நான் முதல் முதலாக முருகனை ராணுவப் பயிற்சி முகாமில் தான் சந்தித்தேன். அவனை எப்போது பார்த்தாலும் முழு யூனிஃபார்மில் துப்பாக்கியோடு தான் இருப்பான். அவனை எல்லாரும் புரபசர் என்று தான் கூப்பிடுவார்கள். அது ஏன்? என்று கேட்டால், உங்களுக்குக் கிடைக்கப்போவது ஒரே பதில் தான். ஒரு வாரம் அவன்கூடப் பழகிப் பாருங்கள். பிறகு தெரியும். யாருக்காவது ஏதாவது சந்தேகமிருந்தால், புரபசர் கூட 10 நிமிடம் பேசினால் போதும்.

ஒருதடவை துப்பாக்கி சுடும் மைதானத்தில் எனக்கொரு பாடம் கிடைத்தது. எங்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு புதிய சார்ஜெண்ட் வந்திருந்தார். அனைவரும் அவர் முன்னால் அரைவட்டமாக நின்று கொண்டிருந்தோம். அவர் நல்ல கருப்பு நிறம். பென்சில் வைத்துக் கோடு போட்டமாதிரி மீசை. பாதிவழுக்கை. மீதியும் ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. தொப்பியைக் கழற்றினால் மொட்டை என்று தான் நினைக்க வேண்டும். அவ்வளவு சுத்தம். ட்ரெயினிங் முடிகிற வரையில் அவர் சிரிக்கவே இல்லை. முகத்தை எப்போதும் கடுகடு என்று வைத்திருந்தார். சிரிக்கத் தெரியுமா? என்று தெரியவில்லை.

ஒருதடவை, அவர் என்ஃபீல்டு 303 துப்பாக்கியைப் பற்றி வகுப்பெடுத்தார்.

“மஸில் வெலாசிட்டி. அதாவது, துப்பாக்கி யிலிருந்து குண்டு எவ்வளவு வேகத்தில் வெளி யேறுகிறது.” என்ற அவர் “ஒரு வினாடிக்கு 2,000மீட்டருக்கும் மேலே செல்லும்”என்றார்.

இடையில் ஒரு குரல் குறுக்கிட்டது, “வினாடிக்கு 2,440 மீட்டர் செல்கிறது” அந்தக் குரல் புரபசருடையது.

“கரெக்ட்” என்று கடுப்பாகச் சொன்னார் சார்ஜெண்ட். தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் பாடம் நடத்தி முடித்தவுடன், எங்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார். ஒரு வேளை, புரபசரைப் பழி வாங்க நினைத்தார் போல. தொடர்ந்து அவனிடமே நிறையக் கேள்வி கள் கேட்டார். புரபசரும் சளைக்காமல் டாண் டாண் என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். தொழில் நுட்ப விவரங்கள், விளக்கங்கள், துப்பாக்கியின் பாகங்கள், அவற்றின் பயன்கள், எப்படிப் பாதுகாப்பது, புரபசர் எல்லாக் கேள்வி களுக்கான பதில்களையும் மனப்பாடமாகப் படித்திருந்தான்.

இதற்கு முன்பு வேறு எங்காவது பயிற்சி பெற்றிருக்கிறாயா? என சார்ஜெண்ட் கேட்டார். இல்லை சார்ஜெண்ட். இதையெல்லாம் நானாகப் படித்துத் தெரிந்து கொண்டேன்.

அப்போதுதான் நாங்கள் அவனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். விரைவிலேயே அவனைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்டோம். அவனுடைய நோக்கமும் அதுதான். எங்களிடம் அவனுடைய அறிவாளித்தனத்தைக் காண்பிக்க வேண்டும். அவனுக்கு மூளையிருப்பதாக அடிக்கடி எங்களிடம் சொல்லிக் கொள்வான். எங்களை விடச் சீக்கிரமாக ஆபீசர் ஆகிவிடுவேன் என்று சொல்லு வான். அதன் முதல்படியாக தோள்பட்டையில் ஒரு கோடு பெற்று விடவேண்டும்.

தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடுமையாக உழைத்தான். அதற்காக அவனைப் பாராட்ட வேண்டும். யாரிட மிருந்தாவது பயிற்சிக் கையேடுகளை வாங்கி வருவான். இரவு நெடுநேரம் விழித்திருந்து அதையெல்லாம் படித்து முடித்து விடுவான். பயிற்சியாளர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திணற வைப்பான். ரூட் மார்ச் போகும் போது மிகவும் உற்சாகமாகக் கலந்து கொள்வான். இவனுக்குக் களைப்பே இல்லையே என எங்களுக் கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். 20 கிலோ எடையுள்ள பொருட்களைத் தூக்கிக் கொண்டு 30 கிலோமீட்டர் ரூட் மார்ச் போய் வந்த பிறகு “என்னப்பா ஒரு பாட்டுப் பாடலாமா?” எனக் கேட்டுக் கடுப்படிப்பான். சுப்பீரியர் முன்னால் ஒரு சல்யூட் அடிப்பான். அதைப் பார்க்க வேண்டும். அது எல்லாருக்கும் ஒரு எடுத்துக்காட்டு மாதிரி இருக்கும். சுப்பீரியர் முன்னால் குச்சிக் கையை ஆட்டி ஆட்டி ஒரு உண்மையான ராணுவ வீரன் மாதிரி நடப்பான் பாருங்கள். ஏதோ நம் நாட்டை இவன் ஒருவனே காப்பாற்றி விடுவான் போல.

