந்த உட்கட்சி சனநாயகம் உள்ள கட்சி மாவட்டச் செயலாளர்கள் தேர்தலை சென்னை அண்ணா அறிவாலயம், இராயபுரம் அறிவகம் ஆகிய இடங்களில் நடத்தியது ஏன்? குமரி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம் எனப் பல மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தேர்தல் வாக்காளர்கள் சென்னையில் வந்து வாக்களித்துள்ளார்கள்.

அப்படியும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கல்லெறி நடத்திருக்கிறது. சொந்த மாவட்டத்தில் தேர்தல் நடத்தியிருந்தால் வெட்டு குத்து வரை போயிருக்கும் போலிருக்கிறது. ஒரு வாக்காளர்க்கு ஐந்து இலட்ச ரூபாய் கையூட்டு கொடுத்திருக்கிறார்கள். வேட்பாளர்களைக் கடத்திக் கமுக்கமாக வைத் திருந்தார்கள். கடத்தி வைக்கப்பட்டவர்களிடம் கைப் பேசியிருந்தால் மேலிட நிர்பந்தத்தால் அணி மாறி விடுவார்கள் என்று அதையும் பறித்து வைத்துள்ளார்கள். இதைச் சனநாயகம் என்பதா? பதவிநாயகம் என்பதா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொன்ன அண்ணாவுக்குச் செலுத்தப்பட்ட பாத காணிக்கை என்பதா?

தலைவர் குடும்பத்தின் தனிநபர் ஆதாயச் சண்டை கழகத்திலும் தீவிரப்பட்டு சந்தி சிரிக்கிறது. இதுவா சனநாயகம்? 

balasubramanian 350விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன், திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் என அடுத்தடுத்து காலனமானது பற்றி?

இருவரும் அவரவர் துறையில் முத்திரை பதித்த வர்கள் என்ற வகையில் பேரிழப்புதான்!

ஐம்பதாண்டுகளுக்கு முன் வந்த ஆனந்த விகடனைப் படித்தவர்களுக்கு அதை எந்த அளவுக்கு அனைத்துப் பகுதி மக்களுக்கான ஏடாக பாலசுப்பிரமணியன் மாற்றியுள்ளார் என்பது புரியும். ஜூ.வி. பாலசுப்பிர மணியன் அவர்களின் உருவாக்கம். மாணவ செய்தி யாளர் பயிற்சியும் தேர்வும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு. தமிழீழ விடுதலை, தாழ்த்தப்பட்ட மக்கள் - பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமைகள், ஊழல் எதிர்ப்பு, அரசாங்கத்தின் அத்துமீறல்களைக் கண்டிப்பது எனப் பல துறைகளிலும் ஆனந்த விகடனும் ஜூவியும் செயல்படுகின்றன எனில், அதற்கான அடிப்படைக் காரணம் பாலசுப்பிரமணியன் அவர்களின் முற்போக்குச் சிந்தனைப் போக்கே!

இயக்குநர் சிகரம் என்று பாராட்டப் பெற்ற கே.பாலச் சந்தர், கதாநாயக நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் கதையைக் கோலோச்சச் செய்தவர். எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம் என்று கதாநாயகர் பெயரால் படங்கள் அறிமுகமாகி, செல்வாக்குப் பெற்ற காலத்தில் “கே.பாலச்சந்தர்” படம் என்று இயக்குநர் பெயரால் அறிமுகம் பெறும் அளவிற்குச் சாதனை புரிந்தவர்.

பாலச்சந்தருக்கு முன்னோடியாக ஸ்ரீதரைக் குறிப்பிடலாம். ஸ்ரீதரை விஞ்சினார் பாலச்சந்தர்.

இவர்களிடம் குறைகளே இல்லையா என்று கேட்பதைவிடப் பாராட்ட வேண்டிய கூறுகள் அதிகம் என்று பார்த்துப் பாராட்ட வேண்டும்.

சமகாலத்தில் தமிழ் இதழியல் துறையைப் பாலசுப் பிரமணியனும், திரைத்துறையை பாலச்சந்தரும் வளர்த்துள்ளார்கள்.

