முடிவடைந்த போட்டிகளும் முடிவடையாத ஊழல்களும்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டில்லியில் நடந்து முடிந்துவிட்டன. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தைப் பதக்கப்பட்டியலிலும் பெற்று விட்டது. இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் ஏழை நடுத்தரக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பதக்கம் பெற்ற ஒரு விளையாட்டு வீரர் இந்தப் பதக்கத்தை வைப்பதற்கு எனக்கு வீடு கூட இல்லை என்று பேட்டியளித்துள்ளார். இந்திய அரசு நமது வீரர்களை வறுமையில் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பதை அவரது பேட்டி தெரிவிக்கிறது.

இந்திய வீரர்களுக்குப் பயிற்சியளிக்க நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசு காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க 72 லட்சம் டாலர்களை லஞ்சமாக அளித்தது. ஆரம்பத்தில் 12 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறப்பட்டது. பின்பு அது 30 ஆயிரம் கோடியானது. இறுதியில் 70 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இப்போது போட்டி முடிந்த பின்பு மொத்தச் செலவு 77 ஆயிரம் கோடிகள் அறிவிக்கப்பட்டுடள்ளது. நாலு கோடி கூடப் பெறாத ஒரு பலூன்விலை நாற்பது கோடி என்று கணக்கு எழுதப்பட்டுள்ளது. இதற்குத்தலைமை தாங்கியது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்கல்மாடி. உடன் பங்காளியாக டில்லி முதல்வர் ஷீலாதீட்சீத்.

இவர்களுக்குப் பின்னால் இருப்பது போபர்ஸ் ஊழல் குடும்பம். விளையாட்டுப் போட்டியின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் கூடத் தரப்படவில்லை. இரண்டு லட்சம் பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பெண்கள் கடத்தப்பட்டு விருந்தாளிகளுக்கு விருந்தாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் துரத்தியடிக்கப்பட்டனர். சேரி மக்களைத் தூக்கி எறிந்து விட்டு, சேரிகள் இருந்த இடத்தில் புதிய சாலைகளும் ஸ்டேடியங்களும் கட்டப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட 744 கோடி ரூபாயை டில்லி அரசு விளையாட்டு கிராமங்களின் குடிநீர் வசதிக்காகவும், பிரிட்டிஷ் ராணியின் ஊர்வலச் செலவுக்கும் எடுத்துக் கொண்டது. இது மாபெரும் குற்றச்செயலாகும்.

இவை அனைத்தும் சோனியா காந்தியின் வழிகாட்டல் படி செயல்படும் நேர்மைப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தெரியும். பல்லாயிரம் கோடிகள் ஏப்பமிடப்பட்ட விபரங்களும் தெரியும். இந்தியாவில் லஞ்ச ஊழலைத் துவக்கி வைத்தது. காங்கிரஸ் கட்சிதான். அதை வளர்த்து இன்று உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றதும் காங்கிரஸ் கட்சிதான். தற்போது நடைபெறும் மாபெரும் ஊழல்களில் காங்கிரசுக்கும் பெரும் பங்கு போகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.70 லட்சம் கோடிகளைச் சுருட்டியவர்களுக்கு இந்தக் காமன்வெல்த் ஊழல் 77 ஆயிரம் கோடி என்ன பெரிய விசயமா? மக்கள் விழித்தெழவேண்டிய நேரமிது.

தமிழகத்தில் அராஜக ஆட்சி

தமிழகத்தில் மக்களாட்சிக்குப்பதில் கலைஞரின் மக்கள் ஆட்சி, ஒரு குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்பது தமிழ் மக்களிடம் அம்பலமாகிறது வருகிறது. தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அவர்களது கல்லாப்பெட்டிகளில் நிரம்பி வழிகின்றன. ஆறுகள், மலைகள், வனங்கள், பூமிப்பாளங்கள் கொள்ளை யடிக்கப்படுகின்றன. புறம்போக்கு நிலங்கள், ஏரிகள், குளங்களை அமைச்சர்களும் ஆளும் கட்சியினரும் கைப்பற்றி வரும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆளுங்கட்சியினரின் வழக்கமான ரவுடிச்செயல்கள் பரவலாக அரங்கேறி வருகின்றன. ஆட்சி முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால் அனைத்தும் அசுர வேகத்தில் நடைபெறுகின்றன.

