தான் பிறந்த மண்ணின்- சொந்த கிராமத்தின் அருமை பெருமைகளையும், நல்லது கெட்டதுகளையும், அந்த மண்ணின் மக்களையும், வாழ்க்கையையும், வறட்சியையும், சந்தோஷங்களையும் சோகங்களையும் கிராமத்தின் அக-புறச் சூழலையும் மண்வாசமும் பாசமும் பொங்கிட வர்ணனை செய்து கவிதைகளாக வார்த்திருக்கிறார் பெரியவர் எம். எஸ். சண்முகம்.

"உரைநடைக் கவிதைகள்" என்று நூலில் குறிப்பிட்டிருந்தாலும், அவை சுத்த வசன கவிதைகள் அல்ல; மரபு சார்ந்த கிராமியப் பாடலுக்கே உரிய சந்தம் விலகாத கவிதைகள். நாம் மனதுள் வாசித்தாலும், மற்றவர்க்கு நாம் வாசித்துச் சொன்னாலும் இரு நிலையிலும் ஓசை இன்பம் தரும் கவிதைகள். கவிஞரின் சொந்த கிராமம் நெ. மேட்டுப்பட்டி என்பது நென்மேனியின் அருகமைந்த கிராமம். சாத்தூர் வட்டம்.

 "குப்பை போட்ட இடமெல்லாம் கோபுரம் போல் கட்டிடங்கள்!" தோன்ற, தான் பிறந்த கிராமம் இன்று நவீன காலத்தின் வளர்ச்சியில் எவ்வாறு உருமாறித் தெரிகிறத என்பதை "ஊருக்குள் நுழைந்தவுடன் உளம் மறுகி நின்று விட்டேன்" என்று வியந்து கூறுகிறார்.

"கல்லுரலில் நெல்லுபோட்டு

கைவலிக்க உலக்கை குத்தி

மல்லுக்கட்டி அரிசி கண்டார்

இன்று மகராசன் புண்ணியத்தில்

நெல் லரைக்கும் ரைஸ் மில்லு

ரெண்டு மூணு வந்திருச்சு!

கம்பு சோளம் கேப்பை

அல்லல் அரைச்ச காலம்

அடியோடு மாறிப்போச்சு!

போட்டவுடன் மாவு வந்து

பொது பொதுனு விழுகின்ற

வாட்டமுள்ள மாவு மில்லு

வந்திருச்சு ஊருக்குள்ளே!"

-இவ்வாறு மாற்றத்தின் அடையாளங்களை, அடுக்கி அடுக்கிக் காட்சிப்படுத்திச் செல்கிறார்.

"வெடிஆபீஸ்

தீப்பெட்டி ஆபீஸ் என்று

விடியவும் வேன் வந்து

வேலைக்கு ஏற்றிச் செல்லும்

வேண்டிய ஆட்களை!

தூங்கி வழியும் முகத்தோடு

தூக்குவாளி கைப்பிடித்து

துளிர்களும் செல்வார்கள்

சிவசாசி-சாத்தூர் என்று

கரண்டி பிடித்த ஆண்கள்

கட்டிடக் கலைஞராகி

கார் ஏறிச் செல்வார்கள். (இங்கே 'கார்' என்பது பஸ்)

தினம் உழைப்புக் களம் நோக்கி, 'தூக்குவாளி கைப்பிடித்து துளிர்களும்' -அதாவது சின்னஞ் சிறார்களும் செல்லுவதை கவிஞர் சண்முகம் கூறுவதைப் படிக்கையில் வானம் பார்த்த பூமியின் வறண்ட வாழ்க்கை மனதில் விரிகிறது. -தூங்கி வழியும் முகத்தோடு தூக்குவாளி கைப்பிடித்து -என்கிறபோது அங்கே குழந்தை உழைப்பின் சோகம் காட்சியாகிறது.

குப்பை போட்ட இடமெல்லாம் இன்று கோபுரம் போல் கட்டிடங்கள் எழுந்துள்ள தன் கிராமத்தில், பொழுது விடியும் முன்னே பட்டாசு ஆபீசுக்கும் தீப்பெட்டி ஆபீசுக்கும் ஏழைச் சிறார்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய முரணை- வாழ்க்கை நிர்ப்பந்தத்தை சோகச் சித்திரமாய்ச் சொல்கிறார். தான் பார்த்த, பழகிய மனிதர்களை கவிதைக்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.

நூலின் மூன்றாம் பாகத்தில்-

"அடங்காத சினத்துடனே

ஆர்ப்பரிக்கும் அலைகடலில்

முத்தெடுக்க

அடக்கியது

எவரின் மூச்சு?"

-என்று துவங்கிற, தொழிலாளரை உயர்த்தும் "மேதினம்" கவிதை உத்வேக நடையில் அமைந்துள்ளது.

இரண்டாம், மூன்றாம் பாகங்கள் பல விஷயங்கள் குறித்து பல தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக உள்ளன. சமூக நிகழ்வுகள், அனுபவங்கள் குறித்த தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் கவிதைகளாக வார்த்துத் தொகுத்துள்ளார். என்றாலும், தமது மண்ணின் கதைகளைச் சித்தரிக்கும் முதல் பாகத்தையே நூலின் முழு பாகமாக இன்னும் விரித்து எழுதியிருக்கலாமே என்ற தோன்றுகிறது. தோழர் ச. தமிழ்ச்செல்வனின் தந்தையாகிய பெரியவர் எம். எஸ். சண்முகத்தின் "மண்ணின் கதைகள்" படைப்பு பெரிதும் பாராட்டுக்குரியது.

வெளியீடு: முத்துச்சிப்பி பதிப்பகம், 6/1700, இந்திரா நகர், (ரயில்வே லைன் அருகில்) கோவில்பட்டி - 628502

தொலைபேசி: 04632-224013

விலை ரூ. 80-

Pin It