தமிழ்நாடு உட்பட இந்தியாவெங்கும் இருக்கும் நடுவணரசு வங்கிகளின் ஏ.டி.எம். அலகுகளில் பணம் எடுக்கும்போது வரும் இரசீதுச் சீட்டில் கணக்கு விவரங்கள் இந்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நடுவண் அரசு கூறுகிறதே?

ஆளும் இனத்தின் மொழி குறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆளும் இன அரசு கூறுகிறது. அடிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் இந்தித் திணிக்கப்படுகிறதே சமற்கிருதம் திணிக்கப்படு கிறதே என்று அங்கலாய்த்தால் போதுமா?

எந்த மொழியாய் இருந்தாலும், அது ஓர் இனத்தின் கருவி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்குள் தமிழர்கள் இருக்கும்வரை அடிமை களாகத்தான் வைக்கப்பட்டிருப்பார்கள். அடிமையின் மொழிக்கு, ஆளும் இனமொழி போல அரசுரிமை கிடைக்காது.

அயல் மொழி ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டும் என்றால் அந்த மொழிக்குரிய அயல் இன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தமிழ்நாடு இருக்கும்வரை, ஆரியப் பார்ப்பனர்கள், மார்வாடிகள், இந்திக்காரர்கள் ஆகியோர்க்கும் இந்தி மொழிக்கும், தமிழர்கள் அடிமைகளாக இருந்துதான் ஆக வேண்டும். தமிழர்கள் அடிமைகளாக இருக்கும்வரை தமிழும் அடிமைப்பட்டுதான் இருக்கும். தன்மான உணர்ச்சி, சனநாயக உணர்ச்சி, இரண்டும் இருந்தால், தமிழ்நாடு விடுதலை கோர வேண்டும்.

அயலானுக்கு அடிமையாய் இருந்து கொண்டு, இந்தியைத் திணிக்கிறான்; சமற்கிருதத்தைத் திணிக் கிறான் என்று புலம்புவதில் பொருள் இல்லை.

சரி, ஏ.டி.எம். அலகில் இதுவரை ஆங்கிலத்தில் மட்டும்தானே இரசீது வந்து கொண்டுள்ளது. அது தமிழில் வர வேண்டும் என்றோ அல்லது அதில் தமிழும் இடம்பெற வேண்டும் என்றோ நாம் கேட்கவில்லை. எனவே அவர்கள் இந்தியைக் கொண்டு வருகிறார்கள்.

ஆங்கிலமும் வேண்டாம் இந்தியும் வேண்டாம்; தமிழ்தான் வேண்டும் என்று நாம் முழங்க வேண்டும்.

k.balacheder 350தம்மை மீண்டும் தேர்ந்தெடுத்தால், போர்க் குற்றங்களை விசாரிக்கப் புதிதாக நீதி விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று இராசபட்சே தமது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளாரே, நம்ப லாமா?

ஏற்கெனவே, அவர் அமைத்த கற்றுக் கொண்ட பாடங்களுக்கான விசாரணைக் குழு ((LLRC) அறிக்கை அளித்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. அக்குழு இராசபட்சேவுக்குப் பாதுகாப்பாகத்தான் அறிக்கை அளித்தது. ஆனால், வடக்கு கிழக்கு மாநிலங்களி லிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அது அளித்த பரிந்துரையைக்கூட இராசபட்சே நிறைவேற்றவில்லை.

ஐ.நா. மனித உரிமை அவை அமைத்த பன்னாட்டுப் புலனாய்வுக் குழு, இலங்கையில் விசாரிக்கத் தடை விதித்துவிட்டு, கடந்த சூலை மாதம், மீண்டும் ஒரு உள்நாட்டு விசாரணைக் குழு அமைத்தார். அதுவும் செயல்படவில்லை. இப்பொழுது மூன்றாவதாக ஒரு புதிய குழுவை அமைப்பேன் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழர்களின் வாக்குகளை வாங்க இராசபட்சே செய்யும் தகிடுதத்தம் இது. ஆனால், இந்தத் தடவை தேர்தல் காய்ச்சல் அதிகம் என்று தெரிகிறது. 

Pin It