புதூருக்கு மாறுதல் கிடைத்தது. “தண்ணியில்லாக் காடு” என்று பக்கத்திலுள்ளவர்கள் சொன்னார்கள் “நல்ல ஓட்டல்கள் கூட அங்கு கிடையாதே” என்றார் பக்கத்துவீட்டுக்காரர்.

குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை. “தண்ணியும், பழையதுமா..... சாப்பிட முடியாதே” என்று அம்மா அங்கலாய்த்தாள். என்ன செய்ய? அங்குதான் இடம் காலி இருக்கிறதாம். நேரடியாக அப்பொழுது பஸ்வசதி இல்லை. முதலாவது பஸ்ஸில் கருங்குளம் போய், அங்கிருந்து இரண்டாவது பஸ்ஸில் ஜங்ஷன் போய், பிறகு மூன்றாவது பஸ் ஏறி கோவில்பட்டி போய், நாலாவது பஸ்ஸில் புதூர் போய்ச் சேர வேண்டும். மதுரைக்குப் போக வேண்டுமானாலும் மூன்று மணி நேரத்தில் சேர்ந்து விடலாம். இந்த ஊருக்கு சமயத்தில் ஒருநாள் முழுதும் பிரயாணம்தான்! ஆரம்பத்தில் போக வர கஷ்டமாத்தான் இருந்தது; அப்புறம் பழகிப்போய்விட்டது.

அங்கு தங்குவதற்கு அறையோ, வீடோ கிடைக்கவில்லை. பெரும்பாடு ஆகிவிட்டது - ஒரு மட்டும், அரண்மனையாம்! பாழடைந்த தோட்டத்துக்குள், அந்தக் காலத்துப் பெரிய காரை வீடு. பாம்புகள் அங்கு எக்கச்சக்கமாக வசிக்கின்றன. அதற்கு அருகில் ஒரு பெரிய வசதியான, மாடியுள்ள, பல ஜன்னல்கள் உள்ள ஒரு வீடு கிடைத்தது. குறைந்த வாடகை; அதுவும் யாரும் வந்து கேட்கமாட்டார்கள்.

துணையாக, அலைந்த நண்பரிடம் “என்னையா? முதல்லேயே சொன்னா என்ன? எவ்வளவு அருமையான வீடு! ஏன் இங்கு ஒருவரும் குடி இருக்கல்ல?” என்று சந்தேகப்பட்டுக் கேட்டேன்.

“ஸார் இந்த வீட்டில முன்ன ஒரு பொம்பிள தூக்குப் போட்டு செத்துட்டா... யாரும் வரல.... அதுக்கோசரம்... நான் உங்களுக்கும் வேண்டாம்னு... சொல்லலை” என்றார்.

“அட மனுசா... நம்மகிட்ட ஒண்ணும் அண்டாது” என்று சொல்லி, அவ்வீட்டை அமர்த்திவிட்டோம்.

அடுத்து சாப்பாட்டுப் பிரச்சனை. இரண்டு மாதத்துக்கு குடும்பத்தை அழைத்துவர வசதிப் படவில்லை. அங்கு ஓட்டல்களே இல்லை. ஒரு பிள்ளைவாள் வீட்டில் மாதச் சம்பளம் வாங்கு பவர்களைப் பார்த்து, அவர்களுக்கு மட்டும் சாப்பாடு போடுவார்கள். வீடுதான் ஓட்டல்.

நண்பரிடம் “அவர் சைவப் பிள்ளையா?” என்றேன்.

“ஆமா....... பருத்திக்காட்டு சைவப் பிள்ளைதான். சாப்பாடு சூப்பரா இருக்கும். சாப்பிட்டுத்தான் பாருங்களேன்” என்றார்.

அவர் தொழில் ரீதியாக ஓட்டல் நடத்தவில்லை. அவர் பையன் யூனியன் ஆபிசில் வேலை பார்த்தார். அப்பொழுது அவருடன் வேலை பார்த்த ஒரு சகா, இப்படித்தான் சாப்பாட்டுக்குத் திண்டாடினார். அவருக்கு இரக்கப்பட்டு, அந்தப் பையன் தன் வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்து, அவரை வீட்டு உறுப்பினர் போல ஏற்றுக் கொண்டு, சாப்பாடு போட்டார்கள். இவ்வாறு ஒருவர் இருவராகி, மூவராகி பலராகிவிட்டார்கள்.

நண்பர் என்னை அங்கு அறிமுகப்படுத்தி னார். சங்கத்தில் உறுப்பினர் ஆகுதல் போல, நானும் ஓட்டலில் உறுப்பினர் ஆனேன்.

சாப்பாட்டைப் பற்றி விசாரித்தேன். “மதியச் சாப்பாடு அளவு இல்லை. ஒரு கூட்டு, பொறியல், சாம்பார், ரசம், மோர், அப்பளம்... காலையில இட்லி, காபி... ராத்திரிக்கு தோசை அல்லது உப்புமா உண்டு” என்றார்.

எனக்கு ரொம்பவும் பிடிச்சுப்போச்சு. பிறகு என்னுடன் வேலைபார்த்தவர்கள் ஏழு எட்டுப்பேர் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

அது ஒரு ஓட்டல் மாதிரி இல்லை. வீட்டுச் சூழ்நிலை நிலவியது. எப்பொழுதும் சிரிப்பும் கிண்டலும்தான். வாய்க்கு ருசியாகவும், மனசுக்கு ரம்மியமாகவும் அமைந்தது. நட்புச் சூழலும், புரிந்து கொள்ளுதலும் விரிவடைந்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருந்தது.