ஏற்கனவே விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பஸ், மின் கட்டண உயர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கொலைகள், கூலிப்படைகள், வீடு புகுந்து கொலை, கொள்ளைகள் வழிப்பறிகள் அனு தினமும் அதிகரித்து வருகின்றன. சமூக விரோதிகளைப்பிடித்துச் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு கலைஞரின் குடும்ப பணிகளே சரியாக இருக்கிறது. கலைஞர் குடும்ப வாரிசுகள் எடுக்கும் சினிமாப் படங்களின் திருட்டு விசிடிகளைப் பிடித்தல், தியேட்டர் வசூல்களுக்குக் காவல் இருத்தல் போன்ற பணிகளே காவல்துறையின் பிரதான பணிகளாகிவிட்டன. அதிலும். எந்திரன் வந்ததிலிருந்து காவல்துறை மும்முரமாகிவிட்டது. கொலை, கொள்ளைகளைப் பிடிக்க வந்த போலீசுக்கு இப்போது பணி மாறிவிட்டது.பதவி இறங்குவதற்கு முன்பு தொழிலாளர்கள் மீதும் தொழிற்சங்கத்தலைவர்கள் மீதும் கடுமையான அடக்குமுறையும் ஏவுதல் திமுக அரசுக்கு வாடிக்கையாகும். கடந்த காலங்களில் உள்நாட்டுப் பெருமுதலாளிகளைப் பாதுகாத்து நின்றவர்கள் இப்போது வெளிநாட்டு முதலாளிகளின் கொள்ளை லாபத்தை பாதுகாக்க அடக்குமுறை ஏவப்படுகிறது. சென்னை அருகிலுள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பழிவாங்கலை எதிர்த்துப் போராடிய சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் அ.சவுந்தரராசனையும் 300 தொழிலாளர்களையும் பொய் வழக்குப் போட்டுச் சிறையிலடைந்தனர்.

திமுக தொழிற்சங்கத்தை கருங்காலித்தனத்தில் ஈடுபட வைத்துள்ளனர். நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்திலும் இந்தக் கருங்காலித்தனம் தொடர்கிறது.  எத்தகைய அடக்குமுறைகளையும் தொழிலாளி வர்க்கம் முறியடிக்கும், முன்னேறும் என்பது தமிழக முதல்வருக்குத் தெரியாததல்ல.

திமுக ஆட்சி மீது மக்களின் அதிருப்தி மேலோங்கி வருகிறது. சலுகைகளை அறிவித்து, சில ஆயிரம் கோடிகளை வாக்களார்களுக்கு வழங்கி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனப்பால் குடிக்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனைத்தமிழக மக்களின் தலையில் ஏற்றிவிட்டு சலுகைகள் எனும் வாண வேடிக்கை நடத்தி வருகிறார்கள். குடும்ப ஆட்சியின் கஜானாக்களை நிரப்ப தமிழகத்தின் இயற்கை வளமும், கனிம வளங்களும் சூறையாடப்படுவதை மக்கள் பீதியோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காலம் வரட்டும் என்று காத்திருக்கிறார்கள்.

நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததைத் தொடர்ந்து உருவான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் 30.9.2010ல் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர விமர்சன ரீதியாக எந்த அரசியல் கட்சியும் கருத்துத் தெரிவிக்கவில்லை. வழக்கின் ஆவணங்களையும், சாட்சியங்களையும் கணக்கிலெடுக்காமல் வெறும் நம்பிக்கை அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமென்றால் நம் நாட்டு வழக்கறிஞர்கள் சட்டக்கல்லூரியில் படிக்க வேண்டியதில்லை. இறையியல் கல்லூரிகளில் படித்தால் போதும் போலும். இந்தத் தீர்ப்பின் மூலம் ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மைக் கோட்பாடுகள் தரை மட்டமாகிவிட்டது.

