தமிழக உள்ளாட்சித் தேர்தல் பொதுவாக அமைதியாக நடைபெற்று முடிந்தது மகிழ்ச்சியானது.

திமுக ஆட்சிக்காலத்தில் தாங்கள்பட்ட கசப்பான அனுபவங்களையும், அக்கட்சியின் தலைவர்கள் செய்த மெகா ஊழல்களையும், நில அபகரிப்புகளையும், மோசடிகளையும், வெறுக்கத்தக்க அநாகரிக அடாவடி தர்பார்களையும் அவ்வளவு எளிதில் மக்கள் மறந்துவிடவில்லை என்பது அதிமுகவின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தது.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து ஐந்தே மாதங்களுக்குள் - குறுகிய காலத்தில் - உள்ளாட்சித் தேர்தலும் வந்ததால் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற அதிமுக அதிகார பலத்துடனும் பணபலத்துடனும் இத்தேர்தலைச் சந்தித்தது.

அண்மையில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி அடுத்துவந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெறுவது சாதாரணமாக இயல்புதான்.

சட்டசபைத் தேர்தலில் பெற்ற பெரும் வெற்றிப் பெருமிதத்திற்கு இழுக்குவந்துவிடக்கூடாதென்று அதிமுகவும் திமுகவைப் போலவே வாக்குகளைக் கவர ஏராளமாய்ப் பணமும் பலவகைப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வாரி வழங்கியது. இது சட்டமன்றத் தேர்தலில் போலவே பெரும் வெற்றி பெற அக்கட்சிக்கு உதவியது.

மேலும், ஆளுகின்ற கட்சியே உள்ளாட்சி மன்றங்களின் பொறுப்புகளுக்கு வந்தால்தான் உள்ளாட்சி மன்றங்களின் மூலமான நலத்திட்டங்களுக்கு மாநில அரசின் நிதி உதவி கிடைக்கும் என்ற தந்திரமான பிரச்சாரமும் சேர்ந்து அதிமுகவின் பெரும் வெற்றிக்கு உதவியிருக்கிறது என்பதும் உண்மை.

இத்தகைய சூழலிலும் மார்க்சிஸ்ட், தேமுதிக, சிபிஐ ஆகிய கட்சிகள் கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்றாடம் மக்களிடம் நேரடித் தொடர்புகொண்டிருப்பவை உள்ளாட்சிமன்றங்கள்தான். சுகாதாரம், குடிநீர், சுற்றுச்சூழல், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றத்தருவது. அவற்றின் பணியும் கடமையுமாகும். ஊழலற்ற, நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட சேவையையும், நிர்வாகத்தையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் ஆட்சிபுரிந்த இடதுசாரி அரசுகளைப் போல் அதிமுக அரசும் உள்ளாட்சிகளுக்குக் கூடுதல் அதிகாரமும், மாநில அரசின் வருவாயில் 50 சதவிகித நிதி உதவியும் வழங்கவேண்டும். உள்ளாட்சி மன்றங்களின் மக்கள் நலத்திட்டங்களுக்கும் சிறப்பான செயல்பாட்டுக்கும் இது அவசியம். இடதுசாரி அரசுகள் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு செய்தன என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கவேண்டும்.

தனக்கான நிதி உதவியை மத்திய அரசிடம் வலியுறுத்தும் மாநில அரசு, தன் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் நலப் பணிகளுக்குப் போதிய நிதி உதவி வழங்கவேண்டும்.

அமோக வெற்றி பெற்ற ஆளும் கட்சியினர் மக்கள் சேவையை மறந்து சுயநலத்திற்கும், பணம் குவிக்கும் ஊழலுக்கும், அடாவடி தர்பாருக்கும் இந்த வெற்றியைப் பயன்படுத்துகிறார்களா என்பதை அறிந்திட மக்களுக்குத் தேவை விழிப்புணர்வு!

Pin It