நாளாக நாளாக எங்களுக்கெல்லாம் ஆழ மான குரலில் எந்தவித ஏற்றஇறக்கமில்லாமல் வாழ்க்கையைப் பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டான். மனித வாழ்க்கையின் இண்டு இடுக் கெல்லாம் நன்கு ஆராய்ந்து சொல்லுவான். அவனைப் பற்றி எங்களுக்கெல்லாம் பெருமை யாக இருந்தது. கொஞ்ச நாள் போன பிறகு அவன் வருவதைப் பார்த்தாலே பயமாக இருந்தது. அவனைப் பற்றிக் கேலியும் கிண்டலுமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு கிண்டல் பண்ணினாலும் அதைப் பற்றிக் கவலைப்படவே மாட்டான். அலட்டிக் கொள்ளா மல் அவனுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனுடைய நோக்க மெல்லாம் யூனிஃபார்ம் தோள்பட்டையில் ஒரு கோடாவது வாங்கி விட வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் எங்களில் யாராவது ஒருவர் தவறு பண்ணும்போது, அனைவர் முன்னிலையிலும் அதைச் சரிபண்ணுவான். புரபசரைவிட அறிவாளியாகக் காட்ட முயற்சி பண்ணும் எல்லாருக்கும் தோல்வி தான் கிடைத்தது. ஒரு நாள் காலையில் எல்லோரும் சேர்ந்து கேம்ப் முழுவதையும் சுத்தம் செய்தோம். கேம்ப்-இன்-சார்ஜ் வந்து பார்த்தார். என்ன சொல்லப் போகிறாரோ.....ஏதாவது குறை சொல்லாமல் விடமாட்டார் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு அமைதியாக இருந்தோம். அனைத்தையும் நன்றாகச் சுற்றிப் பார்த்த கேம்ப்-இன்-சார்ஜ் “வெரி குட். குட் ஒர்க்” எனப் பாராட்டினார். புரபசர் ஒரு அடி முன்னால் வந்து அட்டென்ஷன் பொசிஷனில் ஒரு சல்யூட் அடித்து “தேங்க் யூ சார்” என்று சொன்னானே பார்க்க வேண்டும். என்னவோ அவன் ஒருவனே அத்தனை வேலையையும் பார்த்ததுபோல.

எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களை மட்டம் தட்ட வேண்டும். “ஏய், துப்பாக்கியை அப்படிப் பிடிக்கக் கூடாது. இங்கே கொண்டு வா .... இதோ இப்படிப் பிடிக்க வேண்டும்” “ஏன் ஷூவிற்குச் சரியாகப் பாலீஷ் போடவில்லை” என ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பான்.

வானத்தில் பறக்கும் விமானங்களைப் பார்த்து அது என்ன வகை? எந்த நாட்டுத் தயாரிப்பு? என்று சரியாகக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். பெருமை. ஒரு நாள் மதியம் கேன்டீனுக்குச் சென்று கொண்டிருந்தோம். விமானம் பறந்து செல்லும் சப்தம் கேட்டது. வானத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. சூரியனின் பிரகாசம் கண்ணைக் கூசச் செய்தது. புரபசர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்,”அது ஒரு நார்த் அமெரிக்கன் ஹார்வர்டு ட்ரெயினிங் ஜெட். ஒவ்வொரு விமானத்தையும் அதன் சத்தத்தைக் கொண்டே கண்டுபிடித்து விடலாம். அதற்கு முறையான பயிற்சியெடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.”

எங்களை மாதிரி முட்டாள்களெல்லாம் இந்த அறிவாளிகூட இருந்து என்ன உபயோகம்?

இரண்டு நாள் முன்பாகத்தான் கேப்டன் பகதூர் எங்களுக்கெல்லாம் கிளாஸ் எடுக்க வந்தார். கேப்டன் பகதூரை மாதிரி ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. முப்பது வயது தானிருக்கும். நல்ல பலசாலி. அவருடைய நெஞ்சில் ஆணி வைத்து அடித்தால் கூட அவருக்கே தெரியாது. அவ்வளவு பலசாலி. அதைவிட முக்கியம், ரொம்பவும் திறமைசாலி. எங்களுடைய பேட்ச்சில் அவர்தான் ஹீரோ. எல்லோருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். ஆனால் சரியான கோபக்காரர். எதையும் மறக்கவே மாட்டார்.