ஒரு ஆகஸ்டு மாதம், ஓட்டல்காரர் மகளுக்குக் கல்யாணம் - எங்கள் எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். உள்ளன்போடு, எங்களை வரவேண்டுமென்று மிகவும் விரும்பினார்.

மேலும் ஒரு தகவலையும் சொன்னார். “வெள்ளிக்கிழமை கல்யாணம். சனிக்கிழமை முதல் செவ்வாய் வரை ஓட்டல் கிடையாது. விடுமுறை” என்றார்.

ரத்தினம் சார் என்னிடம், “கல்யாணத்துக்கு நீங்க போகப் போறீளா?” என்றார்.

“ஆமாம். என்ன செய்ய? பழகியாச்சு” என்றேன்.

“மொய் எவ்வளவு கொடுப்பீங்க?” என்றார்.

சொன்னேன். “அதைவிடக் குறைஞ்சா, நல்லா இருக்குமா?” என்றேன்.

“மத்தவக, என்ன செய்யப்போறாகளே?” என்றார்.

“என்னத்தையும் குடுத்துட்டுப் போறாங்கோ. நமக்கு இவ்வளவுதான் ஏலும்” என்றேன்.

கல்யாணத்துக்கு நாங்கள் மூன்றுபேர் மட்டுமே ஆஜர். அன்பளிப்பு ரூபாயை வைத்து, “மணமக்கள் பல்லாண்டு வாழ்ந்து, எல்லாச் செல்வங்களையும் பெறுக” என்று எழுதி, மணப்பெண்ணிடம் கொடுத்தோம்.

மற்றவர்கள் வரவில்லை. வேறு எங்கோ போய்ச் சாப்பிட்டு முறையைக் கழித்தார்கள். ரத்தினம் சார் லீவுபோட்டுவிட்டு ஊருக்கே போய்விட்டார். ராதாகிருஷ்ணன், “நாலு நாள் கழித்துத்தான் வருவேன்” என்று மதுரைக்குப் போய்விட்டார். சுப்பையா, “ஊரில் வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, திருநெல்வேலிக்குப் போய்விட்டார். இப்படி, பெரும்பான்மை வாடிக்கையாளர்கள், லீவு போட்டுவிட்டு எங்கெங்கெல்லாமோ போய் விட்டார்கள்.

நானும், ஊருக்குப் போனோமில்லையே என்று சபலம்தட்டி கல்யாணத்தன்று மாலையில் ஊருக்குக் கிளம்பத் தயாரானேன்.

ஆனால், கல்யாணவீட்டுக்காரரிடம் “வருகிறேன்” என்று சொல்லும் பொழுது, “ஸார், ராத்திரிக்கும் சாப்பிட வாங்க....... விருந்தாள்கள் இன்னும் ரண்டு மூணு நாளைக்கு இருப்பாங்க... நீங்களும் விருந்தாளுதான்... பொண்ணு- மாப்பிள்ளை மறுவீடுபோக இன்னும் நாளாகும். அதுவரையில நீங்க எங்க வீட்லதான் சாப்பிடணும்” என்று சொல்லி இரு கைகளையும் பிடித்துக் கொண்டு அட்டகாசமாகச் சிரித்தார்.

எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. திகைப்பாகவும் இருந்தது.

அவர் மேலும் சொன்னார் “நீங்க மூணு பேரும், எங்கச் சொந்தக்காரர்களைவிட, கூடுதலான உரித்தான ஆட்கள். எங்கயும் போயிறக் கூடாது; ஓட்டல் ஆரம்பிக்கிற வரைக்கும். இங்க தான் சாப்பிடணும்” என்று உத்தரவு போட்ட மாதிரி சொன்னார். அவர் ஒப்புக்குச் சொல்லவில்லை. உபசாரமாகச் சொல்லவில்லை. உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

மேலும் தொடர்ந்தார்: “ஆனா, ஒண்ணு.... நாங்க எல்லாரும் சாப்பிடுத சாப்பாடு - சில நாள்ல டிபன் டிபன் இருக்காது. பழைய சோறு, பழைய வத்தக்குழம்பு... பழைய சுண்டவச்சத் தொடுகறி கள், சுடவச்சுப் பக்குவமா இருக்கும்...” என்று விளக்கமளித்தார்.

கேட்கவா வேண்டும் சந்தோஷத்துக்கு. எனக்கு இரட்டிப்பான மகிழ்ச்சி.

வெந்நீர் பழையது - பழைய சுண்டவச்ச கறி, குழம்புக்கு நான் அலைந்துகிடக்கிறேன் என்பது அவருக்குத் தெரியுமா?

சென்னையில் என் தங்கை வீட்டில் வசித்த பொழுது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரியா மல் ரகசியமாக பழைய சோறு, சுண்டவச்ச கறி சாப்பிட்டது எங்களுக்கல்லவா தெரியும்!

கரிநாள், திங்கள் பயணம் திரும்பாப் பயணம், செவ்வாயோ வெறும்வாயோ, சூலம் என்று எட்டு நாட்களாக புதுமணத் தம்பதிகள் மறுவீடும் போகவில்லை! ஓட்டலும் நடக்கவில்லை!

ஆனால் எங்களுக்கு அடிச்சது யோகம்! ஓசிச் சாப்பாடு - எனக்கு ருசியான சாப்பாடு!

Pin It