பாபர் மசூதிக்குள் 1949ம் ஆண்டில்தான் ராமர் சீதை சிலைகள் வைக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நீதிமன்றம் தீர்ப்பின் போது வினோதமான வாதத்தை முன் வைத்துள்ளது. பிரச்சனைக்குரிய இடத்தை இராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதி வழிபடுவதும், பல்லாயிரம் ஆண்டுகளாக அந்த இடத்தைப் புனிதமாகக் கருதி அங்கு செல்வதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிராகக் கட்டப்பட்ட பிரச்சனைக்குரிய பாபரின் கட்டிடத்தை,ஒரு மசூதியாகக் கருத முடியாது என்றும் கூறியுள்ளனர்.

பாபர் மசூதியை இடித்த மதவெறியரின் செயல் பற்றியோ, அந்தக் குற்றவாளிகள் பற்றியோ கண்டு கொள்ளாமல் நீதிமன்றம் நிலத்தை மூன்று பங்கு போட்டு முடித்துவிட்டது. ஆகவேதான் மார்க்சிஸ்ட் கட்சி இவ்வழக்கு பற்றி உச்சநீதிமன்றத்தில் நல்ல முடிவு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறது. ஆனால் தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் கலைஞர் விசித்திரமான கருத்தை வெளியிட்டார்.

இத்தீர்ப்பு இரு தரப்பினருக்கும் பொதுவான தீர்ப்பு, சாதகமான தீர்ப்பு என்கிறார். இந்தத்தீர்ப்பை அங்கீகரிப்பதன் மூலம் சேது சமுத்திரத் திட்ட வழக்கில் என்ன செய்வார் என்று தெரியவில்லை. ராமர்பாலம் என்ற தடை நம்பிக்கையின் அடிப்படையில்தான் என்பதைக் கலைஞர் மறந்து விட்டாரா என்று தெரியவில்லை. சேது சமுத்திரத்திட்ட வழக்குக்கு அயோத்தி தீர்ப்பு முன்னுதாரணமானால் கலைஞர் என்ன செய்யப் போகிறார் என்பதும் கேள்விக்குறியாய் நிற்கிறது.

இந்த நம்பிக்கை அடிப்படையிலான தீர்ப்பு என்பது மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் நீதிமன்றங்களின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையைத் தகர்த்து விடும் என்பதுதான் நீதியின் பிரச்சனை.

தந்திர எந்திரன்

தமிழ் ரசிகர்களின் ஏமாளித்தனத்தால் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்ட ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 50 முதல் 100 கோடி வரை அள்ளி கொள்கிறார். அதனால் அரசியலில் இறங்கி சம்பாதிக்க விருப்பமில்லை. அதனால் அவரது ரசிகர் மன்றத் தலைவர்கள் ஏங்குகின்றனர். ரஜினி மிகவும் பிழைக்கத் தெரிந்தவர். அதனால் அவர் தமிழக முதல்வரைப் புகழ்வார். தமிழர்களைத் தன்னை வாழவைத்த தெய்வங்கள் என்று புகழுவார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர். சிவாஜிராவாக இருந்து ரஜினிகாந்த் என்று இயக்குநர் பாலச்சந்தரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டவர். இப்போது எந்திரன் படம் இந்தியிலும் வெளியிடப் பட்டுள்ளது. இதற்காக மும்பை சென்று மத இன வெறியர் பால்தாக்கரேவைப் போய்ப் பார்த்து வந்துள்ளார். வெளியே வந்ததும் ரஜினி பால்தாக்கரேயை தனது கடவுள் என்று புகழ்ந்துள்ளார். பதிலுக்கு பால்தாக்கரேவும் ரஜினி இன்றும் மண்ணின் மைந்தனாக (மராட்டியன்) திகழுவதாகவும் தனக்கு எப்போதும் அவர் மீது பாசம் உண்டு என்றும் கூறியுள்ளார். மும்பையில் தமிழனுக்கு என்ன வேலை என்று அடித்து விரட்டும் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே ரஜினிக்கு கடவுள் என்றால் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் யார் என்ற கேள்வி எழுகிறது.

ரஜினி பிழைக்க தெரிந்த தந்திர எந்திரன்தான். தமிழ் ரசிகர்கள்தான் பேமானிகள்.

Pin It