“இதைப் பாருங்கள். இது ஒரு கை எறி குண்டு. இந்தக் குண்டுடைய மேல்புறத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.” எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“மொத்தம் 44 பிரிவுகள்”

“எத்தனை?” கேப்டன் பகதூரின் வார்த்தை களில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவர் கண்களில் கோபம் தெரிந்தது.

“மொத்தம் 44 பிரிவுகள்” புரபசருக்குப் பெருமை தாங்கவில்லை. ஆனால் கேப்டனின் புருவங்கள் நெறிந்தன. ஏதோ சொல்ல வந்தார். அதற்குள்....

“அப்புறம் கேப்டன்” எங்களுக்கெல்லாம் இடி விழுந்தது போலிருந்தது. மறுபடியும் புரபசர் தான் பேசிக் கொண்டிருக்கிறான். கையெறிகுண்டு கள் எத்தனை விதம்? என்று நீங்கள் சொல்ல வில்லையே. இதற்கு முன்னால் வந்த இன்ஸ்ட்ரக்டர் அப்படித் தான் ஆரம்பிப்பார். தெரியுமா?

கேப்டன் பகதூர் ஒரு நேபாளி. மஞ்சள் கிழங்கு மாதிரி இருந்த அவர் முகம் ரத்தச் சிவப்பாக மாறி விட்டது.

“முன்னால் வா” என்று புரபசரைக் கூப்பிட்டார். “நீயே கையெறிகுண்டைப் பற்றிக் கிளாஸ் எடு” என்றவர் கையெறிகுண்டை புரபசரிடம் தூக்கியெறிந்து விட்டு எங்களோடு உட்கார்ந்து கொண்டார். கொஞ்சம் கூட வெட்கப்படாமல் பயப்படாமல் முன்னால் வந்து கிளாஸ் எடுக்க ஆரம்பித்தான். கிளாஸ் முடிகிறவரையிலும் கேப்டன் எதுவுமே பேசவில்லை. புரபசர் பாடம் நடத்தவே பிறந்தவன் போல அருமையாகப் பாடம் நடத்தினான்.

ஆனால், வகுப்பறையில் ஒரே அமைதி. பயங்கரமான அமைதி. கிட்டத்தட்ட சுடுகாட்டில் இருப்பது மாதிரி இருந்தது. கேப்டன் கூர்மை யாகக் கவனித்துக் கொண்டிருந்தார். பாடம் நடத்தி முடித்தவுடன், “முருகா உன் இடத்தில் போய் உட்கார்” என்றார். எங்களையெல்லாம் மட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனிடத்தில் உட்கார்ந்து கொண்டான். கேப்டன் வேறெதுவும் பேசவில்லை. அவர், “வகுப்பு முடிந்தது. போக லாம்”என எப்போது சொல்லுவார் என்று காத்திருந்தோம்.

“உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்” என வேண்டுமென்றே பேச்சை வளர்த்த அவர், இன்று காலையில் கேம்ப் ஆபீசரைப் பார்த்தேன். சமையல்கட்டு சூபர்வைசர் வேலைக்குப் பொருத்த மாக ஒரு ஆள் வேண்டும் என்று கேட்டிருந்தார். உங்களில் யாராவது ஒருத்தரை அந்த வேலைக்கு சிபாரிசு செய்யச் சொன்னார்.” புரபசர் அப்பாவி யாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

“இந்த வேலை நிரந்தரமானது. எனக்குத் தெரிந்த வரைஇந்த வேலைக்கு முருகன் தான் ரொம்பப் பொருத்தமானவர்”

உண்மையிலேயே இதுதான் ரொம்பப் பெரிய ஜோக். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். எங்களுடைய பேட்ச்சில் நிறைய பேர் ஆபீசராகி விட்டோம். இன்றைய தேதிக்கு ஆறு வருடங்கள் ஓடி விட்டது.

இன்னும் எனக்கு ரொம்ப நன்றாக நினை விருக்கிறது. இப்போது புதிதாக வந்திருக்கும் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகத் தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆமாம். அதே கேம்ப் தான்.

சமையலறையில் முருகன் என்ன செய்து கொண்டிருப்பான்? என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அவனைப் பார்ப்பதற்காக நானும் என்னுடைய நண்பர் கேம்ப் ஆபீசர் ராஜேஷூம் சமையலறைக்கு அருகில் சென்றோம்.

சமையலறையின் அனைத்து கதவுகளும் திறந்திருந்தன. மிகவும் நெருங்கிச் செல்லாமல் கொஞ்சம் விலகி நின்று பார்த்தோம்.

சமையலறை உதவியாளர்கள் மூன்று பேர் அறுக்கப்போகிற ஆடுகளைப் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முன்பு முருகன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தான். பழைய அதே ஆழமான குரலில் ஏற்ற இறக்கமில்லாமல் உருளைக் கிழங்கை எப்படி வெட்டுவது? என்று சொல்லிக் கொண்டிருந்தான்:

“முதலில் உருளைக் கிழங்குகளை நீரில் போட்டு, அதில் ஒட்டியிருக்கும் மண்ணெல்லாம் போகிற வரையிலும் நன்றாகக் கழுவி...”

Pin It